வியாழன், 6 பிப்ரவரி, 2014

அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா?

புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய சாத்திரியை நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம் பாகமாக பதியவுள்ளேன். முதலாம் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை பதிவு செய்கிறேன்.


மூன்றாம் பாகம் மிக விரைவில் பதிவு செய்யப்படும். மூன்று தசாப்த காலமாக போராடிய ஈழத் தமிழர் இனம் தமது தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்தப் பேட்டி என்னால் எடுக்கப்பட்டது. இந்தப் பேட்டி உங்களிற்கு ஈழப் போராட்டம் சம்பந்தமான இன்னொரு முகத்தை பதிவு செய்யும். உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள் தயவு செய்து தொடர்ந்து படிக்க வேண்டாம்.

அன்புடன்,

அருளினியன்.

அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா?

ஆம் வெளியேறினார்கள். இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடையான சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடங்கி, ஆரம்ப இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் தாய்லாந்தில் நடைபெற்றது. தாய்லாந்தில் நடந்த இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தையின் போதே, மேலதிகமாக புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும். மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தளபதி கருணாவும் புலிகளின் பேச்சு வார்த்தை குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

மூன்றாவது சுற்றுப் பேச்சு வார்த்தை நோர்வே ‘ராடிசன்’ விடுதியில் நடைபெற்றிருந்தது. அங்கு புலிகள் இலங்கை அரசாங்கம் இடையான பேச்சு வார்த்தைக்கு ஆதரவும் அனுசரணையும் கொடுத்த சுமார் 30 நாடுகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இங்கு வைத்துத்தான் சர்வதேச நாடுகளின் பிரதி நிதிகள் அன்ரன் பாலசிங்கத்திடம் தனி நாட்டுக் கோரிக்கையை தவிர்த்து, தமிழர்கள் சுதந்திரமாகவும் சமாதானத்தோடும் வாழும் வகையிலான ஏனைய தீர்வுகளை புலிகள் தரப்பிலிருந்து முன்மொழியும்படியும் அதனை தாம் பரிசீலிப்பதாகவும், ஆனால் தனி நாட்டுக் கோரிக்கையை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக கூறி விட்டார்கள்.

சர்வதேசத்தின் பொறியில் மாட்டாமல் அதே நேரம் ஸ்ரீ லங்கா அரசிடம்
ஏமாந்து போகாமல் இருப்பதற்காக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சமயோசிதமாக புலிகள் சுயநிர்ணய உரிமையை பரிசீலிக்கத் தயார் என்றும் அதில் உள்ளக சுய நிர்ணயம், வெளியக சுய நிர்ணயம் என இரண்டு வகையுண்டு எனவும் இந்த இரண்டு வகையில் தமிழர்களிற்கு எது சாதகமானதோ அதனை தாம் பரிசீலிக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

இதனைக் கேட்ட இலங்கை அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகளிற்கு குழப்பம் ஏற்பட்டது.

அன்றைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா ‘சுய நிர்ணயத்தில் உள்ளகம், வெளியகம் என்று எதுவும் இல்லை இப்போதுதான் இதைப்பற்றி நான் கேள்விப்படுகிறேன்” என்று அறிக்கையும் விட்டார். உண்மையில் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்ட ‘ உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்பது பிராந்திய சுயாட்சியை வழங்குகிறது. வெளியக சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. வரையறுத்த அம்சங்களை வழங்குகிறது.

ஆனால் அன்ரன் பாலசிங்கத்துடன் புலிகள் சார்பாக பேச்சு வார்த்தையிலில் கலந்து கொண்ட தமிழ்ச்செல்வன் உடனேயே பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு “பாலசிங்கத்தார் தமிழீழக் கொள்கையை கை விட்டு விட்டார்” என்று போட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல், அன்று மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ‘சுயநிர்ணயம்’ என்பது பாலசிங்கம் அவர்களின் சொந்தக் கருத்தேயன்றி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கருத்து அல்ல என்றும் அறிக்கையும் விட்டிருந்தார்.

அதற்கடுத்ததாக மீண்டும் தாய்லாந்தில் நடந்த நான்காவது பேச்சு வார்தையிலும், ஜந்தாவதாக ஜேர்மன் பேர்லினில் நடந்த பேச்சு வார்த்தையிலும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஓரம் கட்டப்பட்டது மட்டுமல்லாது, அந்தப் பேச்சு வார்த்தை முடிந்ததும் வன்னிக்கு அழைக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்கும் பிரபாகரனிற்கும் இடையே பேச்சு வார்த்தைகள் தொடர்பாக நடந்த கடும் விவாதங்கள் நடைபெற்றது.

பின்னர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இலண்டன் திரும்பியிருந்தார். இதன் தொடர்ச்சியாக அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நிலை காரணமாக அவர் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகிவிட்டாரெனவும், அவரது பொறுப்பினை தமிழ்ச்செல்வன் ஏற்பார் எனவும் புலிகளின் உத்தியோக பூர்வமாக அறிவித்தனர்.

அதாவது அன்டன் பாலசிங்கம் பேச்சுவார்த்தைகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார் எனக் கூறுகிறீர்களா? 

அன்ரன் பாலசிங்கம் பலவந்தமாகத்தான் வெளியேற்றப்பட்டார். பேச்சு வார்த்தைகளின் போக்கை கவனித்தபடியே இருந்தவர் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பல தடைவை காப்பாற்றிய தன்னால் இந்தத் தடைவை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என தனது இறுதிக் காலங்களில் பலரிடம் சொல்லி கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.
நாதன்


நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப்படுத்தியது யார்?

புலிகளின் அனைத்துலக செயலகப் பிரிவு பொறுப்பாளராகவும் பிரான்ஸ் பொறுப்பாளராகவும் இருந்த லோறன்ஸ் திலகரே நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப் படுத்தினார். ஆனால் இந்தக் கொலைகளை பல கோணத்தில் ஆராய்ந்த பிரெஞ்சு காவல் துறை புலிகளே இதனை செய்தார்கள் என்று தீர்மானித்து அவர்களை நோக்கி விசாரணைகளைத் திருப்பினர்.
கைதாவதில் இருந்து தப்பிக்கும் முகமாக லோறன்ஸ் திலகர் வன்னிக்கு தப்பிச் சென்றார். நாதன், கஜன் கொலையை நன்கு திட்டமிடாமல் சொதப்பியதற்காக தலைமையால் திலகரின் பதவி நிலைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சிலகாலம் சிறைவைக்கப்பட்டிருந்தார். வன்னி சென்றிருந்த திலகரின் தொடர்புகள் ஏதும் கிடைக்காததால், பிரான்சில் வாழ்ந்து வந்த அவரின் மனைவி அவரின் உறவினர்களிடம் தமிழ்நாட்டிற்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் திலகர் இப்போது எங்கே?

இறுதியுத்தம் வரை புலிகளுடன் இருந்த இவர் இறுதி யுத்தத்தில் இறந்து போய் விட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை.


சபாலிங்கத்தின் கொலையை வழிப்படுத்தியது யார்? சபாலிங்கத்தை கொலை செய்யும் கட்டளை தலைமையிடம் இருந்து வந்ததா?

சபாலிங்கத்தை கொல்லும் கட்டளை தலைமையிடமிருந்தே வந்ததாகத்தான் அறிகிறேன். காரணம் சபாலிங்கமும் ஈழபோராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். தமிழ் மாணவர் பேரவையில் இருந்தவர் ஆரம்ப காலத்தில் பிரபாகரனிற்கும் நெருக்கமாக இருந்ததோடு அவரது தலைமறைவு வாழ்க்கை காலத்தில் பரந்தன் உப்பள பகுதியில் பிரபாகரன் மறைந்திருக்க உதவியவர்.

இவர் பின்னர் பிரான்சிற்கு இடம்பெயர்ந்த பின்னர் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் பற்றி ஒரு ஆவணப் படம் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆவணப்படம் வெளியானால் பிரபாகரனின் பெயரிற்கு களங்கம் ஏற்படும் என்பதாலேயே சபாலிங்கத்தை கொலை செய்யும் படி பிரபாகரன் உத்தரவிட்டதாக அறிய முடிகின்றது. இந்த விடயத்தை விபரமாக தாராகி சிவராம் அவர்களே தாயகம் பத்திரிகையில் முன்பு எழுதியிருந்தார். அதனை இனியொரு டொட்.கொம் சபாநாவலன் மீள் பிரசுரம் செய்துள்ளார்.

பிரான்சில் புலிகளின் பொறுப்பாளராக இருந்த பரிதி என்கிற றேகனைக் கொன்றது யார்?

பிரான்சில் புலிகளின் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்த பரிதி (றேகன்) கொலை பற்றி நான் ஏற்கனவே கனடாவிலிருந்து வெளியாகும் பூபாளம் பத்திரிகையில் பங்கு பிரிப்பும் படுகொலையும் என்றொரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தேன், அது இன்னமும் எனது வலைப் பக்கத்தில் உள்ளது. புலிகளின் அழிவிற்கு பின்னர் வெளிநாடுகளில் உள்ள அவர்களது பல மில்லியன் டாலர் பெறுமானமுள்ள சொத்துக்களை யார் எப்படி பிரிப்பது என்பதில் பெரிய போட்டிகளும், அந்தச் சொத்துக்களுக்காக சண்டைகளும் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

அப்படியொரு போட்டியில் ஒரு குழுவினரால் கூலிக்கு அமர்த்தப் பட்டவர்களால் பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார். இவரது கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டிந்தனர். ஆனால் பிரான்சில் இது போன்ற வந்தேறு குடிகளான வெளிநாட்டவர்களின் குழு மோதல்களையும் அதனால் நடக்கும் கொலைகளையும் பற்றி பிரெஞ்சு காவல்துறையினர் அதிகளவு அக்கறை கொள்வதில்லை, கொன்றவனும் வெளிநாட்டவன் செத்தவனும் வெளிநாட்டவன் என்பதால் அவர்கள் அதைக் கணக்கெடுப்பதில்லை. அதே நேரம் தங்கள் நாட்டிற்கோ தங்கள் மக்களிற்கோ பாதுகாப்பு பிரச்சனை என்று வரும்போது பிரெஞ்சு காவல்துறையினரின் நடவடிக்கைகள் இறுக்கமாக இருக்கும். எனவே பரிதி கொலையில் கைதானவர்களும் சத்தமின்றி விடுதலை செய்யப் பட்டு விட்டனர்.
பரிதி
பரிதியை கொன்ற குழு எது?

பரிதியால் வளர்க்கப்பட்ட வன்முறைக்குழுவான ‘பாம்பு குறூப்’ எனப்படும் குழுவில் இயங்கியவர்களே பரிதியைக் கொன்றார்கள்.

பரிதி வன்முறை குழுவை வளர்த்தாரா? விபரமாக அதைப்பற்றி கூற முடியுமா?

பரிதி மட்டுமல்ல வெளிநாடுகளில் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர்கள் அனைவருமே காலங் காலமாக தங்களிற்கென ஒரு வன்முறை குழுவை தங்களிற்கு கீழே இயக்கியபடிதான் இருந்தார்கள். அதில் பெரும்பாலும் புலிகள் அமைப்பில் இருந்து விலகி வெளிநாடு வந்துசேர்ந்தவர்களும், நிரந்தர வதிவிட உரிமையற்ற, அல்லது வேலையற்ற பல இளைஞர்களும் இருந்தார்கள்.

புலிகளிற்கு பணம் கொடுக்க மறுப்பவர்கள், புலிகளிற்கு எதிராக கருத்து வைப்பவர்களை, எழுதுபவர்களை மிரட்டுவது, அடிப்பதுதான் இவர்களதுவேலை. ஜரோப்பாவில் இப்படியான மிரட்டுதல், அடித்தல் போன்ற வன்முறை கலாச்சாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்களில் சுவிஸ் பொறுப்பாளராக இருந்த முரளியும் பிரான்ஸில் சுக்குளா என்பவரும் மிக முக்கியமானவர்களாவார்கள்.

‘சுக்குளா’ பற்றி விபரமாக சொல்ல முடியுமா?

தற்சமயம் பிரான்சின் புறநகர் பகுதியில் வசிக்கும் இவர் புலிகள் அமைப்பில் வடமராச்சி பகுதியில் உள்ள நெல்லியடி மற்றும் கரவெட்டி பகுதிகளிற்கு பொறுப்பாளராக இருந்தவர். இந்திய ராணுவ காலத்தில் அன்ரன்பாலசிங்கம் அவர்களும் அவரது மனைவி அடேலும் இவரது பாதுகாப்பில்தான் இருந்தார்கள். இவர் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டதும் புலிகளின் ஏராளமான ஆயுதங்களை காட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல், அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவிடத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டிருந்தார்.
இவரது தகவலை வைத்து அன்ரன் பாலசிங்கமும் அவரது மனையும் இருந்த மறைவிடத்தை இந்திய இராணுவம் சுற்றி வளைத்திருந்தனர். ஆனால் பொது மக்களின் உதவியால் அன்று அவர்கள் தப்பி விட்டிருந்தார்கள். அதன் பின்னர் நெல்லியடிசந்தியில் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து தலையாட்டியாக இருந்து புலி ஆதரவாளர்கள் பலரையும் காட்டிக் கொடுத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த புலிகளின தலைமை அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

சுக்குளாவை கொல்வதற்காக அன்று அந்தப் பகுதிகளில் இயங்கிய புலிகள் பல தடைவை குறிவைத்தார்கள், ஆனால் சுக்குளா தப்பிவிட்டார். பின்னர் இவர் காங்கேசன்துறை முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தார். இந்திய இராணுவம் இவரை விடுதலை செய்தபோது தனக்கு புலிகளால் உயிருக்கு ஆபத்து எனவே தன்னை கொழும்பில் கொண்டு போய் விடும்படி கோரிக்கை வைத்ததையடுத்து இந்திய இராணுவம் இவரை தங்கள் விமானத்தில் கொண்டு வந்து கொழும்பில் இறக்கி விட்டிருந்தார்கள்.

அங்கிருந்து வெளிநாடு வந்து சேர்ந்தவர் புலிகளிற்கு பயந்து அடங்கி இருந்தார். பின்னர் யாழ் மாவட்ட தளபதியக இருந்த கிட்டு ஜரோப்பா வந்திருந்த சமயம் இவரை தேடி கண்டு பிடித்து தலைமையிடம் கதைத்து இவருக்கு மன்னிப்பும் வழங்கியதோடு மீண்டும் வெளிநாடுகளில் இயக்கத்திற்கு வேலை செய்யும் பொறுப்பையும் கொடுத்திருந்தார்.

தலைமையால் மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு கிட்டு அவரைத் வலிந்து தேடிப்பிடித்து தலைமையிடம் மன்னிப்பு வாங்கிக் கொடுத்து அவரை மீண்டும் இயக்கத்திற்கு வேலை செய்யவைக்க வேண்டிய தேவை என்னவாக இருக்கும்?

சுக்குளாவும் கிட்டுவும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள். அதே நேரம் அவர்களது ஆழமான நட்பிற்கு பின்னரான ஒரு கதையும் உண்டு. 1986 ம் ஆண்டு ரொலே இயக்கம் புலிகளால் அழிக்கப் பட்டதை கண்டித்து யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதே நேரம் யாழ் பல்கலைக் கழகத்தில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்யக்கூடாது என்றொரு சட்டத்தை புலிகள் அறிவித்திருந்தார்கள்.

ஆனாலும் சில மாணவர்கள் புதிதாக இணைந்த மாணவிகளை பகிடி வதை செய்திருந்தார்கள். அதற்காக பல மாணவர்கள் கிட்டுவால் தண்டனை பெற்றிருந்தனர். அப்படி தண்டனை பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார். இது யாழ்குடா நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாக இருந்தது.

ஆரம்பத்தில் இந்தக் கடத்தலை ஈ.பி.ஆர்.எல்.எவ்.இயக்கமே செய்ததாக புலிகளால் பரப்புரை செய்யப் பட்டது. ஆனாலும் புலிகளே கடத்தியதாக மாணவர்கள் நம்பினார்கள். அந்தக் கடத்தலை கிட்டுவின் உத்தரவின் பெயரில் நடத்தியவர்களில் சுக்குளாவும், தெல்லிப்பளை பிரதேச பொறுப்பாளராக இருந்த மதி என்பவரும் முக்கியமானவர்கள்.

விஜிதரன் பின்னர் புலிகளால் கொல்லப்பட்டுவிட்டார். அந்த மாணவர் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே ரயாகரனும் புலிகளால் கடத்தப்பட்டிருந்தார்.ஆனால் பல்கலைக் கழகத்தில் பல மாணவர்கள் போராட்டங்களை நடத்தியிருந்தாலும், விஜிதரன் கடத்தப் பட்டு கொல்லப் பட்டதற்கு ஒரே காரணம் அவர் பகிடிவதை செய்த பெண் கிட்டுவின் காதலியாக இருந்தார் என்பதேயாகும். அது எவருக்குமே தெரிந்திராத விடயம் இதற்கு கைமாறாகவே கிட்டு சுக்குளாவிற்கு மன்னிப்பு வாங்கி கொடுத்திருந்தார்.

வெளிநாடுகளில் மாற்றுக் கருத்தாளர்களை கொலை செய்வது அல்லது மிரட்டுவது அந்தந்த நாடுகளில் புலிகள் இயக்கம் மேல் மிகப்பெரிய கெட்ட பெயரை வாங்கித்தரும் என்ற அடிப்படைப் புரிந்துணர்வு புலிகளிடம் இருந்திருக்கவில்லையா?

இல்லையென்றுதான சொல்லவேண்டும். காரணம் இது போன்ற செயற்பாடுகளால் புலிகளிற்கு வெளிநாடுகளில் கெட்ட பெயரும் அவர்களின் செயற்பாடுகளிற்கு தடைகளும் வரும் என பல தடைவை வெளிநாட்டு சட்ட திட்டங்களை அறிந்த வெளிநாடுகளில் பல வருடங்கள் வாழ்ந்த புலிகளிற்கு ஆதரவாக வேலை செய்த பலராலும் வெளிநாடுகளில் இரகசியமாக வேலை செய்த என்னைப் போன்றவர்களாலும் தலைமைக்கு அடிக்கடி தெரியப் படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தலைமையால் இவற்றை கட்டுப் படுத்த முடியாமல் போயிருந்தது. அல்லது கட்டுப்படுத்தும் அக்கறையின்றி விடப்பட்டிருந்தது என்றுதான் சொல்லலாம். இந்த செயற்பாடுகளின் தொடர்ச்சியே வெளிநாடுகளில் புலிகள் மீதான தடைகள் வரக் காரணமாகும்.

வெளிநாடுகளில் இப்படியாக எத்தனை பேரை கொலை செய்திருப்பார்கள் புலிகள்?

இயக்கத்தில் என்னுடைய வேலைகள் தனியானவை என்பதால் புலிகள் இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் பிரான்சில் வசிப்பதால் இங்கு நடந்த விடயங்களின் தகவல்கள் மட்டுமே பெரும்பாலும் தெரியும்.

வெளிநாடுகளில் புலிகள் செய்யும் கொலைகள் தலைமையின் அனுமதியுடன் தான் நடந்ததா?

பொதுவாகவே புலிகளினால் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் தலைமையின் அனுமதி அல்லது கட்டளைக்கிணங்கவே நடைபெறும். தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக ஒருவர் ஒரு நடவடிக்கையை செய்திருந்தால் கட்டாயம் தலைமையால் அவரிற்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கும். அதுவும் வெளிநாடுகளில் நடந்த விடயங்கள் நிச்சயமாக தலைமையின் அனுமதியின்றி நடந்திருக்க முடியாது.

விடுதலைப் புலிகள் புலம் பெயர் நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி, அவர்களை கடத்தி, கப்பமாக பணம் பெற்று வந்தனர் என்பது உண்மையா?

ஜரோப்பாவில் ஒருவரை கடத்தி வைத்திருந்து பணம்பெற முடியாது. ஏனெனில் காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் பணம் கொடுக்க மறுத்தவர்களை திடீரென கடத்திக்கொண்டு போய் தாக்கி விட்டு வீதியில் போட்டு விட்டு போயிருக்கிறார்கள்.

ஆனால் யாராவது பணம் கொடுக்காவிட்டால் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள அவரது உறவினர்களை கடத்துவோம், கொலை செய்வோம் என அச்சுறுத்தி பணம் பெற்ற நிகழ்வுகள் பல நடந்தது. அது பல நாடுகளிலும் வழக்குகளாக பதிவாகியும் இருக்கின்றது. இதனால் சம்பந்தப் பட்டவர்கள் கைதாகி தண்டனை பெற்றும் உள்ளனர். இதில் இயக்கத்திற்கு நிதி கேட்டு என்னையே ஒருவர் பாரிசில் மிரட்டிய நகைச்சுவையான விடயம் கூட நடந்தது.

தொடரும்..

“சாத்திரி” (புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவர்) பேசுகிறேன் – (பாகம்:1)

 நாட்டுநடப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல