2000-ம் ஆண்டு மே மாதம், சதாம் ஹூசேனின் பிறந்த நாள் நிகழ்ச்சியின் ஆடம்பரங்களை அல்-ஜசீரா ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உணவு வகைகளின் படங்கள் காட்டப்பட்டன...
அத்தியாயம் 02
ஒரு டி.வி. சேனலால், இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர உறவு முறிந்ததுகூட, அல்-ஜசீரா என்ற ஒரேயொரு மீடியாவால்தான் நடந்தது! அல்-ஜசீராவில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியால், லிபியா, கத்தாருடன் இருந்த ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டது.
அல்-ஜசீராவின் பிரபல நிகழ்ச்சியான ‘நேர் திசை’யில், அப்போதைய லிபிய ஜனாதிபதி கடாபியை ஒருவர் சர்வாதிகாரி என்று விமர்சித்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த லிபியா அரசு, கத்தாரிடம் புகார் சொல்லி பார்த்தது. கத்தார் அரசோ, அல்-ஜசீரா நிகழ்ச்சிகளில் தம்மால் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.
ஆத்திரமடைந்த லிபிய அரசு, கத்தாரில் உள்ள தமது தூதரகத்தை இழுத்து மூடி, தூதரை நிரந்தரமாகத் திரும்ப அழைத்துக் கொண்டது. இதனால், இரு நாட்டு ராஜதந்திர உறவுகளும் முறிந்தன!
மற்றொரு சந்தர்ப்பத்தில் அல்-ஜசீரா, ஹமாஸ் இயக்க தலைவர் ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பியது. உடனே பாலஸ்தீன நிர்வாகிகள் கோபித்துக் கொண்டனர்.
பின் லேடன் போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்-ஜசீராவில் தோன்றி பேட்டி அளிக்க, எகிப்து மற்றும் டுனிசியா அரசுகள், கத்தாருடன் ஆன ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை மட்டுப்படுத்திக் கொண்டன.
ஈரான், மொராக்கோ, சிரியா ஆகிய நாடுகளும், அல்-ஜசீரா தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டின.
வளைகுடா பகுதியில் அல்-ஜசீராவுக்கு ஆதரவு அளித்த ஒரே ஆட்சியாளராக, ஈராக்கின் சதாம் ஹூசேன் மட்டுமே இருந்தார்.
ஈராக் பற்றிய செய்திகளை ஒளிபரப்புவது, அமெரிக்காவின் தாக்குதல், மற்றும் ஈராக்கிய மக்களின் கஷ்டங்களை வெளியுலகுக்கு எடுத்துச் செல்ல அல்-ஜசீரா ஒரு சிறந்த வாய்ப்பாக இருப்பதாக சதாம் ஹூசேன் குறிப்பிட்டார்.
ஆனாலும், அதற்காக அல்-ஜசீரா, சதாமுக்கு ஜால்ரா அடிக்கவில்லை.
2000-ம் ஆண்டு மே மாதம், சதாம் ஹூசேனின் பிறந்த நாள் நிகழ்ச்சியின் ஆடம்பரங்களை அல்-ஜசீரா ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உணவு வகைகளின் படங்கள் காட்டப்பட்டன.
அந்த நிகழ்ச்சியின் இறுதியில், “ஐ.நா.வின் பொருளாதார தடையால் நாடு வறுமையில் வாடும் ஒரு நாட்டின் தலைவர் தனது பிறந்த நாளை இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடுகிறாரே என்று ஒரு காமென்ட்டை அடித்தார், அல்-ஜசீராவின் செய்தியாளர்!
இதையடுத்து, அல்-ஜசீராவை சிறிது காலத்துக்கு தமது பேட்டிகளில் திட்டிக்கொண்டே இருந்தார் சதாம்.
அல்-ஜசீரா மீது மற்ற நாடுகள் தொடர்ந்து முறைப்பாடுகளைத் தெரிவிக்க, தெரிவிக்க, வெளிநாடுகளில் உள்ள கத்தார் தூதரக அதிகாரிகள், தங்களது நேரத்தின் பெரும் பகுதியை, அல்-ஜசீரா மீதான குற்றச்சாட்டுகளுடன் டீல் பண்ணுவதிலேயே செலவிட வேண்டியதாயிற்று. கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் ஹமாது பின் ஜெசிம் பின் ஜபார் அல்தானி, “நான் எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும், அல்-ஜசீராவால் ஏற்படும் பிரச்சினைகளால் எனக்குப் பெரும் தலைவலி ஏற்படுகிறது” என்றார்.
தமாஷ் என்னவென்றால், இவருக்கு அல்-ஜசீராவில் நிறைய பங்குகள் உண்டு.
அல்-ஜசீரா தொடர்பான பெரும்பாலான புகார்கள் ‘நேர் திசை’ நிகழ்ச்சியைப் பற்றியே இருந்தன.
இந்த நிகழ்ச்சியை நடத்திய சைல் அல்-காசிம் புகார்களை முழுமையாக மறுத்தார். அல்-ஜசீரா நிர்வாகமும் இவருக்கு ஆதரவாக இருந்தது.
“அவர் பாரபட்சமற்ற முறையில் நிகழ்ச்சியை நடத்துகிறார். மற்ற நாடுகளுக்கு பிரச்னை ஏற்படுத்துவது எங்களது நோக்கம் அல்ல” என்று கூறுவதோடு ஒதுங்கிக் கொண்டு, நிகழ்ச்சிக்கு முழு சுதந்திரம் கொடுத்தது அல்-ஜசீரா நிர்வாகம்.
பிரிட்டனில் பி.பி.சி. சேனல் போன்று, அரசாங்கம் மறைமுகமாக நிதியுதவி செய்ய, சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாகத் தன்னை அல்-ஜசீரா கருதியது. “நாம் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அமைப்பு இல்லை. இதனால், தஎமது நிகழ்ச்சிகள் தொடர்பாக கத்தார் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது தவறு” என்று தெரிவித்தது.
அல்-ஜசீராவின் நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பதைத் தடுக்க பல்வேறு வகையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
உதாரணமாக சௌதி அரேபியா அதன் அலைவரிசையில் குரான் படிப்பதை ஒளிபரப்பி சிக்கலை ஏற்படுத்தியது. மெக்காவிலிருந்து 24 மணி நேரமும் குரான் ஒளிபரப்பாக, அல்-ஜசீராவுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், நீண்ட காலத்துக்கு இதுபோன்று செய்ய முடியாது. எனவே வேறு வழிகளில் அல்-ஜசீராவுக்கு இடையூறுகள் கொடுக்கப்பட்டன.
அல்-ஜசீராவின் நிருபர்களின் விசாக்களை ரத்து செய்தல், அரசு செய்திப் படங்களை அல்-ஜசீராவுடன் பகிர்ந்து கொள்ள மறுத்தல் போன்ற காரியங்களில் சில நாடுகள் ஈடுபட்டன. இவற்றை தனது நவீன தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி அல்-ஜசீரா சமாளித்தது.
ஒருமுறை ‘நேர் திசை’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பைத் தடுக்க அல்ஜீரிய அரசு வேடிக்கையான முறையைக் கையாண்டது.
இந்த நிகழ்ச்சி முன்கூட்டியே ஒளிப்பதிவு செய்யப்பட்டபோது, வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த ஒரு அல்ஜீரிய பத்திரிகையாளர், அல்ஜீரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட விடயத்தை சொல்லி இருந்தார். இதனை எப்படியோ அறிந்து கொண்டது அல்ஜீரியா அரசு.
மறுநாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில், நாடு முழுவதிலும் மின்சாரத்தை துண்டித்தது அல்ஜீரிய அரசு.
மற்ற நாடுகளைப் பற்றி ஆராயும் அல்-ஜசீரா, தனது கத்தார் அரசாங்கம் பற்றி எதுவும் சொல்வதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதில் உண்மை இல்லை.
கத்தார் அரசாங்கத்தின் அதிகாரிகள், கொள்கைகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை அல்-ஜசீரா நிகழ்ச்சிகளில் விமர்சிக்கப்பட்டதுண்டு. சிறையில் இருந்த, கத்தாருக்கு எதிரான ஒருவர், அந்நாட்டில் நிலவும் கொடுமைகளைக் கூறியதும் அல்-ஜசீராவில் ஒளிபரப்பானது, தவிர தோஹாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் இஸ்ரேல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதும், அல்-ஜசீரா நிகழ்ச்சியில் விமர்சிக்கப்பட்டது.
இப்படி பல்வேறு சிக்கல்களையும் வெற்றிகரமாக கடந்த அல்-ஜசீரா, 1998-ம் ஆண்டு ‘சி பாண்டு டிரான்ஸ்பான்டர்’ வசதி கிடைக்க, 24 மணி நேர ஒளிபரப்பைத் துவக்கியது. மத்திய கிழக்குப் பகுதியில் 60 சதவீத வீடுகளில் அல்-ஜசீரா தொலைக்காட்சியைப் பார்த்தனர்.
2001-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, ஐரோப்பாவில் மூன்று செயற்கை கோள்களின் உதவியுடன் அல்-ஜசீரா தங்கு தடையின்றி 24 மணி நேரமும் ஒளிபரப்பானது. ஆரம்பத்தில் அரேபிய நாடுகளுக்கு வெளியே, ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் அதிகம் பேர் பார்த்தனர். வட அமெரிக்க மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை.
அல்-ஜசீராவின் ஆங்கில ஒளிபரப்பு உள்பட இரண்டு புதிய டிஜிட்டல் அலைவரிசைகள் துவங்கப்பட்டன. பி.பி.சி. பாணியில், மற்றைய நாடுகளின் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் அல்-ஜசீரா ஒப்பந்தம் செய்து கொண்டது. சர்ச்சைக்குரிய ஈரான், இஸ்ரேலிய கேபிள் டி.வி.களுடன்கூட செய்திப் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டது..
2000-ம் ஆண்டு பிப்ரவரியில், ஆச்சரிய அழைப்பு ஒன்று வந்தது.
ஆப்கானிஸ்தானின் தாலிபன் ஆட்சியாளர்கள், தங்களது நாட்டில் அலுவலகங்களைத் திறக்கும்படி இரு டி.வி. சேனல்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தனர். ஒன்று, சி.என்.என். மற்றையது, அல்-ஜசீரா.
அழைப்பை ஏற்க சி.என்.என். மறுத்துவிட்டது. ஆனால் அல்-ஜசீராவுக்கு, சர்ச்சைகளில் சிக்கிய ஈராக்கில் அலுவலகத்தைத் திறந்து பயனடைந்த அனுபவம் இருந்ததால், உடனடியாக அழைப்பை ஏற்றுக்கொண்டது….
2000ம் ஆண்டு செப்டெம்பரில், பலஸ்தீனிய நாட்டின் புள்ளி விவர அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், மேற்குக்கரை மற்றும் காஸா பகுதியில் எழுபத்தைந்து சதவீதம் பேர் அல்-ஜசீரா சேனலை பார்ப்பதாகத் தெரியவந்தது. சர்ச்சைக்குரிய பேட்டிகள் வெளியான போதும், பல நாடுகள் தடைவிதித்திருந்தும், 2000-ம் ஆண்டு சிறந்த மின்னணு ஊடகத்துக்கான 3 சர்வதேச விருதுகளை அல்-ஜசீரா தட்டிச் சென்றது.
அல்-ஜசீராவின் ஆரம்ப நாட்கள் பற்றி, அந்த சேனலின் அரபு நியூஸ் டைரக்டர் முஸ்தாஃபா சௌவக், “1996-ம் ஆண்டில் அல்-ஜசீராவை யாருமே கண்டுகொள்ளவில்லை. 1998-ல் நடந்த ஈராக் போரை லைவ்வாக ஒளிபரப்பு செய்தபோது, சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. போரின்போது அந்த இடத்தில் இருந்த செய்தி நிறுவனம் நாங்கள் மட்டுமே.
எங்களது வளர்ச்சியைக் கண்டு சௌதி அரேபியா அரசாங்கம் அதிர்ச்சி அடைந்தது. சௌதி அரேபியாவின் எம்.பி.சி. சேனல், லண்டனின் ஏ.என்.என். தொலைக்காட்சி ஆகியவற்றை முந்தி 2000-ம் ஆண்டில் அல்-ஜசீரா 35 மில்லியன் நேயர்களுடன் முதலிடத்தைக் கைப்பற்றியது.
எங்களது பிரபல நிகழ்ச்சியான ‘நேர் திசை’க்கு எதிர்ப்புகள் நிறைய இருந்தன. நிகழ்ச்சியை நடத்திய பைசல் அல்-காசிம் நாக்கைத் துண்டிக்க வேண்டும் என ஜோர்தானிய நாட்டின் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளி வந்தது. இதுபோன்ற விமர்சனங்களையும் கடந்து அல்-ஜசீரா தனது முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டது” என்றார்.
அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு விளம்பரம் பெறுவதில் சிக்கல் இருந்தது.
அரபு நாடுகள் பகுதியில், பொருளாதார ரீதியாக சௌதி அரேபியா முதலிடத்திலும், குவைத் இரண்டாவது இடத்திலும் இருந்தன. பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் என அனைத்துமே சௌதி அரேபியாவின் கட்டுப்பாட்டில் இயங்கின. எனவே, அல்-ஜசீராவில் விளம்பரம் செய்ய பெரிய நிறுவனங்கள் அச்சம் கொண்டன.
அநேக நிறுவனங்கள் சௌதி அரேபியாவை வர்த்தக ரீதியாகப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.
முதலில் அல்-ஜசீராவின் விளம்பரங்களை சௌதியை சேர்ந்த அல்-துஹாமா என்ற நிறுவனம் நிர்வகித்து வந்தது. இதற்கும் சௌதியின் அரச குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்க, 1999-ல் அல்-ஜசீராவுடன் ஆன விளம்பர ஒப்பந்தத்தை அல்-துஹாமா ரத்து செய்தது.
விளம்பர ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு சௌதி அரேபியா கொடுத்த நெருக்கடியே காரணம் என அல்-ஜசீரா சந்தேகம் தெரிவித்தது. இந்தப் பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது.
தொடரும்..
விறுவிறுப்பு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக