அதைப்போன்றே நான்கு வருடங்களுக்கும் சற்றுக் கூடுதலான காலத்துக்கு முன்னர் இலங்கையில் புத்தர் சிலைகளில் இருந்து ஒளிக்கதிர்கள் வெளிவந்துகொண்டிருந்ததாகச் செய்திகள் பரவின. தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் தென்மாகாணத்தின் சில பகுதிகளிலும் புத்தர் சிலைகளை நோக்கி மக்கள் படையெடுத்ததைக் காணக்கூடியதாகவும் இருந்தது. சிலைகளின் மார்புப் பகுதியில் இருந்து ஒளிக்கதிர்கள் வந்து கொண்டிருந்ததைக் கண்டதாகக் கூறிய பலர் குறித்து பத்திரிகைகளும் செய்திகளை வெளியிடத் தவறவில்லை. ஆர்ப்பரித்த மக்கள் மத்தியில் காணப்பட்ட பௌத்த பிக்குமார்களில் பலரும் புத்தர் சிலைகளில் இருந்து ஒளிக்கதிர்கள் வெளிவந்ததாகக் கூறப்படுவதை உறுதிசெய்யவோ அல்லது நிராகரிக்கவோ முடியாதவர்களாக தாங்கள் நிச்சயமற்ற நிலையில் இருந்ததாக அன்று கூறினார்கள்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அந்த விவகாரம் தொடர்பில் அன்று மூண்டிருந்த சர்ச்சை ஒளிக்கதிர்கள் மாயத் தோற்றமா அல்லது தெய்வீக அரு நிகழ்வா என்பது பற்றியதாகவே அமைந்திருந்தது. விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள் ஒளிக்கதிர் விவகாரத்தில் எந்தவிதமான தெய்வீக நிகழ்வுமே கிடையாது என்றும் அது வெறுமனே ஒரு மாயத் தோற்றமே என்றும் கருத்துத் தெரிவித்தனர். பொருளொன்றைக் குறிப்பிட்டளவு நேரத்துக்கு உற்று நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய எவருமே அப்பொருளை உள்ளவாறாகக் காணமாட்டார். வேறுபட்ட ஒன்றாகவே அப்பொருள் அவருக்குத் தோன்றும்.
அதே பொருளை அவர் இன்னொருவருக்குக் காண்பிக்கும் போது அந்நபரும் அதே மனநிலையில் நோக்குவாரேயானால், விளைவு ஒன்றாகவேயிருக்கும் என்பதே பௌதீகத் துறைப் பேராசிரியர்கள் அளித்த விளக்கமாயிருந்தது. குறிப்பிட்ட நிறங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கண்ணின் கலங்களின் தூண்டுதல் காரணமாக நீலநிற மாயத் தோற்றத்தை நாம் காண்பதற்கான சாத்தியம் உண்டு என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
இவ்வாறான மருட்சி முன்னனுபவங்களுக்கு உள்ளாகவேண்டியேற்பட்ட எம்மவர்கள் மத்தியில் சிலவாரங்களுக்கு முன்னர் வடக்கில் வன்னியிலும் குடாநாட்டிலும் பத்துத் தலைநாகம் படமெடுத்து ஆடியதாக சில இணையத்தளங்களில் வெளியான செய்தியுடன் கூடிய படங்கள் மீண்டும் மருட்சியை ஏற்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.
இணையத்தளங்களில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் பத்துத் தலை நாகத்தின் படங்களை வீடுகளில் வைத்துப் பூசிப்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டுமென்றும் கதைகள் பரப்பப்பட்டன. வஞ்சகமறியாமல் இதை நம்பியவர்கள் பத்துத் தலைகளுடன் படமெடுத்தாடுவதாகத் தோன்றும் நாகத்தின் படத்தை வீடுகளில் வைத்து விளக்கேற்றி வணங்கியதாகவும் அறிய முடிகிறது. வன்னியில் காணப்பட்ட பத்துத் தலைநாகம் மக்கள் பார்ப்பதற்குப் புறப்பட்டுச் சென்றபோது மறைந்துவிட்டதாகவும் குடாநாட்டில் வலிகாமத்தில் ஒரு கிராமத்தில் அத்தகைய நாகத்தை மக்கள் பிடித்ததாகவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதில் மிகவும் மனச்சங்கடத்தைத் தருகின்ற விடயம் என்ன வென்றால் சில பத்திரிகைகள் கூட (தினக்குரலும்தான்) அச்செய்தியினைப் படங்களுடன் மறுபிரசுரம் செய்கின்ற அளவுக்கு மருட்சிக்குள்ளாகியமைதான்.
படமெடுத்தாடிய நாகபாம்பொன்றின் படத்தையெடுத்து அதற்கு பத்துத் தலைகளைக் கொடுத்து கணனியில் சித்துவிளையாட்டைக் காட்டியவர்களின் வலையில் எமது ஊடகவியலாளர்களில் சிலரும் துரதிர்ஷ்டவசமாக விழவேண்டியேற்பட்டு விட்டது.
மக்களை ஏமாற்றுவதில் மனமகிழ்ச்சியடைகின்ற பிரகிருதிகளின் செயலின் விளைவான இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக எமக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே இது தொடர்பில் ஆசிரியத் தலையங்கத்தில் பிரஸ்தாபிக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதை மனவருத்தத்துடன் கூறிவைக்க விரும்புகிறோம்.
பத்துத்தலைகளுடன் நாகத்தைச் "சிருஷ்டித்தவர்களும்' பின்னர் அதை பெருவாரியான இணையத்தளங்களில் வெளிவரச் செய்து மக்களின் குறிப்பாக இந்துக்களின் மனதைப் புண்படுத்தக்கூடியதாக மத நிந்தனை செய்திருப்பவர்களும் கணனியில் காண்பித்தது கைவண்ணமல்ல, கயமைத்தனமே!
தினக்குரல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக