புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்த சிவராசனை பிடிக்க சி.பி.ஐ. தயாரித்த கிராபிக்ஸ் போட்டோக்கள்!
அத்தியாயம் 46
சண்முகம் ‘தற்கொலை’ விவகாரத்தால், சில தினங்கள் தேக்கமடைந்திருந்த சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுத்துறை விசாரணை மீண்டும் தொடங்கியது. மீண்டும் சிவராசனை தேடும் படலம் ஆரம்பமாகியது. சிவராசன் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருந்தார். சி.பி.ஐ. தேடிக்கொண்டிருந்த மற்றொரு நபரான சுபாவும், சிவராசனுடனேயே தலைமறைவாக இருந்தார்.
சிவராசனின் நிலையும் இக்கட்டில்தான் இருந்தது.
சிவராசன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவின் ஆள். தமிழகத்தில் அதுவரை புலிகளின் உளவுப் பிரிவு தனித்து இயங்கிக் கொண்டிருந்தது. அப்படியிருந்த போதிலும், ராஜிவ் காந்தி கொலை புலன்விசாரணையில் அவரை பிடிப்பதற்கு எல்லா பக்கமும் வலை விரிக்கப்பட்டு இருந்ததால், தமிழகத்தை விட்டு தப்பிச் செல்வதற்காக தமிழகத்தில் இருந்த புலிகளின் அரசியல் பிரிவை நம்பிருக்க வேண்டியிருந்தது.
புலிகள் இயக்கத்தில் உளவுப் பிரிவினர், எப்போதும் அரசியல் பிரிவினருடன் சகவாசம் வைத்து கொள்வதில்லை. காரணம், அரசியல் பிரிவினர், வெளிப்படையாக நடமாடும் ஆட்கள். அவர்கள் யார் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம். இதனால், தமிழக உளவுப்பிரிவு (க்யூ பிராஞ்ச்) முதல், மத்திய உளவுப்பிரிவு வரை, அனைவரும் இவர்களில் ஒரு கண் வைத்திருப்பார்கள்.
வேறு வழியில்லாமல் அரசியல் பிரிவிடம் அடைக்கலம் புகுந்துள்ளதால் ஏற்படும் ஆபத்து பற்றி சிவராசன் கவலையடைந்திருந்தார். அப்போது தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு, திருச்சி சாந்தன் தலைமையில் இயங்கியது.
அரசியல் பிரிவை சேர்ந்த ஓரிரு உறுப்பினர்கள் மட்டும்தான், தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடினர். காயமடைந்த போராளிகளைப் பார்த்துக்கொள்வது அவர்களது பணியாக இருந்தது.
அரசியல் பிரிவைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள், புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்த சிவராசனுக்கு உதவியிருக்கலாம் என இரு பெயர்களை சுதந்திர ராஜா சி.பி.ஐ. புலனாய்வுக் குழு விசாரணையின்போது சொன்னார். இவர்கள் இருவரும் புலிகளின் உளவுப்பிரிவுடன் தொடர்பு கொண்டு இருந்தனர் என, சி.பி.ஐ. தடுத்து வைத்திருந்த வேறு சிலரும் உறுதி செய்தனர்.
இந்த இருவரில் ஒருவர் டிக்சன். மற்றையவர், சுரேஷ் மாஸ்டர்.
டிக்சன்தான், ஜூன் 22-ம் தேதி இலங்கை தமிழ் பொறியியலாளர் வீட்டில் சுதந்திர ராஜாவை சந்தித்துப் பேசியவர் (இது பற்றி இந்த தொடரில் முன்பே எழுதியிருந்தோம்). அந்தச் சந்திப்புக்குப் பின் விஜயன் இல்லத்துக்கு டிக்சன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குதான் சிவராசன், சுபா, நேரு ஆகியோர் சுதந்திர ராஜாவால் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, சிவராசன் சில உதவிகளை செய்யுமாறு டிக்சனை கேட்டுக்கொண்டார்.
சில நாள்கள் கழித்து மீண்டும் விஜயன் வீட்டுக்கு வந்தார் டிக்சன். அப்போது, அரசியல் பிரிவை சேர்ந்த சுரேஷ் மாஸ்டரை விஜயன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது, சிவராசனிடம், சுரேஷ் மாஸ்டர் சில உதவிகளை செய்து கொடுப்பார் என கூறியிருந்தார் டிக்சன்.
இந்த தகவல்கள் தெரியவந்ததும், சிவராசன் தலைமறைவாக இருப்பதற்கு டிக்சன், அல்லது சுரேஷ் மாஸ்டர் உதவி புரிந்திருக்கலாம் என கருதியது சி.பி.ஐ.
இந்த டிக்சன் யார் என விசாரித்தபோது, திருச்சி சாந்தனின் ஒயர்லெஸ் ஆபரேட்டர்தான் டிக்சன் என்று தெரியவந்தது. புலிகளின் ஒயர்லெஸ் ஆபரேட்டர்கள் எல்லாம் தனி ரகம். இவர்கள் எப்போதுமே முக்கியமானவர்களின் தகவல்களை அனுப்பவும், பெறவும் செய்வதால், இருந்த இடத்திலேயே பல விஷயங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள்.
தலைமறைவாகியிருந்த சிவராசனிடமும் ஒயர்லெஸ் இருந்தால் (சிவராசனின் ஒயர்லெஸ் ஆபரேட்டர், நேரு. அவரும் சிவராசனுடன் தலைமறைவாகி இருந்தார்), டிக்சனால் சுலபமாக சிவராசனை ஒயர்லெஸ் மூலமே டைரக்ட் செய்து கொண்டிருக்க முடியும்.
சுரேஷ் மாஸ்டர் யார் என விசாரித்தபோது, திருச்சி சாந்தனின் தலைமை உதவியாளர் அவர் என்றும், காயமடைந்த விடுதலை புலிகளை தமிழகத்தில் கவனித்து கொள்ளும் பொறுப்பு அவருடையது என்றும் சுதந்திர ராஜா தெரிவித்தார்.
இவ்வளவு தகவல்களையும் பெற்றபின், சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவு சிவராசன் தொடர்பாக செய்திருந்த ஊகம்: திருச்சி சாந்தனின் முழுப் பொறுப்பில் சுரேஷ் மாஸ்டருடன் சிவராசன், சுபா, ஒயர்லெஸ் ஆபரேட்டர் நேரு ஆகியோர் ரகசிய இடம் ஒன்றில் மறைந்து இருக்கின்றனர். அந்த இடம் எங்கே என்பதுதான், தெரியவில்லை.
சிவராசன், மற்றும் சுபாவின் போட்டோக்களை போட்டு, ‘இவர்களை பார்த்தால், தகவல் தாருங்கள்’ என்று சி.பி.ஐ. தொடர்ந்து விளம்பரம் கொடுத்துக் கொண்டிருந்தது. முன்னணி நாளிதழ்களில் வெளியான இந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்துக்கு ஏராளமான அழைப்புகள் வரத் தொடங்கின.
சிவராசன் அல்லது சுபாவை அல்லது இருவரையும் பார்த்ததாக, வெவ்வேறு நபர்களிடமிருந்து வந்த தகவல்களை தொடர்ந்து ஒவ்வொரு ஏரியாவாக விசாரித்து கொண்டிருந்தார்கள். சென்னை திருவான்மியூர் பகுதியில் சிவராசனும் சுபாவும் நடமாடியதாகவும், அடையாறில் தங்கியிருப்பதாகவும் தகவல் வந்தது. சிவராசனை போன்ற நபர் பிடிபடுவதும், விசாரணைக்குப் பின் விடுவிப்பதுமாக இருந்தது.
ஒருமுறை பெங்களூரு விமான நிலையத்திலிருந்து ஒருவர் தகவல் கொடுத்தார். கொச்சியிலிருந்து பெங்களூரு வழியாக சென்னை செல்லும் விமானத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், தான் பயணம் செய்யும் அதே விமானத்தில் சக பயணியாக வருபவர் சிவராசன் என்றும் அவர் கூறினார்.
‘சிவராசன்’ பயணித்த விமானம் சென்னைக்கு பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் சென்னை பொலீசார் களத்தில் குதித்தனர். அந்த விமானம் சென்னை விமான நிலையம் வந்திறங்கியதும் அதைச் சூழ்ந்து நின்றனர். ‘சிவராசனை’ பிடித்து மல்லிகை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். ‘சிவராசனை’ விசாரித்ததில், அவர் சென்னையில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் என்று தெரிய வந்தது.
அதையடுத்து, இந்தியன் வங்கியின் கிளை மேலாளரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வங்கிக் கிளையில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு லோன் கிடைப்பது சந்தேகமே.
இப்படி இவர்களது விளம்பர ஐடியா, வேலைக்காகவில்லை.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் சி.பி.ஐ.க்கு ஆலோசனை ஒன்றை தெரிவித்தார் (பின்னாட்களில் கார்த்திகேயனே இதை ஒப்புக்கொண்டார்).
“சிவராசன் தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு. சீக்கியரைப்போலவோ, இஸ்லாமியர் போலவோ, இந்து மதகுரு போலவோ உடையணிந்து. தனது உருவத்தை மாற்றியிருக்க கூடும். அப்படியான தோற்றத்திலும் ஆளை தேடுங்கள்” என்பதுதான் அந்த ஆலோசனை.
சி.பி.ஐ. உருவாக்கிய கிராபிக்ஸ் விளம்பரம்
அவ்வாறு இருக்க வாய்ப்பு உண்டு என்று சி.பி.ஐ.-யும் நம்பியது. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை பயன்படுத்தி சிவராசன் முகத்தின் 12 வகையான தோற்றங்களை வரைந்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் வெளியிட்டது சி.பி.ஐ.
பிரபல நடிகர் 12 வேஷங்களில் நடித்த படம் போஸ்ட்டர் போல வெளியான இந்த விளம்பரம், விமானத்தில் பயணித்த இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் போல சிலரை விசாரிக்க வைத்ததே தவிர வேறு உருப்படியான பலன் எதையும் கொடுக்கவில்லை. சிவராசன் அப்படியெல்லாம தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு உலாவவும் இல்லை.
இப்படி சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு, சிவராசனைப் பிடிக்க முயற்சி மேல் முயற்சியாக செய்து கொண்டிருந்த நேரத்தில், ரங்கன் என்ற இலங்கைத் தமிழர் பற்றிய தகவல் ஒன்று அவர்களுக்கு கிடைத்தது.
சிவராசனின் நிஜ உருவம்
அப்போது ஜூலை மாதம் தொடக்கம். சென்னையில் மாத வாடகைக்கு தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரங்கன், ஒரு வீட்டை வாடகைக்கும் எடுத்திருந்தார்.
பாஸ்போர்ட், கடவுச்சீட்டு மோசடிகளில் தொடர்புயைடவர் இந்த நபர் என்றும் தெரிந்தது. ரங்கன் திடீரென, தங்கியிருந்த விடுதியையும் வாடகை வீட்டையும் ஒரே நேரத்தில் காலி செய்துகொண்டு போய்விட்டதாக தெரியவந்தது.
அந்த வாடகை வீட்டில் சில பெண்களும், ஆண்களும் தங்கியிருந்துள்ளனர். இந்த ரங்கனை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த டிக்சன் சென்னை விடுதிக்கு நேரில் போய் சந்தித்தார் என்றும் தெரியவந்தது.
குறிப்பிட்ட சென்னை விடுதிக்கு உடனே சென்று விசாரித்தது, சி.பி.ஐ. குழு. அப்போது, ரங்கனிடம் வெள்ளை நிற மாருதி வேன் இருந்தது என்றும், அவர் அதில் திருச்சி சென்றிருப்பதாகவும் தெரிந்தது. ரங்கனை பற்றிய கடைசித் தகவல் இதுதான்.
இந்த ரங்கன், உள்ளூர் டிராவல் ஏஜன்சி ஒன்றுடன் இணைந்து நெருக்கமாகப் பணிபுரிந்தவர். இலங்கையில் இருந்து தமிழகம் வந்த ஈழத் தமிழர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜென்ட்டாக செயல்பட்டவர். இவரை டிக்சன் போய் சந்தித்ததால், சிவராசனும், அவருடன் தலைமறைவாக இருந்தவர்களும் தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார்களோ என்று சந்தேகித்தது சி.பி.ஐ.
சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வு பிரிவின் தேடுதல் குழுவின் ஒரு பிரிவு, ரங்கன் தொடர்பாகக் கிடைத்த தகவல்களைப் பின்பற்றி விசாரணையில் இறங்கியது. பாஸ்போர்ட், விசா மோசடியில் ரங்கன் கில்லாடி என்பதை அறிந்தார்கள். அவர் அடிக்கடி சென்றுவந்த டிராவல் ஏஜன்சியில் விசாரித்தபோது, பல நாட்களாக அவர் ஏஜென்சி பக்கமே வரவில்லை என்றார்கள்.
ஆனால், ஒரு பிரீஃப் கேஸ் ஒன்றை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி ட்ராவல் ஏஜென்சியில் கொடுத்து விட்டு சென்றிருந்தார் என்று ஏஜென்சியில் பணிபுரிந்த பெண் ஒருவர் சொன்னார்.
அந்த பிரீஃப் கேஸ், சி.பி.ஐ. குழுவின் கைகளுக்கு வந்தது.
ரங்கன் விட்டுச் சென்ற பிரீஃப் கேஸை சோதனையிட்டதில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் வழங்கும் விசாக்களின் போலி முத்திரைகள் ஏராளமாக இருந்தன. அதைவிட சில வரவு செலவு விபரங்கள் அடங்கிய காகிதம் ஒன்றும் இருந்தது. அதிலிருந்து ரங்கன், சட்டவிரோத வழிகளில் வெளிநாடுகளுக்கு அனுப்ப, ஒரு நபருக்கு அந்த நாட்களில் 80,000 ரூபா வரை வசூலித்துள்ளார் என்றும், சென்னை விமான நிலையம் ஊடாகவே பலரை வெற்றிகரமாக போலி விசா மூலம் அனுப்பியிருந்தார் என்றும் தெரிய வந்தது.
இப்படி வெற்றிகரமாக ஏஜென்சி தொழில் செய்து கொண்டிருந்தவர், டிக்சனை சந்தித்தபின் எதற்காக சென்னையில் இருந்த விடுதி அறையையும், வீட்டையும் காலி செய்துகொண்டு போக வேண்டும்?
ரங்கன் தனது வெள்ளை நிற மாருதி வேனில் திருச்சி சென்றிருப்பதாக விடுதியில் சொன்னார்கள் என்று குறிப்பிட்டோம் அல்லவா? அந்த தகவலை அடுத்து, திருச்சி சென்றது சி.பி.ஐ. டீம் ஒன்று.
திருச்சியில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வந்து போகும் ட்ராவல் ஏஜென்சிகள் விசாரிக்கப்பட்டன. அங்கே, ஒரு ட்ராவல் ஏஜென்சியில் ரங்கன் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். அந்த ஏஜென்சியில் இருந்து, சில தகவல்கள் கிடைத்தன. அவற்றின் அடிப்படையில், ரங்கன் அடிக்கடி சென்று வந்ததாகத் தெரியவந்த பல வீடுகளை சி.பி.ஐ. குழு சோதனையிட்டது. பலனில்லை.
இந்த வீட்டு சோதனைகளுக்கு, சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வு குழுவுடன், தேசியப் பாதுகாப்புப் படையின் கறுப்புப்பூனைகளும் சென்றிருந்தனர். அது எதற்காக என்றால், ரங்கன் சென்னையிலிருந்து திருச்சி சென்றபோது, ஒரு தம்பதி மற்றும் குழந்தையுடன் அவரது மாருதி வேனில் புறப்பட்டு சென்றார் என்று கிடைத்த தகவல் காரணமாகத்தான்.
ரங்கனுடன் திருச்சி சென்ற அந்தத் தம்பதி சிவராசன் சுபாவாக இருக்கலாம். குடும்பத்தினர் போலக்காட்டுவதற்காக குழந்தையை உடன் அழைத்து சென்றிருக்கக்கூடும். சிவராசனிடம் துப்பாக்கி உள்ளது. இந்தக் காரணங்களால் திருச்சியில் வீடுகளுக்கு சோதனையிட சென்ற போது கறுப்புப்பூனைகளை தம்முடன் அழைத்துச் சென்றார்கள், சி.பி.ஐ. டீம்.
திருச்சியில் ரங்கன் தேடுதல் வேட்டை பலனளிக்கவில்லை. ஆனால், சிவராசனும், சுபாவும் இந்த ரங்கனுடன்தான் எங்கோ இருக்கிறார்கள் என நம்பியது சி.பி.ஐ.
விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிவராசன் தப்பிச் செல்வதற்கு, புலிகளின் அரசியல் பிரிவை சேர்ந்தவர்களை நாடியுள்ளார். அரசியல் பிரிவு, திருச்சி சாந்தனின் தலைமையில் இயங்கியது. திருச்சி சாந்தன், தமது தளமாக வைத்துக்கொண்டு இயங்கிய நகரம் திருச்சி. தமிழக உளவுப்பிரிவு க்யூ பிராஞ்ச், கொடுத்த தகவல்களின்படி, சாந்தன், திருச்சியில் உள்ள தி.க. (திராவிடர் கழகம்) பிரமுகர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டவர்.
இந்த வகையில் சிவராசனையும், சுபாவையும் வேறு சிலரையும் திருச்சியில்தான் எங்கோ மறைத்து வைத்திருப்பார்கள் என உறுதியாக நம்பியது, சி.பி.ஐ. புலனாய்வுக் குழு.
இதையடுத்து சென்னையில் இருந்து செயல்பட்டு கொண்டிருந்த சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஒரு பகுதியினர், தமது ஆபரேஷனை திருச்சிக்கு ஷிஃப்ட் செய்தனர். இந்தக் குழு திருச்சியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியின் பயிற்சி மையத்தில் தற்காலிகமாக தங்கினர். அங்கு, அவர்களது தாற்காலிகச் செயலகம் ஒன்று அமைக்கப்பட்டது. 20 கறுப்புப்பூனைகளும், சிறப்புப் புலனாய்வுப்படையைச் சேர்ந்த 12 பேரும் அங்குதான் தங்கியிருந்தனர்.
அங்கிருந்த சி.பி.ஐ. குழு, திருச்சி மட்டுமின்றி புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் துப்புக்கிடைக்குமா என தொடர்ந்து விசாரித்து வந்தது. தகவல் கிடைத்தால் உடன் தெரிவிப்பதற்காக, ஆங்காங்கே ஆட்களும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், சிவராசனை பற்றியோ ஒரு தகவலும் இல்லை.
சி.பி.ஐ. டீம் சுமார் 10 கார்களை திருச்சியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியின் பயிற்சி மைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தது. இவற்றில் சில சி.பி.ஐ.க்கு சொந்தமானவை. மற்றவை இவர்களது பயன்பாட்டுக்காக தமிழக அரசு, அதன் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடமிருந்து கொடுத்தவை.
தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக கார்களில், தினமும் காலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சியில் இருந்து கிளம்பி, டூரிஸ்ட் போல தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் என்று பெரிய ரவுண்ட் அடித்துவிட்டு இரவில் வெறும் கையுடன் திரும்புவார்கள்.
சிவராசன் சிக்கவில்லை. 20 நாட்களாக முயன்றும் பலன் ஏதும் இல்லை. போன இடங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் விசிட் அடித்ததில், ஓரளவுக்கு புண்ணியம் கிடைத்ததுதான் மிச்சம்.
அந்த சமயத்தில் சென்னையில் இருந்த புலனாய்வு டீம், சில போட்டோக்களைப் பார்க்க நேரிட்டது. போரூரில் ரொபர்ட் பயஸ் வீட்டில் சோதனையிட்டபோது இவர்கள் கைப்பற்றிய கவரில், இருந்தன அந்த போட்டோக்கள்.
இந்த போட்டோக்களில், போரூர் அருகே பறங்கிமலையில் உள்ள ஒரு போட்டோ ஸ்டூடியோவின் ரப்பர் ஸ்டாம் முத்திரை காணப்பட்டது.
(தொடரும்… வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் தொடர்)
விறுவிறுப்பு.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக