“உலக தமிழ் மக்களின் தீராத தாகமான தமிழீழத்தாகத்தை தீர்த்து வைப்பதற்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்து எமது போராட்டத்தை வழிநடத்த உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்… “பறவைகளின் தாகம் தமிழீழ தாயகம்” தமிழகத்தின் பணம் படைத்த ஈழத்தை நேசிக்கின்ற பிரபல்யங்களை இலக்குவைத்து துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு பணம் கேட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.தமிழீழ தேசியத் தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்ற செய்தியையும் தெரிவித்துள்ள இந்த கும்பல் தாம் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கும்பல் தெய்வீகன், நந்தவனத்தில் புலம்பெயர் தமிழ் மக்களின் பாஸ்போட்களை பறித்த கண்ணாடி இளங்கோ, நந்தகோபன், நிர்மலன், விடுதலை (குட்டி) என்கின்ற எட்டப்பர்களின் பின்னால் நின்று E.N.D.L.F. பரந்தன் ராஜனுடன் கூட்டுச் சேர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போகின்றனராம். இந்தக் கும்பலுடன் இணைந்து தான் லண்டனில் உண்ணாவிரதம் இருந்ததாக தெரிவிக்கப்படும் (மைக் டொனால்) தளபதி பரமேஸ்வரன் இப்பொழுது பயிற்சி பெற்று வருகிறாராம். இவர்களின் அடுத்த தளபதி “போண்டாவாயன்” கோபி சிவந்தனாம், இவர்கள் தான் இந்த பறவைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பறவைகளுக்குப் பின்னால் புலம்பெயர் கிளைகள் உள்ளனர் என்பது தான் உண்மை!
அறுபது ஆண்டுகால இனவிடுதலைக்கான போராட்ட நீட்சி 2009 மே 18 உடன் முடிவுக்கு வந்ததாக தோற்றங்காட்டினாலும் அது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றது என்பதே உண்மையாகும். எமது இனத்திற்கான விடுதலையின் தேவையை சர்வதேசம் உணர்ந்து கொள்ளும் வகையில் இனவாத அரசு நடந்து கொண்டே வருகின்றது. இன விடுதலைக்காக கொடுக்கப்பட்ட விலைகள் மிகப் பெரியவை. நினைத்துப் பார்க்கவோ எழுத்துக்களுக்குள் அடக்கிவிடவோ முடியாதவை. தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு மிகப் பலம் பொருந்திய சக்தியாக பரிணமிப்பதற்கு அது கொண்டிருந்த நேர்த்தியான கட்டமைப்பு, அளவிடமுடியாத அர்ப்பணிப்புக்கள் என்பனவே காரணமாக திகழ்ந்திருந்தன.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஓய்வு நிலைக்கு கொண்டுவரப்பட்டமை, தமிழ் மக்கள் மனங்களில் ஈடு செய்ய முடியாத இழப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். விடுதலையை நேசித்த தமிழ் மக்கள், தமிழ் உணர்வாளர்கள் அந்தத் துயரில் இருந்து இன்னமும் மீளவேயில்லை. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகம் முற்று முழுதாக சிங்களமயமாகிவருகின்ற நிலையில் எமது மண்ணை காத்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் தமிழ் மக்களை வாட்டிவதைக்கின்றது. இந்த நிலையில் போருக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை வைத்து பிழைப்பு நடத்தவும் வயிறு வளர்க்கவும் பலர் தலைப்பட்டிருக்கின்றமை மிகுந்த வேதனைக்குரிய விடயமாக அமைந்து வருகின்றது.
போருக்குப் பின்னர் தமிழ் மக்களை வழிநடத்துவதாகத் தெரிவித்து விடுதலைப் புலிகளின் பெயரினைப் பயன்படுத்தி பல அறிக்கைகள் வெளிவருவதும், தனி நபர்களை சாடுவதற்காக அமைப்பின் பெயரைப் பயன்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டிருகின்றது. அதிகார மோகங்களால் உந்தப்படுபவர்கள், முடிந்த அளவிற்கு பொய்களைக் கூறி தம்மை தலைவர்களாகவும் பொறுப்பானவர்களாகவும் காட்ட முற்படுகின்றார்கள்.
குறிப்பிட்ட சிலர் தம்மிடம் தான் தலைமை அதிகாரங்களைத் தந்ததாகக் கூறிக்கொண்டு ஏமாற்றிப் பிழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். உண்மையில், தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக இன்றுவரையில் நேர்மையாகப் போராடிவருகின்ற பல்லாயிரக்கணக்கான குரல்களும் போலிகளின் குரல்களால் அடிபட்டுப்போகின்ற ஆபத்தான தருணம் தற்போது எதிர்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் ‘தமிழீழ விடுதலைப் பறவைகள்’ அமைப்பு என்ற பெயரிலான குழு ஒன்று தமிழகத்தில் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றமைக்கான ஆதாரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
இறுதிப்போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் தான் காரணம் எனத் தெரிவித்து, தமிழகத்தில் ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகள் உள்ளதாகவும் அவர்கள் அனைவரையும் இணைப்பதுடன் எல்லா இயக்கங்களையும் இணைத்து சக்திவாய்ந்த ஒரு விடுதலை இயக்கம் ஒன்றை உருவாக்கப்போவதாகவும் அதற்கு “தமிழீழ விடுதலைப் பறவைகள்” என்று பெயரிட்டிருப்பதாகவும் அதற்காக நிதி வழங்குங்கள் எனத் தெரிவித்தும் மூன்று பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு சில நபர்களால் தமிழகத்தில் உள்ள ஈழத்தை நேசிக்கின்ற பிரபல்யங்களிடம் கையளித்து, பணம் கறக்கும் நடவடிக்கையில் ஒரு குழு ஈடுபட்டிருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘புலி’ச் சின்னத்தினைச் சுற்றி காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதை தமிழீழ விடுதலைப் பறவைகள் என மாற்றம் செய்ததில் இருந்தே அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு அம்பலமாகியிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் பறவைகள் என்ற பெயரிலான ஏமாற்றுப் பேர்வழிகள் தமது ஏமாற்று நடவடிக்கைக்குத் துணையாக கையில் எடுத்திருக்கின்ற தமிழீழ தேசிய சின்னமான புலியை உள்ளடக்கிய தமிழீழத் தேசியக் கொடிக்கென்றொரு மிகப் பெரிய வரலாறு இருக்கின்றது என்பதனை விளக்கமாகக் குறிப்பிட விரும்புகின்றோம்.
எமது தேசியக்கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலிச்சின்னத்தின் உருவப்படம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அமையவே வரையப்பட்டது. மதுரையைச் சேர்ந்த பிரபல ஓவியர் நடராஜன் என்பவர் 1977ம் ஆண்டு புலிச்சின்னத்தின் உருவப்படத்தை வரைந்தார். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அமைய மீண்டும் மீண்டும் பல தடவைகள் வரைந்து, இறுதியில் தலைவர் அவர்களின் எண்ணத்தில் தோற்றம் பெற்றிருந்த வடிவம் புலிச்சின்னமாக உருவகம் பெற்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது.
எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது
தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையானவிடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழ சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை வேண்டிநிற்கும் அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.
விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும் அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது
விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது
இவ்வாறான சிறப்பம்சங்கள் வாய்ந்த புலிச்சின்னத்தினைத் தான் எந்தக் கேள்வியும் இன்றி விடுதலைப் பறவைகள் என்கின்ற ஏமாற்று நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் சின்னமாக கையிலெடுத்திருக்கிறது அந்தக் குழு.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் சொல்வதைவிடவும் செயல்வடிவம் கொடுப்பதில் தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். பறவைகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் முடிந்த அளவு நிதி வழங்குங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கின்ற குறித்த குழுவிற்கு மற்றொரு விடயத்தினையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்,
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது கையில் இருந்த மோதிரத்தை விலைக்கு விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்துத் தான் முதன் முதலில் ஆயுதம் வாங்கியிருந்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் நீங்கள் பணம் சேகரிப்பதற்கு முன்பாக ஈழ விடுதலைக்கு ஏதாவது ஆரோக்கியமான வழிமுறைகளில் உதவ முடியுமா? என்பதைப் பரிசீலிக்கலாமே?
அதனைவிடவும் உங்களைப் போன்று ஆயிரம் வரையான போராளிகள் இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிடுவதன் மூலம் இலங்கை இன வெறி அரசிடம் இருந்து உயிர்களைக் காத்துக் கொள்ள இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அப்பாவி இளைஞர்களையும் இந்தியப் புலனாய்வு அமைப்புக்களிடம் காட்டிக்கொடுத்து மாட்டிவிட முற்படுகின்றீர்களா?
ஈழத்தில் இருந்து தமிழகம் சென்று அங்கு பணம் சேகரிக்க முற்படுகின்ற நீங்கள், தமிழக அரசியல்வாதிகள் சிலர் எமது விடுதலைப் போராட்டத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய முற்படுவதாகக் கூறியிருக்கின்றீர்கள். தமிழக மக்கள் எமது போராட்டத்தின் நியாயத் தன்மையினை மிகத் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதன் வெளிப்பாடே தற்போது தமிழகத்தில் பேரெழுச்சி பெற்றிருக்கின்ற மாணவர் போராட்டம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்தினை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதானால், நீங்கள் செய்வது பண வியாபாரமா? நீங்கள் செய்வது ஏமாற்று வேலை என்பதை நீங்கள் பணம் பெறுவதற்காக வழங்கிவருகின்ற அறிக்கையே பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றது. எமது விடுதலை இயக்கத்தினை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஏமாற்று நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மண் வாழ தம்மை மாய்த்துக் கொண்ட மாவீரர்களுக்கும் மக்களுக்கும் செய்கின்ற வரலாற்றுத் துரோகம் என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் சுயலாப அரசியல் செய்யமுற்படும் நம்மவர்களுக்கு,எமது மக்கள், மிகத் தெளிவாக எமது இன விடுதலையை நேசிக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் பிணக்குகளையோ, குழப்பங்களையோ ஏற்படுத்தி பேரினவாதிகளுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டாம். இன்றுவரையில் தமிழகத்திலும் புலத்திலும் இருக்கின்ற பெருமளவான உறவுகள் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை பெருமளவில் வழங்கியே வருகின்றனர். ஒரு கையால் கொடுப்பதை மறு கை அறியாத வகையில் அவர்களது உதவிகள் அமைந்துவருகின்றன. இவ்வாறான மோசடியான நடவடிக்கைகள் உதவிகள் புரிந்துவரும் ஈழவிடுதலையை விரும்புகின்ற தமிழக புலத்து உறவுகளிடம் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும் ஆபத்து உணரப்பட்டிருக்கின்றது.தயவு செய்து இனத்தை விற்று பிழைப்பு நடத்துவதை விடுவதே நீங்கள் தமிழனத்திற்கு செய்கின்ற மிகப்பெரிய கடமையாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
தர்மத்தின் நேர் நின்று வளர்ந்த தேசிய விடுதலைப் போரின் அர்ப்பணிப்புக்கள் என்றும் வீண் போகாது என்பதை வரலாறு விரைவில் உணர்த்தத்தான் போகிறது. விடிகின்ற திசையில் தெரியும் விடிவெள்ளி எமக்கானது. விடுதலைக்காக நேர்மையான வழியில் முடிந்தவரையில் உழைப்போம்.. ஒன்று சேர்ந்து வெற்றி கொள்வோம்.
Pathivu Web





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக