உலகத்தில் பஞ்சம் ஏற்படாமல் பசுமை புரட்சிக்கு வித்திட்ட இந்த விஞ்ஞானியின் சாதனையைப் பாராட்டி, இஸ்ரேல் நாடும் இவருக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்த குர்தேவ் சிங், இளம் பருவத்தில் தனது தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகளை செய்து வந்தார். கோதுமை விதைகளை விதைப்பது, நிலத்தை உழுவது, அறுவடை செய்வது போன்றவற்றில் ஈடுபட்டதால், இவருக்கு விவசாயத்தை பற்றிய அடிப்படை அறிவு அதிகமாக இருந்தது.
படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார் உயர்நிலைப் பள்ளியில் இவர் அதிக மதிப்பெண் பெற்றதால், பல்கலைக்கழக படிப்பிலும் சிறந்து விளங்கினார். பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகத்தில் படித்த போது அதிக மதிப்பெண் பெறுவதில் முதல் மூன்று மாணவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
கடந்த 55ல் பட்டப்படிப்பை முடித்தார். மேற்படிப்பு படிக்க வாய்ப்பு இருந்ததால், உறவினர்களிடம் கடன் வாங்கி பிரித்தானியாவிற்கு படிக்க சென்றார். பிரித்தானியாவில் உள்ள கரும்பாலையில் 18 மாதங்கள் வேலைபார்த்து, கணிசமான பணத்தை சேர்த்தார். இந்த பணத்தைக் கொண்டு அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றார்.
ஆராய்ச்சி படிப்பை முடித்த பின், தாயகம் திரும்பிய குர்தேவ் சிங், ஹர்வந்த்கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. கடந்த 67ல் பிலிப்பைன்சில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தில் குர்தேவ் சிங் சேர்ந்தார். ஏராளமான அரிசிரகங்களை உருவாக்கி பல நாடுகளில் பஞ்சம் ஏற்படாமல் காப்பாற்றினார்.
ஒரு ஹெக்டயருக்கு ஒன்று முதல் இரண்டு தொன் தானிய உற்பத்தி என்றிருந்ததை மாற்றி, குட்டை ரக பயிர்களை உருவாக்கி ஹெக்டயருக்கு 10 தொன் தானிய உற்பத்தியை உருவாக்கி காட்டினார். அரிசி உற்பத்தி செய்யும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று உற்பத்தி ஆலோசனைகளை வழங்கினார். ஆராய்ச்சி மாணவர்களுக்காக பாடம் நடத்தினார்.
ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் வழங்கிய விருதுகள் மூலம் இவருக்கு மூன்றரைக் கோடி ரூபாய் கிடைத்தது. இதை தங்கள் வசதிக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறி, இவரது மனைவி ஹர்வந்த் கவுர், இந்த பணத்தை பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகத்துக்கு அளிக்க உதவினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக