
தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை ஆனந்தி எழிலன் கோரவேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர். சிவராஜா.
தமிழர்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் பேசவுள்ளதாக ஆனந்தி எழிலன் தெரிவித்திருப்பது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்ட அவர் மேலும் கூறிருப்பதாவது:
புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளராக எழிலன் இருந்த போது தான் மாவிலாறு அணையை இழுத்து மூடி இறுதிப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். நீரை வைத்து நிபந்தனை இட்டு போராடக்கூடாதென பல தரப்பில் கோரப்பட்டாலும் மாவிலாறு அணை விடயத்தில் எழிலன் எடுத்த மோசமான முடிவுகள் இறுதிப் போருக்கு வித்திட்டன.
போரில் பெருமளவு மக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டனரெனக் கூறும் ஆனந்தி எழிலன், தனது கணவரும் இவற்றுக்கான மூலகர்த்தாக்களில் ஒருவர் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து இப்போது மீண்டும் இவர்கள் உணர்ச்சிவசனங்களை பேசுவதன் நோக்கம் என்ன?
மாவிலாறு அணையை எழிலன் மூடியது சரி என்பதனை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட ஏற்க மாட்டார். இறுதிப் போரை ஆரம்பிக்க அடித்தளம் இட்டபோது எழிலனின் மனைவி உண்மையில் தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் அணையை மூடும்போது அப்படியான பாரதூரமான செயலை செய்ய வேண்டாமென கணவரை தடுத்திருக்க வேண்டும். அப்போது, அமைதியாக இருந்து பேரழிவுக்க துணை போன ஆனந்தி இப்பொது தமிழர்களை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பது அர்த்தமற்ற விடயமாகும்.
அணைய மூடியதன் பின்னர் புலிகள் இணக்கப் பேச்சு நடத்தும் சூழலில் இருந்து வெளியேற வேண்டி வந்தது. போர் மட்டும் தான் தீர்வு என மக்களை துன்பத்தில் தள்ளிவிட்டு இப்போது எந்த முகத்தை வைத்து ஆனந்தி அரசியலுக்கு வந்துள்ளார் என்பது தெரியவில்லை.
தனது கணவரின் பெயரை வைத்து அரசியல் நடத்தும் ஆனந்தி தனது கணவரின் தவறுகளுக்காக தமிழ் மக்களிடம் பொது மனிப்பைக் கோர வேண்டும். அது மட்டும் பிராயச்சித்தமாக இருக்காது. வீரவசனங்களை கூறி எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை வீணடிக்காதிருக்கவும் அவர் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Thinakaran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக