
அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு உள்நாட்டில் கூட, ஆதரவு பெற முடியாது போயுள்ளது. வெளிநாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இதனைப் பெரியதொரு விடயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிபுணர் குழு பற்றிய அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டு மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது.
ஆனாலும், எந்தவொரு நாடோ, ஐ.நாவோ, தாமாக வாய்திறந்து இதனை வரவேற்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய நட்பு நாடுகள் அல்லது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட வேளை அதனை எதிர்த்த அல்லது நடுநிலை வகித்த நாடுகள் கூட வரவேற்புத் தெரிவிக்கவில்லை.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்திய நாடுகள் ஒன்றும், ஆரம்பத்திலேயே அதற்கான அழுத்தங்களைக் கொடுக்கவில்லை.
ஆரம்பத்தில் அந்த நாடுகள், நம்பகமான, சுதந்திரமான உள்நாட்டு விசாரணைக்கே அழுத்தம் கொடுத்திருந்தன.
அந்த முயற்சி பயனற்றுப் போன பின்னர் தான், மேற்குலக நாடுகளின் கவனம் சர்வதேச விசாரணையின் பக்கம் திரும்பியது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட நம்பகமான, சுதந்திரமான உள்நாட்டு விசாரணையை ஊக்குவிப்பதான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இப்போது போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பதை விசாரிக்கும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை இலங்கை அரசாங்கம் அதுவும், சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலுடன் நியமித்துள்ள போதிலும், சர்வதேச சமூகம் அதனை வரவேற்கவில்லை.
இது பலருக்கும் புதிரான விடயமாகவே இருக்கிறது. ஆரம்பத்தில் நம்பகமான, சுதந்திரமான உள்நாட்டு விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்திய போது, இலங்கை அரசாங்கம் கூட அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்குலக நாடுகள், உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தியது 2012 மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட முதலாவது பிரேரணையின் போது தான் என்று கருதக் கூடாது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாக, இலங்கை அரசாங்கம் அறிவித்தவுடன், அதற்கு வாழ்த்துத் தெரிவித்த போதே, பொறுப்புக்கூறலை வலியுறுத்த தொடங்கியிருந்தது அமெரிக்கா.
அதற்குப் பின்னர், அமெரிக்கா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புக் கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்கும்படி, தொடர்ச்சியாக அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. ஆனால், எதற்குமே அரசாங்கம் மசியாமல் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்து வந்தது.
போரின் போது எந்த மீறல்களும் நடக்கவில்லை என்றும், போரில் பொதுமக்கள் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என்றுமே அரசாங்கம் கூறியது. ஆனால் அழுத்தங்கள் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி 2010ஆம் ஆண்டு ஒரு நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க முடிவு செய்தது அரசாங்கம். அந்த முடிவுக்கு சர்வதேச சமூகம் பெரும் வரவேற்புக் கொடுத்தது.
பின்னர் அதன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல், காலத்தை இழுத்தடித்த போது, மீண்டும் மேற்குலகின் அழுத்தங்கள் தீவிரமடைந்தன.
ஆனாலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அது ஒன்றும் பைபிள் அல்ல என்றும் கூறிய அரசாங்கம், உள்நாட்டு விசாரணைகளை நடத்த மறுத்தது.
பின்னர், ஒருகட்டத்தில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா தயாராகிறது என்று அறிந்ததும், இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்து நிலைமையைச் சமாளிக்க முயன்றது. அந்த இராணுவ நீதிமன்றத்தின் முதற்கட்ட அறிக்கையை சர்வதேச சமூகம் கண்டு கொள்ளவேயில்லை.
ஏனென்றால், அது நம்பகமானதாகவோ, சுதந்திரமானதாகவோ, வெளிப்படைத்தன்மை கொண்டதாகவோ இருக்கவில்லை. அரசாங்கமும் கூட அந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்தவில்லை.
அதுபோதாதென்று, இராணுவ நீதிமன்றத்தின் இரண்டாவது கட்ட விசாரணை நடப்பதாக அரசாங்கம் அறிவித்து, ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.
ஆனால், அந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவேயில்லை.
இத்தகைய நிலையில், ஜெனீவா அழுத்தங்கள் தீவிரமடைந்த ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதனையும், சர்வதேச சமூகம் வரவேற்றிருந்தது.
அதற்குப் பின்னரும் கூட, அதாவது, கடந்த மார்ச் மாதம். ஜெனீவாவில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடும் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது கூட, உள்நாட்டு விசாரணைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது, அரசாங்கம் அதனையும் நிராகரித்திருந்தது. அந்த தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாகக் கூறிய அரசாங்கமே இப்போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள நிலை யில், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளது.
காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவே, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்றும் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவுக்கு மேலும் சர்வதேச அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றையும் அரசாங்கம் நியமித்தது.
சர்வதேச விசாரணைகளை வலுவிழக்க வைப்பதற்காக, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவில்லை.
இந்தநிலையில், மேலும், மூன்று ஆலோசனை நிபுணர்களை நியமிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்த நிபுணர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது நிபுணர்களை நியமிக்கும்போது, ஆசிய, ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவே முனைந்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஜஹாங்கீருக்கு அவர் இடமளித்தார். அது அந்தக் குழுவின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான முயற்சியாகும். ஆனால், அரசாங்கம், தமது முதற்கட்ட நிபுணர் குழு தெரிவின்போது, மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்தியது. அதனால், பிரித்தானிய, அமெரிக்க நிபுணர்களையே தெரிவு செய்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்் ஷ ஆசிய நாடுகளின் நிபுணர்களை அந்தக் குழுவில் நியமிக்கவில்லை.
ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிபுணரை உள்ளடக்க வெளிவிவகார அமைச்சு முயற்சிகளை மேற்கொண்ட போதும், அதற்கிடையில், நிபுணர் குழு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அது ஜப்பானிய தூதரக அதிகாரிகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியதாகவும், பின்னர், ஜனாதிபதி அதனை அறிந்து கொண்டு அமைச்சர் பீரிஸ் மூலம், அவர்களை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
இப்போது ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் நிபுணர்களுக்கு, ஆலோசனைக் குழுவில் இடமளிக்கப்படவுள்ளது.
இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் இந்த மூன்று நாடுகளுமே, இலங்கை மீதான சர்வதேச விசாரணைகளை எதிர்த்து வருபவை. ஐ.நாவிலும் அதற்கு வெளியிலும் ஆதரவு அளித்து வருகின்ற நாடுகள்.
இந்த நாடுகளின் அழுத்தங்களின் பேரில் தான், அரசாங்கம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைக்க இணங்கியது என்று ஐ.தே.க. குற்றம்சாட்டுகிறது.
மேற்குலக நாடுகளின் அழுத்தங்களினால் தான், முன்னைய விசாரணைக் குழுக்களை அமைத்தது அரசாங்கம்.
ஆனாலும், மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. எனினும், இலங்கையை ஆதரித்த நட்பு நாடுகள் உள்நாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடுத்தபோது வேறு வழி அரசாங்கத்துக்கு இருக்கவில்லை.
அடுத்த கட்டமாக, ஐ.நா. விசாரணை அறிக்கை பாதுகாப்புச் சபைக்கே வரும் என்றும், உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்காது போனால், அங்கு தம்மால் உதவ முடியாது என்று ரஷ்யா, இந்தியா, உள்ளிட்ட நாடுகள் கூறியதாகவும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது. அதற்குப் பயந்து உள்நாட்டு விசாரணையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக ஐ.தே.க. தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், சர்வதேச விசாரணையின் அழுத்தங்கள் அதிகரித்து வந்த நிலையில், உள்நாட்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வதே சரியான வழிமுறையாக இருந்தது மட்டுமன்றி, வேறு தெரிவுகளும் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை.
உள்நாட்டு விசாரணை நடக்கிறது என்று கூறி சிறிது காலத்தை இழுத்தடிப்பதற்கு, அரசாங்கத்துக்கு இது கைகொடுக்கும்.
எனவே, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் கூட, மேல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்த உள்நாட்டு விசாரணை ஒரு சிறிய தடையை ஏற்படுத்தும்.
இதனைக் கருத்தில் கொண்டே இலங்கையின் நட்பு நாடுகள் இந்த உள்நாட்டு விசாரணைக்குத் தூண்டியுள்ளதாகத் தெரிகிறது.
இதனை உணர்ந்து கொண்டதால் தான், மேற்குலக நாடுகள் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டதை வரவேற்கவில்லை. அதேவேளை, உள்நாட்டிலும் கூட அரசாங்கத்தின் இந்த முடிவு வரவேற்பை ஏற்படுத்தவில்லை.
காரணம் என்னவென்றால், அரசாங்கமே முன்னர் இதனை நிராகரித்துவிட்டு இப்போது அதற்கு இணங்குகிறது என்றால், அதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்ற சந்தேகம்தான்.
சர்வதேச விசாரணை கோரும், ஜெனீவா தீர்மானத்தின் 10ஆவது பிரிவைத்தான் எதிர்த்தோமே தவிர, அந்த தீர்மானத்தில் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தும் 2ஆவது பிரிவை எதிர்க்கவில்லை, அதன்படியே உள்நாட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளோம் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் பீரிஸ். ஆக, சர்வதேச விசாரணை என்ற விடயம் இல்லாவிட்டால், ஜெனீவா தீர்மானத்தை ஆதரித்திருப்போம் என்பது போலுள்ளது அவரது கதை. அவ்வாறாயின், அரசாங்கம் எதற்காக 2012, 2013ஆம் ஆண்டு தீர்மானங்களை எதிர்த்தது என்பது புதிரான விடயம்.
இந்த இரட்டைப் போக்குத் தான், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தில் உள்ள அதற்கு வெளியே உள்ள கட்சிகளினது ஆதரவைக் கூடப் பெற முடியாததற்குக் காரணம்.
கபில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக