வெள்ளி, 3 மே, 2013

இலங்கையில் ‘துக்ளக்’ - 4

இன்னமும் அகற்றப்படாத கண்ணி வெடிகள்!

நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர், ஆறு நாட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்திகளைச் சேகரித்து வந்துள்ளனர். இந்த இதழில் கிளிநொச்சி பகுதியில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்:

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரும் ஏ9 நெடுஞ்சாலையில் பகலில் பயணம் செய்ததால், இடையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலையின் இரு மருங்கிலும் சிவப்புக் கலரில் மண்டையோடும், இரு எலும்புகளும் கொண்ட எச்சரிக்கைப் பலகைகளை எங்களால் கவனிக்க முடிந்தது. உடனே காரை அங்கே நிறுத்தச் செய்து இறங்கினோம். அவ்வளவுதான்... அருகிலிருந்த புதருக்குள்ளிருந்து சரசரவென ஆறேழு பேர் வித்தியாசமான யூனிஃபார்மில், முகத்தை மூடிய கண்ணாடி, கையில் வாக்கி டாக்கி சகிதம் எங்களை நோக்கி ஓடி வந்தனர். “காரை இங்கு நிறுத்தக் கூடாது. உடனே கிளம்புங்கள்” என்று எங்களை விரட்டினர்.

நாங்கள் தமிழர்கள் என்பதை முகத்தைப் பார்த்தே உணர்ந்து கொண்ட ஒருவர், “இங்கே மிதிவெடிகளை (கண்ணி வெடி) அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எந்த நேரமும் ஏதாவது ஒன்று வெடிக்கக் கூடும். எனவே, இங்கு வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை. உடனே அகன்று செல்லுங்கள்” என்று எச்சரித்தார். அப்போதுதான் அந்த எச்சரிக்கைப் பலகைகளையும் நாங்கள் கவனித்தோம். ‘மிதிவெடி அபாயம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து நாங்கள் காரில் கிளம்பி விட்டோம். சில கிலோ மீட்டர்களுக்கு அந்த எச்சரிக்கைப் பலகைகள் தொடர்ந்து காணப்பட்டன. இரு பக்கமும் பல பேர் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மண்ணைத் தோண்டி வெடிகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அப்பகுதிகளில் குச்சி ஊன்றி அதைப் பாதுகாப்பான பகுதி என்று அடையாளப்படுத்துகின்றனர். (ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் ஆளில்லா ரோபோ வாகனம் ஒன்றை ஓடவிட்டு, வெடிகளை வெடிக்கச் செய்து விடுவார்களாம். அதன் பின்னர், ஆட்கள் மூலம் மண்ணைத் தோண்டி வெடி எதுவும் இல்லை என்று உறுதி செய்வார்களாம். உயிரைப் பணயம் வைத்து நடக்கும் அந்த வேலை சிரமமானது என்பதைப் பார்த்ததுமே தெரிந்து விடுகிறது. முதலில் மீள் குடியேற்றப் பகுதிகளில் வெடிகளை அகற்றி, மக்களைக் குடியேற்றும் பணி நடந்ததாம். அது முடிவுற்ற பிறகு, இந்த வனப் பகுதியில் வேலை நடக்கிறதாம். இந்தத் தகவல்களை பின்னர் நாங்கள் சந்தித்த ராணுவ அதிகாரி மூலம் தெரிந்து கொண்டோம்.)

மேலும், அந்தப் பகுதியில் இருந்த பனை மரங்கள் அனைத்தும், மேலே கீற்றுகளை இழந்து வெறும் கம்பங்களைப் போல நின்றன. அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை எங்களுக்குக் கார் ஓட்டிய தமிழ் டிரைவர் விளக்கினார். “2004 முதலே யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடத் துவங்கி விட்டது. துறைமுகம் மற்றும் விமான நிலையம் இருந்ததால், பெருமளவில் ராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கி, இலங்கை அரசு யாழ்ப்பாணத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. ஆனால், கிளிநொச்சி பகுதி 2009 ஜனவரி வரை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

“இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி செல்லும் இந்தப் பாதையில் ராணுவம் முன்னேறி வந்ததால், இப்பகுதி முழுக்க கண்ணி வெடிகளைப் புலிகள் புதைத்து விட்டனர். இதனால் இப்பகுதியில் பல ஆண்டுகள் கடும் போர் நடந்தது. வான்வெளித் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. இதில்தான் இந்தப் பகுதி மரங்கள் அத்தனையும் அழிந்தன. இந்தப் பகுதிகளில் தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி, புலிகளை அப்புறப்படுத்திய ராணுவம், பல மாதங்கள் கண்ணி வெடிகளை அகற்றி, பாதை ஏற்படுத்தி முன்னேறிச் சென்று கிளிநொச்சியைக் கைப்பற்றியது” என்று கூறிய டிரைவர், “கண்ணிவெடிகள் அதிகபட்சமாக புதைக்கப்பட்ட பகுதி இது என்பதால், இன்னும் இந்தப் பகுதிகளில் வெடிகளை அகற்றும் பணி முடிவடையவில்லை” என்று குறிப்பிட்டார்.

கிளிநொச்சி நகரத்தை நெருங்கியதும், வழியில் ராணுவமும், போலீஸும் எங்கள் காரை வழி மறித்தன. ஏதோ விசாரிக்கப் போகிறார்கள் என்று நாங்கள் நினைத்தபோது, ஒரு துண்டுப் பிரசுரத்தை மட்டும் எங்கள் கையில் கொடுத்து, பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுமாறு டிரைவரைக் கேட்டுக் கொண்டு வழியனுப்பி வைத்தனர்.

கிளிநொச்சியை அடைந்தபோது, அது பளிச்சென இருந்தது. புதிய பள்ளிகள், புதிய அரசு அலுவலகங்கள், புதிய நீதிமன்ற வளாகங்கள், புதிய துணைமின் நிலையங்கள் ஆகியவை பளபளவென நின்றன. தமிழர்களின் தனியார் கட்டிடங்களும், புதுப்பிக்கப்பட்ட புதுப்புது ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், டூ வீலர் ஷோரூம்கள் எல்லாம் காணப்பட்டன. பள்ளி மாணவ- மாணவியர் யூனிஃபார்முடன் ஆள் நடமாட்டமில்லாத சாலைகளில் கூட, எந்தவிதப் பயமுமின்றி சைக்கிள்களில் பயணம் செய்ததைப் பார்க்க முடிந்தது.

வீ.ஆனந்த சங்கரியின் அலுவலகத்தை நாங்கள் அடைந்தபோது, அதையடுத்த நிலத்தில் ஒரு ராட்சத வாட்டர் டேங்க் தரையோடு சாய்ந்து கிடந்தது. அதைப்பற்றி அந்த வழியே போனவர்களிடம் விசாரித்த போது, ‘இந்நகரைக் கைப்பற்றும் ராணுவத்தினருக்கு தண்ணீர் வசதி இருக்கக் கூடாது என்பதற்காக, இந்த வாட்டர் டேங்கை விடுதலைப் புலிகள் வெடி வைத்துத் தகர்த்து விட்டனர். இங்கிருந்த அரசுக் கட்டிடங்களையும் அவர்கள் வெடி வைத்துத் தகர்த்து விட்டுத்தான் வெளியேறினர்’ என்றார்கள்.

அதைப் படமெடுத்துக் கொண்டு, அடுத்த வாசலில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நுழைந்து, அதன் செயலாளரான முன்னாள் எம்.பி. வீ.ஆனந்த சங்கரியைச் சந்தித்தோம். முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (டி.என்.ஏ.) இருந்தவர், தற்போது அந்தக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி விட்டார். “ராஜபக்ஷ எந்த அளவு குற்றவாளியோ, அதே அளவு குற்றவாளிதான் புலிகள் தலைவர் பிரபாகரனும். கடும் போரின் போதும் வன்னிப்பகுதி தமிழர்களை வெளியே விடாமல், தனக்கு அரணாக வைத்துக் கொண்டு பல தமிழ்க் குடும்பங்களை அழித்தொழித்தார். தமிழர்களை அழித்ததில் பிரபாகரனுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே பங்கு டி.என்.ஏ.க்கும் இருக்கிறது.

“பிரபாகரனை ஒரு அரசியல் தீர்வுக்குத் தயார் படுத்தாமல், அவரது அழிவுக்கும், ஆயிரக்கணக்கான தமிழர்களின் அழிவுக்கும் டி.என்.ஏ.வும் ஒரு காரணமாக இருந்தது. கடைசிக் கட்டப் போரின்போது, விடுதலைப் புலிகளின் வளையத்துக்குள்ளே லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும், டி.என்.ஏ. அவர்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிரபாகரன் இருந்தால் நாம் அரசியல் செய்ய முடியாது, அவரும் அவரது குடும்பமும் அழியட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை” என்று குறிப்பிட்டார் ஆனந்த சங்கரி.

மேலும் அவர், “பல கட்டங்களில் தீர்வுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ராஜபக்ஷ கூட ஒரு கட்டத்தில் இந்திய மாடல் மாகாணசபைத் தீர்வுக்கு ஒத்து வந்தார். ஆனால், புலிகள் அழிவை மட்டுமே தேர்வு செய்தனர். கடைசிக் கட்டத்தில் கூட ராஜபக்ஷ தமிழ் கட்சிகளை அழைத்துப் பேசினார். ‘ஏறக்குறைய 65 ஆயிரம் தமிழர்கள் ராணுவத்திடம் வந்து தஞ்சம் அடைந்து விட்டனர். இன்னும் சுமார் 20 ஆயிரம் மக்கள்தான் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்’ என்று எங்களிடம் குறிப்பிட்டார் ராஜபக்ஷ. ஆனால், நான் அதை மறுத்தேன். ‘இன்னும் 3 லட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தேன். ராஜபக்ஷ என் மீது கோபப்பட்டார். ‘பொய் சொல்லாதீர்கள்’ என்றார்.

“ஆனால், நான் ஆணித்தரமாக அடித்துச் சொன்னேன். அதன் பிறகு அவர் கொஞ்சம் நம்பினார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அனுப்பும் உணவுகளைக் கூடுதலாக அனுப்பச் சொன்னார். (போர் நடக்கும்போதும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில், புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களுக்கு, தினசரி உணவு அனுப்பப்பட்டுள்ளது.) அதோடு, மீண்டும் பல ‘நோ ஃபயரிங் ஜோன்’களை உருவாக்கி, மக்கள் வெளியே வந்து ராணுவத்தின் ‘ரிஸீவிங் பாயின்ட்’டில் தஞ்சம் புகலாம் என்று ராஜபக்ஷ அறிவித்தார். முதல் நாளே உள்ளிருந்து 85 ஆயிரம் பேர் ‘ரிஸீவிங் பாயின்ட்’டுக்கு வந்து சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளியே வந்து விட்டனர். அதன் பிறகுதான் போர் மேலும் தீவிரமடைந்து முடிவுக்கு வந்தது” என்று குறிப்பிட்டார். (பார்க்க - பெட்டிச் செய்தி)

“புலிகள் மீது பெருந்தவறு என்றாலும், அது பயங்கரவாதக் குழு என்பதால், அது தமிழர்களைக் கொன்று குவித்தாலும் அந்தக் குழுவைத் தண்டிக்க முடியாது. ஆனால், அதே தவறை ஒரு அரசாங்கம் செய்யக் கூடாது. அதற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். பொறுமை இழந்து ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்துக் கொன்றொழிக்கக் கூடாது. இப்போது என்னதான் உலக அளவில் மனித உரிமைப் பிரச்னைகளை எழுப்பினாலும், ராஜபக்ஷவை யாரும் தூக்கில் போட்டு விட முடியாது. ஆண்டவன் மட்டும்தான் தண்டனை அளிக்க முடியும். இல்லையென்றால், அடுத்து வருகிற ஆட்சி விசாரணை நடத்தி, அவருக்குத் தண்டனை அளிக்க வேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமில்லை.

“ஆனால், தமிழர்களைச் சமமாக நடத்த இனி வரும் அரசாங்கங்கள் நடவடிக்கை எடுத்தால், அதுவே போதுமானது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர் கொண்டிருக்கும் நாடாக இருந்தாலும், ஒரு இஸ்லாமியரான அப்துல் கலாமை அதிபர் ஆக்கியது இந்தியா. இந்திரா காந்தியை வீழ்த்தியவனைச் சார்ந்த சமூகம், நாட்டில் பிரிவினை கோரியவர்களைச் சார்ந்த சமூகம் என்று ஒரு சிலருக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்காமல், பெருந்தன்மையுடன் ஒரு சீக்கியரை பிரதமராக்கியுள்ளது இந்தியா. காந்தி பிறந்த இந்தியா காட்டும் பெருந்தன்மையைத்தான், நாங்கள் இலங்கை அரசிடமும் எதிர்பார்க்கிறோம். புலிகள் போகட்டும். இங்கிருக்கும் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கட்டும்” என்று முடித்தார் வீ.ஆனந்த சங்கரி.

அவரைச் சந்தித்து விட்டு வெளியே வந்த நாங்கள், ஒரு உணவு விடுதியில் உணவருந்தினோம். அப்போது அங்கிருந்த ஒருவர், “இலங்கை ராணுவத்தில் தற்போது இந்தப் பகுதி தமிழ்ப் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 102 தமிழ் இளம்பெண்கள் அப்படி ராணுவத்தில் இணைந்துள்ளனர். அதில் விசேஷம் என்னவென்றால், அதில் ஒரு சிலர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள். கிளிநொச்சி பெண்கள் பிரிவு ராணுவ முகாமுக்குப் போனால், அவர்களில் பலரைச் சந்திக்கலாம்” என்று எங்களுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து ராணுவ முகாமில் அப்பெண்களைச் சந்திப்பதற்கு அனுமதி பெற முயற்சி செய்தோம். எங்கள் முயற்சி பலித்தது.

‘தமிழகத்தில் இலங்கை ராணுவத்தைத் தமிழர்கள் தூற்றிக் கொண்டிருக்கும் வேளையில், அதே ராணுவத்தில் புதிய தமிழ்ப் பெண்களா? அதிலும் அவர்களில் சிலர் முன்னாள் பெண் புலிகளா?’ – அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் அந்த முகாமுக்கு விரைந்தோம்.

– எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி
(தொடரும்)

பெட்டிச் செய்திகள்:

தமிழக மீனவர்கள் செய்வது சரியா?

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்படுவது குறித்து தொடர் சர்ச்சை எழுந்தபடியே இருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழர்களுக்காக இங்கு குரல் கொடுப்போர்தான் பெரும்பாலும், தமிழக மீனவர்களுக்காகவும் இங்கு குரல் கொடுக்கிறார்கள். எனவே, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முயற்சித்தோம்.

யாழ்ப்பாணத்தின் கடற் தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.சகாயராஜாவைச் சந்தித்துப் பேசினோம். “இலங்கைக் கடலோரத்தில் மீன்கள் அதிகம். இதனால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்கரை வரை வருகிறார்கள். நாங்கள் எங்கள் கரைகளில் இருந்தபடி பலமுறை இந்திய மீனவர்களின் படகுகளைப் பார்த்திருக்கிறோம். நாங்களும் சரி, அவர்களும் சரி, படகுகளைக் கிளப்பி ஒன்றரை மணி நேரத்தில் அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழைந்து விட முடியும்.

“ஒரு காலத்தில் இங்கு நடந்த போரின் காரணமாக, நாங்கள் தொழில் செய்யவே பயந்து வேறு தொழில்களுக்குப் போய் விட்டோம். அதனால், இந்திய மீனவர்கள் எங்கள் கடற்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி மீன் பிடித்து வந்தனர். இப்போது இங்கு பல பேர் வெவ்வேறு தொழில்களை இழந்து, இந்த மீன் பிடி தொழிலுக்கு வந்துள்ளனர். இதனால் இப்போது இந்திய மீனவர்களின் ஆதிக்கத்தை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எங்களை விட இந்திய மீனவர்கள் தொழில் நுணுக்கமும், உயரிய தொழில்நுட்பமும் கொண்டு தொழில் செய்கிறார்கள். இதனால் அவர்களை மீறி மீன்பிடி தொழில் செய்வது எங்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது.

“இங்கு மடி போடும் விசைப் படகுகளுக்குத் தடை உள்ளது. இந்திய மீனவர்களோ ஒற்றை மடிக்கு மேல் இரட்டை மடி போட்டுக் கூட மீன்களைக் கவர்ந்து சென்று விடுகின்றனர். கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவுக்குச் சென்ற போது, அங்கு வந்திருந்த இந்திய மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தோம். ஆனால், பேச்சுவார்த்தைக்கு வராமல் கிளம்பி விட்டனர். அவர்களும் தமிழர்கள், நாங்களும் தமிழர்கள். இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. பேசாமல் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு தனி மீன்பிடி காலமும், எங்களுக்குத் தனியே மீன் பிடி காலமும் ஒதுக்கி விட்டால் பிரச்னை எழாது. எங்களுக்கு மீன் பிடி காலம் இல்லாத நாட்களில், நாங்கள் வேறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றார் அவர்.

‘போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பு, கடந்த ஆண்டு இலங்கை வடக்குக் கடலோரப் பகுதிகளில், சுமார் 600 கி.மீ. தொலைவிற்கு ஒரு பாத யாத்திரை நடத்தியுள்ளது. இந்திய மீனவர்கள் இரட்டை மடி மூலம் மீன் பிடிப்பதை தடுக்கக் கோரியே இந்த யாத்திரை நடத்தப்பட்டிருக்கிறது.

“இந்திய மீனவர் படகுகள் அனைத்திலும் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி சாட்டிலைட் மூலம் கண்காணித்தால், அவர்கள் எந்தப் பகுதியில் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விடும். அதை இந்திய அரசு செய்யுமா?” என்றும் யாழ்ப்பாணத்தின் சில மீனவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

பாலச்சந்திரனைக் கொன்றது யார்?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படங்கள்தான், தமிழகத்தில் அமுங்கியிருந்த இலங்கைத் தமிழர் பற்றிய உணர்வுகளை மீண்டும் வெளிப்படச் செய்தது எனலாம். அதன் பின்தான் தமிழகத்தில் போராட்டங்கள் கிளம்பின. இது குறித்து ராணுவ அதிகாரிகளிடம் நாங்கள் கேள்விகளை எழுப்பினோம். “பாலச்சந்திரன் உடல் எங்களுக்குக் கிடைத்தது உண்மை. ஆனால், கொன்றது யார் என்பது தெரியாது. வெளியான ஒரு புகைப்படத்தில் இலங்கை ராணுவ உடை தெரிவதால், இது ராணுவத்தின் செயல் என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். புலிகள் பல நேரங்களில் இலங்கையின் ராணுவ உடைகளையே பயன்படுத்தி வந்தனர் என்பது உலகறிந்த உண்மை.

“மேலும் இன்றைய உலகம் டிஜிட்டல் உலகம். ஃபோட்டோக்களில் எதையும் எப்படியும் மாற்றியமைக்க முடியும். அதையும் தாண்டி ‘அந்தச் சிறுவன் மணல் மூடைகளால் சூழப்பட்ட ஒரு பதுங்கு குழியில் இருக்கிறான்’ என்பது மட்டும்தான் அந்தப் படம் சொல்லும் உண்மை. அது புலிகளின் பதுங்கு குழியாகவும் இருக்கலாம். புலிகள், ராணுவத்திடம் சிக்காமல் சாவதற்காக சயனைட் குப்பிகளைக் கடிக்கத் தயாராக இருப்பவர்கள். அந்தச் சிறுவன் ராணுவத்திடம் உயிரோடு சிக்கி விடக் கூடாது என்று புலிகள் கூட முடிவு எடுத்திருக்க முடியுமே?

“சிறுவனை இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளியவர்கள் இலங்கை ராணுவத்தினர் என்று குற்றஞ்சாட்டுபவர்கள், அந்தச் சிறுவனுக்கு ராணுவம் ஏன் பிஸ்கட் தந்து சுட்டுத் தள்ள வேண்டும் என்ற கேள்வியை தங்களுக்குள் எழுப்பிப் பார்க்க வேண்டும்? ஒரு பாலகனைக் கொல்லும் கல் நெஞ்சம் படைத்தவர்கள், அவனின் பசிக்கு பிஸ்கட் கொடுத்தா உபசரித்திருப்பார்கள்?” என்று அவர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள்.

“தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இலங்கையைப் பற்றிப் பெரும்பாலும் தவறான தகவல்களே தரப்படுகின்றன. இவற்றைப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்தான் இன்டர்நெட் மூலம் பரப்புகிறார்கள் என்று நினைக்கிறோம். இது டிஜிட்டல் உலகம். க்ராஃபிக்ஸில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இலங்கைப் படை வீரர்களை, விடுதலைப் புலிகள் பிடித்து வைத்துக் கொன்ற காட்சிகளைக் கூட, இலங்கை ராணுவம் தமிழர்களைக் கொன்றதாக மாற்றிப் பிரசாரம் செய்தார்கள். பயங்கரவாதிகள் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம். ஆனால், ஒரு அரசு சார்ந்த ராணுவ வீரர்கள், நாளை பல பேருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டு. அதனால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்பட்டு விட முடியாது என்பதை தமிழக மக்கள் மறந்து விடக் கூடாது” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி எங்களிடம் இதுபற்றி பேசியபோது, “அந்தச் சிறுவனின் மரணம் தமிழகத் தமிழர்களை உலுக்கியதில் ஆச்சரியமில்லை. பாலகனின் மரணம் எந்த மனிதனையும் உலுக்கும் வலு படைத்தது. அதே தமிழகத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் கொன்று குவித்த பாலகர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டும்” என்று கூறி, விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இறந்து போன சிறார்களின் புகைப்படங்கள் வெளியான பல நாளிதழ்களை எங்கள் முன் எடுத்துப் போட்டார். “இந்தச் சிறுவர்களின் மரணத்திற்கெல்லாம் நாம் இதே இரக்கம், கருணை காட்ட வேண்டாமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், தமிழகத்தைப் போலவே நாங்கள் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் பலரும், பாலச்சந்திரன் மரணம் குறித்து உருக்கமாகவே பேசினர். அந்தச் சிறுவனின் இறப்புக்கு இலங்கை ராணுவமே காரணம் என்று அங்குள்ள பெரும்பாலானோர் கருதுகிறார்கள். எனினும் வீட்டுக்கு வீடு இதுபோன்ற சிறார்களை அவர்கள் பலி கொடுத்திருப்பதால், தமிழகம் அளவுக்கு அந்த மரணம் அவர்களைப் பெரிதாக பாதிக்கவில்லை. பிரபாகரனின் மரணம் கூட அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர்கள் எந்த மரணத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமளவிற்கு விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த மக்கள்

விடுதலைப் புலிகள் தங்கள் பிடியில் இருந்த நகரத்தை இழக்கும் நிலையில், அடுத்த நகரத்துக்கு நகருவார்கள். அப்போது அங்குள்ள தமிழ் மக்களையும் தங்களுடன் அழைத்துக் கொண்டே நகர்ந்து விடுவார்கள். அப்படி அடுத்த நகரத்துக்கு நகரும்போது, தாங்கள் கடந்து போகும் பகுதியில் எல்லாம் கண்ணி வெடிகளைப் புதைத்து விடுவார்கள். ராணுவம் பின் தொடர்ந்து வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த ஏற்பாடு. இதனால், போர் நடக்கும் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் தப்பியோடும் வாய்ப்பும் இருக்கவில்லை. அதை மீறித் தப்பி வந்தாலும், தங்களைப் புலிகள் என்று சந்தேகித்து ராணுவத்தினர் சுட்டு விடுவார்களோ என்ற அச்சமும் அம்மக்களிடையே இருந்துள்ளது.

பொதுமக்களை அப்புறப்படுத்தாமல் தொடர்ந்து போர் நடத்துவதால், இன அழிப்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டிய நிலை இலங்கை ராணுவத்திற்கும் இருந்தது. இந்த நிலையில்தான் இலங்கை ராணுவம் ‘நோ ஃபயர் ஸோன்’களை அறிவித்து, அப்பகுதிகளில் ‘ரிஸீவிங் பாயின்ட்’களைத் திறந்து, ‘பொதுமக்கள் வந்து சரணடையலாம்’ என்று அறிவித்தது. ராணுவம் இப்படி அறிவித்ததும், ஏராளமான தமிழ்க் குடும்பங்கள் புலிகளின் எச்சரிக்கையையும் மீறித் திரள் திரளாக ரிஸீவிங் பாயின்ட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

சுதந்திராபுரத்தில் முதன் முதலாக மக்கள் அப்படி விடுதலைப் புலிகளின் எச்சரிக்கையை மீறித் திரண்டபோது, ஒரு பெண் புலியும், ஒரு ஆண் புலியும் மனித வெடிகுண்டாக மாறி, ரிஸீவிங் பாயின்டுக்குச் சென்ற தமிழ் மக்களிடையே வெடித்துச் சிதறினார்கள். இதில், உயிருக்குப் பயந்து ராணுவத்திடம் சரணடைய வந்த அப்பாவித் தமிழர்கள் பலர் செத்து மடிந்தார்கள். இதையடுத்து, ‘ரிஸீவிங் பாயின்ட்’டுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து விட்டது.

ஆனால், புலிகள் பலமிழந்து முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கிப் பின்வாங்கப் பின்வாங்க, அவர்களின் பிடியில் இருந்த பகுதிகள் கணிசமாகக் குறைந்தன. சுமார் 3 லட்சம் மக்கள், ஒரு குறைந்த பரப்பளவில் வேலையில்லாமல், உணவுக்கு வழியில்லாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து இலங்கை ராணுவம் அதிகப்படியான இடங்களில் ‘நோ ஃபயர் ஸோன்’களை அறிவித்ததால், புலிகளை மீறி, மக்கள் ரிஸீவிங் பாயின்ட்டுகளுக்கு வரத் துவங்கியுள்ளனர். ‘இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாது’ என்ற சூழலில், புலிகள் இயக்கத் தலைமைக்குத் தெரியப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளே மக்களை வெளியே செல்ல அனுமதித்து, அவர்களோடு தாங்களும் சிவிலியன்களைப் போல் வந்து ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.

– இவையெல்லாம் யாரோ சொன்ன தகவல்கள் இல்லை. அப்பகுதியில் இருந்து தப்பி வந்த மக்களும், முன்னாள் விடுதலைப் புலிகளும் சொன்னவைதான். ஆடியோ, வீடியோவில் பதிவு செய்யப்பட்ட அவர்களின் முழுமையான பேட்டி விவரங்கள் அடுத்து வரும் இதழ்களில் இடம் பெறவுள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல