கையில் கோடுகளாக வரையப்பட்டுள்ள அவரவர் ஜீவனேபாய வழிமுறைகள்
ஜீவனோபாயம் அனைவருக்கும் அவசியம். உயிர்வாழ அதுவே ஆதாரமானது. ஆனால் ஒருவருக்கொருவர் வித்தியாசமானது. அதற்கு அந்தந்த துறைகளில் அவரவர்க்குள்ள ஆர்வமும் ஆற்றதலுமே காரண மாகும். அவர் ஈடுபடுகிறார். கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கிறார் என்பதற்காக, அவரைப் பின்பற்றி அத்துறையில் சற்றும் ஈடுபாடில்லாத இன்னொருவரும் அத்துறையில் முயன்றால் வெற்றி பெற முடியாது. அது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாகிவிடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதியுண்டு. அவ்விதிக்கேற்ப வெவ்வேறான வாழ்க்கையுண்டு. அதுபோல தொழில் வழிகளிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.
கலைத்துறையில் ஆற்றலுள்ளவர் தமக்குச் சம்பந்தமில்லாத கமச் செய்கையில் ஈடுபட்டால் ஆர்வத்துடன் செயற்பட முடியாது போகும். கமச் செய்கையில் ஈடுபாடு காட்டுபவர், பொறியியல் துறையில் வெற்றி பெறமுடியாது. இன்னார்க்கு இன்னதுறை என்பதை அவரது சாதகக் குறிப்பு எடுத்துச் சொல்கிறதோ இல்லையோ, அதைவிடத் தெளிவாகவும் இலகுவாகவும் கைரேகைக் குறிகள் காட்டிவிடுகின்றன.
உள்ளங்கையின் அடியிலுள்ள சந்திரமேட்டிலிருந்து புறப்பட்டு நேராக நடுவிரலின் கீழுள்ள சனிமேடுவரை கோடு கிழித்துச் செல்லும் விதிரேகையானது (A) அவ்விதம் அமைந்தவர் இன்ன தொழில் செய்வாரென்று சொல்லவில்லை. மாறாக, ஏதாவதொரு தொழிலைச் செய்தோ அல்லது பரம்பரைச் செல்வத்தைக்கொண்டோ, அல்லது முன்வினைப் பயன்களாலோ வயிற்றுக்கு வஞ்சனையில்லாத சௌகரியங்களுக்கு குறைவிராத ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்.
சாதகத்தில் கேசரி யோகம் பெற்ற நபர்களது உள்ளங் கைகளை அவதானித்தால், அவற்றின் மேடுகளிலும் ரேகைகளிலும் என்னதான் குற்றங்குறைகள் தென்பட்டாலும், அத்தனையையும் தாண்டி விதி ரேகை மாத்திரம் நேரியதாய், கம்பீரமாய் அமைந்திருக்க காணலாம். இதுவொன்றே உற்றுப்பார்க்கும் தோறும் அவர்களை உற்சாகப்படுத்தும். மேலும் ஆர்வமாய் உழைக்கத் தூண்டும்.
கையில் அமைந்த ஒரு நேரிய விதி ரேகையோடு கூடவே ஆயுள் ரேகையிலிருந்தும் அதன் கிளை ரேகையொன்றும் தோன்றி சனி மேடு வரை சென்றிருந்தால் (B) அது தோன்றும் காலக்கட்டத்திலிருந்து அவ்விதம் அமைந்தவர் ஆன்மிகத்துறையில் ஒரு வேதம் கற்ற குருக்களாக அல்லது ஒரு மத போதகராக ஓர் உபன்னியாசகராக அல்லது பிரார்த்தனைகள் மூலம் குணமளிக்கும் ஒரு துறவியாக வாழ்க்கை நடத்துவதையும் அதன் மூலம் சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறுவதையும் அது குறிக்கும்.
ஆயுள் ரேகையில் செவ்வாய் மேட்டு பகுதியிலிருந்து ஒரு ரேகை தோன்றி சூரிய மேட்டை அடைந்தால் (C) அத்தகையவர் பன்னூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளுக்கு சொந்தக்காரரான ஒரு விவசாயியாக இருப்பார். அவர் வசிக்கும் இடம்கூட வயல்களாலும் வாய்க்கால்களாலும் தென்னந்தோப்பாலும் சூழப்பட்டு அருங்கோடையிலும் குலுகுலுவென்றிருக்கும்.
சந்திர மேட்டின் பக்கமாக ஆயுள் ரேகையிலிருந்து ஒரு கிளை ரேகை தோன்றி நேராக புதன் மேட்டை சென்றடையுமானால் (D) அவ்விதம் அமைந்தவர் பாடியும் ஆடியும் நடித்தும் இசையமைத்தும் காலம் கழிக்கிற ஒருவராய் இருப்பார். நாளடைவில் அதுவே அவரது ஜீவனோபாயமாகிவிடும். தமிழகத்தின் பிரபல நாட்டிய நாடக இசைக் கலைஞர்கள் பலரது கைகளில் இத்தகைய குறியீட்டைத் தாம் கண்டதாக கைரேகைக் கலையில் பிதாமகரென அங்கு போற்றப்படும் சக்திதாசன் தமது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேற்படி கலைகளில் இரங்கிவிட்டால் பசி, தாகம், தூக்கம், இன்பம், துன்பம் கடந்த ஒரு மோனநிலையை அவர்களிடம் தாம் அவதானித்ததாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
செவ்வாய் மேட்டின் மத்தியில் ஆயுள் ரேகையிலிருந்து ஒரு கிளை ரேகை தோன்றி குறுக்கே நீண்டு சென்று கீழ் செவ்வாய் மேட்டிலேயே முடிந்திருந்தால் (E) அவ்விதம் அமைந்தவருக்கு கசாப்புத் தொழில் ஜீவனோபாயமாக வந்தமைவதையும், அதன் மூலம் வருவாய் தேடுவதையும் அது குறிக்கும். கசாப்புத் தொழிலென்றால் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற ஜீவராசிகளைக் கொன்று, அவற்றின் இறைச்சியை விற்பது, கூடவே வீடு, நிலம் விற்றும் விவாகம் செய்து வைத்து தரகுத் தொழிலும் செய்வாராம். உள்ளங் கையில் குழி விழுந் தும் செவ்வாய் மேடானது பலகைப் போல் ஒட்டிப்போயும் சதைப்பிடிப்பில்லாமல் கருமைப் படர்ந்து காணப்பட்டால் மதுபானம் போதைவஸ்துகள் மற்றும் சட்ட விரோத பொருட்கள் கடத்தி அதன்மூலம் வருவாய் பெறுபவராகவும் அதற்காக சட்ட த்தால் அடிக்கடி தண்டிக்கப்படுபவராகவும் இருப்பாராம்.
ஆயுள் ரேகையில் சந்திரமேட்டின் பக்கமாக ஒரு கிளை ரேகை தோன்றின் சந்திரமேட்டை குறுக்கறுத்து சென்றால் அதனை பிரயாண ரேகை என்பர். அதிலும் முக்கியமாக கடல் கடந்த பிரயாணம் அதைவிட அந்த ரேகையானது ஒரு கேள்விக் குறியை ப்போல் வளைந்து திரும்பியிருந்தால் (F) அத்தகையவர் சந்தனம் அத்தர் வாசனைத் திரவியங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உற்பத்தியிலும் விற்பனையிலும் அபாரமான திறமை காட்டுவாராம். அத்துடன் முத்து பவளம் இரத்தினம் நகைத்தொழில் போன்றவற்றிலும் இவரது வளர்ச்சி அத்துறைகளில் ஈடுபட்டுள்ள ஏனையோரை வியக்க வைக்குமாம்.
பொதுவாக ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கியவாறு தோன்றி பாதியில் வளர்ச்சி பெறாது நின்றுவிடும் ரேகைகள் சந்தர்ப்ப ரேகைகள் எனப்படும். இவைகள் அவையவைத் தோன்றும் காலக்கட்டங்களில் ஒவ்வொரு தொழிலை தொடங்கி சம்பாத்தியம் பெறுதலை குறிப்பனவாகும். மிருகங்கள் மூலம் வாகனங்கள் மூலம் காணி பூமி வாங்குதல் மூலம் மணமுடித்தல் கல்வி மூலம் பட்டம் பெறுதல் பதவி வகித்தல் என்று ஒவ்வொரு கிளை ரேகைக்கும் ஒவ்வொருபலன் உண்டு. ஆனால் அந்த முயற்சிகளில் நிரந்தரம் என்பது அந்த ரேகைகள் மேலும் மேல் நோக்கி வளர்வதைப் பொறுத்தே அமையும்.
பொதுவாக குழந்தைகளின் கைகளில் தோன்றும் ரேகைகளுக்கு பலன் சொல்ல முடியாது. 12 வயது வரை ஒரு பிள்ளைக்கு குழந்தைப் பருவம் பள்ளிப்பருவம் துள்ளும் பருவம் என மூன்று காலக்கட்டங்களை சோதிடம் வகுத்துள்ளது. இந்தப் பருவங்களை பிள்ளையின் கையில் தோன்றும் ரேகைகள் பிள்ளையின் பெற்றோரையே பாதிக்கும். உதாரணமாக ஒரு பச்சிளங் குழந்தையின் பிஞ்சுக் கையில் தெளிவானதொரு விதி ரேகை கோடு கிழித்தாற் போல் பளிச்சென்று காணப்பட்டால் அதன் தகப்பன் வசதி வாய்ப்பு உள்ள ஒருவர் என்று அர்த்தம்.
எதுவும் சீராக அமையாமல் தாறுமாறான ரேகைகள் கையில் நிறைந்திருந்தால் ஒரு பற்றாக்குறை வாழ்க்கையில் அக்குழந்தை யின் குடும்பம் உழல்வதாகக் கொள்ள வேண்டும்.
திருவோணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக