யாழ்ப்பாணம் நன்றாகக் கெட்டுவிட்டது!
இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர்.
கலாசாரம் சீரழிந்துவிட்டது!
சில ஊடகங்களும், இணையத்தளங்களும் அடிக்கடி யாழ்ப்பாணத்தை இப்படிச் சித்திரித்து வருகின்றன.
உண்மையில் என்ன நடக்கிறது? அந்தளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டுப்போய்க் கிடக்கிறதா…..?
இந்தக் குற்றச்சாட்டுக்களில் பிரதானமாக முன்வைக்கப்படும் வாதங்கள் இவைதான்.
இளைஞர்கள் பள்சரில் பறக்கிறார்கள்!
கைத்தொலைபேசி, நெட் கஃபே பாவனை அதிகரித்துவிட்டது!
பாடசாலைப் பெண்கள் காதலிக்கிறார்கள்! கர்ப்பமடைகிறார்கள்!!
இளைஞர்கள் மது அருந்துகிறார்கள்!
விபசாரம் நடக்கிறது!
இவையொன்றும் யாழ்ப்பாணத்தில் நடக்காத விவகாரங்களில்லைத்தான். உலகில் வேறெங்கும் நடக்காத விடயங்களும் இல்லைத்தான். ஏதோ, இப்போதுதான் இவை இங்கு நடக்கின்றன என்றும் சொல்ல முடியாது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்களைக் கோர்த்துப் பார்த்து ஒரேயடியாக முழு யாழ்ப்பாணமும் சீரழிந்துவிட்டதாகக் கூறுவது சரியானதா?
கட்டுப்பாடிழந்து இவ்வாறான விடயங்கள் நடக்கக்கூடாது என்ற அக்கறை நியாயமானது என்றாலும், நிலைமையைக் கட்டுப்படுத்துகிறோம் என்று சொல்லி, அதைப் படம்போட்டுக் காட்டிக் கைகொட்டிச் சிரிப்பதா?
போர் முடிவடைந்த பின்னர்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது பொதுவாக இந்த வாதங்களில் அடிக்கடி தொனிக்கும் ஒரு கருத்து.
போர் நடைபெற்ற காலங்களில் இவையெல்லாம் நடக்கவே இல்லையா என்ற வாதம் ஒருபுறமிருக்க, அப்போ என்னதான் செய்வதாம்?
போர் முடிந்திருக்கக்கூடாதா?
ஏ 9 பாதையைத் திறந்திருக்கக்கூடாதா?
யாழ்ப்பாணத்துக்கு நவீன தொலைபேசி வசதிகளும், இணையப் பாவனையும் வந்திருக்கவே கூடாதா?
நாகரீக உடைகளை நம்மவர்கள் அணிவது பெருங்குற்றமா?
மீண்டும் போர்க்காலம்போல் பாதைகள் மூடி, தனிமைப்பட்ட ஒரு இருண்ட யுகத்துக்குள் யாழ்ப்பாணச் சமூகம் தள்ளப்படவேண்டும். நவீன உலகின் எந்த வசதிகளையும் நுகர முடியாதவர்களாக இளைஞர்கள் கட்டுப்பெட்டிகள் ஆகவேண்டும்.
இதுதானா நாம் எதிர்பார்ப்பது?
கிட்டத்தட்ட மூன்று தசாப்தகால யுத்தத்துக்குள் மூழ்கிக்கிடந்த நமது பிரதேசங்களில் இப்போதுதான் கொஞ்சம் இயல்புச் சூழல் கனிந்திருக்கிறது.
இது பூரண சுதந்திரமா இல்லையா என்ற வாதங்களைவிட, கிடைத்திருக்கும் இந்தக் கொஞ்ச வாய்ப்பையேனும் நம்மவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது சரியா?
இன்றைய இளம் சந்ததி பிறந்ததே இந்த யுத்தச் சூழலுக்குள்தான். ரயில் வண்டியைக் கூடக் கண்ணாலும் காணாதவர்களாகப் பலர் உள்ளனர்.
யுத்தக் கெடுபிடிகளுக்கஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்து, கைகால்களை நீட்டி, கொஞ்சம் காற்று வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
காற்றில் கொஞ்சம் விஷக் கிருமிகள் கலந்திருந்தால் நோய்நொடிகள் பிடிக்கச் செய்யும்தான்.
உடனே, ‘அந்தா விஷக்காற்றைச் சுவாசித்துவிட்டான் நோயாளி!’ என்று யுத்தப் பிரகடனம் செய்து மீண்டும் இருண்ட குகைகளுக்குள் இளைஞர்களைத் தள்ளிவிட எத்தனிப்பதா?
நோய் வருமென்றால், நோய்க்காப்பு அவசியம். பிள்ளைகளுக்கு நோய் வராமல் காக்கவேண்டியது யாருடைய கடமை?
வீட்டிலும், பாடசாலைகளிலும், பொதுச் சூழலிலும் நோய்த்தொற்றைத் தடுக்கவேண்டியது பெற்றோர், அதிபர், ஆசிரியர்களினதும், சமூகத்தினதும் கடமையல்லவா?
அதை எப்படிச் செய்து பிள்ளைகளைக் காப்பது என்று திட்டமிடாமல், யார் யார் காதலிக்கிறார்கள்?, எந்தக் குப்பைக்குள் எவர் பிள்ளையைப் போடுகிறார்கள்? எந்தப் பையன் எந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறான்?
எத்தனை பேர் கைத்தொலைபேசி பாவிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திப் புள்ளிவிபர அறிக்கையிட்டுப் பரபரப்பு வியாபாரம் செய்வதா?
பொறுப்புடன் கையாளப்படவேண்டிய விடயத்தை, வெறும் பரபரப்பு வியாபாரச் சரக்காக்கிக் கொச்சைப்படுத்துவது சரியல்ல.
பொறுப்புள்ளவர்கள் அனைவரும் கூடிச் சிந்திக்கவேண்டிய விடயமிது.
வாசக நெஞ்சங்களும் இதில் கைகோர்த்துக்கொண்டால், கூடிப் பயணிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக