வியாழன், 13 பிப்ரவரி, 2014

தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன் - 2

தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக மாறினார் (2)


மக்கள் செல்வாக்கு

ஸ்ரீலங்காவில் உள்ளவர்களின் தரத்தின்படி யோகேஸ்வரன் வெளிறிய நிறத்தையும், கம்பீரமான தோற்றத்தையும் கொண்ட மிக அழகான மனிதர். அவரது தலை வழுக்கையாக இருந்தாலும், கவாச்சி நிறைந்த நல்ல அழகான தோற்றத்தையும் வசீகரமான புன்னகையையம் தன்வசம் கொண்டிருந்தார். அவர் அடிப்படையில் நல்ல பழக்கங்களையும் இனிமையும் அன்பும் கொண்ட மனநிலை உள்ளவராகவும் இருந்தார். அவர் உணர்ச்சி மிக்க ஆளுமையும், வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து அனுபவிக்கும் இயல்புடையவராகவும் இருந்தார். பிரென்ச் மொழியில் குறிப்பிடப்படும் நல்ல மனிதர், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்பவர் போன்ற சொற்பதங்களுக்கு ஒரு இலக்கணமாகவே யோகேஸ்வரன் திகழ்ந்தார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அளவற்ற செல்வாக்குப் பெற்றவராக யோகேஸ்வரன் திகழ்ந்தார். இந்தச் செலவாக்கு ஜனநாயக அரசியலில் அவரது மிகப் பெரிய சொத்தாக மிளிர்ந்தது.



யோகேஸ் என பொதுவாக அழைக்கப்படும் வெற்றிவேலு யோகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆங்கிலிக்கன் பாடசாலையான சென்ட். ஜோன்ஸ் கல்லூரி,கத்தோலிக்க பாடசாலையான புனித சம்பத்திரிசியார் கல்லூரி, மற்றும் கொழும்பிலுள்ள பௌத்த பாடசாலையான ஆனந்தாக் கல்லூரி என்பனவற்றில் கல்வி கற்றவர். தனது இரண்டாம் தரக் கல்வியை முடித்த பின்னர் கொழும்பிலுள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்து ஒரு சட்ட மாணவனாக மாறினார். சிறிது காலத்தின் பின் அவர் லண்டன் சென்று இங்கிலாந்தில் பட்டம் பெற்ற வழக்கறிஞாக மாறும் நோக்கத்துடன் சட்டக் கல்வியை தொடருவதற்காக சட்டக் கல்லூரி ஒன்றில் சேர்ந்தார். சில வருடங்களின் பின்னர் அவர் ஸ்ரீலங்காவுக்கு திரும்பி சட்டக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். ஒரு வழக்கறிஞராகப் பட்டம் பெற்றபின் அவர் யாழ்ப்பாணத்தில் குடியேறி ஒரு இலாபகரமான தொழிலை நிறுவினார். வெகு விரைவிலேயே அவர் இலங்கை தமிழரசுக் கட்சியிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் தன்னை ஒரு அங்கத்தவராக இணைத்துக் கொண்டதால், யாழ்ப்பாணத்தில் ஒரு முழு நேர அரசியல் வாதியாக மாறிவிட்டார்.

இங்கிலாந்தில் ஒரு சட்ட மாணவனாக இருந்தபோது கூட யோகேஸ்வரன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். முன்னணி பிரித்தானிய பிரபுவும்; ,தத்துவவாதியும்,மற்றும் அரசியல் விடயங்களில் திறமைசாலியானவருமான பேர்ட்ரன்ட் ரூசல் பிரபுவுடன் மிக நெருக்கமாகப் பணி புரிந்தார். அணு ஆயுதக் களைவு மற்றும் வியட்னாம் யுத்தத்தக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஆகிய இரண்டு கோளங்களிலும் யோகேஸ்வரன் பேர்ட்ரன்ட் ரூசலுக்கு துணையாக நின்றதுடன், அது தொடாபான பிரச்சார இயக்கங்களிலும் பங்கேற்றார்.

லண்டனில் இடம்பெற்ற தென்னாபிரிக்கா கறுப்பு இனத்தவர்களின் நடவடிக்கைகளிலும் யோகேஸ்வரன் கலந்து கொண்டு தனது சகோதரத்துவத்தையும் வெளிக்காட்டினார். அவர் புறக்கணிப்பு இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் பின்னா அது நிறவெறி எதிர்ப்பு இயக்கமாக மாற்றமடைந்தது. மேலும் யோகேஸ்வரன் லண்டனில் உள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரசில் ஒரு தொண்டனாக தன்னை இணைத்துக் கொண்டதால் ஒலிவர் தம்போவை தனிப்பட்ட முறையில் நன்கறிவார்.

(இந்த சுவரொட்டி பிரித்தானிய நிறவெறி எதிர்ப்பு இயக்க பிரச்சாரத்தினைச் சேர்ந்தது. இந்த அமைப்பின் எதிர்ப்பின் காரணமாக, 1970ல் தென்னாபிரிக்காவின் அனைத்து வெள்ளை இனத்தவர்கள் உள்ள கிரிக்கட் குழுவினருடன் பிரித்தானியா நடத்தவிருந்த கிரிக்கட் சுற்றுப் பயணம் இரத்துச் செய்யப்பட்டது.)

ஆர்ப்பாட்டங்கள்

பாரிய மனிதநேய விடயங்களை முன்னெடுப்பதில் ஆர்வமுள்ளவராக யோகேஸ்வரன் விளங்கினாலும் தமிழ் தேசியவாத ஆர்ப்பாட்டங்களிலும் அவர் தன்னை ஈடுபடுத்தி வந்தார். பல ஆர்ப்பாட்டங்களை எற்பாடு செய்வதிலும் மற்றும் அதில் பங்கெடுப்பதிலும் அவர் உதவி வந்தார். இது தொடர்பான ஒரு முக்கிய நிகழ்வாக குறிப்பிடத் தக்கது, உலகின் முதலாவது பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோது ஹீத்துரோ விமான நிலையத்தில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. யாழ்ப்பாணத்தில் ஒரு வழக்கறிஞராக பணியாற்றும்போது பெடரல் கட்சி அல்லது இலங்கை தமிழரசுக் கட்சி என அழைக்கப்படும் கட்சியில் தன்னை ஒரு அங்கத்தவராக இணைத்துக் கொண்டதின் மூலம் யோகேஸ்வரன் அரசியலில் தன்னை ஆழப் புதைத்துக் கொண்டார். வேம்படி மகளிர் உயர்நிலைப் பாடசாலையில்; ஒரு ஆசிரியையாக பணியாற்றிய அவரது மனைவி சரோஜினி இதில் அவருக்கு உதவியாக இருந்தாலும், அவர் தன்னை நேரடியாக அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. யாழ்ப்பாண தேர்தல் தொகுதி அப்போது யாழ்ப்பாண மாநகரத்தையும் அதன் சுற்றுப் பகுதியையும் உள்ளடக்கி இருந்தது ஒரு யாழ்ப்பாணக் குடியிருப்பாளராக இருந்தபடியால் யோகேஸ்வரன் அந்த தொகுதியிலேயே தனது கவனத்தை பிரதானமாக செலுத்தி வந்தார்.

அந்த நாட்களில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி, தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவாகள் மற்றும் பறங்கியர் ஆகியோரைக் கொண்ட ஒரு பல்லினத் தேர்தல் தொகுதியாக இருந்தது. அது மேலும் ஒரு பல் மதத் தொகுதியாகவும் இருந்தது, அங்கு கிறீஸ்தவர்கள் சிறிது பெரும்பான்மையாக 43 விகிதமும், அடுத்ததாக இந்துக்கள் 41 விகிதமும், இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட போராக்கள் மற்றும் மெம்மூன்கள் மொத்தமாக 13 விகிதமும் மற்றும் பௌத்தர்கள் 3 விகிதமும் வாழ்ந்தார்கள். யாழ்ப்பாணம், மாகாணம் மற்றும் மாவட்டம் என்பனவற்றின் தலைநகராக திழ்ந்தபடியால் மிகவும் பெருமைக்குரிய தொகுதியாக விளங்கியது. அத்துடன் இதற்கு முன்னர் அந்தத் தொகுதியை பெருந்தலைகள் பல பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தன.

பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்த அரச சபையில் பழைய யாழ்ப்பாணத் தொகுதி, சேர். பொன்னம்பலம் அருணாச்சலத்தின் மகனும் மற்றும் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனுமான சேர் அருணாச்சலம் மகாதேவா அவர்களால் பிரதிநிதிப் படுத்தப்பட்ட பெருமையை பெற்றது. சுதந்திரத்தின் பின்னர் அப்போது ஆதிக்கம் பெற்ற தமிழ் கட்சியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.ஜி பொன்னம்பலம் 1947ல் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு மகாதேவாவை தோற்கடித்தார். 1952 மற்றும் 1956ல் நடந்த தேர்தல்களிலும் அவர் அந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

துரையப்பா

ஆங்கிலத்தில் பெடரல்கட்சி என அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி 195Alfred Duraiyappa6ல் மிகப் பெரிய வெற்றியை பெற்றபோதும் யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரை தோற்கடிக்க முடியாமல் போயிற்று. 1960 மார்ச் மற்றும் ஜூலை ஆகிய இரண்டு தேர்தல்களிலும், கோலியாத் போன்ற ஜி.ஜி. பொன்னம்பலம், பின்னாளில் தோன்றிய ஒரு டேவிட்டால் தேர்தல் ரீதியாக தோல்வி என்கிற மரணத்தை தழுவ வேண்டியதாகி விட்டது. பிரபலமான இளம் யாழ்ப்பாண நகரபிதாவான அல்பிரட் துரையப்பா சுயேச்சையாகப் போட்டியிட்டு இரண்டு தேர்தல்களிலும் ஜி.ஜி யை தோற்கடித்தார். தற்செயலான ஒன்றாக துரையப்பா, பிரபல வழக்கறிஞரான ஜி.ஜி யின் மருமகள் முறையான வைத்தியரான பரமேஸ்வரியை மணம்புரிந்த வகையில் அவருக்கு உறவினராகவும் உள்ளார்.

1965ல் இலங்கை தமிழரசுக் கட்சி தனது தேர்தல் மூலோபாயத்தை யாழ்ப்பாணத்தில் மாற்றிக் கொண்டது, அந்தக் கட்சி 1956ல் தனது வேட்பாளராக வைத்தியர் ஈஎம்வி நாகநாதனையும் 1960ல் எஸ்.கதிரவேற்பிள்ளையையும் யாழ்ப்பாணத்தில் நிறுத்தியிருந்தது. 1965ல் பெடரல் கட்சி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியான சி.எக்ஸ் மார்ட்டின் அவர்களை தனது வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் நிறுத்தியது. கத்தோலிக்கரான மார்ட்டின்,அந்த தொகுதியில் கத்தோலிக்கர்களின் ஆதிக்கத்திலுள்ள கரையூர் அல்லது குருநகர்,பாஷையூர் மற்றும் நாவாந்துறை ஆகிய பிரதேசங்களில் அதிக வாக்குகளைப் பெற்றார். இந்தப் பிரதேசங்கள் ஜி.ஜி மற்றும் துரையப்பா ஆகியோரின் வாக்கு வங்கிகளாக முன்னர் இருந்தவையாகும். இந்த சூழ்ச்சி அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த துரையப்பாவை தோற்கடிக்கத் தக்க அளவுக்கு வெற்றிகரமாக விரிவாக்கம் பெற்றிருந்தது, ஆனாலும் இறுதியில் வெற்றி ஜி.ஜி பொன்னம்பலத்துக்கே கிடைத்தது, அவர் அந்த தொகுதியை 5 வருடங்களின் பின்னர் மீண்டும் கைப்பற்றிக் கொண்டார். எனினும் இலங்கை தமிழரசுக் கட்சி இந்த மூலோபாயத்தை 1970 தேர்தலிலும் தொடர்ந்து மேற்கொண்டது. இந்த முறை அது வெற்றி பெற்றதை நிரூபித்தது, முதல் தடவையாக இலங்கை தமிழரசுக் கட்சி , யாழ்ப்பாண தொகுதியை கைப்பற்றியது. சி.எக்ஸ். மார்ட்டின் அல்பிரட் துரையப்பாவை காட்டிலும் மிகச் சிறிய பெரும்பான்மையான 56 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றியீட்டினார், அதேவேளை ஜி.ஜி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

எனினும் சி.எக்ஸ். மார்ட்டின் கட்சி அணியை உடைத்துக் கொண்டு சுதந்திரமாகச் செயற்படத் தொடங்கினார், அது தனது மனச்சாட்சிப்படி நடக்கும் செய்கை என்று அவர் அதற்கு விளக்கமளித்தார். அதிலிருந்து அவர் மனச்சாட்சி மார்ட்டின் என அழைக்கப்படலானார். மார்ட்டின் பிளவு பட்டதுடன் யாழ்ப்பாணத் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளருக்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. யோகேஸ்வரன் அதில் ஒரு கண் வைக்க ஆரம்பித்ததுடன், அடுத்த தேர்தலில் வேட்பாளர் நியமனத்தை பெறுவதற்காக சுறுசுறுப்பாக வேலை செய்யலானார்.

பிரிந்து செல்லுதல்

இதற்கிடையில் முன்னணி ஸ்ரீலங்கா தமிழ் கட்சிகள் அனைத்தும் தளர்வான ஒரு கூட்டணியாக ஒன்றுசேர்ந்து 1972ல் தமிழர் ஐக்கிய முன்னணி (ரி.யு.எப்)என்கிற ஒரு கூட்டமைப்பை உருவாக்கின. 1976ல் மே மாதம் இந்த ஒற்றுமை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி(ரி.யு.எல்.எப்)என்கிற ஒரு உறுதியான கட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. ரி.யு.எல்.எப் பிரிந்து செல்ல விரும்புவதாக அறிவித்து, தமிழ் ஈழக் கோரிக்கையை முன் வைத்தது. ரி.யு.எல்.எப் செயற்குழு அங்கத்தவராக யோகேஸ்வரன் நியமனம் பெற்றார். கட்சியின் இளைஞர் அணியின் செயல்களுக்கு பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப் பட்டார். பொதுமக்களுக்கான பகிரங்க வாராந்தர அரசியல் கலந்துரையாடல்கள், யோகேஸ்வரன் இல்லத்தில் நடைபெற்று வந்தன.

சி.எக்ஸ். மார்ட்டினின் பிளவுக்குப் பின்னர் இரண்டு வேறு வேறான சம்பவங்கள் யோகேஸ்வரன் அரசியலில் முன்னேறுவதற்கு எளிதாக வழி சமைத்தன. முதலாவது ஜூலை 1975ல் யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவை எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்த சம்பவம் இடம்பெற்றது. துரையப்பாவை கொலை செய்த நான்கு பேர்கள் கொண்ட குழுவில் பிரபாகரனும் அங்கம் வகித்தார்,மற்றும் பின்னாளில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர், அதுதான் தனது முதலாவது இராணுவ நடவடிக்கை என்று பெருமையுடன் தம்பட்டம் அடித்தார். இரண்டாவது பெப்ரவரி 1977ல் நடந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மறைவு.

சடுதியாக ஏற்பட்ட யாழ்ப்பாண அரசியல் தலைவர்கள் இருவரின் மரணங்களுக்கு அப்பால் வேட்பாளர் நியமனத்தை பெறுவதற்கு யோகேஸ்வரன் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. முன்னாள் நகரபிதா எஸ். நாகராஜா மற்றும் தமிழ் காங்கிரஸ் முன்னணி பிரமுகரான ராசா விஸ்வநாதன் ஆகியோரும் தங்கள் பங்குக்கு நியமனம் கேட்டு கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.அதே போல ஜி.ஜி.பொன்னம்பலம்(ஜூனியர்) அல்லது குமார் பொன்னம்பலம் என்றழைக்கப்படும் ஜி.ஜியின் மகனும் கோரிக்கை வைத்தார். அமிர்தலிங்கம் மற்றும் அவரது மனைவியான மங்கையர்க்கரசி ஆகியோரின் உறுதியான பின்துணை யோகேஸ்வரனுக்கு ரி.யு.எல்.எப் வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கு உதவியாக இருந்தது. பின்னர் 1979ல் விசுவநாதன் யாழ்ப்பாண நகரபிதாவாக நியமனம் பெற்றார். நாகராஜா 1981ல் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் உப தலைவராக நியமிக்கப் பட்டார்.

எனினும் குமார் பொனனம்பலம் ஒரு இணக்கமற்ற மன நிலையிலேயே இருந்தார். வட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக நியமனம் பெறத் தவறியதால் 1977 தேர்தலில் இளம் ஜி.ஜி, யாழ்ப்பாணத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். சி.எக்ஸ். மார்ட்டினும் அதே போல யாழ்ப்பாணத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். தோதல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ரி.யு.எல்.எப் அலை வெற்றி பெற்றதால் யோகேஸ்வரன் வெற்றிச்சிகரத்தை எட்டிப் பிடித்தார். தமிழ் ஈழம் என்கிற மேடையில் நின்று போட்டியிட்ட ரி.யு.எல்.எப் வட மாகாணத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

பெரும்பான்மை

ரி.யு.எல்.எப் இன் சின்னமான சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட யோகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் 9261 பெரும்பான்மை வாக்குகளுடன் முதலாவதாக வந்தார். கடந்த ஏழு பாராளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் இதுவரை பெற்றிராத மிக உயர்ந்த வாக்கு வித்தியாசமாக இது இருந்தது.

அந்த தேர்தல் முடிவகள் பின்வருமாறு இருந்தது:

1. வி. யோகேஸ்வரன் சூரியன் 16,251 வாக்குகள்
2. ஜி.ஜி. பொன்னம்பலம்(ஜூனியர்) மரம் 6,960 வாக்குகள்
3. ஏ.எல் ஆபிரகாம் கத்தரிக்கோல் 4,349 வாக்குகள்
4. சி.எக்ஸ். மார்ட்டின் குடை 900 வாக்குகள்
5. ஏ.ஜி.ராஜசூரியர் கதிரை 164 வாக்குகள்
6. ஏ. தருமலிங்கம் கப்பல் 77 வாக்குகள்

யோகேஸ்வரன் கணிசான வாக்குகளல் வெற்றி பெற்றிருந்தார். பாரம்பரியமாக துரையப்பாவுக்கு ஆதரவளித்து வந்த யாழ் முஸ்லிம்கள் இந்த முறை தங்கள் ஆதரவினை யோகேஸ்வரனுக்கு வழங்கியிருந்தனர். கரையூர் அல்லது குருநகர் பகுதி கத்தோலிக்கர்களும் சி.எக்ஸ். மார்ட்டின் போட்டியிட்டிருந்த போதும், அவரைத் தவிர்த்து தங்கள் வாக்குகளை யோகேஸ்வரனுக்கே அளித்திருந்தனர். உவகைக் களிப்புடன் எக்காளமிட்டபடி யோகேஸ்வரன், மார்ட்டினை வெற்றி கொண்டதைப் பற்றிய ஒரு கதையை விளக்கினார்.

தேர்தலுக்கு முதல் நாள் இரவு சி.எக்ஸ். மார்ட்டின் வெளிப்படையாக குருநகர் மக்களுக்கு மிகப் பெரிய இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஆயிரக் கணக்கான ஆண்களும் மற்றும் பெண்களும் ஆட்டிறைச்சி,கோழியிறைச்சி, மீன் கணவாய்,இறால் மற்றும் நண்டு என்பனவற்றை வயிறார உண்டு மனம் மகிழ்ந்தனர். மதுபானமும் வெள்ளமென ஓடியது. பகட்டான இந்த விருந்து படைக்கப்பட்ட போதிலும் இந்தப் பெருவிருந்து தேர்தலில் சி.எக்ஸ். மார்ட்டினுக்கு வாக்குகளாக மாறவில்லை. யோகேஸ் இதை என்னிடம் “ஜெயராஜ், இரவு மாட்டின் குடுத்த சாப்பாட்டுக் கறிக் குழம்பு விரலில் மணக்க மணக்க, பகலில் யோகேஸ்வரனுக்கு வோட்டுப் போட்டாங்க” என்று சொன்னார்.

யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் யோகேஸ்வரன் வாக்குகளை வென்றிருந்தார். அவரது செல்வாக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் மிக அதிகமாக இருந்தது. இளைஞர்களின் பிரியப்பட்டவராக யோகேஸ் திகழ்ந்தார். அவர் ஒரு கூட்டத்தில் பேசினால் இளைஞர்கள் பலமாக கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் வரிசையாக நின்று தங்கள் வில்களை குத்தி அல்லது கிழித்து அதிலிருந்து வழியும் இரத்தத்தால் அவருக்குப் பொட்டு வைப்பார்கள். இந்த வழி மூலமாகத்தான் எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் தனது பட்டப் பெயரை பெற்றுக் கொண்டார்.

பொட்டு அம்மான்

பொட்டு அம்மானின் நிஜப் பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர், ஒரு தேர்தல் கூட்டத்தில் தனது விரலை சவர அலகால் கீறி அந்த இரத்தத்தால் யோகேஸ்வரனுக்கு இவர் பொட்டு வைத்தார். அந்த இரத்தம் யோகேஸின் நெற்றியிலிருந்து சொட்டு சொட்;டாக வழிந்து அவரது முகம் முழுக்கப் படர்ந்தது. ஒரு துவாலை கொண்டு வரப்பட்டு அவரது முகம் துடைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அரியாலை மற்றும் நாயன்மார்கட்டு வாலிபர்களை களிப்பூட்டியது,அதன் பின் அவர்கள் சிவசங்கரை பொட்டு எனக் கேலி செய்யலானார்கள். 1981ல் சிவசங்கர் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தபோது அவரது புனை பெயராக இருந்த பொட்டு என்பது அவரது இயக்கப் பெயராக மாறியது, பின்னாளில் அவர் உயர்வு பெற்று எல்.ரீ.ரீ.ஈயில் ஒரு மூத்த தலைவராக மாறியபோது அம்மான் என்கிற பின்னிணைப்பு பொட்டு என்பதன் பின்னால் மரியாதைக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

பொட்டு அம்மானைப் போல பல இளைஞர்கள் தங்கள் இரத்தத்தால் யோகேஸ்வரன் நெற்றியில் திலகமிட்டுள்ளார்கள். இளைஞர்களின் பிரியத்துக்கரியவராகவும் மற்றும் பிரினைக்காக தீவிர குரல் எழுப்பும் ஒருவராக யோகேஸ்வரன் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். தமிழ் ஈழத்துக்கான ஆணை, சிங்கள தொகுதிகளிலிருந்து வந்த பாராளுமன்ற சகாக்களுடன் சுமுகமான நட்புமிக்க உறவை பேணுவதிலிருந்து யோகேஸ்வரனைத் தடுக்கவில்லை. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களிடமும் மற்றும் பின்வரிசை அங்கத்தவர்களுடனும் இலகுவில் சுமுகமாக கலந்துவிடும் அவர், அவர்களுடன் பழகுவதில் மகிழ்வடைந்தார். குறிப்பாக காலம்சென்ற லலித் அத்துலத் முதலியுடன் மிகவும் நட்புறவாக பழகிவந்தார், ஐக்கிய இராச்சியத்தில் இருந்தபோது அவரை யோகேஸ்வரன் தனிப்பட்ட முறையில் மிக நன்றாக அறிவார். லலித்துடனான அவரது நட்பு 1977ல் யோகேசுக்கு ஒரு பிரச்சினையை உருவாக்கியது.

வர்த்தக கப்பல்துறை அமைச்சராக இருந்த அத்துலத்முதலி ஒரு காப்புறுதி கூட்டுத்தாபனக் கிளையை முறைப்படி திறந்து வைப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவேண்டியிருந்தது. அந்த விழாவிற்கு யோகேஸ்வரன் வரவேண்டும் என்று அவர் விரும்பினார், மற்றும் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரும் அதற்குச் சம்மதித்திருந்தார். யோகேஸ்வரனின் தமிழ் ஈழ கருத்துக்களால் தூண்டி விடப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் ஏனைய ரி.யு.எல்.எப் அரசியல்வாதிகள் ஆகியோர் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் ஒரு விழாவில் அரசாங்க அமைச்சர் ஒருவருடன் கலங்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்கள் அவரது வீட்டுக்கு முன்னால்கூடி அவர் அதில் கலந்து கொள்ளக்கூடாது என கோரினார்கள். தான் அதில் சமூகமளிக்கப் போவதாக அத்தலத்முதலிக்கு வாக்களித்திருப்பதால் தனது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பதற்காக தான் அதில் கலந்து கொள்ளவேண்டும் என யோகேஸ்வரன் அவர்களிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த இளைஞர்கள் அவரைப் பின்வாங்கச் செய்யும் ஒரு முயற்சியாக யோகேஸ்வரனின் வீட்டு வாசலுக்கும் மற்றும் வாகனத்துக்கும் இடையில் உள்ள நிலத்தில் படுத்து மறியல் செய்தார்கள். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட யோகேஸ்வரன் கண்ணீருடன் முகத்தைக் குனிந்தபடி கீழெ படுத்திருந்த இளைஞர்களை எச்சரிக்கையாக கடந்து சென்று தனது வாகனத்தில் ஏறிக்கொண்டு நான் வாக்கு கொடுத்திட்டேன் என்று உரக்கக் கத்தினார். மிகவும் கலக்கமடைந்த நிலையிலேயே அவர் அந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டார்.

சந்தேகம்

தமிழ் இளைஞர்களுக்கு அவர் மீதிருந்த இத்தகைய நாட்டம்தான், காவல்துறை மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் மத்தியில் யோகேஸ்வரன்மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தேகம்தான் 1981ல் அவரது வீடு மற்றும் வாகனத்தின்மீது தாக்குதல் தொடுக்க வழி ஏற்படுத்தியது. 1983ல் சென்னைக்கு இடம் பெயர்ந்த பிறகு யோகேஸ்வரன் தமிழ் குழுக்களுடன் குறிப்பாக எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ரெலோ என்பனவற்றடன் தீவிரமாக தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். 1987ல் ஸ்ரீலங்காவுக்கு திரும்பிய பிறகும் தனது கட்சியான ரி.யு.எல்.எப்க்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த அவர் கடுமையாகப் பாடுபட்டார். இருந்தும் எல்.ரீ.ரீ.ஈ யோகேஸ்வரனை 1989லும் அவரது மனைவி சரோஜினியை 1998லும் கொலை செய்தது;

வெற்றிவேலு மற்றும் சரோஜினி யோகேஸ்வரன் ஆகியோரின் துயரமான மரணங்களுக்கு வழிசமைத்த சூழ்நிலை பற்றிய விரிவான விளக்கம் மற்றும் விவாதம் அவசியமாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளின் உண்மையை இனிவரும் கட்டுரைகளில் ஆய்வு செய்வோம்.

- டி.பி.எஸ்.ஜெயராஜ்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல