இருபது வயதில் சிறுநீரகம் பாதிப்பு போதாதற்கு மார்பக புற்றுநோய் ஆனாலும் உலகத்தை தன் எழுத்தால் சிரிக்க வைத்தவர்
அவன் நல்லா விட் அடிக்கிறாண்டா என்று சொன்னால், ஒருவேளை இப்போதைய தலைமுறைக்கு இந்த வாக்கியத்தின் பொருள் புரியாமலேயே கூட போக முடியும். விட் என்கிற ஆங்கில வார்த்தையின் பயன்பாட்டை கிட்டத்தட்ட நாம் நிறுத்திவிட்டோம். ஆனால் ஒரு காலத்தில் ஜோக் என்பதற்கு பதிலாக விட் தான் விட்டுவிடாமல் தொடர்ச்சியாக நாம் பயன்படுத்திய வார்த்தை. முப்பதாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கர்களை தன் விட்டுகளால் விலா நோக சிரிக்க வைத்த ஒருவர் இங்கு உலாவருகிறார்.
எர்மா பாம்பெக் 1927 இல் அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் பிறந்தார். மிக சாதாரணமான குடும்பம். அப்பா கிரேன் ஆப்பரேட்டர். பாடசாலைக் காலத்திலேயே எர்மா தீவிர வாசகி. நகைச்சுவைக் கட்டுரைகள் தான் அவரது விருப்பம். போதாதற்கு சார்ளி சப்ளின், லாரல் ஹார்டி நகைச்சுவை நாயகர்களே அவரது கனவில் வந்தார்கள். எர்மாவுக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது அவரது அப்பா மறைந்துவிட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார். புது அப்பா சொந்தமாக வேன் வாங்கி சரக்குகளை ஏற்றிச்செல்லும் வேலையை செய்துவந்தார். அவரது ஏற்பாட்டில் எர்மாவுக்கு டான்ஸ் பாட்டு எல்லாம் கற்பிக்கப்பட்டது. சகலகலாவல்லியாக வளர்ந்த எர்மா, அந்த வயதிலேயே உள்ளூர் ரேடியோ ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து நடத்தி வந்தார்.
எர்மா ஏதாவது மரணவீட்டுக்குச் சென்றால் கூட, அங்கு அழுது கொண்டிருப்பவர்களை கோமாளிகளாக நினைத்துக் குழுங்கி குழுங்கிச் சிரிப்பார். அப்பாவும் அம்மாவும் சண்டைப்போட்டுக் கொள்வது கூட, டொம் - ஜெர்ரியின் சண்டை மாதிரிதான் தெரிந்தது. தன்னைச் சுற்றி நடந்தவை அனைத்தையுமே நகைச்சுவைக் கண்ணோட்டத்திலேயே பார்த்தார். எப்போதுமே சிரித்துக் கொண்டிருந்த எர்மாவை ஏதாவது நகைச்சுவைக்கட்டுரைகள் எழுதித்தருமாறு பள்ளியில் வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகையொன்றின் ஆசிரியர் கேட்டார். பாடசாலை இதழில் அவர் எழுதிய கட்டுரைகள், உள்ளூர் பத்திரிகை ஆசிரியரொருவரைக் கவர்ந்தது.
அவருடைய பத்திரிகையில் எர்மாவின் கட்டுரையொன்றை வெளியிட டாய்டன் நகரமே வாய்விட்டுச் சிரித்தது. டீனேஜில் இருந்த எர்மா பகுதி நேர எழுத்தாளராக டாய்டன் எரால்ட் பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தார்.
பத்திரிகையில் எழுதி அவர் சம்பாதித்த பணம் பிற்பாடு அவரது கல்லூரி பணத்தேவைகளை ஈடுகட்டியது. கல்லூரி முடிந்ததுமே எர்மா செய்த விடயங்கள் இரண்டு. ஒன்று தான் எழுதி வந்த பத்திரிகையிலேயே முழுநேரமாக பணிக்கு சேர்ந்தது. அடுத்தது கல்யாணம். பில்பாம்பெக் என்பவரை மணமுடித்துக்கொண்டார். எர்மாவின் இரண்டாவது அப்பாவைப் போலவே பில்லும் நொடிக்குநொடி சிரிப்பவர். சிரிப்பாய் சிரித்தது எர்மாவின் வாழ்க்கை. அவரை ஜோக் எழுதுவதை விட்டு விட்டு பெண்கள் பக்கத்தை கொஞ்சம் சீரியஸாய் எழுதச் சொன்னார்கள். சீரியஸூக்கும் எர்மாவுக்கும் என்ன சம்பந்தம் வேலையையே விட்டுவிட்டார்.
கொஞ்சம் சீரியஸாக குடும்பம் நடத்துவோம் என்றவரின் தலையில் விழுந்தது இடி. எர்மாவுக்கு குழந்தை பிறக்காது என்று போலி மருத்துவன் ஒருவன் சோதனை செய்து கண்டுபிடித்தான். அதனால் என்ன போச்சி என்று உடனடியாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினார்கள். தான் ஒரு குழந்தைக்கு அம்மா. கணவருக்கு மனைவி என்ற கௌரவமே எர்மாவுக்கு கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருந்தது. சோதனைகள் மிகுந்த ஐம்பதுகளின் அமெரிக்க நடுத்தர குடும்ப வாழ்வை அவர் பகிடியாகத்தான் பார்த்தார். திடீரென்று ஒரு திருப்பம். குழந்தையே பிறக்காது என அறிவிக்கப்பட்ட எர்மா கர்ப்பமானார்.
அடுத்தடுத்து மூன்றாண்டு இடைவெளிகளில் இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தார். இந்த சம்பவங்களைக் கூட நகைச்சுவையாகத்தான் எர்மா பிற்பாடு எழுதினார். என்னதான் சிரிக்க சிரிக்க வாழ்ந்தாலும் மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் என்னதான் செய்வது? முழுநேர குடும்பத்தலைவி பதவியைத் துறந்துவிட்டு மீண்டும் வேலைக்கு வந்தார். இம்முறை நகைச்சுவை மட்டும்தான் அவருக்கு எழுதவரும் என்ற நிலையை மாற்றியது. .
கெட்டரிங் ஓக்வுட் டைம்ஸ் பத்திரிகையில் அவர் எழுதிய நகைச்சுவை பத்திகள் ஒரு நியூஸ் ஏஜென்சி மூலமாக வாங்கப்பட்டு அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பத்திரிகைகளுக்கும் விற்கப்பட்டது. அட் விட் என்ற பெயரில் வெளிவந்த அவரது கட்டுரைகள் அமெரிக்க அம்மாக்களையும் அவர்கள் குடும்பம் நடத்தும் இலட்சணத்தையும் கிண்டல் அடித்து எழுதப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் இரண்டாம் நிலை நகரங்களின் குடும்ப வாழ்வினை அச்சு அசலாக அவரது எழுத்துக்கள் பிரதிபலித்தன. பொதுவாக சிரிப்புக்கட்டுரைகள் என்றாலும் முத்தாய்ப்பாக அவர் முடிக்கும் வார்த்தைகளை வாசித்த குடும்பப் பெண்கள் வாய்விட்டு அழவும் செய்தார்கள்.
எர்மாவின் கட்டுரைகள் தொகுப்பாக அடுத்தடுத்து பதினைந்து புத்தகங்களாக வெளிவந்தன. அவர் தீவிரமாக 1965 - -1996 காலகட்டத்தில் ஏறக்குறைய நான்காயிரம் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1985 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்காவில் 900 செய்தித்தாள்களில் (அங்கெல்லாம் ஊருக்கு பத்து இருபது உள்ளூர் நியூஸ் பேப்பர் உண்டு) ஒரே நேரத்தில் எர்மாவின் கட்டுரைகள் வெளிவந்து சாதனை படைத்தன.
வருடாந்த வருமானம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டொலர் வரை (இன்றைய மதிப்பில் சுமார் ஆறு கோடி ரூபாய்) சம்பாதித்தார். இந்த பெரும்புகழ் காரணமாக அவர் டீ.வி.தொகுப்பாளராகவும் மாறி தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ் ச்சிகள் நடத்தினார்.
சிரிக்க சிரிக்க வாழ்ந்தவர். நாட்டையே சிரிக்க வைத்தவர் என்றாலும் எர்மாவின் வாழ்வில் தனிப்பட்ட துன்ப துயரங்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை. அவரது இருபது வயதில் தீர்க்க முடியாதவொரு கிட்னி வியாதி கண்டறியப்பட்டது. அது முற்றி தினமும் டயாலிஸிஸ் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார்.
இதைப்பற்றி யாருக்குமே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தார். மார்பகப் புற்றுநோய்த்தாக்கி அதிலிருந்து மீண்டார். கிட்னி பிரச்சினை தீர்க்க முடியாத நிலைக்கு போனபோது மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை மேற்கொண்டார்.
புதிதாக பொருத்தப்பட்ட கிட்னி சரியாக வேலைசெய்யாமல் சத்திரசிகிச்சை நடந்து இருபது நாட்களிலேயே 1996 இல் தனது 69 வயதில் காலமானார் எர்மா. எர்மா மாதிரி வெறும் நகைச்சுவை மட்டுமே எழுதிய பெண் எழுத்தாளர் யாராவது இருப்பார்களா..? இல்லை என்றே கூறுகிறது ஒரு ஆய்வு.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக