செவ்வாய், 16 ஏப்ரல், 2013

வெள்ளைக்கொடி

 
 
 
ஃபிரான்ஸிஸ் ஹாரிசன்

தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, தான் யாரைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அவரையே காட்டிக் கொடுத்த ஆள் காட்டியாக தான் மாறியதை விளக்கிக் கொண்டிருந்தார் அந்தப் பருத்த, குட்டையான தமிழர். அவர் அணிந்திருந்த முக்காடுடன் கூடிய மெல்லிய, கறுப்பு நிற மேல் சட்டைக்குள் தன் உடலை அப்படியும் இப்படியுமாகப் பதற்றத்துடன் திருப்பினார். அந்தப் பனிக் காலத்தின் மிகக் குளிரான நாள்கள் ஒன்றில் அவர் அணிந்திருந்த மேலாடை வானிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. விக்டோரியா ரயில் நிலையத்தின் உணவகம் ஒன்றில் நாங்கள் காஃபி குடித்துக் கொண்டிருந்தோம். உணவகத்தின் ஆள் அரவமற்ற ஒரு தாழ்வாரத்தில், திறந்த வெளியில் கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். பயணிகள் பின்பற்றியே ஆக வேண்டிய நடைமேடை அறிவிப்புகள் அவ்வப்போது எங்கள் உரையாடலில் குறுக்கிட்டன. உணவகத்தின் உள்ளே வெதுவெதுப்பாக இருந்தது. ஆனால், அங்கே ஆட்கள் நிறைய பேர் இருந்தார்கள்; அவர்கள் நாங்கள் பேசுவதைக் கேட்கக்கூடும்; கேள்விமுறையே இல்லாத படு கொலைகளைப் பற்றி அல்லவா நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

பயத்தின் காரணமாகத் தன்னுடைய உண்மையான பெயரை வெளியிட விரும்பாத குமரன், வட கிழக்கு இலங்கையில் தனித் தாய் நாட்டுக்காக ஒரு காலத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஒரு தமிழ்ப் புலிப் போராளி. இப்போது தான் அகதியாக இருக்கும் நாட்டின் மொழியை அவர் பேசுவதில்லை. ஒரு காலத்தில் துப்பாக்கியை ஏந்தியதால் பெற்றிருக்கக்கூடிய தன்னம்பிக்கையை இன்னமும் அவர் வெளிப்படுத்துகிறார். தமிழ்ப் புலிகளுடைய அரசியல் தலைவர்களின் மெய்க் காவலராக இருக்கும் அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றிருந்தவர் அவர்.

2009இல் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்களின் பெருங் குழப்பத்தில் தனக்கு அருகில் விழுந்த ஒரு குண்டால் குமரன் மிக மோசமாகக் காயமடைந்திருக்கிறார். மருந்துகளும், ஏன் காயத்துக்குக் கட்டுப்போடும் துணிகளும்கூட கையிருப்பிலிருந்து தீர்ந்துபோய்க் கொண்டிருந்தன; மீதமிருந்த சொற்ப எண்ணிக்கையிலான மருத்துவர்கள், மயக்க மருந்துகள் ஏதுமின்றி கசாப்புக் கத்திகளைக் கொண்டு பாதிப்படைந்த கைகால்களைத் துண்டித்துக்கொண்டிருந்தார்கள். சிகிச்சை இல்லாமல் குமரன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. பாதுகாப்புத் தேடி போர் முனையைக் கடந்து ஓடத் தீர்மானித்தார். அதற்கு முன்பாக அவர் செய்த முதல் காரியம், தன்னிடமிருந்த, பிடிபட நேர்ந்தால் தமிழ்ப் புலிப் போராளிகள் விழுங்க வேண்டி அவர்களுக்கு வழக்கமாகத் தரப்பட்ட சயனைட் குப்பியைத் தூர எறிந்ததுதான்.

தான் தப்பித்த கதையைச் சொல்லும்போது குமரன் குறிப்பிடத்தக்க வகையில் குறைவான விவரங்களையே சொல்கிறார். தமிழ்ப் புலிப் போராளிகள் சாகும்வரை போராட வேண்டுமென்றே எதிர்பார்க்கப்பட்டவர்கள்; சரணடைதல் என்பது ஆபத்துக் காலத்தில் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒருவர் மேற்கொள்ளும் ஒரு கோழைத்தனமான செயல் என்று அவர்களால் கருதப்பட்டது.

போர்முனையை அவர் கடந்தவுடன், முன்பு போராளிகளாக இருந்து பிறகு துரோகிகளாக மாறிய இரண்டு பேர் உடனடியாக குமரனைக் கண்டு அவரை ராணுவத்துக்குக் காட்டிக் கொடுத்தார்கள்.

“உயிர்வாழ அவர்கள் விரும்பியபட்சத்தில், அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை,” என்று குமரன் அனுதாபத்துடன் சொன்னார். “மிக வெளிப்படையாகப் போராளிகள் என்று அறியப்பட்டவர்களை மட்டுமே, எப்படியும் அவர்கள் கண்டறியபட்டு, காட்டிக்கொடுக்கப்படுவார்கள்.” எதிரியின் கையில் மாட்டிக் கொண்ட பிறகு தானும் ஏன் காட்டிக் கொடுப்பவனாக மாறினார் என்பதை எனக்குச் சொல்லவே இப்படி அவர் விளக்கினார். தடுப்புக் காவல் மையத்தில் சித்திரவதை செய்யப்பட்ட அவருடைய தோழர்களின் அலறல்கள் அவரை மாற்றுவதற்குப் போதுமானதாக இருந்தன.

விக்டோரியா ரயில் நிலையத்தின் ஆளரவமற்ற ஒரு பகுதியில் நான் உட்கார்ந்திருந்தேன். மேஜையின் எதிர்ப்பக்கத்தில் குமரனும், முன்பு வேறொரு காலகட்டத்தில் கணிதம் போதித்த ஒரு தமிழரும் உட்கார்ந்திருந்தார்கள். “வெள்ளைக் கொடிச் சம்பவம்” என்று அறியப்பட்ட நிகழ்வைப் பற்றிச் சொல்ல முன்வந்த முதல் நேரடிச் சாட்சிகள் அவர்கள்தான். போரின் இறுதி நாளில், சரணடைவது குறித்துத் தமிழ்ப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள் குழு ஒன்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அக்குழுவினர் அனைவரும் கொல்லப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் விதமாகப் பயன்படுத்தப்படும் மங்கல வழக்குப் (இடக்கரடக்கல்) பதம் அது. அக்குழு சரணடையத் திட்டமிட்டிருக்கிறது என்பது இலங்கையின் அதிபருக்குக்கூடத் தெரிந்திருந்தது; ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம், நார்வேஜியத் தூதரக உயர் அலுவலர்கள், சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் மேரி கோல்வின், ஐரோப்பாவில் இருந்த மத்தியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரான ஒரு தமிழர் என்று நினைவுக்குக் கொண்டுவர முடிந்த அனைவர்க்கும் அக்குழுவினர் பரபரப்பாக செய்திகள் அனுப்பினார்கள். இலங்கை அரசின் உயர் பதவியில் இருந்தவர்களிடமிருந்து கிடைத்த அறிகுறிகள் நம்பிக்கையூட்டுவதாக, அதாவது ஜெனிவா ஒப்பந்தத்துக்கு ஏற்ப சரணடைதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதாக, இருந்தன.

சரணடைந்தவர்களில் ஒருவர் புலித்தேவன். பத்தாண்டுகளுக்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். தமிழ்ப் புலிகள் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தையில் அவர் பங்கு பெற்றிருந்தார்; நான் இலங்கையில் பி.பி.சி.யின் செய்தியாளராக இருந்தேன். புலி என்று அவருடைய நண்பர்கள் அவரை அழைத்தார்கள். குள்ளலாக இருப்பது இயல்பாக உள்ள இடங்களில் உயரமானவர்கள் சில சமயங்களில் செய்வதுபோல அவர் கொஞ்சம் நேர்த்தியற்ற, வருத்தம் தெரிவிக்கிற முறையில் காலை எட்டிப் போட்டு நடப்பார். அலுவலக சோஃபாவில் உட்கார்ந்து நடப்பு அரசியல் சூழலை விவாதிப்பது அவருக்கு வேறெதையும்விட அதிகம் பிடிக்கும். விவாதம் செய்ய வாய்ப்பே கிடைக்காத ஒரு மனிதரைப்போல அவர் அதை பெரும் வேகத்துடன் செய்வார். வேறோரு பணியின் காரணமாக நான் இலங்கையைவிட்டுப் போனபின்னும் அவர் மிக உறுதியுடன் என்னுடன் தொடர்பில் இருந்தார்.

2009ல் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் கிட்டத்தட்ட அன்றாடம் இணையத்தில் புலி என்னுடன் உரையாடத் தொடங்கினார். நம்பிக்கை இழந்த சூழலில் கடைசி முயற்சியாக உதவி கோரி மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் அவை. சில சமயங்களில் அரசியல், போர்க்கள உத்தி, மற்றும் உறுதியற்ற எதிர்காலம் ஆகியவை குறித்து விவாதித்தோம்; ஆனால், துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள், வீறிட்டழும் அம்மாக்கள் என்ற தினசரி மெய்ம்மையிலிருந்து தப்பிக்கவே பெரும்பாலும் அவர் விரும்பினார். விசித்திரம்தான், ஆனால் மாதக் கணக்கில் நடக்கும் போரின் ஊடாக ஒருவருடன் நீங்கள் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தால், தொடர்ந்து அவர் உயிர் பிழைத்திருக்க வேண்டும் - பகுத்தறிவு ரீதியில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் - என்ற உங்களுடைய உணர்வு ஈடுபாட்டை வெளிக் காண்பிக்கத் தொடங்குவீர்கள். தப்பிக்கவோ அல்லது சரணடையவோ முயலும்போது பிடிபட்டால் அவர் கொல்லப்படும் வாய்ப்பு உள்ளதையும்கூட நாங்கள் விவாதித்தோம்.

புலிக்கும், பிறருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்தத் தகவல்களைத் திரட்டி உண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் ஈடுபட்டிருந்தேன். விக்டோரியா ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சந்திப்பு அதில் ஒரு பெரிய முன்னேற்றமாக இருந்தது. லண்டனின் மத்தியப் பகுதியில், பயணிகளின் நெரிசலுக்கும், ஆரவாரத்துக்கும் இடையே வட கிழக்கு இலங்கையின் போர்க் களங்களில் நிகழ்ந்த நம்பிக்கைத் துரோகத்தின் அடுக்குகளை ஒவ்வொன்றாகப் பிரித்து விவாதிப்பது கனவில் வரும் ஒரு வினோதக் காட்சியைப்போல இருந்தது.

சிறிது நேரத்தில் என்னுடைய குறிப்பேட்டில் போர்முனையையும், காயலின் (lagoon) குறுக்கே இருந்த பாலத்தையும் மேம்போக்கான ஒரு வரைபடமாகத் தீட்டுகிறோம்; போரின் இறுதிக் கட்டத்தில் இந்தப் பாலத்தைக் கடந்துதான் எலும்பும், தோலுமாக இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காற்றில் மேலெழும்பும் கரும்புகையையும், தாக்கும் குண்டுகளையும் விட்டுவிட்டுத் தப்பித்தார்கள். இலங்கை ராணுவம் தன்னை இருத்தி வைத்த இடத்தை குமரன் எனக்குக் காட்டுகிறார் - ஒரு மரத்துக்கு அருகில், மண்ணாலான கரைக்குப் பின்னால். குறுக்காகக் கடந்து போகும் புலிகளின் அரசியல் தலைவர்களுடைய அடையாளங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று ராணுவம் அவரைப் பணித்தது. அந்தத் தலைவர்களின் முன்னாள் மெய்க்காவலரைவிட வேறு யார் அதைச் சிறப்பாகச் செய்ய முடியும்? சந்தேகத்துக்கு இடமில்லாமல் இது மிகச் சீராகத் திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட சரணடைதல் என்பதால் அந்தத் தலைவர்களை ஆபத்துக்கு உள்ளாக்குகிறோம் என்ற எண்ணம் குமரனுக்குத் தோன்றவே இல்லை. இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மெய்க்காவலர்களுடனும், நடைபேசிகளுடனும் (walkie-talkies) எல்லா இடங்களிலும் இருந்தார்கள்.

வெள்ளைக் கொடியைக் கையில் ஏந்திப் போர்முனையைக் கடந்த முதல் அணியில் புலிகளின் அரசியல் தலைவருடைய மனைவி இருந்தார். அவர் தமிழரல்லர்; சிங்களப்பெண். ராணுவ வீரர்களின் இனக்குழுவைச் சேர்ந்தவர். முதல் அணியினர் நெருங்கி வந்தவுடன் அந்தப் பெண் அவர்களுடைய மொழியில் எதையோ அவசரமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்; குமரனால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை, சுடவேண்டாமென்று ராணுவ வீரர்களை அவர் வற்புறுத்தியிருக்கலாம். புலிகளின் தலைவர்கள் பாலத்தைக் கடப்பதை குமரன் பார்த்தார். அவர்களை கைக்கொண்ட ராணுவ வீரர்கள் பாலத்தின்மீது அவர்களை இட்டுப்போய் வாகனங்கள் கொத்தாக இருந்த இடத்துக்கு அழைத்துப் போனார்கள். இடைவெளி விட்டுவிட்டு மேலும் அதிகமான எண்ணிக்கையில் புலிகள் குழுக்களாக நடந்து வந்து குமரனைக் கடந்து போய் சரணடைந்தார்கள்.

அது நிகழ்ந்து முடிந்த உடன், ராணுவம் குமரனை வாகனத்தில் அழைத்துப் போவதற்கு முன்பாக ஒரு மணி நேரம் போல அவர் காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து, மூடாக்கில்லாத ஒரு வாகனத்தின் பின்புறம் உட்கார்ந்திருந்த குமரன், சாலைக்கு அருகில் இருந்த ஏதோ ஒரு திறந்த வெளி மைதானத்தின் ஓரத்தில் ராணுவ வீரர்கள் கூட்டமாகத் திரண்டிருந்ததைக் கண்டார். அவர்கள் அங்கே கிடத்திவைக்கப்பட்டிருந்த சடலங்களைத் தங்களுடைய கைப்பேசிகளில் புகைப் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை வாகனத்தில் கடந்தபோது, புலியும், அவருடைய தலைவரும், புலிகளின் அரசியல்தலைவருமான நடேசனும் இறந்து கிடந்ததைப் பார்த்து குமரன் பெரும் அதிர்ச்சி அடைந்தார்; அவர்களுடைய சட்டைகள் அவர்களுடைய முண்டத்திலிருந்து உரித்தெடுக்கப்பட்டிருந்தன.

இந்தக் குற்றத்துக்கு ஒரு சாட்சி என்ற முறையில் தான் முன்னைவிட அதிக ஆபத்தில் இருப்பதை குமரன் உடனே புரிந்துகொண்டார். “அவர்களால் (ராணுவம்) இதை அவர்களுக்கு (புலி மற்றும் நடேசன்) செய்ய முடியுமென்றால், எனக்கு அவர்களால் என்ன செய்ய முடியுமோ; இந்தச் செய்தியை எனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, யாரிடமும் அதைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டுமென்பதே அடுத்து வந்த நாட்களின் ஒவ்வொரு மணி நேரத்திலும் நான் செய்ய வேண்டிய மிகக் கடினமான செயல்களில் ஒன்றாக இருந்தது,” என்று அவர் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார்.

இந்தச் சரணடைதலுக்கு தமிழர்கள் வேறு சிலரும் சாட்சியாக இருந்தது குமரனுக்குத் தெரியவில்லை; ஒரு நாள் அவர்களும் அதை வெளி உலகுக்குச் சொல்லக்கூடும். அவருக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவர் ஷர்மிளன்; அவர் ஒரு காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு இலங்கைப் பகுதி ஒன்றில் நீலமும், வெள்ளையுமானச் சீருடையை நேர்த்தியாக அணிந்திருந்த பள்ளிக் குழந்தைகள் பலருக்குக் கணிதம் போதித்தவர். தன்னுடைய அடையாளம் தெரிந்துபோனால், இலங்கையில் உள்ள தன்னுடைய உறவினர்கள் ஆபத்துக்கு உள்ளாவார்கள் என்பதால் அவர் தன்னுடைய உண்மையான பெயரையோ, எந்தப் பள்ளியில் பணிபுரிந்தார் என்பதையோ எனக்குச் சொல்லப்போவதில்லை.

உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்வதற்காக அடிக்கடி காஃபியை உறிஞ்சிக்கொண்டும், உணவகத்துக்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை விழிப்பாகக் கவனித்துக்கொண்டும் இருக்கும் அந்த இருவரும் நேசபாவத்துடன் இருக்கிறார்கள்; ஆனால், ஒருவருக்கொருவர் அதிக நட்புணர்வுடன் இருக்கவில்லை. புலிகள் அவரை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்த்தார்களா என்று ஷர்மிளனை நான் கேட்கும்போது சங்கடமான சிரிப்பே பதிலாகக் கிடைத்தது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீரரைப் போராளிகளுக்கு வழங்க வேண்டுமென்று இருந்த விதியை அவர் குறிப்பிட்டுச் சொன்னார். ஒரே மாதமே கொடுக்கப்பட்ட பயிற்சிக்குப் பிறகு பதுங்குக் குழிகள் தோண்டுதல், போரின் கடைசி வருடத்தில் பிணங்களை அகற்றுதல் போன்ற பணிகளில் அவர் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டார்.

தமிழ்ப் புலிகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் சரணடைந்ததற்கு முந்தைய இரவு பொதுமக்களின் ஒரு பெரிய குழுவோடு பாதுகாப்புத் தேடி தப்பி ஓட ஷர்மிளன் முடிவு செய்திருந்தார். இன்னும் இருட்டாக இருந்ததால் போர்முனையில் இருந்த ஒரு சிதிலமாக்கப்பட்ட கட்டடத்தில் ராணுவம் அவர்களை வைத்திருந்தது; விடிவதற்காகக் காத்திருந்தார்கள்.

புலிகளின் அரசியல் தலைவர்கள் வெள்ளைக் கொடிகளுடன் நடந்து போனதை ஜன்னல் வழியாகப் பார்த்த ஷர்மிளன் திகைத்துப் போனார்; உயிர்த் தியாகத்தைப் புகழ்பாடிய ஒரு அமைப்பில், சரணடைதல் விலக்கப்பட்ட ஒன்று என்பது அவருக்குத் தெரியும். ஏறத்தாழ பதினைந்து பேர் கொண்ட முதல் அணி ராணுவ வீரர்களிடம் வருவதையும், ஆயுதங்கள் ஏதும் மறைத்து வைத்திருக்கிறார்களா என்பதை அறிய உடல்சோதனைக்கு அவர்கள் உள்ளாக்கப்படுவதையும் ஷர்மிளன் பார்த்தார். பிறகு பாலத்தின் மீது ராணுவ வீரர்களால் அழைத்துப்போகப்பட்ட அவர்கள் கண் பார்வையிலிருந்து மறைந்தார்கள். தொலைவில், ராணுவ வாகனங்களை மட்டுமல்ல, சர்வதேச உதவி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் வகையைச் சேர்ந்த பெரிய வெள்ளை ஜீப்புகளையும் அவர் கண்டார். ஏறத்தாழ ஐநூறு ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியில் இருந்திருப்பார்கள் என்று ஷர்மிளன் கணக்கிடுகிறார். புலிகளின் அனைத்து அரசியல் தலைவர்களும் வெற்றிகரமாக சரணடைந்தார்கள் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இலங்கை ராணுவம் சொல்வது இதுவல்ல என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். புலிகள் அவர்களுடைய சகாக்களாலேயே முதுகில் சுடப்பட்டார்கள் என்பதே உண்மை என்று அது சொன்னது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், போராளிகளின் துரோகத்துக்கு சான்றாக ராணுவம் இறந்த உடல்களை ஏன் காட்சிப்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாறாக, அது அவசரமாக அனைத்து சான்றுகளையும் அழித்தது.

கொஞ்ச காலத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியானது; குமரன் பார்த்த ராணுவ வீரர்களில் ஒருவர் எடுத்ததாக இருக்கலாம். புலி மற்றும் அவருடைய தலைவர் நடேசன் ஆகியோருடைய பாதி நிர்வாண உடல்களை அது காட்டியது; அவர்கள் உடலில் தீக்காயங்களும், முன்வயிற்றில் கிழித்து உண்டாக்கப்பட்ட காயங்களும் இருந்தன. ஒரு குண்டு நுழைந்தது போலத் தோன்றிய காயம் ஒன்று புலியின் மார்பில் இருந்தது; முகத்தின் பக்கவாட்டில் சுடப்பட்டதுபோல நடேசனின் சடலம் தோன்றியது.

தமிழ்ப் புலிகளின் மூத்த அரசியல் தலைவர்களை - குறிப்பாக முக்கியத் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களையும், ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களையும் - கைதிகளாக ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு விரும்பவில்லை என்று தோன்றுகிறது.

அவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எதிர் காலத்தில் சர்வதேச நுண்ணாய்வுக்கு உட்படுத் தப்படும். இது ஆபத்தான ஒரு நடவடிக்கை; ஏனென்றால், வேண்டுமென்றே மருத்துவமனைகளையும், உணவுக்காக வரிசைகளில் நின்றவர்களையும், பொது மக்களுக்கான பாதுகாப்புப் பிராந்தியங்களையும் அரசுப் படைகள் குண்டு வீசித் தாக்கிய போர்க் குற்றங்களுக்கு அவர்கள் சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். உயிருடன் இருந்தால், இலங்கைத் தமிழர்களை, அவர்களுடைய போராட்டத்தின் இன்னொரு காலகட்டத்தில் இந்தத் தலைவர்கள் வழிநடத்தலாம். வெற்றிபெற்றவர்கள் இந்தப் போருக்கு ஒரு தீர்மானமான முடிவை விரும்பி னார்கள். ஆனால், அவசரத்தில் போரின் மிக அடிப்படையான நியதிகளில் ஒன்றை அவர்கள் மீறினார்கள். வெள்ளைக் கொடிக்கு மரியாதை இல்லையென்றால், பொதுமக்களையும், சண்டையிடுவதை நிறுத்த விரும்புகிறவர்களையும் பாதுகாக்க எந்த வழியும் இல்லை.

கட்டுப்பாட்டுக்குப் பெயர்பெற்றவர்கள், போர்ச் சாவுகளுக்குப் பழக்கப்பட்டவர்கள் என்று அறியப்பட்ட தமிழ்ப் புலிகள் குழுவின் பல உறுப்பினர்களே தொடர்ந்து சண்டையிடுவதில் பயனில்லை என்று புரிந்துகொள்ளும் ஒரு கட்டம் வந்தது. விக்டோரியா ரயில் நிலையத்தில் எனக்கு எதிரில் குளிரில் நடுங்கிக்கொண் டிருக்கும் இந்த இரண்டு மனிதர்களும் அமைப்பு வழங்கிய உயிர்த் தியாகம் என்ற மந்திரத்தைப் புறக்கணித்துவிட்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறார்கள். இப்போது தங்களுடைய கதைகளைச் சொல்ல முன்வந்ததன் மூலம் மீண்டும் அவர்கள் தங்களை ஆபத்துக்கு உட்படுத்திக்கொண்டு விட்டார்கள்.

தமிழில்: ஆர். சிவகுமார்

காலச்சுவடு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல