மிக அருகில் ராக்கெட் ஒன்று வெடிக்க கேமராமேன் தனது கேமராவை கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அல்-ஒமரி மட்டும் தனி ஆளாக, கேமராவையும் இயக்கி, அதற்கு முன் நின்று செய்தியையும் சொல்லி...
அத்தியாயம் 05
இஸ்ரேலிய ராணுவம் ரமல்லா நகரின் மீது தாக்குதல் நடத்தியபோது பீரங்கிகள் அல்-ஜசீரா அலுவலகத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டன. இதனால், ஊழியர்கள் உள்ளேயே முடங்கிக் கிடக்க நேர்ந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் சாப்பாடு வெளியே கிடைக்காது. குடிக்கத் தண்ணீர்கூட போதுமானது இல்லை.
இந்த நிலைமையை அல்-ஒமரி செய்தியாக மாற்றினார். அது அல்-ஜசீராவில் ஒளிபரப்பாகியது. அடுத்த நாள் இஸ்ரேலிய ராணுவத்தின் பீரங்கிகள் இடத்தைக் காலி செய்தன. உடனே பலஸ்தீன மக்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அல்-ஜசீரா ஊழியர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து மகிழ்ந்தனர்.
இவர்கள் அல்-ஒமரியை தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதினர். தொடர்ந்து பலஸ்தீனர்கள் படும் துன்பங்கள் அல்-ஜசீராவில் ஒளிபரப்பாக, அரபு மக்களின் உணர்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.
இந்த சூழ்நிலையில் இஸ்ரேல், மேற்குக்கரைப் பகுதியை 64 பிரிவுகளாகப் பிரித்தது. 270 ராணுவச் சோதனைச் சாவடிகளை அமைத்தது.
இதனால், செய்தி சேகரிப்பதில் அல்-ஜசீராவுக்கு சிரமம் ஏற்பட்டது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் இஸ்ரேலிய ராணுவம் அனுமதி அளித்த அட்டையைக் காண்பித்த பிறகே செல்ல முடியும். இந்த அனுமதி அட்டை முறை அமலில் இருந்ததால், இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குள் அல்-ஜசீரா குழுவால் நுழைய முடியவில்லை.
அல்-ஒமரி விடவில்லை. கழுதை ஒன்றை விலைக்கு வாங்கினார். பழைய துணிகளுக்குள் கேமராவை மறைத்துஈ கழுதையில் ஏற்றி, மலைகளுக்கு இடையே நடந்து சென்று நாப்லஸ் பகுதியில் நடக்கும் விடயங்களை பிரத்யேக செய்தியாகக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர்கள் எப்படி அங்கே போனார்கள் என்று இஸ்ரேலிய ராணுவம் தலை முடியைப் பிய்த்துக் கொண்டது.
காசா பகுதியில் செய்தி சேகரிப்பதுதான் மிகவும் கடினம். பத்திரிகையாளர் அட்டை (‘பிரஸ் கார்டு’) மூலம் இந்தப் பகுதிக்கு ஒரு நாளில் மூன்று முறை மட்டுமே செல்ல முடியும். அப்படியிருந்தும், அல்-ஜசீரா ஆட்கள் ‘எப்படியோ உள்ளே புகுந்து’ சாதித்தனர். அதில் ஆபத்து இல்லாமல் இல்லை. கடுமையாக ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தது.
ஒரு முறை ஹைபா ஹோட்டலில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலின்போது அல்-ஒமரியின் இரண்டு நண்பர்கள் கொல்லப்பட்டனர்.
மற்றொரு முறை அல்-ஒமரி தனது அலுவலகத்தின் மாடியில் கேமராவை வைத்துக்கொண்டு ரமல்லா நகரின் மீது இஸ்ரேலிய ராணுவம் ஏவகணைத் தாக்குதல்கள் நடத்துவதை நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது ஓர் ஏவுகணை அவரது வீட்டின் மீது போய் விழுவதை கேமராவில் பார்த்து பார்த்து அதிர்ந்தார்.
உடனே தூங்கிக் கொண்டிருந்த மனைவியையும், மகளையும் தொடர்பு கொண்டார். அவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றதும்தான் நிம்மதியானார். வீட்டின் ஒரு பகுதி, சேதமடைந்தது.
இன்திபதாவின்போது வெளியான படங்கள் கொடூரமானவை.
முகமது அல்-துர்ரா மரணத்துக்குப் பிறகு, இத்தாலிய டி.வி. சேனல் ஒன்று, ஒரு காட்சியை ஒளிபரப்பி அதிர வைத்தது. இரண்டு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டு ஜன்னல் ஊடாக வெளியே தூக்கி எறியப்படுவது போலவும், அப்போது ஜன்னல் அருகே பலஸ்தீனிய பொதுமகன் ஒருவர் கையில் ரத்தத்துடன் புன்னகை செய்வது போலவும் இருந்தது அந்தக் காட்சி.
இந்தச் செய்தி ஒளிபரப்பானதை அடுத்து அல்-ஜசீரா, பலஸ்தீனிய பொதுமக்கள் இஸ்ரேலிய வீரர்களைக் கொன்று இருக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தது.
இதற்குப் பிறகு காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தியது. இதனை அலுவலகத்தின் மாடியில் இருந்து அல்-ஒமரி செய்தியாக வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது மிக அருகில் ராக்கெட் ஒன்று வெடிக்க கேமராமேன் தனது கேமராவை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதையடுத்து அல்-ஒமரி மட்டும் தனி ஆளாக, கேமராவையும் இயக்கி, அதற்குமுன் நின்று செய்தியையும் சொல்லி சுமார் 15 நிமிடங்களுக்குச் செய்தி வழங்க நேர்ந்தது.
அல்-ஜசீரா நேரடி ஒளிபரப்பைத் தொடர்ந்து இஸ்ரேலின் அத்துமீறல்கள் உலகுக்குத் தெரிய வந்தன. ஐ.நா. பாதுகாப்பு சபை குழு, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு அல்-ஜசீரா செய்திகளை மேற்கோள் காட்டி கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இஸ்ரேல் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
அறிவியல், கலாசாரம், விளையாட்டு அமைச்சகத்தின் இயக்குநர் நாச்மன் ஷாயை தலைவராக கொண்டு சிறப்பு மீடியா குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவை தொலைக்காட்சி செய்திகளை கண்காணிக்கும்படி கூறியது. இந்த நாச்மன் ஷாயே, பலஸ்தீனத்துக்கு எதிராக 5 நிமிட விடியோ கிளிப்பிங்ஸ் ஒன்றை, தமது ஆதரவு டி.வி. சேனல்களில் வெளியிட்டார்.
அதில் பலஸ்தீனிய சிறுவர்கள் துப்பாக்கியில் குண்டுகளைப் போட்டுப் பழகுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்று இருந்தது. பின்னணியில் ஒலித்த குரல், “அல்-ஜசீரா டி.வி.யில் வரும் காட்சிகளை பார்த்தே சிறுவர்கள் வன்முறை பாதைக்கு செல்ல தூண்டப்படுகிறார்கள்” என்று ஒலித்தது.
அந்த முயற்சி இஸ்ரேலுக்கு பெரிதாக பலனளிக்கவில்லை.
அல்-ஜசீரா, ஓமன் நாட்டு அதிபர் அல் அப்துல்லா சலேவை, இரண்டாவது இன்திபதா தொடர்பாக பேட்டி கண்டது. இதில் அவர், “அரபு நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். எகிப்து ஜனாதிபதி ஹோஸ்ஸி முபாரக், அல்-ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சரை அல்-ஜசீரா பேட்டி கண்டபோது, அவர் இஸ்ரேலுக்கு எதிராகப் புனிதப்போர் நடத்த அறைகூவல் விடுத்தார்.
சர்வதேச அளவில் பலஸ்தீன புரட்சிக்கு அல்-ஜசீரா அங்கீகாரம் பெற்றுத் தந்தது. தனிப்பட்ட முறையில் அல்-ஜசீராவுடன் முறுகல் போக்கை வைத்திருந்த சௌதி அரேபியாகூட, தமது அரசு தொலைக்காட்சி மூலம் மக்களிடம் இருந்து 150 மில்லியன் சௌதி ரியாலை பலஸ்தீனத்துக்கு திரட்டிக் கொடுத்தது.
சௌதி மன்னர் பாண்ட் தனிப்பட்ட முறையில் 30 மில்லியன் சௌதி ரியாலை நிதியாகக் கொடுத்தார். தவிர போரில் காயமடைந்த பலஸ்தீன மக்களுக்கு சௌதியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
இதற்கிடையே, பிரச்சினை பற்றி விவாதிக்க கய்ரோ நகரில் அரபு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் எகிப்து ஜனாதிபதி முபாரக்.
இந்த மாநாட்டில் லிபியாவின் கர்னல் கடாபி படித்த அறிக்கையில், ஒட்டுமொத்தத் தீர்மானங்களைக் கேலி செய்தார். இவரது அறிக்கை பரபரப்பை ஏற்படுத்த, அரபு தலைவர்களுக்கு பலஸ்தீனம் மீது உண்மையில் அக்கறை இல்லை என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாநாடு குழப்பத்தில் முடிந்தது.
லிபியா ஜனாதிபதி கடாபியின் பேச்சை ‘லைவ்’வாக ஒளிபரப்பிய ஒரே சேனலான அல்-ஜசீரா மீது, அரபு நாடுகள் குற்றம் சாட்டின. அரபு நாடுகளுக்கும், பலஸ்தீனத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவதே, அல்-ஜசீராதான் என்பதே குற்றச்சாட்டு!
தொடரும்..
விறுவிறுப்பு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக