தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக மாறினார் (1)
பெப்ரவரி 5ல் 80வது பிறந்தநாள்
கடந்த வாரம் காலஞ்சென்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி(ரி.யு.எல்.எப்) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. நீலன் திருச்செல்வம் அவர்களின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தப் பத்தியில் அவருக்கு அஞ்சலி செலுத்தியதை கண்டிருப்பீர்கள். இந்த வாரம் இந்தப் பத்தி, பெப்ரவரி 5ல் தனது 80வது அகவை அடையும் மற்றொரு மறைந்த ரி.யு.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் பற்றி கவனம் செலுத்துகிறது. முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன், 1934 பெப்ரவரி 5ல் பிறந்தார். அவரும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளினால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுடன் சேர்த்து 1989 ஜூலை 13 ல் கொழும்பில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
மகிழ்ச்சியான அணுகுமுறையையும் மலர்ந்த முகத்தையும் கொண்ட விநயமான சுபாவம் உள்ள யோகேஸ்வரன், வடக்கு தொகுதியான யாழ்ப்பாணத்தை 1977 முதல் 1983 வரை பிரதிநிதித்துவம் செய்தார். யோகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் மதிப்பு வாய்ந்த ஒரு மருத்துவராக விளங்கிய மருத்துவ கலாநிதி. சண்முகம் அப்பாகுட்டி வெற்றிவேலு அவர்களினதும், திருமதி பராசக்தி வெற்றிவேலு அவர்களினதும் மகனாவார். நான்கு பெண்களையும் மற்றும் இரண்டு ஆண்களையும் கொண்ட ஆறு பிள்ளைகளில் யோகேஸ்வரனும் ஒருவர். அவர் ஒரு பாடசாலை ஆசிரியையான சரோஜினி என்பவரை மணந்தார், சரோஜினி பின்னாளில் யாழ்ப்பாண நகரின் முதல் பெண் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரும்கூட 1998ல் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யோகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அதே 1977 ம் ஆண்டில் நான் தமிழ் தினசரியான வீரகேசரியில் ஒரு ஊடகவியலாளனாகச் சேர்ந்தேன், அதன் பின்னர் தனிப்பட்ட முறையில் யோகேஸ்வரனுக்கு நான் நன்கு அறிமுகமானேன். சுமுகமாக பழகுபவரும் இதமாகப் பேசுபவருமான அவரிடம் ஆரோக்கியமான ஒரு நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருந்தது. இக்கட்டான வேளைகளிலும் சிரித்த சுபாவத்துடன் இருக்கும் உயர்ந்த வல்லமை அவரிடம் இருந்தது. லண்டனில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த போது பிரித்தானிய பத்திரிகை உலகம் என அழைக்கப்படும் மத்திய லண்டனில் உள்ள பிளீற் வீதியில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் எழுத்தாளர்களுடன் சுயாதீனமாக பழகி வந்தார். இதன் காரணமாக பொதுவாக அவர் ஊடகவியலாளர்கள் மீது அபிமானம் கொண்டு அவர்களுடனான தொடர்புகளை வளர்த்து வந்தார்.
வீரகேசரி
எனது பத்திரிகையாளன் என்கிற தகுதி காரணமாக 1977 முதல் நான் யோகேஸ்வரனுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த போதிலும் அதற்கு நான்கு வருடங்களின் பின்புதான் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம். 1981ல் வீரகேசரியின் யாழ் நிருபராக கடமையாற்றுவதற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்தின்போதுதான், நான் யோகேஸ்வரன் மற்றும் சரோஜினி ஆகியோருடன் மிகவும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினேன். வீரகேசரியின் வழக்கமான யாழ் நிருபராக கடமையாற்றிவந்த திரு.செல்லத்துரை அவர்கள் கடுமையான சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். நீண்ட அனுபவம் வாய்ந்த எழுத்தாளரான செல்லத்துரைக்குப் பதிலாக ஒருவரை மாற்றீடு செய்வது பாரிய சவாலாக இருந்தது, 32 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய அவர், ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழ் உறுப்பினர்கள் மத்தியிலும் ஒரு வாழ்நாள் சாதனையாளராகவே திகழ்ந்தார்.
யோகேஸ்வரன் என்மீது மிகவும் விருப்பம் காட்டியதால் எனது பணி மிகவும் சுலபமாக இருந்தது. அவ்வப்போது யாழ்ப்பாணத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் முன்னேற்றங்களைப்பற்றி அவர் எனக்கு அறிவித்ததோடு, அவற்றை ஆராய்ந்து மற்றும் விரிவுபடுத்தி செய்தி ஆக்கங்களை வெளியிடுவதற்கான பயனுள்ள குறிப்புகளையும் வழங்கி வந்தார். அவற்றில் சில குறிப்புகள் பரபரப்பான ஊகங்களுக்கு வழி ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வாக்குள்ள நிருவாகிகள், மரியாதைக்குரிய தொழிலதிபர்கள், மற்றும் முக்கியமான அரசியல்வாதிகள் எனப் பலரையும் எனக்கு யோகேஸ்வரன் தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து வைத்தார். இவை அனைத்தும் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை பதிவு செய்யும் சவாலான பணியை நிறைவேற்ற எனக்குப் பேருதவியாக இருந்தன.
ரி.யு.எல்.எப் தேர்தல் கூட்டத்தில் ஏற்பட்ட கலகத்தில் இரண்டு காவல்துறையினர் மோசமாக கொல்லப் பட்டதினால் ஒழுங்கு மீறிய காவல்துறையினர் வெகுண்டெழுந்து வன்முறையில் ஈடுபட்ட மே – ஜூன் கலவரங்களுக்குப் பின்னரே எனது பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது அப்போது நடந்த தீ வைக்கும் விரிவான களியாட்டத்தில் கட்டிடங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன, பெறுமதி வாய்ந்த யாழ்ப்பாண பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை வளாகம், யாழ் பிரதான வீதியில் அமைந்திருந்த ரி.யு.எல்.எப் தலைமைக் காரியாலயம் மற்றும் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு மற்றும் வாகனம் என்பனவும் தீக்கிரையாக்கப் பட்டன. யோகேஸ் மற்றும் அவரது மனைவி சரோஜினி ஆகிய இருவரும் தெய்வாதீனமாக அந்தச் சம்பவத்தில் உயிர் தப்பினார்கள்.
இந்தச் சம்பவங்களின் விளைவாக யாழ்ப்பாணம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிற்று. பல்வேறு நாடுகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் என்பனவற்றின் ஊடகவியலாளர்கள் ஒழுங்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யலானார்கள். கிட்டத்தட்ட அவர்கள் அனைவருக்கும் நேர்காணல் நடத்துவதற்கு வசதியாக பாதிக்கப்பட்ட யாழ் பாராளுமன்ற உறுப்பினர், ஒரு நேரடியான தொடர்பு மையமாக விளங்கினார். யோகேஸ்வரன் பதிலுக்கு அந்த எழுத்தாளர்களுக்கு மதிய மற்றும் இராப்போசனங்களை வழங்கி கௌரவித்தார். வழக்கமாக மதிய போசனம் யாழ்ப்பாண விருந்தினர் விடுதியிலும் இராப் போசனம் பாம் கோர்ட் ஹோட்டலிலும் இடம்பெற்று வந்தன.
ஊடகவியலாளர்கள்
அந்த விருந்துகளுக்கும் மற்றும் சந்திப்புகளுக்கும் தனது பாராளுமன்ற Sarojini yogeswaranசகபாடியான கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஆலாலசுந்தரத்தையும் மற்றும் என்னையும் அழைப்பதை யோகேஸ்வரன் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் காரணமாக வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு நான் அதிகம் அறிமுகமாகினேன். அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைப்பதை யோகேஸ்வரன் மிகவும் விரும்பினார். அவர் வீரகேசரியின் யாழ்ப்பாண நிருபர் என்று கூறுவதற்குப் பதில், குறும்பாக “த எக்ஸ்பிரஸ் நியுஸ் பேப்பர் சிலோன் லிமிட்டட்டின் வடபகுதி அலுவலகத்தின் தலைவர்” என்று அறிமுகம் செய்வார். எனக்கு சிறிது சங்கடமாக இருக்கும், இருந்த போதிலும் திருத்தப்பட்ட அந்த பணி விபரம் மற்றும் அதன் விளைவாக கிடைக்கும் முக்கியத்துவம் என்பன எனக்கு மகிழ்ச்சியை தந்தன. அந்த நேரம் மதிப்பு வாய்ந்த பெயர்பெற்ற பல எழுத்தாளர்களையும் நான் நேரடியாகச் சந்தித்தேன்.
நான் யாழ்ப்பாணத்தில் இருந்த அந்த நாட்களில் திருநெல்வேலி அல்லது திண்ணவேலி என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வதும் வழக்கம். நகரின் இதயப் பகுதியில் பருத்தித்துறை வீதியில் இருந்த அவரது வீடு எரிக்கப்பட்டதினால் யோகேஸ்வரன் திருநெல்வேலியின் உட்பகுதிக்குள் இருந்த ஒரு வீட்டுக்கு அப்போது இடம் பெயர்ந்திருந்தார். யோகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாட்களில் சனிக்கிழமை காலைச் சிற்றுண்டி அந்தத் தம்பதியுடன் உண்பது எனக்கு வாடிக்கையாக இருந்தது. சரோஜினி யோகேஸ்வரன் நல்லெண்ணை அல்லது நெய் ஊற்றி தோசை வார்ப்பார். அவர் மிளகாய் அரைத்து நல்ல காரமான சம்பல் தயாரிப்பதுடன் காரமான உருளைக்கிழங்கு சாலட்டும் செய்து தருவார்.
பல வருடங்களுக்குப் பின்பு சரோஜினி யோகேஸ்வரன் எல்.ரீ.ரீ.ஈயினால் கொல்லப்பட்டபொழுது காரசாரமான அந்த உணவுகள் என் நினைவுக்கு வந்தன. 1998ல் சரோஜினி யாழ்ப்பாணத்தில் மாநகரசபை தேர்தல்களில் போடடியிட்டபோது, ரொரான்ரோவிலிருந்து தொலைபேசி மூலமாக நான் அவரை எச்சரித்தேன். எனது அக்கறைக்கு நன்றி தெரிவித்த அவர் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்கு தீங்கிழைக்க மாட்டார் என அவர் நம்பிக்கையுடன் என்னிடம் சொன்னார்.
வெகுளித்தனமும் அப்பாவியுமான சரோஜினி யோகேஸ்வரன், பிரபாகரன் தனக்கு கெடுதல் செய்யமாட்டார், ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் தன்கையால் சமைத்த உணவை அவர் உண்டிருக்கிறார் என்று என்னிடம் சொன்னார்.” அந்த நாட்களில் எனது வீட்டில் வைத்து நான் உங்களுக்கு தோசை தயாரித்து தந்தது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா? அதே போல தம்பிக்கும் பிரபாகரன்) நான் தோசை தயாரித்து கொடுத்திருக்கிறேன்” என அவர் என்னிடம் தமிழில் சொன்னார். மேலும் சரோஜினி ஆயுதம் தாங்கிய காவலர்களை தனக்குப் பதுகாப்பாக வைத்திருப்பது எல்.ரீ.ரீ.ஈ யினை கோபமூட்டி ஆத்திரம் கொள்ள வைக்கும் எனக் கூறி அவர்களைத் தவிர்த்திருந்தார். அவரால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பாதுகாப்பற்ற அணுகுமுறைதான் கொலையாளிகளுக்கு யாழ்ப்பாணத்தின் முதல் பெண் மாநகரத்தலைவியை வெகு எளிதாக கொலை செய்ய முடிந்தது.
மாநகரத் தலைவி
1998 மே 17ல் புதிதாகத் தெரிவான யாழ்ப்பாண மாநகரத் தலைவி, யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைத்துப்பாக்;கி ஏந்திய ஒரு மனிதனால் வெகு அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது நேரம் கிட்டத்தட்ட காலை 10.30. கொலையாளி அவரது மார்பை குறிவைத்து துப்பாக்கியால் ஐந்து தடவைகள் சுட்டுள்ளான். நிற்காமல் இரத்தம் பெருகிய நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சரோஜினி மரணமானார். எல்.ரீ.ரீ.ஈயின் முன்னணி அமைப்புகளில் ஒன்றான சங்கிலியன் படை அந்தக் கொலைக்கான பெறுப்பை ஏற்றிருந்தது.
எனது ஐந்துமாத கால வேலைத் தவணையின் பின்னர், 1981 நவம்பரில் ஆங்கிலப் பத்திரிகையான த ஐலன்ட்டில் சேருவதற்காக நான் கொழும்புக்குத் திரும்பினேன். நான் ஆங்கில ஊடகத்துறையில் நுழைவதையிட்டு யோகேஸ்வரன் மற்றும் சரோஜினி ஆகிய இருவருமே மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். யோகேஸ் தொடர்ந்தும் ஒரு நண்பராகவும் மற்றும் பத்திரிகைக்கு செய்தி வழங்குபவராகவும் என்னுடன் இணைந்திருந்தார். நான் அவரை நேரடியாக பாராளுமன்றத்தில் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியான சிராவஸ்தியில் வைத்து சந்திப்பேன். நாங்கள் அடிக்கடி சேர்ந்து உணவு உண்போம். அவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசுவார். யோகேஸ்வரன் இரவு படுக்கப் போகும் முன் சூடான பானம் ஒன்றை அருந்துவதை பழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வழக்கமாக அதை உறிஞ்சியபடியே என்னுடன் பேசிவிட்டு பின் படுக்கைக்குச் செல்வார். ஐலன்ட்டின் ஆசிரியத் தலையங்கத்தை எழுதுவதற்காக நான் இரவில் வெகுநேரம் வரை வேலை செய்வதுண்டு;
1983 ஜூலை கலவரங்களுக்கப் பின்னர் யோகேஸ்வரன் இந்தியாவுக்கு குடிபெயர்;ந்த பிறகும் நான் அவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்தேன். பிரிவினை வாதத்துக்கு மறப்பு தெரிவிக்கும் ஆறாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்ததால் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பாராளுமன்றத்தில் தங்கள் ஆசனங்களை இழந்தார்கள். சென்னை கீழ்ப்பக்கத்திலுள்ள அவரது விட்டில் வைத்து அவரை நான் சந்தித்து யோகேஸ் மற்றும் சரோஜினி ஆகியோரின் சகவாசத்தை மிகவும் அனுபவித்தேன். அவர் கொழும்பில், பம்பலப்பட்டியிலுள்ள கொத்தலாவல டெரசில்; 1987 மற்றும் 88ல் தங்கியிருந்தபோதும் யோகேஸ்வரனை நான் சந்தித்துள்ளேன். ஸ்ரீலங்காவை விட்டு அமெரிக்கா சென்ற போதும் இடைக்கிடை நான் தொலைபேசியில் அவருடன் உரையாடுவதுண்டு, குறிப்பாக, 1989ன் ஆரம்பங்களில்; தேர்தல் பிரச்சார நேரத்தில். ஜூன் 1989ல் நான் கனடாவுக்கு சென்ற பின்னர் என்னால் அவருடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதே வருடம் ஜூலை மாதம் அவர் கொலை செய்யப்பட்டார். தமிழர் பிரச்சினைகளுக்காக தன்னை உறுதியாக அர்ப்பணித்துக் கொண்ட அவர் ஒரு மகிழ்ச்சி நிறைந்த குணமுள்ள மனிதர். அவரது ஏனைய ரி.யு.எல்.எப் சகாக்களைப் போல் அல்லாது, தமிழர்களுக்கு ஒரு தனி நாடு தேவை என்பதில் யோகேஸ்வரன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். உண்மையில் அப்படியான ஒரு மனிதரை துரோகி எனப் பழி சுமத்தி எல்.ரீ.ரீ.ஈ மிக அருகில் வைத்து சுட்டு வீழ்த்தியது ஒரு சோகமான வஞ்சனை,அது துரோகம் நிறைந்த ஒரு கொடிய செயல். அவரது 80வது பிறந்த தின நிகழ்வின்போது அவரது அரசியல் வாழ்க்கையை சுருக்கமாகப் பதிவு செய்வதின் மூலம் அவரை நினைவு கூர விரும்புகிறேன்.
- டி.பி.எஸ்.ஜெயராஜ்
(தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக