என்று ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பதாக ஜெயா செய்திகளில் மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டிருக்கின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது முதல், உச்சநீதிமன்றத்தில் கடுமையான நிபந்தனைகளின் பேரில், நேற்று பிணை வழங்கப்பட்டது வரை, தமிழகத்தில் நடந்த வெட்கக்கேடான, மான உணர்ச்சியற்ற, அறநெறியற்ற, நேர்மையற்றக் கேலிக்கூத்துகளின் உச்சகட்டமாக ஜெயலிலதாவின் இன்றைய அறிக்கை வெளியாகியிருக்கிறது.
66 வயதான ஜெயலலிதா வயது முதிர்ந்தவர், இரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனவும் அவர் வயதையும் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறு நீதிபதியிடம் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார் வழக்கறிஞர் பாலி நரிமன். கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, நான்காண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, நால்வரும் பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்கு ”விவிஐபி” செல் என அழைக்கப்படும் எல்லா வசதிகளும் கொண்ட சிறைக் கொட்டடி ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் சிறை தலைமை அதிகாரி ஜெயசிம்காவுக்காக ஒதுக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறையில் தான் ஜெயலலிதா பெரும்பாலும் இருந்திருக்கிறார் .
பரப்பன அக்ரகார சிறைக்கு எதிரிலேயே, ஒரு வீட்டில் இவர்கள் நால்வருக்கான உணவு சமைக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதா உடல் நிலையை எந்நேரத்திலும் கண்காணிக்க, ஒரு மருத்துவர் குழு தயாராக இருந்தது. பெங்களூருவிலேயே எந்த மருத்துவமனை சிறந்த மருத்துவமனை என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பவ்ரிங் என்ற மருத்துவமனை வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால், விக்டோரியா என்ற மருத்துவமனை பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிறைக்கு அருகில் ஜெயலலிதா தேர்தல் நேரங்களில் பயன்படுத்தும் கேரவன் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அக்கேரவனில் தங்கி ஜெ.வுக்கு உணவு ,மருந்துகள் தேவைப்பட்டால் கொடுத்து உதவ, இரவு பகலாக தங்கியிருக்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ வெறும் பால், பழச்சாறு போன்ற திரவு உணவுகளையே எடுத்துக் கொண்டிருக்கிறாராம். மதியம் தயிர் சாதம், இரவு நேரங்களில் மீண்டும் ஒரு தயிர் சாதம் அல்லது ஒரு ஆப்பிள் என அதிரடியாக உணவின் அளவை அவர் குறைத்து விட்டதால், சிறைப்பட்ட நாட்களில் 4 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் இப்படி சட்டென எடை குறைவதால் இரத்தக் கொதிப்பு அதிகமாகி விடும் எனவும் மருத்துவர் குழு எச்சரித்திருக்கிறது. இப்படியாக தமிழக மக்களின் நலன்களுக்காக, கடந்த 20 நாட்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வந்திருக்கிறார் ஜெயலலிதா. மக்கள் முன்னேற்றத்திற்கான தியாகம் என்றால் சும்மாவா ?
“முன்னாள் மக்கள் முதல்வரின்” இத்தியாகங்களை நினைத்துப் பார்த்து, கண்கள் பனிக்கும் இவ்வேளையில் தமிழகத்தில் நடந்த வேறு சில சம்பவங்களும் நம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன. ”வயதையும் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு பிணை” என்ற இந்த வாசகம் தான் கொஞ்சம் நம்மை சிந்திக்க வைக்கிறது.
*ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினிக்கு, கடந்த 21 ஆண்டுகளாக பிணையோ, பரோல் என்றழைக்கப்படுகிற விடுப்போ இதுவரை வழங்கப்படவில்லை. பேரறிவாளனின் வாக்குமூலங்களை பதிவு செய்த விசாரணை அதிகாரி தியாகராஜனே, பேரறிவாளனை குற்றமற்றவர் என உண்மையை ஒப்புக் கொண்டாலும் கூட இன்று வரை சிறைக் கொட்டடிகளுக்குள்ளேயே பேரறிவாளன் தன் இளமையைத் தொலைத்திருக்கிறார். வேலூர் சிறைக்கும் நீதிமன்றங்களுக்குமாக, இருபத்தோரு ஆண்டுகளாக ஓடி ஓடி ஓய்ந்து போன அறிவின் தாயார் அற்புதம்மாளும் வயது முதிர்ந்தவர் தானே.
* 1998 மார்ச் 31- அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட, அப்துல் நாசர் மதானி விசாரணைக் கைதியாக ஒன்பதரை ஆண்டு காலம் சிறையில் இருந்தார். 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அப்துல் நாசர் மதானியின் உடல் எடை 103 லிருந்து , நாளாக நாளாக குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன. 1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது பிணை மனுக்கள் (ஜாமீன்) தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பாட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார். ஜெயலலிதா ஆட்சி முடிவடைந்து, பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 – இல் விடுதலையாகி வெளியே வந்தார். மதானியின் குற்றங்கள் இன்று வரை நிரூபிக்கப்பட்டவில்லை. அவருக்கு எதிரான அனைத்து சதிகளுக்கும் ஒரே காரணம் அவர் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட இசுலாமியர்களுக்காகவும் அரசியல் களம் கண்டு போராடியது தான்.
ரோசலின் அம்மா
*அநீதியான முறையில் மக்கள் மீது திணிக்கப்படும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, அமைதியான முறையில் போராடிய இடிந்தகரை மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போடப்பட்டன. சுந்தரி, சேவியரம்மாள், ரோஸ்லின் போன்ற பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுள் சேவியரம்மாள், ரோஸ்லின் ஆகிய இருவரும் வயது முதிர்ந்தவர்கள் தாம். நீண்ட நாட்கள் சிறைக் கொடுமைகளுக்குப் பின் விடுதலையான ரோஸ்லின், உடல் நலம் குன்றி, இறந்தே போனார். நியாயமான சனநாயக கோரிக்கைகளுக்காக போராடிய இவர்களுக்காக, இன்று ஜெயலலிதா முதுமை கருதி கண்ணீர் சொட்டும் அதிமுக அமைச்சர்களோ, சினிமா நட்சத்திரங்களோ அன்று எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. இடிந்த கரை மக்களை தேசத்துரோகிகள் என ஊடகங்கள் பரப்புரை செய்தன. உதயகுமார் மீது அந்நிய கைக்கூலி பெறுபவர்,தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு, இன்று வரை அவரது கடவுச்சீட்டு முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அல்லது இவர்கள் செய்த குற்றம் தான் என்ன ? அந்நிய நாட்டிலிருந்து நிதி பெற்றார் என உதயகுமாரைச் சாடியவர்கள் அவரது குற்றத்தை நிருபீத்தார்களா ? இல்லையே..!
*1986 ஆம் ஆண்டு அரியலூர் மருதையாற்று பாலம் குண்டு வைத்து தகர்த்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையிலிருந்தவர் தென் தமிழன். தற்போது 66 வயது ஆகும் தென் தமிழன், மனநலம் பாதிக்கப்பட்டு, கீழே விழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்ததால் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிந்த தென்தமிழனுக்கு ஒருமாத கால விடுப்பு (பரோல்) வழங்கி 23.1.2014 அன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது 28 ஆண்டுகளுக்கு பிறகு. இதில் கொடுமை என்னவென்றால், 25.1.14 முதல் தென்தமிழன் தினமும் உடையார் பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என சிறைத்துறை உத்தரவு வழங்கியதோடு மட்டுமல்லாமல், விடுதலையாகும் வரை சுயநினைவில்லாமல் படுத்துக் கிடக்கும் தென் தமிழனுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை கண்காணிப்பும் போடப்பட்டது. இரவுகளில் அவர் கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டது.
*மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டப்பட்ட, மருத்துவர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் பினாயக் சென், 2007 மே 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பல்வேறு போராட்டங்களுக்குப் பின், 2009 மே 25ஆம் தேதி, சென் பிணையில் விடுவிக்கப்பட்டார். இங்கும் சென்னின் எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. உலக சுகாதாரம், மனித உரிமைகளுக்கான 2008 ஆம் ஆண்டின் ‘ஜோனதன் மான்’ விருது, பினாயக் சென்னுக்கு வழங்கப்பட்டது. அப்போது சென், தேசத் துரோக வழக்கில் சிறையில் இருந்தார்.
*நீண்ட நாள் விசாரணைக்கைதிகளாக இருக்கும் அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருந்தாலும், ஜெயலலிதா அரசு எதனையும் கண்டு கொள்ளவில்லை. கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்து, உயிருக்கு போராடி வரும் நிலையிலும் அவருக்கு இதுவரை பிணையோ, விடுப்போ வழங்கப்படவில்லை. இப்படியாக தமிழக சிறைகளில், குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதிகளாகவே பல ஆண்டுகளாக, சிறைக் கொடுமைகளை அனுபவித்து வரும் தலித்துகளின், இசுலாமியர்களின், பழங்குடிகளின், சட்டத்தைக் கையாள பொருள் வசதி பெற முடியாத ஏழைகளின் எண்ணிக்கை மட்டும் பல நூறைத் தாண்டும்.
மேற்சொன்ன அனைவரின் விடுதலைக்காக, தமிழகத்தின் சனநாயக அமைப்புகள், பல்வேறு இயக்கங்களை நடத்தி, தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பத்து ஆண்டுகள் ஆன இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, ஜெயலலிதா அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றமே திரும்பப்பெற வலியுறுத்தியும் இதுவரை வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. அற்புதம்மாள் பற்றி பேசியாயிற்று. நளினி பற்றி பேசியாயிற்று. உடல் நலம், வயது என எதனையுமே காது கொடுத்து கேட்க வில்லை ஜெயலலிதா.
மாறாக, 20 நாட்கள் சிறை வாசத்தை, அதுவும் சகல வசதிகளோடு கூடிய விவிஐபி சிறை வாசத்தை, ”தியாகம்” எனப் பறை சாற்றி, ஜெயலலிதா என்ற சர்வாதிகாரியின் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழகமே கொந்தளித்து போயிருப்பதாக ஒரு தோற்றத்தை அதிமுக கட்சிக்காரர்கள் ஏற்படுத்தி உள்ளனர். .. ஜெயலலிதாவின் வருகையை எதிர்பார்த்து, விமான நிலையத்தில், அதிமுக தொண்டர்களோடு பொதுமக்களும் திரண்டு கொண்டிருக்கின்றனர் என்று ஜெயா டிவி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் தான், இன்னொரு தொலைக்காட்சியில் அதிமுக உறுப்பினர் ஆவடி குமார், அதிமுக தொண்டர்கள் அனைவரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் மக்களாக இருந்து தொண்டர்களானவர்களே….மக்களே தொண்டர்கள். தொண்டர்களே மக்கள் என “அம்மா” விசுவாசத்தின் உச்சமான ஓ.பி.எஸ்ஸையே மிஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார். குண்டு கல்யாணமும், விக்ரமனும், ரமேஷ் கண்ணாவும் அம்மாவுக்கு பிணை கொடுக்கப்பட்ட இந்த நாள் தான் தங்களுக்கு தீபாவளி என உருகி வழிந்தனர். ஒரு வேளை பிணை கொடுக்காமல் போனால் பயன்படுமே என்று தாம் அணிந்து வந்த கருப்புச்சட்டைகளைக் கழற்றி, பிணை கிடைத்ததும் அம்மாவின் படத்துக்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர் பக்த கோடிகள். மன்னிக்கவும் அதிமுக தொண்டர்கள்.
சிறையில் இருந்த போது அமைச்சர்களை சந்திக்க விரும்பாத ஜெயலலிதா, சுழற்சி முறையில் அனுதினமும் பெங்களூரு சிறை வளாகத்தில் குடியிருந்த அமைச்சர்களை வர வேண்டாம் என்று சொல்லவில்லை. தலைமைச்செயலகத்தில் இருந்து வேலையைப் பாருங்கள் என்று ஜெயலலிதாவால் சொல்லியிருக்க முடியும். ஏன் சொல்லவில்லை? மக்கள் பணியை விட, அம்மா விசுவாசமே முக்கியம் என்பதால் அமைச்சர்களும் இந்த அடிமைப் பணியைச் செய்ய தயங்கவில்லை. தமிழக நிர்வாகம் முடங்கிப் போவது குறித்து அவர்களுக்கு துளி கூட அக்கறையில்லை. ஜெயலலிதா சிறையில் இருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையினராக, உண்ணாவிரதமோ, வேலை நிறுத்தமோ செய்யக் கோரி நிர்பந்திக்கப்பட்டனர். லாரி உரிமையாளர்கள், கோயம்பேடு சந்தை, திரையரங்க உரிமையாளர்கள் என ஒவ்வொருவரும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். மக்கள் பிரச்சினைக்கு துளி கூட குரல் கொடுக்காத, திரைத்துறையினரில் ஒரு பகுதியினர் கிளிசரின் கண்ணீரோடு , ஜெயாவின் ஊழலை ஆதரித்து, அணி திரண்டனர். இவர்களுள் அன்னா அசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற பலர் அடக்கம்.
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சஞ்சய் தத்துகளுக்கு தொடர்ந்து விடுப்பு வழங்கப்பட்டு, விடுப்பு காலத்தில் அவரால் ஒரு திரைப்படத்தில் கூட நடித்து விட முடியும். குஜராத் நரோடா பாட்டியாவில் அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் எரித்துக் கொன்ற வழக்கில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மாயா கோட்னானிக்கு கூட விடுப்போ பிணையோ கிடைத்து விடக்கூடிய வாய்ப்புகளை வழங்கும் இந்திய நீதித்துறையால், குற்றமே நிரூபிக்கப்படாமல், சாட்சியங்களே இல்லாமல், சட்ட உதவியே பெற முடியாமல், கூட்டு மனசாட்சி என்ற பெயரில் அப்சல் குருவுக்கு மரண தண்டனையும் வழங்க முடிகிறது. மனைவியின் உடல் நலம் சரியில்லை என்று விடுப்பு பெறும் சஞ்சய் தத், மறுநாள் இரவு மது விருந்தில் நடனமாடும் தனது மனைவியின் படங்கள் முகநூலில் வெளி வரும் போது மெளனமாக இருக்கும் அதே நீதித்துறை தான், அப்சல் குருவின் இறுதி நேரங்களில் கூட அவரது மனைவிக்கோ குழந்தைக்கோ அவரது மரணத்தை தெரிவிக்காமல், அவர்கள் முகத்தைக் கூட பார்க்க விடாமல், தூக்குக் கயிற்றை இறுக்குகிறது. ஆக அதிகார வர்க்கமும், பணம் படைத்தவர்களும் எப்பேர்பட்ட குற்றங்கள் செய்து நீதிமன்றங்களால் நிரூபிக்கப்பட்டாலும், தண்டனை பெற்றிருந்தாலும், சட்டத்தின் எல்லா துளைகளினூடாகவும் அவர்களால் விடுதலையடைந்து விட முடிகிறது.
நியாயமான மக்கள் போராட்டங்கள் நடத்தியதற்காக விசாரணைக்கைதிகளாக சிறை செல்வோர், பிணை கிடைக்காமல், விடுப்பு கிடைக்காமல் கொட்டடிக்குள்ளேயே இறந்து போகும் செய்திகளையும் பார்க்க முடிகிறது. மேலும் சட்டத்தை பயன்படுத்த முடியாத ஏழைகள், தலித்துகள், இசுலாமியர்கள் சாதாரணமாக, ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றால் கூட, அவர்கள் தொண்டையினுள் தோட்டாகள் பாயும் என்பதற்கு, இராமநாதபுரம் எஸ்.பி பட்டினம் காவல் நிலையத்துக்குள், காவல்துறை அதிகாரி காளிதாஸால் துடிதுடிக்கச் சுட்டுக் கொல்லப்பட்ட சையது முகமதுவே சாட்சி.
இந்திய மக்கள் அனைவரும் காப்பிய மனநிலையில் இருப்பவர்கள் என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டது எத்தனை உண்மையாக இருக்கிறது. இந்த நாடகங்கள் அனைத்தையும் பார்க்கும் போது, ஜெயலலிதா என்ற தனி நபருக்காக, ஒரு சர்வாதிகாரிக்காக, ஒட்டு மொத்த தமிழகமே இயங்குவது போல் ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறதா ? அல்லது இந்த மாயை உண்மை தானா ? இந்த கோணத்தில் சிந்தித்தால், தமிழக மக்களில் ஒரு பெரும் பகுதியினர் மன்னராட்சி மனநிலையிலிருந்து மீளவில்லையோ என்று தானே நினைக்கத் தோன்றுகிறது. ஜெயலலிதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி மட்டுமே. அவர் தெய்வம் அல்ல. இறைமையும் அதிகாரங்களும் அவருக்கு உரித்தானதல்ல. மேலும் அவர் மக்கள் பணத்தை கொள்ளையடித்த, ஒரு குற்றவாளி. நிருபிக்கப்பட்ட குற்றவாளி. 1996 ஆம் ஆண்டு, ஜெயலலிதாவின் ஊழல்கள் அப்பட்டமாக ஊடகங்களில் வெளியான போது, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தான் அவரை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்பினர். பின்பு அதே மக்களால் தான் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராகி, இன்னும் மக்களின் சொத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார். இது திமுகவுக்கும் பொருந்தும். காங்கிரசும் பா.ஜ.கவும் என யாருமே மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதில் சளைத்தவர்கள் அல்ல. இந்நிலையில், அவரை “மக்களின் முதல்வர்” என்றழைப்பதோ அல்லது நிரந்தர பொதுச்செயலாளர் என நியமிப்பதோ, அவரின்றி அணுவும் அசையாது என அமைச்சர்கள் ஜெயலலிதாவின் காலில் தெண்டனிட்டு கிடப்பதோ, சனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல அது பகுத்தறிவுக்கும் எதிரானது.
”மானமும் அறிவும் மனிதர்க்கழகு” – பெரியார்.
அ.மு.செய்யது - இளந்தமிழகம் இயக்கம்
www.visai.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக