தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், புதுடில்லியில் உள்ள வைத்தியசாலையில் டிசெம்பர் 7 ஆம் திகதி இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சத்திரசிகிச்சை வெற்றியாக முடிந்ததாக த.தே.கூ. வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயினும் எழுபது வயது கடந்த சம்பந்தன் உடனடியாக இலங்கைக்கு வரமாட்டார். அவரது உடனிலை, மற்றும் வயது காரணமாக சம்பந்தன் தன் குடும்பத்துடன் ஓய்வெடுப்பார். அவர் சிறிதுகாலம் அரசியலில் ஈடுபடமாட்டார். இந்த பத்தி த.தே.கூ. தலைவர் விரைந்து சுகம்பெற வாழ்த்தும் அதேவேளையில், சம்பந்தர் மீண்டும் அரசியலுக்கு திரும்புவதில் உண்டாகும் தாமதம், அரசாங்கத்துக்கும், த.தே.கூட்டமைப்புக்குமிடையில் அரசியல் புரிந்துணர்வை உருவாக்கும் மெதுவான தொடர் செயலை பாதிக்கும் என கவலையடைகிறது.
இந்த பத்தியாளர், 16 ஒக்டோபர் 2010 'டெய்லிமிரர்' இல் அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான அரசியல் இணக்கப்பாட்டின் அவசர தேவை பற்றி தனது வலுவான அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தார்.
அக்கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட பொருத்தபாடுடைய பகுதிகள் இவை-
“இலங்கைத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சி என்ற வகையில் த.தே.கூ. சகல கௌரவம், சுயமரியாதை என்பவற்றை துறக்க வேண்டும் என்பது இதன் பொருளாகாது. அரசாங்கம் செய்வதெல்லாம் சரி என்றும் த.தே.கூ. கேள்வியில்லாமல் அரசாங்கத்தின் பாதையில் போகவேண்டும் என்றும் பொருளாகாது.
மிகமோசமாக பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பொறுப்பான கட்சி என்ற வகையில் த.தே.கூ. தனது அணுகுமுறையில் நெகிழ்வுத்தன்மையுடையதாகவும், ஆக்க பூர்வமானதாகவும் இருக்க வேண்டிய தேவை உள்ளது என்பதும் 'பலமானதே சரியானது' என நினைக்கும், வெற்றிப் பெருமிதத்தத்தில் திளைத்திருக்கும் தலை வீங்கிய ஆட்சியை இராஜதந்திர ரீதியாகவும், புத்திபூர்வமாகவும் த.தே.கூ. அணுக வேண்டும் என்பதுமே இதன் பொருளாகும்.”
பிரதான பிரச்சினைகள்
தமிழ் மக்களை பொறுத்தவரையில், உடனடியாக கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன.
முதலாவதாக, இடம்பெயர்ந்த சகலருக்கும் புனர்வாழ்வளித்து மீள்குடியேற்றம் செய்வதாகும். புனரமைப்பு, அபிவிருத்தி, பொருளாதார மீட்பு, வேலைவாய்;ப்புகள் உருவாக்குதல் கல்வியை முன்னேற்றுதல் என்பன இதோடு சேர்ந்துவர வேண்டும். தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுவித்து சமூகவாழ்வில் இணைப்பதும் இன்னொரு அவசர தேவையாகும்.
இரண்டாவதாக, நேர்மையாக மனத்தாங்கல்களை தீர்த்துவைக்கவும் நியாயமாக அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவும் வேண்டியதாக உள்ளது. பெரிதும் விரும்பக்கூடிய விடயங்களை எண்ணி ஏங்காமல் கிடைக்கக்கூடியவற்றில் கவனம் செலுத்துவதே இது நடப்பதற்கான வழியாகும்.
தற்போதைய யதார்த்தத்தின் பின்னணியில் சில திருத்தங்களுடன் 13 ஆம், 16 ஆம் திருத்தங்களுடன் செய்யப்பட்ட ஏற்பாடுகளை முழு அளவில் நடைமுறைப்படுத்தலை கொண்டு வருதலே சாத்தியமானதாகும். வடக்கு, கிழக்குக்கு கூடிய அதிகார பகிர்வும், தமிழ்மொழிக்கு முழுiமான அசரகரும மொழி அந்தஸ்தும் நோக்கங்களாக இருக்கவேண்டும். இந்த நோக்கங்களை அடைவதற்கு த.தே.கூ. மோதல் வழியில்லாமல், ஒத்துழைப்பு முறையில் அரசாங்கத்துடன் வேலை செய்ய வேண்டும்.
வெளித்தலையீடுகளின் அழுத்தத்தினால் பெறப்பட்ட 'உரிமைகள்' சிங்கள அரசியல் சமூகத்தினால் வெறுக்கப்படின் அது நடைமுறைப்படுத்தப்படாமல் போய்விடுவதை தமிழ் அரசியல் கட்சிகள் அனுபவத்தில் கண்டுள்ளன. தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுடன் ஊடாடி பங்குடமை அரசியலில் வேலை செய்வதே சாத்தியமானது. மறுபக்கத்தில், ராஜபக்ஷவின் ஆட்சி, தமிழ், முஸ்லிம் மக்கள் நோக்கில் தனது அணுகுமுறையை மீட்டுப்பார்த்து மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய அரசாங்கம் உச்சத்தில் உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அகில உலகத்திற்கும் அரசன்போல உணரக்கூடும்.
சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள், தமது பேரம்பேசும் சக்தியை இழந்துள்ளனர். இவர்களிடம் உண்மையில் வலும் ஏதும் இல்லை. இதன் பொருள் இலங்கையில் பெரும்பான்மை, சிறுபான்மை இல்லை என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு சிறுபான்மையினரை அரசாங்கம் புறக்கணிக்க வேண்டும் என்பதும் பொருளாகாது.
தமிழ் மக்கள் விடயத்தில், அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துடன் ஒரு வகையான புரிந்துணர்வுக்கு வரவேண்டிய தேவையுள்ளது. த.தே.கூட்டமைப்பின் கடந்தகால புலி சார்புத் தன்மை எவ்வாறு இருப்பினும், புலிகளின் ஆதரவின்றி 2010 தேர்தலில் இந்த அணி பாராட்டும் வகையில் சாதித்து, தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களில் அதிகூடிய இடங்களைவென்றது என்பதை மறுபதற்கில்லை.
அரசாங்கம் வேறு 'பிரதியீடுகளை' தேடுவதற்கு அல்லது கட்சி தாவுதலை ஊக்குவிப்பதற்கு பதிலாக, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் மட்டுமாவது ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்துவது நன்றாக இருக்கும். அரசாங்கம் மேலும் யாப்பு திருத்தங்களை கொண்டுவரவுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. குறைந்த பட்சம் இவற்றில் ஒன்றாவது '(19ஆவது, 20ஆவது) , மாகாணசபை ஊடாக வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வுடன் தொடர்புடையதாக இருக்கும்.
த.தே.கூட்டமைப்பின் ஆதரவின்றியே இந்த திருத்தங்களை செய்வதற்கு தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இருப்பினும் த.தே.கூட்டமைப்பை சேர்த்துக்கொள்வது நல்லது.
த.தே.கூட்டமைப்பையும் தன்பக்கம் எடுத்துக்கொண்டு அதன் ஆதரவுடன் தேவையான திருத்தங்களை செய்யுமாயின் அரசாங்கத்தின் மதிப்பு பெரிதும் உயரும். இவ்வாறான திருத்தம் நின்று பிடிக்கக் கூடியதும் சாத்தியமானதும் ஆகும். இவ்வாறே த.தே.கூ., அரசாங்கத்துடன் வேலைசெய்து தமிழ் மக்களின் பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆக்கபூர்வமாக செயற்படுமாயின் நின்று பிடிக்கக்கூடிய வெற்றியை பெறலாம்.
இவ்வாறான இலட்சிய நிலைமை படிமலர்ந்துவர அரசாங்கமும், த.தே.கூட்டமைப்பும் தற்போதைய முட்டுக்கட்டை நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பக்கமும் மற்றப்பக்கம் தன்னிடம் வரும் என்று பார்த்துக்கொண்டிருக்காமல் மற்றப்பக்கத்தின் உறவை நாடுவதே நல்லது. இதற்கு பெருமளவு அரசியல் முதிர்ச்சியும் பெரும் தலைமைப் பண்பும் தேவைப்படுகின்றது.
அரசாங்கத்துக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில்
REAPPROCHMENT உடனடி தேவையாக உள்ளது. இரண்டு சாராரும் காலத்தின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான வேண்டுகோள் ஒக்டோபர் 16 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காலத்திலிருந்து பல விடயங்கள் நடந்துவிட்டன என்பதை இந்தப் பத்தி மிகுந்த திருப்தியுடன் நோக்குகிறது. அரசாங்கம்- தமிழ் தேசிய கூட்டமைப்பு உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவை ஊடகங்களில் வெளிவரவில்லை.
தீர்க்கப்படாத தமிழ்தேசிய பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வை உருவாக்க முயலவில்லை என ஜனாதிபதி ராஜபக்ஷவின், பக்கச்சார்பான, விளக்கம் குறைந்த விமர்சகர்கள் குறை கூறினாலும் மெதமுலனவின் மாக்கியவல்லி தனக்கே உரித்தான வழிமுறையில், இலங்கைத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கட்சியுடன் ஓர் அரசியல் விளக்கத்துக்கு வருவதற்கான சில நடவடிக்கைகளை அமைதியாக தொடக்கியுள்ளார்.
இலங்கை சிறுபான்மை இனங்களை பொதுவாகவும், இலங்கைத்தமிழர்களை குறிப்பாகவும் பாதிக்கின்ற முக்கிய பிரச்சினைகளில், அரசாங்கத்துக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நெருக்கமான புரிந்துணர்வை உருவாக்கும் வழிவகைகளை ஆராயும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையிலான தடையிலாது தொடரும் பேச்சுவார்த்தையில் இந்த காய் நகர்த்தல்கள் மையப்பட்டுள்ளன.
இவ்வாறான விடயத்தில் முன்னேற்றம் பிய்த்துக்கொண்டுபோகும் வேகத்தில் இல்லாவிடினும், முன்னோக்கிய நகர்வு நத்தை வேகத்தில் உள்ளது என்றும் கூறமுடியாது. இருப்பினும் சம்பந்தனின் சத்திசிகிச்சை, சுகம்பெறுதல் என்ற விடயங்களின் பின்னணியில் இது தொடர்பாக தற்காலிக தடங்கல் உண்டாகும், நிலைமை காணப்படுகிறது. சம்பந்தனின் உடல்நிலை, அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புரிந்துணர்வு நோக்கிய முன்னேற்றத்தை பாதிக்கக்கூடும் என்பதையிட்டு இந்த பத்தியில் குறிப்பிட்ட கவலைக்கு இதுவே காரணம் ஆகும்.
செல்வநாயகம்
நோய் வாய்ப்பட்ட, வயது முதிர்ந்த சாமுவல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை (எஸ்.ஜே.வி.) செல்வநாயகம் தனியொரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தமிழ் அரசியல் தலைவராக இருந்த ஒரு காலம் தமிழ் அரசியலில்; இருந்தது. இந்த பத்தி எழுத்தாளர், தனது பிந்திய பதின்மவயதிலும் இருபதுகளின் முன்பகுதியிலும், இந்த காந்தியவாதி உயிருடன் இருக்கும்போதே தமிழ் தேசிய பிரச்சினை சமாதானமாக தீர்க்கப்படுமென ஆசைப்பட்டுக் கொண்டார். அப்போது எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மரணத்திற்கு பிந்தி வரக்கூடிய நிலைமையை யோசித்தபோது கவலையளிப்பதாக தெரிந்தது.
கவலைத் தரும் வகையில், இந்த பத்தி எழுத்தாளர் வீரகேசரியில் நிருபராக தீட்சைபெற்று இரண்டு வாரங்களுக்குள் செல்வநாயகம் காலமானார். உண்மையில் முதலாவதாக எனது பெயரில் எழுதப்பட்ட கட்டுரை எஸ்.ஜே.வியின் மரணத்தின் பின் அவரின் தனிப்பட்ட வாழ்வு பற்றியதாகும்.
இராஜவரோதயம் சம்பந்தன், செல்வநாயகம் இல்லை. அவரது புலிச்சேவகம் செய்த இருண்ட காலத்தை வைத்துப்பார்த்தாலும் இப்போது உள்ளவர்களில் மிகவும் சிறந்தவர் இவரே. நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக ரீதியில் போட்டியிட்டு வடக்கு,கிழக்கு மாவட்டங்களிலிருந்து அதிக இடங்களை வென்ற தமிழ்கட்சியின் தலைவர் இவர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் உடைந்துபோகக்கூடிய பிரிவுகளை சேர்த்துப் பிடித்திருக்கும் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்பதற்கு மேலாக சம்பந்தன் இலங்கை, இந்திய அரசாங்கங்களின் மதிப்பை தன் பாணியில் பெற்றுள்ளார். சில 'பண்டிதர்கள்' இவரை விட்டால் ஆளில்லையா எனக் கேட்கக் கூடுமாயினும், சம்பந்தன் தற்போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகித்துக்கொண்டிருக்கின்றார் என இப்பத்தி கருதுகிறது. இதனால் அவரது உடல்நிலை கவலைக்கும் அக்கறைக்குமான விடயமாக உள்ளது.
அரசாங்கம்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறவில் சிறு அளவிலான சில நல்ல நகர்வுகள் 2010 செப்டெம்பரில் காணப்பட்டன. முக்கியமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்ஷவின் முன்னெடுப்புகள் காரணமாக சில தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் பங்குபற்றினர். சுரேஷ் பிரேமசந்திரன், சரவணபவன், சுமந்திரன் ஆகிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர்கள் யாழப்பான மாவட்டத்தில், அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துகொண்டபோது, கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பஸில் ராஜபக்ஷ இவர்களின் பங்கு பற்றுதலை வரவேற்றார்.
ஆயினும் ஒக்டோபரில் ஒரு வகையான பின்னடைவு ஏற்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் இரண்டு கூட்டங்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவே தலைமை தாங்கினார். திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வருகையின்மை 'பளிச்' என தெரிந்தது. த.தே.கூ. இதில் பங்கு பற்ற விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் இது நடந்தது.
இந்த விடயங்கள் நடந்தபோது அல்லது நடக்காமல் போனபோது டி.என்.ஏ.தலைவர் சம்பந்தன் சென்னையில் இருந்தார். அவர் ஆரோக்கியமாக இல்லாதபோதிலும், இலங்கையில் இருந்த தனது கட்சியின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தார். சம்பந்தன் இலங்கையில் இல்லாதபோதிலும், ஊடகங்களின் கவனத்துக்கு அப்பால் மிகவும் பெறுமதியான நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் ஈடுபட்டிருந்தார்.
த.தே.கூட்டமைப்புடன் உத்தியோகப்பற்றற்ற பேச்சுகளில் ஈடுபடுவதற்காக ஒரு 'பிரதிநிதியை' நியமிக்கும் முன்னெடுப்பை ஜனாதிபதி எடுத்திருந்தார் போல தெரிகிறது. ஜனாதிபதியின் புது வழியிலான இந்த சமிக்ஞைக்கு இந்தியாவிலிருந்த சம்பந்தன் நன்முகமாக துலங்கி தனது சொந்த 'பிரதிநிதியை' நியமித்தார். ஜனாதிபதியினதும் சம்பந்தனினதும் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த இந்த இரண்டு பிரதிநிதிகளும் அரசியலமைப்பு விவகாரங்களில் தேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.
கலந்துரையாடல்
இந்த உத்தியோகபூர்வமற்ற பேச்சுகள், இனிவரப்போகும் உத்தியோகபூர்வ பேச்சுகளுக்கு ஒரு வகையில் முன்னோடியாக இருந்தன. ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் என கூறப்பட்ட, ஒதுக்கத்தில் இடம்பெற்ற, உத்தியோகபூர்வமற்ற பேச்சுகள் முன்னோக்கிய நகர்வுக்கு இட்டுச் சென்றுள்ளது. 'ஒருவருடன் ஒருவர்' என்ற வகை பேச்சுகளில் பங்குகொள்ளும் இரண்டு பிரதிநிதிகளும், முறையே ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் ஒழுங்காக அறிக்கையிட்டனர்.
இந்த ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களுக்கு, இரண்டு பிரதிநிதிகளும் முன்னைய ஒப்பந்தங்கள், அறிக்கைகளை அடிப்படையாக பயன்படுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் , 1993 இல் மங்கள முனசிங்க தெரிவுக்குழு அறிக்கை. 1995 , 2000 ஆண்டுகளின் அரசியல் சட்ட திருத்த ஆலோசனைகள், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் சமர்பிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மை, சிறுபான்மை அறிக்கைகள், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரின் ஆரம்ப, இடைநிலை அறிக்கைகள் என்பன ஏற்புடைய ஒரு சட்டகத்தை வடிவமைக்க அடிப்படையாக கொள்ளப்பட்ட ஆவணங்களில் சிலவாகும்.
தகவல் தரவல்ல வட்டாரங்களின் கருத்துப்படி இரண்டு பிரதிகளுக்கும் இடையிலான ஆரம்பக்கட்ட பேச்சுகள் அநேக விடயங்களில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளன. ஆரம்பக்கட்ட கருத்தொற்றுமை எட்டப்பட்ட முக்கிய விடயங்களில் சில-
ஒப்பந்தம்
அதிகார பரவலாக்கலில் மத்திய அரசாங்கத்துக்கும் மகாண அரசாங்கத்துக்கும் பொதுப்பட்டியல் என ஒன்று இருக்கமாட்டாது. ஒதுக்கப்பட்ட பட்டியல், தேசிய பாதுகாப்பு, வெளிவிவகாரங்கள், தேசிய இறைக்கொள்கை , குடிவரவு, குடியகல்வு, குடியுரிமை, சுங்கம், தபால்கள், தொலைத்தொடர்பு, சர்வதேச விமான நிலையங்கள், பிரதான துறைமுகங்கள், புகையிரதம், தேசிய பெருந்தெருக்கள், கடல் வலயங்கள், போன்ற விடயங்களுக்கு மட்டுப்படுத்தப்படும். ஏனைய அதிகாரங்கள் மாகாணங்களுக்கு உரித்தானவை.
நிலம், அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி போன்றவை மீது தனி அதிகாரமும், வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்றுக்கொள்ளும் அதிகாரம் உட்பட இறை அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படும். மத்திய அரசாங்கத்தின் அனுமதியோடு வெளிநாட்டு உதவிகளுக்கான பேச்சுக்களை நடத்தி மாகாணங்கள் வெளிநாட்டு கடனை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
மாகாணங்களில் உள்ள சகல அரச நிலங்களும் (தேசிய விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்று ஒதுக்கிய பட்டியலில் வருவனதவிர) மாகாண சபைக்கு பாரப்படுத்தப்படும் வேறு தேசிய செயற்றிட்டங்களுக்காக மத்திய அரசு தேவையான நிலத்தை பெற்று கேட்டுப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.
பின்தங்கியுள்ள மாகாணங்கள் விரைந்து முன்னேறும் வகையில், மாகாணங்கள், இப்போது காணப்படும் அபிவிருத்தி மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படும். சமநிலைப்பட்ட பிரதேச அபிவிருத்தி தத்துவத்தின் பிரகாரம் வளங்களை ஒதுக்குவதற்கான திட்டமொன்றை படிமலர்வு செய்ய தேசிய நிதி ஆணைக்குழு அமைக்கப்படும்.
கருத்தொற்றுமை எட்டப்பட்டாத சில விடயங்களும் உள்ளன.
இவற்றுள் மிகமுக்கியமானது மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்களாகும். அடுத்த முக்கியமான கருத்து வேறுபாடு காணப்படும் பிரச்சினை, அதிகாரப் பகிர்வுக்கான அலகு பற்றியதாகும். வடக்கு, கிழக்கு இப்போது பிரிக்கப்பட்டுவிட்டாலும், த.தே.கூ. அர்த்த பூர்வமாக விட்டுக்கொடுப்பையிட்டு நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்த பத்தியை பொறுத்தவரையில் ஆரம்பக்கட்ட பேச்சுகளில் தோன்றிய கருத்து வேறுபாடுகள் பெரிய தடைகளாகாது. இந்த பத்தி, அலகு என்பதைவிட அதிகாரம் பகிர்வுக்குட்படும் விடயங்கள், அல்லது அதிகாரங்கள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவை என திட்டவட்டமான பேச்சுகள் நடைபெறும்போது 'தமிழ்' பக்கம், கூடிய விடயங்களுக்காக 'அலகு' என்பதில் விட்டுக்கொடுக்கவிழைவது சாத்தியமே.
பொலிஸ் அதிகாரங்கள் வழங்குதல் போன்ற பிரச்சினைகளில் கூட வேறு ஏற்பாடுகள் சாத்தியமே. இதில் ஒரு தெரிவு மாகாண சபைகளுக்கு சமுதாய காவல் அதிகாரத்தை வழங்குவதாகும். இது ஆயுதம் தாங்காத பொலிஸ் ஆகவும் இருக்கலாம். இன்னும் ஒரு தெரிவு பொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்காது , அதிகமான தமிழர், முஸ்லிம்களை பொலிஸாக நியமித்து வடக்கு கிழக்கு பகுதிக்கு அனுப்புவதாகும்.
அதிகார பகிர்வு
ஆரம்பக்கட்ட பேச்சுகளில் வெளிப்பட்ட இன்னொரு பிரச்சினை மத்தியில் அதிகார பகிர்வு பற்றியதாக இருந்ததென தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. வரலாற்று ரீதியாக இந்த தீவில் சமத்துவத்துக்காக கிளறுகின்ற தமிழர்கள், தாமும் அகில இலங்கை சமுதாயம் என்று கருதி, சிங்கள பெரும்பான்மையுடன் மத்தியில் அதிகாரத்தை பகிரவிரும்பினர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஜீ.ஜீ. பொன்னம்பலம் (சீனியர்) முன்வைத்த 'சமபிரதிநித்துவ கோரிக்கை' அடிப்படையில் மத்தியில் சமமாக அதிகாரத்தை பகிர்வதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு தீர்வாகும். செல்வநாயகம். சமஷ்டி கட்சி என்பவற்றின் வருகை தமிழர் தம்மைப்பற்றி கொண்டிருந்த கருத்தை மாற்றியமைத்து,வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சம்ஷ்டி அல்லது அதிகாரபரவலாக்கத்தை கோரும் பிரதேச சிறுபான்மை என மாறவைத்தது.
இந்த கோரிக்கை தமிழ் காங்கிரஸால் எதிர்க்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் ஐம்பதுகள், அறுபதுகளில் தமிழ் அரசியல் பேச்சுகள் சமஷ்டிக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடந்த விவாதங்கள் நிரம்பியதாக இருந்தன.
இந்த பின்னணியில், ஜனாதிபதி ராஜபக்ஷ, த.தே.கூ. தலைவர் சம்பந்தன் ஆகியோரின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெறும் ஆரம்பக்கட்ட பேச்சுகளில் மத்தியில் அதிகார பகிர்வு என்னும் விடயம் முக்கியப்படுத்தப்படுவது நன்முகமான ஒரு விருத்தியாகும்.
உத்தியோகபூர்மற்ற பேச்சு, மத்தியில் அதிகாரத்தை பகிர்வதை உறுதி செய்யும் நிலைபேறான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது பற்றிய பிரச்சினையை கருத்தில் எடுத்தது. ஆனால் திட்டவட்டமான ஏற்பாட்டுக்கு வரத் தவறிவிட்டது.
இருப்பினும் இந்த முக்கியமாக பிரச்சினை பற்றி இவ்வாறு பேசப்பட்டதென்ற விடயமே நன்முகமான முன்னேற்றமாகும். எதிர்காலத்தில், அரசாங்கத்துக்கும், தமிழ்தேசிய கூட்டமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வ பேச்சுகள் நடைபெறும்போது இந்த பிரச்சினை அறுதியாக கையாளப்படும் என நம்பவேண்டியதுதான்.
அலகுகளுடன் கூடிய அதிகாரத்தை பகிர்வதில் சிங்கள பெரும்பான்மைக்கு பயம், தயக்கம், என்பன வரலாற்று ரீதியாக உள்ள நிலைமையில், மத்தியில் அதிகார பகிர்வுக்கான பொறிமுறையை ஏற்படுத்துவது, போதுமான சமத்துவமான அதிகார பகிர்வை உளநெடுக்கீடு இன்றி ஏற்றுக்கொள்ள தேவையான கவிநிலையை உருவாக்கக்கூடும்.
இரண்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஆரம்பக்கட்ட பேச்சுகள், திருப்திகரமான விளைவை தந்துள்ளன. ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட பாராட்டத்தக்க அரசியல் முன்னெடுப்பு இனிவரும் காலங்களில் , கூடுதலான அர்த்தமுள்ள, வலுவான பேச்சுகளுக்கு அத்திவாரமிட்டுள்ளது. இந்த உத்தியோகபூர்வமற்ற பேச்சில் கருத்தொற்றுமை அடையப்பட்ட விடயங்கள், எதிர்கால பேச்சுகளில் திடமான அத்திவாரமாக அமையமுடியும். கண்ணில் தென்படாத ஜனாதிபதியின் அரசியல் முன்னெடுப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான தயாரிப்புகள் முடிந்துள்ளன.
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)
டெய்லி மிரர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக