இது பெங்களூர் சிறைச்சாலையில்....
சென்னையை தவிர்த்து கொடநாட்டுக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா அதிக நாட்கள் சென்று தங்கியது பரப்பன அக்ரஹாராவாகத் தான் இருக்கும்! 'அம்மா... அம்மா...’ என்று உருகித் தவித்த அரசியல்வாதிகளின் வருகை குறைந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் உறவினர்கள் வருகை அதிகமாகியிருக்கிறது.
`செல்ஃபி வித் பரப்பன அக்ரஹாரா'
'பரப்பன அக்ரஹாரா...’ பெங்களூரில் உள்ள இந்த இடம் இப்போது கர்நாடக மக்களைவிட தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிட்டது. ஜெயலலிதாவை விசாரித்த நீதிமன்றம், இப்போது அடைக்கப்பட்டிருக்கும் சிறைவளாகம் அனைத்தையும் அ.தி.மு.க நிர்வாகிகள் வியப்புடன் பார்த்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் 'இதுதான் அம்மாவை விசாரிச்ச நீதிமன்றமாம். அந்த மாடிக் கட்டடத்துலதான் அம்மா இருக்காங்களாம்...’ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சோதனை கடவை அருகே இருக்கும் பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தின் பெயர் பலகை தெரிவது மாதிரி நின்று `செல்ஃபி' எடுத்துக் கொள்கிறார்கள்.
முன்னாளே முன்னாலே...
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து பதவி பறிக்கப்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள் சிறை வாசலில் இருந்து நகர்வதே இல்லை. தினமும் காலையில் தூங்கி எழுந்து குளித்துவிட்டு வந்தால், மாலைப்பொழுது சாய்ந்த பிறகுதான் ஹோட்டலுக்குக் திரும்புகிறார்கள். செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், பச்சைமால், மாதவரம் மூர்த்தி, முனுசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோரை எந்த நேரத்தில் சென்றாலும் சிறை வாசலில் பார்க்கலாம். ''அம்மா வெளியே வரும் வரைக்கும் நாங்க யாரும் ஊருக்குத் திரும்பிப்போகக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறோம். அமைச்சர்கள் தங்கள் பணிகளைக் கவனிக்கவேண்டியிருப்பதால், அவர்கள் சென்னைக்குப் போவதும் பெங்களூர் வருவதுமாக இருக்கிறார்கள். எங்களுக்கு அம்மா இருக்கும் இடமே கோயில். அவங்களை இங்கே விட்டுட்டு நாங்க எங்கே போக முடியும் சொல்லுங்க...'' என்று வருத்தத்துடன் கேட்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர். ஜெயலலிதா வெளியே வந்ததும் எப்படியும் தங்களுக்கு அமைச்சரவையில் இடம்கிடைக்கும் என்பது மட்டும்தான் இவர்களின் ஒரே நம்பிக்கை.
'தீராத பகை!’
காலம்காலமாக தீராத பகைகொண்ட பங்காளிகள்கூட குடும்பத்தில் ஏதாவது பெரிய பிரச்சினை ஏற்பட்டால் ஒன்று கூடிவிடுவார்கள். ஆனால், அரசியல் கட்சிகளில் அதெல்லாம் நடக்காதுபோல...
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமியும் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனும் தனித்தனி கோஷ்டிகளாகவே பிரிந்து நிற்கிறார்கள். முனுசாமி நின்றிருந்ததைப் பார்த்த அமைச்சர் பழனியப்பன் அந்தப் பக்கம்கூட திரும்பவில்லை. 'அம்மாவே வந்தாலும் இவர்களின் சண்டையைத் தீர்க்க முடியாது!’ என்று புலம்பியபடி சென்றனர் கட்சிக்காரர்கள். 11-ஆம் திகதி காலையில் இருந்தே முனுசாமியும் பழனியப்பனும் சிறை வளாகத்தில்தான் இருந்தனர். மாலை அங்கிருந்து செல்லும் வரை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை.
இளவரசி அலற... சசிகலா சிரிக்க...
பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள் ஒரு கோடி ரூபா செலவில் வெதுப்பக இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தினமும், பாண், பிஸ்கட், கேக் போன்ற பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப்படுகின்றன. இதில் வேண்டாம் என்று ஓரங்கட்டப்படும் பொருட்களைச் சாப்பிட்டு எலிகள் ஏகத்துக்கும் கொழுத்துள்ளன. அவை, சிறையில் உள்ள கைதிகளை எதுவும் செய்வதில்லை. கைதிகளும், சாப்பிட்டதுபோக மிஞ்சும் உணவை எலிகளுக்கு வைத்துவிடுவார்களாம். அதனால், சர்வ சாதாரணமாக எலிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு இளவரசி தன் அறையில் இருந்து வெளியே வரும்போது ஓர் எலியை மிதித்துவிட்டாராம். இதில் பயந்துபோன அவர், அலறித்துடித்து கத்தியபடி அறைக்குள் ஓடியிருக்கிறார். இதைக் கவனித்த சசிகலா வாய்விட்டு சிரித்திருக்கிறார். இந்த விடயங்களை ஜெயலலிதாவிடமும் சசிகலா சொல்லிச் சிரித்ததாக சொல்கிறார்கள். 'அது விநாயக பெருமானோட வாகனம்தானே... நம்மை எதுவும் செய்யாது!’ என்று சொன்னாராம் ஜெயலலிதா.
ஊதுபத்தி உருட்டலை...
விசாரணைக் கைதிகளாகச் சிறைக்குச் செல்லும் கைதிகளின் பிரத்தியேக அட்டையில் சிறைக்குள் அவர்கள் செய்யும் பணி பற்றி குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், தண்டனைக் கைதிகளாகச் சிறைக்குள் செல்பவர்களுக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக் கட்டாயம் அந்த அட்டையில் குறிப்பிட வேண்டும். அவர்களின் தண்டனைக் காலத்தைக் குறைப்பதோடு, நன்னடத்தைக்கும் அதுதான் சான்றளிக்கும்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு 25 சிறு தொழில்கள் இருக்கின்றன. சமையல் வேலைகளில் சப்பாத்தி உருட்டுதல் தொடங்கி நூலக உதவியாளர் பணி, தையல், `கார்பன்ஸ் வொர்க்', தச்சு வேலை, கூடை பின்னுதல், தோட்டத்தில் களை எடுத்தல், `பேக்கரி', மெழுகுவத்தி தயாரித்தல், ஊதுபத்தி உருட்டுதல், பொம்மை தயாரித்தல் போன்ற பணிகள் அடக்கம். அதனடிப்படையில்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூன்று பேர் ஊதுபத்தி உருட்டும் பணியில் இருப்பதாகவும், சுதாகரன் அச்சிடும் பகுதியில் பிழை திருத்தம் பார்ப்பதாகவும் முதலில் செய்தி பரவியது. இதுபற்றி பேசிய சிறைத்துறை அதிகாரி ஜெயசிம்ஹா, '`ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் நீண்டகாலத் தண்டனை கைதி இல்லை என்பதால் இதுவரை வேலை எதுவும் ஒதுக்கவில்லை. ஜெயலலிதா சிறைக்குள் அடைக்கப்பட்டதிலிருந்து இதுவரை யாரையும் சந்திக்கவே இல்லை’ என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.
ஜெயாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது
பத்திரிகையாளர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சிறை விடயங்களை சொல்லும் ஒரே நபர் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. தினமும் மூன்று வேளையும் மறக்காமல் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுப்பதை இவர் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். எந்தப் பேட்டியாக இருந்தாலும் முதலில், ''குமாரி ஜெயலலிதா ஹெல்த் கண்டிஷன் ஸ்டேபுள்'' என்றுதான் ஆரம்பிக்கிறார். ஜெயலலிதா காலையில் என்ன சாப்பிட்டார் என்பதில் தொடங்கி எதையும் அவர் மறைப்பதில்லை. தினமும் செய்தித்தாள்களிலும், டி.வி.யிலும் ஜெயசிம்ஹா பேட்டிகளைப் படித்தும், பார்த்தும் அதிருப்தியடைந்துள்ளாராம் ஜெயலலிதா. 'எனக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்திருக்கிறது. அதனால், நான் சிறையில் இருக்கிறேன். நீங்கள் அடிக்கடி இங்கே வரக்கூடாது. எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் கூப்பிடுகிறேன்’ என்று ஜெயசிம்ஹாவிடம், ஜெயலலிதா கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் ஜெயசிம்ஹாவோ, 'அவங்க இருக்கிறது என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் சிறையில். என்னை வரக்கூடாது என்று அவர் எப்படிச் சொல்லலாம்? நான் அவருக்கு கீழே வேலை செய்யும் அதிகாரி இல்லை’ என்று கூறி வருகிறாராம்.
'அத்தை ஏன் எங்களைப் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க...’
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவும், மகன் தீபக்கும் குடும்பத்தோடு பெங்களூர் `சௌத் எண்ட் சர்கில்' ஏரியாவில் உள்ள அவரது சின்ன பாட்டியும், ஜெயலலிதாவின் சித்தியுமான வித்யா வீட்டில் தங்கியுள்ளனர். ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அவர்கள் இருவரும் அங்கேதான் இருக்கிறார்கள். தினமும் சிறைக்கு வரும் தீபாவை பாதுகாப்பு அதிகாரிகள் சிறை வளாகத்துக்குள்கூட அனுமதிக்காமல் சோதனை கடவையுடன் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இதனால், தீபா மிகவும் அதிருப்தியடைந்துள்ளார். `நாங்க என்ன பிழை செய்தோம். அத்தை நல்லா இருக்கும்போது பார்க்கப்போனா உதவிக்காக வந்துட்டாங்கன்னு நினைக்கலாம். இந்தச் சூழ்நிலையிலும் எங்களைப் பார்க்காமல் தவிர்ப்பது மனசுக்கு வேதனையாக இருக்கு. என் சொந்த இரத்தம் உள்ளே இருக்கு. என்னால் உள்ளே செல்ல முடியலை. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்லுவாங்க இல்லையா... என்னால் அத்தை உள்ளே போனதில் இருந்து சாப்பிட முடியலை... தூங்க முடியலை... என்னுடன் பேசாம இருந்தாலும் அத்தை நல்லா இருக்காங்க என்ற செய்தி சந்தோஷமா இருந்துச்சு. சிறைக்குள் அவர் எப்படி இருப்பார் என்று நினைத்தாலே நெஞ்சு வெடிக்குது. அத்தை ஏன் எங்களைப் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க...’ என்று தன் சின்ன பாட்டி வித்யாவிடம் சொல்லி அழுதிருக்கிறார் தீபா.
அ.தி.மு.க வழக்கறிஞர்களுக்கு கண்டனம்
சிறையில் இருக்கும் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும் பிணை கேட்டு தாக்கல் செய்த மனுவை மேல்நீதிமன்ற நீதிபதி ரத்னகலா கடந்த 1-ஆம் திகதி சாதாரண அமர்வுக்கு மாற்றினார். பிறகு, 7-ஆம் திகதி மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா பிணை மனுவை நிராகரித்தார். அந்தச் சமயங்களில் சென்னையிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர்கள் கர்நாடக மேல்நீதிமன்ற வளாகத்திலேயே நீதிமன்றத்துக்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர், ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். இதைக் கண்டித்து கடந்த 11-ஆம் திகதி கர்நாடக பார் கவுன்சில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கர்நாடக மேல்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் பி.பி.ஹெட்ஜுவும், துணைத் தலைவர் அனில் குமாரும் தமிழக வழக்கறிஞர்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் ஆலோசித்து வருகிறார்கள்.
'அம்மா... நாங்க இருக்கோம்மா!’
பரப்பன அக்ரஹாரா பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான சோதனைச்சாவடி வழியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட சில வி.ஐ.பி.க்கள் மட்டுமே சிறையின் நுழைவாயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். சிறையின் பின்புறம் நமது புகைப்படக்காரர் சென்று வேறு சில கோணங்களில் சிறையின் படங்களை எடுத்திருந்தார். அதைக்கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். அதன்பிறகு இடத்தைத் தேடி அ.தி.மு.க.வினர் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். சிறைக்கு பின்பக்கத்தில் நின்றபடி, 'அம்மா... நாங்க இருக்கோம்மா... அம்மா வாழ்க... அம்மா வாழ்க...’ என்றெல்லாம் கோஷம் போட்டுள்ளனர். இதனால் பொலிஸாரின் பாதுகாப்பு இப்போது சிறை வளாகத்தைச் சுற்றிலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி, சில நாட்களுக்கு முன்பு சிறை வளாகத்துக்கு வந்தார். அவரிடம் பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸார் சோதனை சாவடியில் தீவிர விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதித்தனர். 'அம்மா வெளியில் இருந்தவரைக்கும் அவர் நம்மை நெருங்கவிட மாட்டார்... இப்போது அவருடைய நிலைமையைப் பாருங்க..’ என்று விமர்சித்தார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.
கடந்த திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில் பரப்பன அக்ரஹாரா பஸ் நிலையத்தில் புதிய குளிரூட்டியுடன் ஒருவர், யாரையோ கையடக்கத்தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபடி இருந்தார். அவரிடம் விசாரித்தபோது, பெங்களூரிலுள்ள ஒரு தனியார் குளிரூட்டி பொருத்தும் நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், தன்னுடைய பெயர் ஷெரிஃப் என்றும் சொன்னார். அடுத்து அவர் சொன்னதுதான் அதிர்ச்சி ரகம். ''தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வைத்திருக்கும் அறைக்கு குளிரூட்டியை பொருத்துவதற்காக என்னை வரச் சொன்னார்கள். நேற்றே (நேற்றுமுன்தினம்) அந்த அறையைப் பார்வையிட அழைத்துச் சென்றார்கள். இன்றைக்கு (நேற்று) வந்து குளிரூட்டியை பொருத்தித் தருமாறு சிறையில் உள்ள ஜெயராமன் என்பவர் சொன்னார். அதற்காகத்தான் வந்தேன். இந்நிலையில், ''நேற்றைக்கு (நேற்றுமுன்தினம்) நீங்கள் சென்றபோது அந்த அறையில் யார் இருந்தார்கள்... அது தனி அறையா? உள்ளே என்னென்ன வசதிகள் இருக்கின்றன?'' என்று கேட்டோம்.
''அது கைதிகளுக்கான அறை இல்லை. பெண்கள் சிறையில் உள்ள ஒரு மருத்துவமனை கட்டடம். அதில் உள்ள ஓர் அறையில்தான் ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று பேர்களும் இருக்கிறார்கள். மூவருக்கும் தனித்தனி கட்டில்கள் மெத்தையுடன் போடப்பட்டிருக்கின்றன. ஒரு மேசையும் கதிரையும் இருக்கிறது. அதில் உட்கார்ந்தபடிதான் ஜெயலலிதா புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறார். அவரின் மேசையின் மீது நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அப்புறம் ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இருக்கிறது. அதில் தூர்தர்ஷன் அலைவரிசை தான் இயக்கப்படுகிறது. அந்த அறையில் `எயார்கூலர்' இருந்தது. அது போதுமானதாக இல்லையென்றுதான் குளிரூட்டியை பொருத்தச் சொல்லியிருக்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டார் ஷெரிஃப்.
''ஜெயலலிதா, கைதிகளுக்கான சிறையில் அடைக்கப்பட்டால் இதுமாதிரியான வசதிகளை செய்து தரமுடியாது என்பதால்தான் அவரை மருத்துவமனை அறையில் தங்கவைக்கப்பட்டு அங்கு குளிரூடட்டியை பொருத்தும் வேலைகள் நடக்கிறது'' என்கிறார்கள் சிறை வட்டாரத்தில்.
16 மெழுகுவர்த்திகள்
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 16 நாட்கள் ஆகின்றன. இதை நினைவுபடுத்தும் வகையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், 16 மெழுகுவர்த்திகளுடன் வந்திருந்தார். அவருடன் வந்த 16 பேர்களின் கைகளிலும் மெழுகுவர்த்தியைக் கொடுத்து சிறையை நோக்கி நீட்டியபடி நின்றனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி நடத்தும் சர்வமத பிரார்த்தனையும் சிறை வாசலில் நடக்கிறது. பெங்களூரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் பாடசாலை மாணவிகளை வைத்து சிறப்புப் பூஜையும், யாகமும் நடத்தப்பட்டுள்ளன.
(விகடன்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக