அல்-ஜசீரா நிர்வாகம், இவர் சுதந்திரமான செய்தி வழங்கலாம் என்று உறுதி அளிக்க, உடனடியாக அதில் சேர்ந்தார். அல்-ஜசீராவுக்கு செய்திகள் தருவதோடு, பிர்சிட் பல்கலைக் கழகத்தில் அவ்வப்போது..
அத்தியாயம் 04
வாலிக் அல்-ஓமரி, இஸ்ரேலில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர். சர்வதேச உறவுகள் தொடர்பாக ஜெருசலேம் பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னர் ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு பற்றி, இஸ்ரேலிய தலைநகரில் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிப்புச் செலவை சமாளிக்கவே முதலில் மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.
ஹீப்ருவில் இருந்து அரேபிய மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்வதில் திறமைசாலியானார். அதுவே, பின்னாட்களில், எல்லா சமூகங்களிலும் செய்தி சேகரிப்பதில் பெரிதும் கை கொடுத்தது.
பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலிய சமூகங்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த, துணிச்சலாக செய்திகளை தரக்கூடிய நபராக இருந்ததால், பல மீடியாக்கள் இவரைப் பணியில் அமர்த்திக் கொள்ள போட்டியிட்டன.
1989-ல் பாரீசை தளமாக கொண்டு இயங்கிய வானொலியின் நிருபராகப் பணியாற்றினார். பின்னர் அமெரிக்க வானொலிகளில் பசெய்தியாளராக பணியாற்றினார். இஸ்ரேலிய தொலைக்காட்சியின் ஆலோகராகவும் இருந்தார்.
1995-ம் ஆண்டில் என்.பி.சி.யில் முழுநேர செய்தியாளராக பணியாற்றினார். சுருக்கமாக சொன்னால், எல்லா மீடியாக்களிலும் ஒரு பெரிய ரவுன்ட் வந்தவர் இவர். பி.பி.சி.யின் அரேபிய சேவையில் மட்டும் ஏனோ பணியாற்றவில்லை.
இந்த நேரத்தில் அல்-ஜசீரா டி.வி. சேனல் பிரபலமாக துவங்கியது. அல்-ஜசீரா நிர்வாகம், இவர் சுதந்திரமான செய்தி வழங்கலாம் என்று உறுதி அளிக்க, உடனடியாக அதில் சேர்ந்தார். அல்-ஜசீராவுக்கு செய்திகள் தருவதோடு, பிர்சிட் பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது விசிட்டிங் லெக்சரராக பணியாற்றினார்.
அல்-ஜசீராவில் சேர்ந்த பிறகு, பலஸ்தீன ‘இன்திபதா’ பற்றி துணிச்சலாக செய்திகள் வழங்கினார். அரேபிய வார்த்தையான இன்திபதாவுக்கு புரட்சி, கலகம், கிளர்ச்சி என்று பொருள் கொள்ளலாம்.
பாலஸ்தீனத்தில் முதலாவதாக இன்திபதா 1987-ல் நடந்தது. முதலாவது புரட்சி 6 ஆண்டுகள் வரை நீடித்தது. அப்போது அல்-ஜசீரா இல்லை. இரண்டாவது இன்திபதா நடந்தபோது அல்-ஜசீரா முக்கிய பங்கு வகித்தது. யாசர் அராபத்தின் பலஸ்தீன அதிகார அமைப்பின் தோல்விகளை சுட்டிக்காட்டியது. பலஸ்தீனிய சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுவதைத் துணிச்சலாகக் காண்பித்தது.
இதனால், பலஸ்தீன அதிகார அமைப்பு ஆத்திரமடைந்தது. அல்-ஓமரியை கைது செய்யப்போவதாக மிரட்டியது.
அல்-ஓமரி மிரளவில்லை. ஒரு படி மேலே சென்றார். ஹமாஸ் இயக்கத்துக்கும், பலஸ்தீன அதிகார அமைப்புக்கும் இடையே ஆட்சியைப் பிடிக்க நடக்கும் போராட்டங்கள் பற்றி விரிவான தகவல்களை கூறத் துவங்கினார்.
சுருக்கமாக சொன்னால், இவர்களது பதவி போட்டி பற்றி வெளியுலகம் அறிய வைத்தார். அல்-ஜசீரா அவற்றையெல்லாம் முழுமையாக ஒளிபரப்பியது.
இது அல்-ஜசீரா மற்றும் பலஸ்தீன அதிகார அமைப்புக்கும் இடையே பெரும் கசப்புணர்வை ஏற்படுத்தியது.
முதலாவது இன்திபதாவின்போது ஹமாஸ் இயக்கம் தோன்றியது. ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலை வெளியேற்றுவதே இதன் நோக்கம். இதற்கு குவைத், சௌதி அரேபியா ஆகிய நாடுகள் நிதி உதவி செய்தன. பணம் நிறைய இருந்ததால் பலஸ்தீன ஏழை மக்களுக்கு ஹமாஸ் இயக்கம் உதவி செய்து வந்தது. இதனால், மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
அதேவேளையில், பலஸ்தீன அதிகார அமைப்புக்கு மக்கள் செல்வாக்கு குறைந்து கொண்டு போனது.
இதனை அல்-ஜசீரா சுட்டிக்காட்ட, பலஸ்தீன அதிகார அமைப்பு கொதித்து எழுந்தது. அல்-ஜசீரா, இஸ்ரேலின் நிதி உதவியோடு தனக்கு எதிராகச் செயல்படுவதாக குற்றம்சாட்டியது.
பல பழைய விஷயங்களில் உண்மையை வெளிப்படுத்தியதால், இரண்டாவது இன்திபதாவின்போது, மக்கள் அல்-ஜசீராவின் செய்திகளைத்தான் நம்பினர்.
1993-ல் ஆஸ்லோ அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி, 2000-ல் கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை தோல்வி என்று கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாம் கைநழுவி போக போக, தங்கள் தலைவர்கள் சுய லாபத்துக்காக செயல்படுவதை பலஸ்தீன மக்கள் உணர்ந்து கொண்டனர்.
இரண்டாவது இன்திபதா வெடிப்பதற்கு, இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் ஏரியல் ஷெரான், ஜெருசேலமில் உள்ள புனிதப் பகுதிக்குச் சென்றதே முக்கிய காரணம். இந்தப் பகுதியை யூதர்கள் ‘டெம்பிள் மௌவுண்ட்’ என்றும் இஸ்லாமியர்கள் அல்-ஷெரீப் என்றும் அழைத்தனர்.
1982-ல் லெபனான் ஆக்கிரமிப்பின்போது ஷெரான் தலைமையிலான யூதப்படை, சுமார் இரண்டாயிரம் பலஸ்தீனர்களைக் கொன்று குவித்தது. இப்படிப்பட்ட கொடூரமானவர் தங்களது புனித இடத்துக்குச் சென்றதால்தான் பலஸ்தீனியர்கள் இரண்டாவது இன்திபதாவை துவக்கினர்.
இம்முறை கையில் ஆயுதங்கள் ஏந்திப் போராடினர்.
இரண்டாவது இன்திபதா துவங்கிய இரண்டு நாட்களில், காசா பகுதியில் பலஸ்தீனிய, மற்றும் இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு இடையே சண்டை நடந்தது.
அப்போது நடந்த ஒரு சம்பவம், அரபு பகுதிகளில் பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியது. அல்-ஜசீராவுக்கு அரபுப் பகுதிகளில் செல்வாக்கை ஏற்படுத்தியதும், அந்த சம்பவம்தான்.
ஜமால் அல்-துர்ரா என்பவரும், அவரது 12 வயது மகன் முகமதுவும் நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்கள் போராட்டம் நடத்தவில்லை, கற்களை வீசவில்லை. அமைதியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். இஸ்ரேலிய படை வீரர்கள் 12 வயதான முகமதை துப்பாக்கியால் சுட்டனர். தந்தையின் மடியிலேயே அவனது உயிர் பிரிந்தது.
இந்தச் சம்பவம் அரபு பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
உயிரிழந்த முகமது அல்-துர்ரா தியாகியாகப் போற்றப்பட்டார். அவரது போட்டோக்கள் அரபு தேசமெங்கும் வீடுகளை அலங்கரித்தது.
12 வயது சிறுவன் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை அல்-ஜசீரா திரும்பத் திரும்ப ஒளிபரப்பியது. இது அரபு மக்கள் மத்தியில் அல்-ஜசீரா மீது அபிமானத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் ஜோர்தான் தொலைக்காட்சி உள்ளிட்ட பல டிவி சேனல்கள் வழக்கமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வெறுப்பேற்றின.
இரண்டாவது இன்திபதாவின்போது நடக்கும் கொடூரங்களை அல்-ஜசீரா நேரடியாக ஒளிபரப்பியது. பலஸ்தீன விடுதலை அமைப்பின் புரட்சியாளரான அபு அல் முஸ்தபா இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தை, அல்-ஜசீராதான் முதன் முதலில் சொன்னது.
எம்.பி.சி., அபுதாபி தொலைக்காட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் அரபு பகுதிகளில் இயங்கியபோதும், இன்திபதா பற்றி அல்-ஜசீரா அளவுக்கு செய்திகளை வேறு எந்த தொலைக்காட்சி நிறுவனமும் வழங்க இயலவில்லை.
இதற்கு பலஸ்தீன மக்களுடன் அல்_ஜசீரா நெருக்கமான உறவு வைத்து இருந்ததுதான் முக்கிய காரணம். பிரதான நிருபர் வாகித் அல்-ஒமரி, தனது மொபைல் எண்களை மக்களிடம் கொடுத்து இருந்தார். இதனால், எந்தச் சம்பவம் நடந்தாலும் இவருக்குத் தகவல் வந்து விடும். இது தவிர, தனது இஸ்ரேலிய பத்திரிகை நண்பர்கள் மூலமும் செய்திகளைப் பெறுவார்.
கிடைத்த செய்தி உண்மைதானா என்பதை உறுதி செய்த பிறகு இரமலா நகரில் உள்ள ஒளிபரப்பு வேன் மூலம் சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்வார்.
பலஸ்தீன மக்களின் ஆதரவு அல்-ஜசீராவுக்கு பல முறை கைகொடுத்துள்ளது. அல்-ஜசீரா அபாயத்தில் சிக்கியபோது, மக்கள் முன்வந்து காப்பாற்றிய சம்பவங்களும் நடந்தன.
ஒரு முறை இஸ்ரேலிய ராணுவம் இரமல்லா நகரின் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது பீரங்கிகள் அல்-ஜசீரா அலுவலகத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டன.
தொடரும்..
விறுவிறுப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக