ஹரியா நகரில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்த சில நிமிடங்களில், சீனில் போய் இறங்கிய அல்-ஓமரை, தீவிரவாதி என்று நினைத்து இஸ்ரேலியர்கள் தாக்க முற்பட்டனர்...
அத்தியாயம் 03
அல்-ஜசீராவின் விளம்பரங்களை சௌதியை சேர்ந்த அல்-துஹாமா என்ற நிறுவனம் நிர்வகித்து வந்தது. சௌதியின் அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய அல்-துஹாமா, 1999-ல் அல்-ஜசீராவுடன் ஆன விளம்பர ஒப்பந்தத்தை அல்-துஹாமா ரத்து செய்தது. விளம்பர ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு சௌதி அரேபியா அரசு கொடுத்த நெருக்கடியே காரணம் என்றது அல்-ஜசீரா.
வளைகுடா பகுதியில் சௌதி அரேபியா அரச குடும்பம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கு அரச குடும்பத்துடன் தொடர்பு இருந்தால் மட்டுமே, வர்த்தகத்தில் உச்சத்துக்கு வர முடியும்.
உதாரணமாக ஜேர்மனியின் ம்யூனிக் மோட்டார் வாகன நிறுவனம் ஒன்று அல்-ஜசீராவில் விளம்பரம் செய்ய விரும்பலாம். ஆனால், சௌதி அரேபியா 650 வாகனங்களை வாங்குவதற்கான ஆர்டர் கொடுத்திருக்கும். அல்-ஜசீராவில் விளம்பரம் செய்ததால் தங்களுக்கு வாகன விற்பனை பறிக்கப்படும் என்ற நிலையில் ம்யூனிக் நிறுவனம் சாமர்த்தியமாக விலகிக் கொள்ளும்.
இதன் உச்சக்கட்டமாக, “அல்-ஜசீராவில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு சௌதி அரசு தடை விதிக்கும்” என பிசினெஸ் வட்டாரங்களில் வதந்தி பரவியது. இதனால், அல்-ஜசீராவுக்கு விளம்பர வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் விளம்பரங்கள் வராவிட்டாலும், உள்ளூர் நிறுவனங்கள், சௌதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி அல்-ஜசீராவிற்கு விளம்பரங்கள் கொடுத்து வந்தன. ஆனாலும், இதில் நிறையவே சிக்கல்கள் இருந்தன.
மெயின் சிக்கல், அல்-ஜசீரா எத்தனை பேரை ரீச் பண்ணுகிறது என்று விளம்பரதாரர்களுக்கு சரியான கணக்கு தெரியவில்லை.
மத்திய கிழக்குப் பகுதிகளில் எத்தனை பேர் அல்-ஜசீராவை பார்க்கிறார்கள் என்பது குறித்த விவரம் ஆரம்ப நாட்களில் தெளிவாகக் கிடைக்கவில்லை. பலர் திருட்டுத்தனமாக ‘டிஷ் அன்டனா’ மூலம் தொலைக்காட்சியைப் பார்த்து வந்தனர். அல்ஜீரியா, மொராக்கோ ஆகிய நாடுகளில் ஒரு டிஷ் மூலம் பல வீடுகளுக்கு இணைப்பு சென்று, அங்கெல்லாம் அல்-ஜசீரா தெரிந்தது.
1999-ல் வளைகுடா போர் முடிந்த பிறகு சௌதி அரேபியாவில் 60 சதவீதம் வீடுகளில் டிஷ் அன்டனா மூலம் டி.வி. சேனல்களை மக்கள் பார்த்தனர்.
அதன்பின் ஒரு கட்டத்தில், சில நாடுகளில் டிஷ் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. சிரியா நாட்டில் மட்டும் டிஷ் பயன்படுத்துவது சட்ட விரோதம் அல்ல என்று அறிவிக்கப்பட்டது. டிஷ்களின் எண்ணிக்கையை வைத்து நிகழ்ச்சியைப் பார்ப்போரின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. ஏனென்றால், விளம்பர இடைவேளையின்போது நேயர்கள் வேறு அலைவரிசைகளுக்கு மாறிவிடுவர்.
மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 15 நிமிடங்கள் விளம்பர இடைவெளி இருக்கும். இதனால், எந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்று கணக்கிடுவதில் சிக்கல் உண்டானது. தவிர அரேபியாவில் ஒவ்வொரு வீடுகளின் கதவைத் தட்டி எந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பது கடினம்.
இப்படி பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும் அரபு சட்டலைட் சேனல்கள் விளம்பரம் மூலம் பல மில்லியன் டாலர்களை ஈட்டினர். ஆனால் அல்-ஜசீராவுக்கு இருந்த அரசியல் எதிர்ப்புகள், மற்றைய சேனல்கள் விளம்பரங்களில் பணம் சம்பாதித்த அளவில் சம்பாதிக்க முடியாமல் தடுத்தன.
இந்த விளம்பர விவகாரம், அல்-ஜசீராவை நீண்ட காலத்துக்கு தள்ளாட விடவில்லை. காரணம், அல்-ஜசீராவின் அதிஷ்டத்துக்கு, உலகின் வெவ்வேறு பகுதிகளில் மாறி மாறி முக்கிய சம்பவங்கள் நடந்ததால், அல்-ஜசீரா அவற்றை கவர் பண்ண, செல்வாக்கு பெருகிறது. விளம்பரங்கள் தேடி வந்தன.
முதலில், யுத்த பூமியான பலஸ்தீனத்தில் நடக்கும் பயங்கரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய அல்-ஜசீரா சேனல், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2000-ம் ஆண்டு பலஸ்தீனத்தில் இரண்டாவது ‘இன்திபதா’ அல்லது புரட்சி வெடித்தது. பாலஸ்தீன இயக்கங்கள், தங்கள் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்துப் புரட்சியில் ஈடுபட்டன. இந்தப் புரட்சியை ஒளிபரப்பியது அல்-ஜசீரா.
சரியான நேரத்தில் இந்த பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டது, அல்-ஜசீராவின் வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
இஸ்ரேலிய ராணுவத்தின் அத்துமீறல்களை அல்-ஜசீராவின் கேமராமென்கள் அப்படியே படம்பிடித்து லைவ்வாக காட்ட, அரபு உலகமே பரபரப்பாகியது. இஸ்ரேல் அதிர்ச்சி அடைந்தது.
அரேபிய பகுதியில் பலஸ்தீன புரட்சியை, அனைவரும் தவறாமல் பார்க்க துவங்கினர். அல்-ஜசீரா அனைத்து வீடுகளிலும் பார்க்கும் தொலைக்காட்சியாக மாறியது. அல்-ஜசீரா என்ற பெயர், அரபு உலகில் அழுத்தமாக பதிந்து போனது.
இதையடுத்து, மேற்குக் கரையின் இரமல்லா நகரில் உள்ள புதிய அலுவலகத்துக்கு அல்-ஜசீரா மாறியது. இங்கு அல்-ஜசீராவின் நிருபராகப் பணியாற்றிய வாலிக் அல்-ஓமரியின் அதிரடி செய்தி சேகரிப்பு, அல்-ஜசீராவை எப்போதும் பரபரப்பாக வைத்திருந்தது.
வாலிக் அல்-ஓமரி, ஆபத்தான பகுதியில் மிகவும் துணிச்சலாகப் பணியாற்றி பரபரப்பு செய்திகளை வாரிக் கொட்டினார்.
நல்ல உயரம் கொண்ட அல்-ஓமரி, தனது கையில் எப்போதும் மூன்று மொபைல் போன்கள் வைத்திருப்பார். ஒரு போன் இஸ்ரேலிய தொடர்புகளுக்காகவும், மற்றொன்றை பலஸ்தீனத்துக்காகவும் பயன்படுத்துவார். மூன்றாவது போனை சர்வதேச அழைப்புக்களுக்காக வைத்திருப்பார். ஏனென்றால் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையே தொலைபேசிச் சேவை இல்லை.
“இங்குள்ள மக்கள்போல, தொலைபேசிகளும் இரு நாடுகளுக்கும் இடையே பேசிக்கொள்ளாது” என்று வேடிக்கையாக குறிப்பிட்டார் அல்-ஒமரி.
மேற்குக் கரை, காசா மற்றும் இஸ்ரேலிய பகுதிகளில் செய்தி சேகரிக்க அல்-ஓமரி செல்வது வழக்கம். ‘இன்திபதா’ துவங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக ஹெப்ரான் பகுதியில் மோதல் நடப்பதாக கேள்விப்பட்டு, கேமரா சகிதம் பறந்து சென்றார். மோதலுக்கு நடுவே சிக்கிக் கொண்டார். இடிந்த சுவர் ஒன்றின் பின் படுத்து இருந்தபடி, நேரடி ஒளிபரப்பு செய்தார்.
இவரது காலில் குண்டு பாய்ந்தது.
இஸ்ரேலியர்கள் இவர் மீது பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹரியா நகரில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்த சில நிமிடங்களில், சீனில் போய் இறங்கிய அல்-ஓமரை, தீவிரவாதி என்று நினைத்து இஸ்ரேலியர்கள் தாக்க முற்பட்டனர். பெத்லகேம் பகுதியில் இவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
நல்லவேளை, இஸ்ரேலின் சேனல்-2 தொலைக்காட்சிக் குழுவினர் இவரைக் காப்பாற்றினர்.
தொடரும்..
விறுவிறுப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக