image source: google
மூன்று நாட்கள் நீடித்த மௌ னத்தின் பின்னர் மீண்டும் காஸாவில் படாரென்ற வெடிப்புச் சத்தம் கேட்டது. இம்முறை பத்து வயது பாலகன் பலியானான். மீண்டும் மரண ஓலம் கேட்கத் தொடங்கியது. சில மணித்தியாலங்களில் காஸாவில் இருந்து டெல்-அவிவ் நோக்கி ரொக்கட்டுக்கள் பறந்தன. இஸ்ரேலிய மண்ணாக வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து காஸாவை நோக்கி ஏவுகணைகள் விரைந்தன. ஆளில்லா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மீண்டும் மனித அவலங்கள். சமூக வலைத்தளங்களில் இரத்தச் சொட்டக் கிடக்கும் பச்சிளம் பாலகர்களின் படங்கள் வெளியாகி பார்ப்பவர்களின் மனங்களை அதிரச் செய்தன. பிரதான ஊடகங்கள் கிரிக்கெட் ஸ்கோரைப் போல மரணங்களின் எண்ணிக்கையை அப்டேட் செய்தன. உலகத் தலைவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டு தமது பொறுப்பை நிறைவேற்றினார்கள். வழமை போல காஸாவின் எல்லைப்புறங்களில் இஸ்ரேலிய துருப்புக்கள் குவிக்கப்பட்டன. எகிப்திய இராஜதந்திரிகள் கெய்ரோ நகரில் இஸ்ரேலிய– பலஸ்தீன பிரதிநிதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ஓடியோடி களைத்துப் போனார்கள். காஸா மக்கள் மீண்டும் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக பதுங்கு குழிகளுக்குள் ஓடி மறையத் தொடங்கினார்கள். சக்கரம் சுழன்றது. அதற்கு ஓய்வில்லை என்ற யதார்த்தம், சடாரென்று அறைந்தாற்போல உலக சமுதாயத்தின் கன்னத்தைப் பதம் பார்த்தது.இருபுறங்கள் இஸ்ரேலிய படைகள் இட்ட வேலிகளாலும், மறுபுறத்தில் எகிப்துடனான எல்லையாலும், இன்னொரு புறத்தில் மத்திய தரைக்கடலாலும் அடைக்கப்பட்ட குறுகிய நிலப்பரப்பு. எவ்வளவு குறுகியது என்றால், அதன் மொத்த பரப்பளவும் 360 சதுர கிலோமீற்றரைத் தாண்டவில்லை. அதற்குள் 18 இலட்சத்திற்கும் மேலான மக்கள். தமக்குரிய குறைந்தபட்ச உரிமைகளையும் அனுபவிக்க முடியாமல் தேசமற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலையின் கைதிகளாக அல்லற்படும் பலஸ்தீன மக்கள். விடுதலை வேட்கையுள்ள தேசிய இனமாக உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டத்தை மறந்து, ஏதோவொரு சத்தம் கேட்கும் போதெல்லாம் ஜந்துகளைப் போன்று பதுங்குகுழிகளில் மறைந்து கொண்டு உயிரைப் பாதுகாக்க வேண்டிய போராட்டமே அவர்களின் அன்றாட வாழ்க்கையாக மாறியிருக்கிறது. வேலி தாண்டி வரும் சொற்ப உணவில் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு, கனவுகளுக்கு பதிலாக அச்சங்களை மாத்திரம் சுமந்து வாழும் அவலம் அவர்களின் எழுதாத உடைமையாக்கப்பட்டுள்ளது. வரலாறு நெடுகிலும் இழைக்கப்பட்ட தவறுகளால் சொந்த மண்ணையும் சுயநிர்ணய உரிமைகளையும் இழந்து, நாளை நாம் இருப்போமா என்ற கேள்வியுடன் வாழும் மக்களின் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள், எத்தனை அநீதிகள்!
அன்று யூதர்களின் தேசத்திற்காக பலஸ்தீன மண்ணைக் கூறுபோட்டு, மேற்குக் கரையாகவும் காஸா நிலப்பரப்பாகவும் பிரித்த பெருமை ஐக்கிய நாடுகள் சபையைச் சாரும். அவ்விரு நிலப்பரப்புகளுக்கு இடையிலான நிலத்தொடர்புகளைத் துண்டித்து, அரசியல் ரீதியாகவும் பிளவுபடுத்திய பெருமை அமெரிக்காவின் உதவியுடன் செயற்பட்ட இஸ்ரேலியத் தலைவர்களைச் சாரும். மேற்குக் கரையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர்களால் யூதக் குடியிருப்புகளுக்கு மத்தியில் அகதிகள் போல வாழும் பலஸ்தீனர்களின் தயவு மேற்குலகின் ஆதரவைப் பெற்ற பத்தா இயக்கம் தலைமையிலான பலஸ்தீன அதிகாரசபை தான். காஸா நிலப்பரப்பில் வாழும் மக்களின் தயவு, மேற்குலக சமூகத்தால் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்ட ஹமாஸ் இயக்கம் தான். இவ்விரு அமைப்புக்கள் அரசியல் பகையாளிகளாக மாறி ஒன்றுடன் ஒன்று முறைத்துக் கொண்டிருக்கும் சமயங்களில் வாளாதிருக்கும் இஸ்ரேலிய சார்புடைய மேற்குலக சமூகம், இவ்விரு அமைப்புக்களும் கைகோர்த்துக் கொண்ட சமயங்களில் சங்கடத்துடன் நெளிவது வரலாற்று ரீதியான உண்மை. இத்தகைய சமயங்களில் இஸ்ரேலியப் படைகள் மூலம் காஸா மண் முற்றுகையிடப்படுவதை காணலாம். இந்த முற்றுகைகளின் விளைவாக பலஸ்தீனர்கள் வாழும் மண்ணின் அளவு சுருங்கி விடும். அந்த மக்கள் மென்மேலும் பலவீனப்படுத்தப்படுவார்கள். 2008ஆம் ஆண்டு 'ஒப்பரேஷன் காஸ்ட் லீட்' என்ற பெயரில் ஆரம்பித்த இஸ்ரேலிய முற்றுகையிலும் இது தான் நடந்தது. கடந்த ஜூலை மாத நடுப்பகுதியில் ஆரம்பித்து இன்று வரை தொடரும் 'ப்ரொட்டெக்டிவ் எட்ஜ்' என்ற முற்றுகையில் நடப்பதும் இதுதான். இந்த நியாயமற்ற முற்றுகைகள் குறித்த வேள்விகள் வழமையானவை, பதில்கள் வெளிப்படையானவை.
ஏன் ஆரம்பித்தது இந்த முற்றுகை?
இளைஞர்கள் மூவரின் மரணத்தைக் காட்டி காஸா மீதான போரை இஸ்ரேலிய அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. இந்த இஸ்ரேலிய இளைஞர்களை ஹமாஸ் இயக்கம் தான் கடத்திச் சென்று படுகொலை செய்ததாக இஸ்ரேலியத் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இன்று வரை ஹமாஸ் இயக்கம் தான் படுகொலைகளைப் புரிந்தது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் இல்லை. இந்த நிலையில், காஸா முற்றுகையை நியாயப்படுத்துவதற்காக ஹமாஸின் கைக்கூலிகள் தான் இஸ்ரேலிய இளைஞர்களைக் கொன்றிருப்பதாகத் தெரிகிறது என்று இஸ்ரேலின் தரப்பில் கூறப்படுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அமெரிக்கா ஆரம்பித்த சமாதான முயற்சிகள் தோல்வியடைந்து, ஹமாஸும் பத்தாவும் ஐக்கிய அரசாங்கத்தை அமைத்த தருணத்தில் இஸ்ரேலின் முற்றுகை ஆரம்பிக்கப்பட்டது தான்.
இஸ்ரேலின் இலக்கு ஹமாஸ் தானா?
இஸ்ரேலிய இளைஞர்களது மரணத்தின் தொடர் விளைவாக பலஸ்தீன இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து காஸா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேலிய மண் மீது ரொக்கட்டுகள் ஏவப்பட்டதும் உண்மையே. ரொக்கட்டுக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக இஸ்ரேல் ஆரம்பித்த இராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் இயக்கத்தின் நிலைகள் இலக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால். இன்று வரை பலியான சுமார் இரண்டாயிரம் பலஸ்தீனர்களில் 1,400 இற்கு மேற்பட்டவர்கள் அப்பாவிப் பொதுமக்கள். அவர்களில் பச்சிளம் பாலகர்களும் உண்டு. தள்ளாடும் முதியவர்களும் உண்டு. தமது சிசுவை இயற்கையாக பிரசவிப்பதற்கு முன்னர் ஏவுகணைத் தாக்குலில் பலியான கர்ப்பணிப் பெண்ணொருவரும் இருக்கிறார். இது தவிர, இஸ்ரேலின் ஏவுகணைகள் ஹமாஸ் இயக்கத்தின் ரொக்கட் ஏவுதளங்களை மாத்திரம் இலக்கு வைக்கவில்லை. அவற்றில் ஆஸ்பத்திரிகளும் இருந்தன. அகதி முகாம்களும் இருந்தன. இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த ஐ.நா. பாடசாலைகளும் இருந்தன. இவற்றின் மீது வேண்டுமென்றே இஸ்ரேலியப் படைகள் தாக்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புக்கள் கூறுகின்றன. இது பற்றி சர்வதேச விசாரணை வேண்டுமென சர்வதேச பொதுமன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்திருப்பதை குறிப்பிடலாம்.
இன்னொரு பக்கத்தில் மோதல் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் இஸ்ரேலியப் படைகள் காஸா மண்ணை இன்னும் கொஞ்சம் விழுங்கியிருக்கின்றன. கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிய கதைபோல காஸாவின் அளவு மேலும் சுருங்கியிருக்கிறது. அங்கு வாழும் மக்களில் 30 சதவீதமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். ஒரு சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் 1,500 பேர் வரை வாழும் நிலைமையில், இஸ்ரேலியப் படைகள் ஏவும் ரொக்கட்டுகளுக்கும், ஏவுகணைகளுக்கும் இவர் ஹமாஸ் அங்கத்தவர், இவர் சிவிலியன் என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் இருக்குமா? அந்த ஏவுகணையின் இலக்கு காஸாவில் வாழும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கையை ஒவ்வொன்றாகக் குறைப்பது என்றால், அதுவொரு இனச்சுத்திகரிப்பு தானே?
முற்றுகையின் விளைவு – தீர்க்க முடியாத பிளவு
இன்று இஸ்ரேலின் முற்றுகை ஒரு புறத்தில் ஒட்டுமொத்த காஸா மண்ணையும் சுடுகாடாக மாற்றியிருக்கிறது என்றால், அதன் எதிர்விளைவுகள் இஸ்ரேலியர்களையும் பலஸ்தீனர்களையும் சேர முடியாத தூரத்திற்குள் தள்ளி வைத்திருக்கின்றன. இஸ்ரேலிய – பலஸ்தீன நெருக்கடிக்காக முன்மொழியப்படும் தீர்வுகளில் இஸ்ரேல், பலஸ்தீனம் என்ற இரு தேசங்கள் அருகருகே இருக்கக்கூடிய தீர்வுத் திட்டம் முக்கியமானது. இன்று தம்மீது இஸ்ரேலியப் படைகள் கட்டவிழ்த்து விடும் கொடுமைகள் காரணமாக, யூதர்களை முற்று முழுதாக இல்லாதொழித்து விட வேண்டும் என்ற எண்ணம் பலஸ்தீன மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது. இஸ்ரேலிய மக்கள் மத்தியிலும் தேசியவாத சிந்தனைகள் தலைதூக்கியிருக்கின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், 80 சதவீதத்திற்கு மேற்பட்ட இஸ்ரேலிகள் காஸா மீதான தீவிர நடவடிக்கையை ஆதரிக்கிறர்கள் என்பது தெரியவந்துள்ளது. இஸ்ரேலிய, பலஸ்தீன மக்களின் தேசியவாத சிந்தனை அலையில் இருந்து இருதரப்பு தலைவர்களும் தப்ப முடியாது என்பதால். பேச்சுவார்த்தை மேசையில் சமரசங்களுக்கு இடமில்லாமல் போயிருக்கின்றன.
இது தவிர, காஸா முற்றுகையின் விளைவுகள் கடல் கடந்த தேசங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றன. பல நாடுகளில் அரேபிய முஸ்லிம்களால் இஸ்ரேலிய சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். ஐரோப்பிய மண்ணில் யூதர்களின் வணக்கஸ்தலங்கள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த வன்முறைகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடிய அளவிற்கு தீவிர பிரச்சினையாக மாறியிருக்கிறது. இவை போர் நிறுத்த முயற்சிகளில் சர்வதேச சமூகத்திற்குள் வகிபாகத்தின் மீதும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன.
போரும் போர் நிறுத்தங்களும்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அடங்கலாக பல தரப்பினரும் போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டார்கள். இஸ்ரேலின் முற்றுகை ஆரம்பித்த தினம் தொடக்கம் ஏழு தற்காலிக போர் நிறுத்தங்கள். எதுவும் சாத்தியப்படவில்லை. இந்த முயற்சிகளில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விதித்த நிபந்தனைகளும், கூட்டணி தர்மங்களும் போர் நிறுத்தங்களின் ஆயுளைக் குறைத்தன.
முதலில் சண்டையை நிறுத்தி விட்டு, அதற்குப் பின்னர் அரசியல் பேசலாம் என்ற ரீதியிலான விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் நடந்து கொள்ளாமல், இரு தரப்புக்களும் சமகாலத்தில் சாத்தியமற்ற நிபந்தனைகளைப் பிரேரித்தன. முன்னைய சந்தர்ப்பத்தில் காஸா மீதான முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வழிவகைகளை ஹமாஸ் இயக்கம் நிபந்தனைகளாக பிரேரித்தது. கடைசியாக, இஸ்ரேலின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது முக்கியஸ்தர்கள் 125 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனைக்கு முக்கியத்துவம் அளித்தது..
இதற்குக் காரணம் கூட்டணி யதார்த்தங்கள். போர் நிறுத்த யோசனையை பிரேரிப்பவர் பகையாளியென்றால் ஏதேனும் காரணங்களை முன்வைத்து அதனை நிராகரிப்பதும், அவர் கூட்டாளியென்றால் கூடுதலான அனுகூலங்களைப் பெற முனைவதும் இரு தரப்புக்களின் தந்திரோபாயமாக மாறியிருந்தது.
காஸா நெருக்கடியில் பல நாடுகளும் இயக்கங்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல், எகிப்து, சவூதி அரேபியா ஆகியவை ஒரு புறத்தில் இருக்கின்றன. மறுபுறத்தில் கட்டார், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ஹமாஸ் இயக்கத்தை ஆதரிக்கின்றன. சமகால அரசியல் நிலவரம் காரணமாக, எந்தப் பக்கத்துடன் சேர்வதெனத் தெரியாமல் அமெரிக்கா தடுமாறுகிறது.
அமெரிக்கா சொல்லி இஸ்ரேல் கேட்கவில்லை என்றால், அது வியப்பிற்குரிய விடயம் தானே. ஜோன் கெரி முன்மொழிந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கான காரணம், இந்தக் கூட்டணி சிக்கல் தான். கட்டாரும், துருக்கியும் வரைந்து ஹமாஸின் ஒப்புதலைப் பெற்ற போர் நிறுத்தத்தைத் தான் அவர் முன்மொழிந்தார்.
எகிப்து முன்மொழிந்த போர் நிறுத்தத்தை ஹமாஸ் நிராகரித்தது என்றால் அதற்கும் கூட்டணி நெருக்கடி தான் காரணம். எகிப்தின் சமகால தலைவர் அப்துல்லா அல் சிஸி ஹமாஸின் தவிர்க்க முடியாத கூட்டாளியான முஸ்லிம் சகோதரத்தவ இயக்கத்தின் பரம எதிரி. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தியவர். அவருடன் சேர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் வகுத்த போர் நிறுத்தத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்பது ஹமாஸின் கேள்வி.
பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது?
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பல்வகை வழிகள் பிரேரிக்கப்படுகின்றன. போர் நிறுத்த முயற்சிகளில் சம்பந்தப்பட்ட சகல தரப்புக்களுக்கும் பொதுவான ஒருவரை களத்தில் இறக்குவது என்ற யோசனை முக்கியமானது. இந்த இடத்தில் பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் பெயர் முன்மொழியப்படுகிறது. அவர் இஸ்ரேலின் இருப்பை அங்கீகரிப்பவர். அமெரிக்காவிற்கு நேசமானவர். ஹமாஸ் இயக்கம் பகையாளியாக நோக்கும் எகிப்திய அரசாங்கத்துடன் அவர் பேச முடியும். ஹமாஸிற்கு ஆயுதங்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடனும் அவருக்கு பிரச்சினையில்லை. எவ்வாறேனும், பேச்சுவார்த்தைக்கான பின்புலத்தை ஏற்படுத்துவது மாத்திரமே அவரால் செய்ய முடிந்த காரியம்.
காஸா மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணிக்கக்கூடிய எந்தவொரு போர் நிறுத்த முயற்சிகளும் சாத்தியப்படப் போவதில்லை. அந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் இஸ்ரேலிய மண்ணில் இருந்தும், எகிப்திய எல்லை கடந்தும் போதியளவு கிடைப்பது அவசியம்.
இந்தப் பிரச்சினையில் அதிக செல்வாக்கு செலுத்தக்கூடியவை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தான். இந்த நாடுகள் ஹமாஸ் இயக்கத்தை அரசியல் சக்தியாகவும் அங்கீகரிப்பது அவசியம். ஹமாஸ் இயக்கம் காஸா மக்களின் அரசியல் பிரதிநிதியாகத் திகழ்வதுடன், அந்த மக்களின் முன்னிலையை ஆட்சியமைத்ததை மறந்து விட முடியாது. ஹமாஸ் இயக்கம் பலஸ்தீன மக்களுக்காக ஆயுதமேந்திப் போராடுகிறது. இன்று காஸாவில் வாழும் பலஸ்தீனர்களின் தேவையை நிறைவேற்றாமல், ஹமாஸ் இயக்கத்தை போர் நிறுத்த முயற்சிகளுக்குள் ஈர்ப்பது சாத்தியமான விடயமல்ல.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக