- பி.ராமன்
ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் துடைத்தழிக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழிந்த பின்னர் ஒரு நவீன எல்.ரீ.ரீ.ஈ உதயமாகி வருகிறதா? ஸ்ரீலங்கா தமிழர்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றிய அக்கறை வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் ஸ்ரீலங்காத் தமிழர்கள், மற்றும் சர்வதேச சமூகத்தின் பெரும் பகுதியினரிடையே எழுச்சியுடன் பலத்த ஆதரவை பெற்று வளர்ந்து வருவதைக்கண்டு உளவுத்துறை முகவர்கள் அப்படியான ஒரு கேள்வியில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளுக்கு அழிக்க முடியாத ஒரு ராட்சத மிருகமாக இருந்த எல்.ரீ.ரீ.ஈ யினை முற்றாக அழிப்பதில் இந்தியா பங்கேற்பதற்கு காரணங்கள் இருந்தன. இந்திய உளவுத்துறையினர் மற்றும் பாதுகாப்பு முகவர்கள், ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளுக்கு எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான தாக்குதல்களில் உதவும் முகமாக உளவுத் தகவல்களைப் பரிமாறுவது, ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கடத்துவதற்கு பயன்பட்டுவந்த எல்.ரீ.ரீ.ஈ யின் வர்த்தக கப்பல்களின் அசைவுகளை கண்காணிப்பது, ஸ்ரீலங்காப் படைகளின் விமான எதிர்ப்பு பாதுகாப்பினை வலுப்படுத்துவது, பயிற்சிகளை வழங்குவது போன்றவற்றைச் செய்வதில் ஒரு திறமையான பங்கினை ஆனால் தன்னைப்பற்றிய குறைவான சுயவிபரங்களுடன் வகித்து வந்தது.
அதேவேளை ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் மிகத் திறமையான எதிர்த் தாக்குதல்கள்தான் எல்.ரீ.ரீ.ஈயினை வேரோடு களைவதில் பெரும்பங்கு வகித்தது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும், அனுமதிக்கப்படாத இந்தியாவின் பங்களிப்பு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்லை. அதேவேளை இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கங்கள், மே 2009க்கு முன்னர் பல்வேறு காரணங்களினால் தங்களிடையே உருவாகியிருந்த வேற்றுமைகளை களைந்து, மே, 2009ல் எல்.ரீ.ரீ.ஈயினை அழிப்பதற்கு முன்னர் ஒரே அலைவரிசையில் செயற்பட ஆரம்பித்தன.
முதலில் ராஜபக்ஸ அரசாங்கமும், அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் தமிழர்களுக்கு தகுந்த அரசியல் இருப்பை வழங்குவது சம்பந்தமாக பல ஆண்டுக்காலமாக வழங்கிவந்த பல்வேறு வாக்குறுதிகளையும் ஒட்டுமொத்தமாக மீறும்வகையில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் ஸ்ரீலங்கா வாழ் தமிழ் மக்கள்மீது சர்வாதிகரமான ஒரு சமாதானத்தை திணிக்க முயல்கிறது. ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் இந்தியா, ஸ்ரீலங்காவுக்கு கிளர்ச்சி எதிர்ப்பு உதவிகளை வழங்கியது.
இரண்டாவதாக எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவடைந்ததStudents in marine beachும், விகிதாசாரமற்ற முறையில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளை எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக மட்டும் பயன்படுத்தாமல், எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வாழும் தமிழ் பொதுமக்களுக்கு எதிராகவும் பயன்படுத்துவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள், அதன் நம்பகத்தன்மை ஓரளவிற்காவது குறைவடைந்துள்ளது என்பதற்கு தகுந்த ஆதாரமாக உள்ளது. இந்த முறைப்பாடுகளை பரிசீலிக்கத் தவறியுள்ளதுடன், மற்றும் அதற்கு உகந்த சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக ராஜபக்ஸ அரசாங்கம் இந்த விடயத்தில் ஆர்வமற்ற விதத்தில் மெதுவாக செயல்படுகிறது. இந்த விடயங்கள் பாரிய சர்வதேசப் பிரச்சினையாக மாற்றம் பெறுவதற்கு முன்னர் இந்த புகார்கள் பற்றி கவனம் செலுத்தாமல், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வழங்கும் பின்துணை காரணமாக, ஸ்ரீலங்கா , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்லாது இந்தியாவைக் கூட வேறுபடுத்தி ஒதுக்கித் தள்ளும் தன்மை அதிகரித்து வருகிறது.
மூன்றாவதாக ஸ்ரீலங்காவின் வெற்றிகரமான கிளர்ச்சி எதிர்ப்பு போராட்டத்துக்காக உலகத்தின் பாராட்டுக்களை பெறுவதற்குப் பதிலாக இந்த முறைப்பாடுகளைத் தீர்க்கும்படி பல்வேறு தரப்புகளிலிருந்தும் அழுத்தங்கள் ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இடமளித்துள்ளது.
நான்காவதாக வெற்றிகரமான எதிர்க்கிளர்ச்சி நடவடிக்கைகள் ஸ்ரீலங்காவின் எல்லைக்குள் எல்.ரீ.ரீ.ஈ ஆதரவுத் தளத்தை அழித்துவிட்டது, ஆனால் வெளிநாட்டிலுள்ள புலம்பெயர் ஸ்ரீலங்கா தமிழ் சமூகத்தின் மத்தியில் அதனை அழிக்க முடியவில்லை. இந்த புலம்பெயர் சமூகம் நிதியுதவிகள் மற்றும் இரகசிய ஆயுத மற்றும் உபகரண உதவிகள் வழங்கி எல்.ரீ.ரீ.ஈயை தொடர்ந்து தாங்கிப்பிடித்து வருவதில் பிரதான பாத்திரத்தை வகித்து வருகிறது. சிலகாலம் அமைதியாக இருந்ததின் பின்னர், மே 2009க்குப் பின்னர் புலம்பெயர் சமூகத்திலுள்ள தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் மீண்டும் ஒருமுறை, சுதந்திரத் தமிழீழம் என்கிற கோட்பாட்டுக்கு புதிய ஒட்சிசனை வழங்கி தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். ஸ்ரீலங்கா தமிழர்கள் மீதான தீவிரமான மனித உரிமை மீறல்கள் பற்றிய தீர்வுகாணப்படாத முறையீடுகள் யாவும் இந்தச் சக்திகளால் பிரதானப்படுத்தப்பட்டு மேற்கத்தைய மனித உரிமைகள் அமைப்புகளின் உதவியுடன் ஒரு புதிய உயிர்வாழ்தலுக்கான வாய்ப்பினை அந்த இயக்கத்துக்கு அளித்துள்ளன, இந்த மேற்கத்தைய மனித உரிமைகள் அமைப்புகள் ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுமாறு தமது நாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தங்களை வழங்குகின்றன.
ஐந்தாவதாக தமிழீழ நோக்கத்துக்கு புத்துயுயிர் வழங்க முயற்சித்துவரும் ஸ்ரீலங்கா தமிழ் புலம்பெயர் சமூக ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும், ஒரு புதிய தலைமுறையை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் காளான்களைப்போல முளைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தினரிடையே இந்த அடுத்த தலைமுறை அங்கத்தவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது, பாரம்பரிய திராவிடக் கழகங்களில் உள்ள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் செயல்களினால் வெறுப்படைந்தள்ள இவர்கள், ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினையை கையில் எடுத்து, திரும்பவும் பிரபாகரனை தமிழ் அடையாள சின்னமாக வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் தங்கள் அரசியல் தளத்தை வலுப்படுத்த முயன்றுவரும் நவீன திராவிடக் கட்சிகளின் தலைவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளதில் ஆச்சரியம் இல்லை.
ஆறாவதாக அடுத்த தலைமுறையினரின் ஆதரவு இந்த நவீன திராவிடக் கட்சிகளுக்கு கிடைப்பதில் சோர்வடைந்துள்ள பாரம்பரிய திராவிடக் கட்சிகள், இந்த போட்டியான அரசியல் தீவிரவாதத்தில் தாங்களும் இணையவேண்டிய கட்டாயத்திலுள்ளதை உணர்ந்து கொண்டு அவைகளும் மீண்டும் ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினையை கையிலெடுத்துள்ளன.
இந்த காரணங்களின் விளைவாக இந்திய அரசாங்கம் மற்றும் பிரதான நீரோட்டத்தில் உள்ள பிரதான அரசியற்கட்சிகள் என்பன, தமிழரகளின் கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் என்பனவற்றை சட்டபூர்வ கோரிக்கைகளாக மாற்றும்படி கோரிக்கைவிடுத்து, ஸ்ரீலங்கா மற்றும் இந்தியா என்பனவற்றில் உள்;ள தமிழர்களிடையே ஒரு கொந்தளிப்பான நிலையை உருவாக்கியுள்ள இந்த தீவிரவாத சக்திகளின் அமளிகள், தங்களையும் எதிர்கொண்டிருப்பதாக கருதுகின்ற நிலையில் உள்ளன. உள்நாட்டு மற்று வெளியுறவு அமைச்சுகள் ஒன்றிணைந்து செயற்றிறன் மிக்க நடவடிக்கையை கைளாள்வதற்கு இந்த நிலமை அழைப்பு விடுக்கிறது. ஒரு புதிய அரசியல் வன்முறைக்கான விதைகள் இப்போதே முளைவிடுகின்றன.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினைகள் எங்கள் கொள்கை தயாரிப்பில் முக்கியத்துவம் பெற்ற போதெல்லாம், புதுதில்லியில் இருந்த தலைவர்கள், தமிழ்நாட்டுப் பிரச்சினைகளில், அதேபோல ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களின் பிரச்சினைகளிலும் தனது முழு முயற்சியையும் செலுத்தும் உண்மையான ஆர்வமுள்ள தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் திறமையான ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளை பெறும் நன்மை இருந்தது.
இன்று, காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லாத ஒரு நிலமை உள்ளது. அடுத்த தலைமுறையினரை கவரத்தக்க அந்தஸ்துள்ள ஒரு தலைவர் அதனிடம் இல்லை. 2009 மேக்கு பின்னான நிலையை புதுதில்லி கையாளும் விதம், ஒரு ஒவ்வாத செயலில் இருந்து மற்றொன்றுக்கும், ஒரு குளறுபடியிலிருந்து மற்றொரு தாறுமாறானதுக்கும் நகருவதைப்போலவே உள்ளது. இந்த குழப்பமான நிலமை தீhப்பதற்கு ஏற்ற தலைமைப் பாத்திரத்தை வகிப்பதற்கு இந்தியாவால் மட்டுமே முடியும். அப்படிச் செய்வதற்குப் பதிலாக மன்மோகன் சிங்கினது அரசாங்கம், அதற்கான அனைத்து அரசியல் முயற்சிகளையும் சர்வதேச ரீதியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றிடமும், உள்நாட்டில் சந்தர்ப்பவாத அரசியல் நோக்கம் கொண்ட திமுக விடமும் அடகு வைத்து சரணாகதி அடைந்துள்ளது.
இந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் இன்னும் அதிக செயல்திறன்மிக்க ஒரு பாத்திரத்தை வகிக்காவிட்டால், ஒரு நவீன புலிகள் அமைப்பு இந்த கள நிலமையை கையிலெடுக்க காத்திருக்கிறது.
(பி. ராமன், புதுதில்லியில் உள்ள இந்திய அரசாங்க அமைச்சரவை செயலாளர்,மற்றும் மேலதிக செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இப்போது சென்னையிலுள்ள தற்கால கற்கைகள் நிறுவனத்தின் இயக்குனராகவும் மற்றும் சீனக் கற்கைகளுக்கான சென்னை மையத்தின் இணைப்பாளராகவும் உள்ளார்.)
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக