எல்லாம் முடிந்தாயிற்று!
இந்தோனேசிய நுசாகம்பங்கன் தீவில் நடுநிசியில் ஒலித்த மரண ஓலங்களோடு அந்த உயிர்கள் உலகுக்கு விடைகொடுத்துவிட்டன. பொழுது புலர்ந்தாலும் மனிதத்தை நேசிப்போரின் மனதில் இன்னும் மௌனம் குடிகொண்டிருக்கிறது.
இனி அவர்கள் இங்கில்லை. அவர்களின் கனவுகள் -எதிர்பார்ப்புகள் அனைத்துமே கலைந்துபோயின. உலகம் மீதிருந்த இறுதி நம்பிக்கையை யும் பிடிமானத்தையும் துப்பாக்கி ரவைகள் தவிடுபொடியாக்கிவிட்டன.
ஆம்! பாலி ஒன்பது என்று அழைக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்த எண்மர் இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.
அதிகாரம் மிக்க மேற்குலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும்,மனித உரிமை நிறுவனங்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
உலகின் பெருந்தொகையான மக்களை கவலைகொள்ளச் செய்த, நெகிழச் செய்த இச்சம்பவம் இந்த நிமிடம் வரையிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்தோனேசியாவில் 1997 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க 59ஆவது பிரிவு சட்டத்தின் பிரகாரம் போதைப்பொருளை உபயோகித்தல், தயாரித்தல், கடத்தல் என்பன திட்டமிட்ட வகையில் நடைபெறுவதால் அது மரண தண்டனைக்குரிய குற்றமாகும். அதனடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாதம் உள்ளிட்ட பிரதான குற்றச் செயல்களுக்கு கல்லால் எறிந்து உயிரிழக்கும்வரை தண்டனை வழங்கும் சட்டமூலம் 1997 ஆண்டு இந்தோனேசியாவில் கொண்டுவரப்பட்ட போதிலும் அது செயற்படுத்தப்படவில்லை.
எனினும் தற்போது அமுலிலுள்ள மரண தண்டனையானது துப்பாக்கிச் சூடு நடத்தி குற்றவாளியை உயிரிழக்கச் செய்வதாகும்.
பாலி ஒன்பதில் பிரதான குற்றவாளிகளாக கருதப்பட்ட என்ரு சான் மற்றும் மயூரன் சுகுமாரன் உட்பட ஒன்பது பேருக்கு இவ்வாறே மரண தண்டனை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் தீவிரமான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய, பிரேசில், நைஜீரிய, பிலிப்பைன்ஸ், இந்தோனேசிய கைதிகளின் சார்பில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கு இறுதியாக மனுவொன்று அனுப்பப்பட்டது. எனினும் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.
அன்றைய தினம் மாலை 7 மணிக்கு மயூரன், சானின் உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டனர். மயூரன் சுகுமாரன் அப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தார். அவருடைய முகத்தில் கவலைக்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை. ஒரு சில ஆங்கிலப்படங்களின் பெயர்களைக் கூறி இவற்றை நான் தவறவிடப்போகிறேன் என்றுதான் கவலையாக இருக்கிறது என உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவருடைய சகோதரி பிருந்தா சுகுமாரனைப் பார்த்து "நான் எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். கவலைப்பட வேண்டாம்" எனக் கூறியுள்ளார். தாய், தந்தையருடன் இருக்கும்போது பெரும்பாலும் மௌனமாகவே இருந்ததாக அங்கிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மயூரனுக்கும், என்ருவுக்கும் பிரார்த்தனை செய்வதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து டேவிட் சொபர், கிறிஸ்டி புகிங்ஹாம் என்ற மதபோதகர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இறுதி வரை அவர்களுடன் அவ்விருவரும் இருந்தனர்.
மரண தண்டனைக்கு இரண்டு மணிநேரங்களுக்கு முன்னர் அந்நாட்டு சட்டமா அதிபர் பிரசெட்யோவால் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டது. எனினும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி ஜேன் வெலோசோவுக்கு மரண தண்டனையிலிருந்து தற்காலிக விலக்களிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனையடுத்து நுசாகம்பங்கன் தீவுக்கு நூற்றுக்கணக்கான படையினர், பாதுகாப்பு வாகனங்கள் சகிதம் வருகை தந்தனர். தீவின் சுற்றுப்புற கடல் பரப்பில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். நீண்ட தூரத்துக்கு நோட்டமிடும் வெளிச்சம் சகிதம் சிறிய கடற்படை படகுகளும் வலம் வந்துகொண்டிருந்தன.
நுசாகம்பங்கனில் கைதிகளின் உறவினர்கள் தங்கியிருப்பதற்கான இடம் அறிவிக்கப்பட்டு அங்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் என்ரு மற்றும் மயூரனின் உறவினர்கள் சிலாசெப் என்ற அருகிலுள்ள நகரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தண்டனைக்குப் பிறகு சடலங்களை உடனடியாக அடையாளம் கண்டு சொந்த நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டுக்காகவே அவர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களுடன் அவுஸ்திரேலிய தூதரகத்தின் சிறப்பு அதிகாரிகள் சிலர் இருந்தனர்.
நேரம் நள்ளிரவை நெருங்கும்போது நுசாகம்பங்கன் தீவில் மரண தண்டனை விதிக்கப்படும் பாதுகாப்பான தனியொரு காட்டுப் பகுதிக்கு சிறியரக விமானத்தின் மூலம் கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு தண்டனைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மயூரன், என்ருவுடன் வருகை தந்திருந்த போதகர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் அப்போதும் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.
பன்னிருவர் அடங்கிய படையினர் துப்பாக்கிகளுடன் வருகை தந்தனர். அவர்களில் மூவரின் கைகளிலேயே ரவைகள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகள் இருக்கும். எனினும் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்போகிறவர்கள் யார் என்பதை கைதிகள் அறிந்திருக்க மாட்டார்கள்.
இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 12.35 க்கு கைதிகளின் இதயப்பகுதியில் உள்ள சிலுவை அடையாளத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அமைதியாக இருந்த தீவுக்குள்ளிருந்து ஒலித்த சத்தம் கைதிகளின் உறவினர்களை நிலைகுலையச் செய்தது. அவர்கள் கதறிக் கதறி அழுதார்கள்.
நுசாகம்பங்கன் சிறை வளாகத்தில் கூடியிருந்த 500 க்கும் மேற்பட்டோர் மெழுகுதிரிகளையும் பதாகைகளையும் ஏந்தியவண்ணம் பிரார்த்தனை செய்தார்கள்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதும் கைதிகள் இறந்துவிட்டதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உயிரிழக்காவிட்டால் தலையில் சுடப்பட வேண்டும் என்பதே விதிமுறையாகும்.
எனினும் சரியாக 27 நிமிடங்களின் பின்னர் அனைவரினதும் உயிர் பிரிந்துவிட்டதாக வைத்தியரும் சிறைச்சாலை அதிகாரியும் உறுதிப்படுத்தினர்.
"அவர்கள் இருவரும் புன்னகைத்த வண்ணம் மரணித்திருந்தார்கள். இறக்கும் தறுவாயிலும் அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தமையே அதற்குக் காரணம்" என சிறைச்சாலை அதிகாரி அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மயூரனின் ஆசைப்படி அவர் சுடப்படும்போது கண்களை திறந்துகொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்விடயம் சர்வதேச ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட எண்மரின் சடலங்கள் கழுவி தூய்மைப்படுத்தப்பட்டு, அவர்களின் இதயப்பகுதியில் உள்ள ரவைகள் நீக்கப்பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டன.
அதன் பின்னர் அவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் சடலங்கள் வைக்கப்பட்டு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டன.
மயூரன், என்ருவின் சடலங்களை அவுஸ்திரேலிய தூதரகத்தின் விசேட பிரதிநிதி மஜெல் ஹின்ட் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் சடலங்கள் ஜகார்த்தாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு அவுஸ்திரேலியாவில் நல்லடக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
ஏனைய கைதிகளின் சடலங்கள் அந்த நாட்டு அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டதுடன் இந்தோனேசிய கைதியின் சடலம் உறவினர்களுக்கு கையளிக்கப்பட்டது.
மரண தண்டனைக்கு உள்ளான எண்மரில் மயூரன் சுகுமாரன் என்ரு சான் குறித்து ஊடகங்கள் அதிகம் பேசுகின்றன. அதற்கான காரணம் சிறைச்சாலையில் கடந்த 10 வருடங்களில் அவர்களிடம் ஏற்பட்ட மாற்றம் தான். உண்மையில் மயூரன் சிறந்த சித்திரக் கலைஞராகவும் மற்றோருக்கு உதவி செய்யும் பண்புடையவராகவும் மாறியிருந்தார். அதேபோல என்ரு சிறைச்சாலை தேவாலயத்தில் போதனை செய்வதிலும் அதிக நேரத்தை பிரார்த்தனை செய்வதிலும் கழித்தார்.
உயிரிழப்பதற்கு ஒருசில மணிநேரங்களுக்கு முன்னர் தனது காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டமையால் தான் சந்தோஷம் அடைவதாகவும் மரணத்தைப் பற்றி இனி கவலைப்படத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தோனேசியாவின் இந்த அதிரடி முடிவை உலக நாடுகள் பல கண்டித்துள்ளன. குறிப்பாக அவுஸ்திரேலியா தனது கடும் தொனியிலான எச்சரிக்கை விடுத்தது.
அத்துடன் மரண தண்டனைக்குப் பின்னர் இந்தோனேசியாவிலுள்ள தனது தூதுவரை உடனடியாக நாட்டுக்கு அழைப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எபொட் அறிவித்துள்ளார்.
எனினும் தமது நாட்டு சட்ட விதிமுறைகளிலிருந்து ஒருபோதும் மீறப்போவதில்லை என இந்தோனேசியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்தோனேசியா அரசாங்கம் இவ்வாண்டு ஜனவரி மாதம் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கியது. அதுவும் இவ்வாறே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டது.
1999 முதல் 2015 வரை இந்தோனேசியாவில் மரண தண்டனைகளில் 50 வீதமானவை வெளிநாட்டு கைதிகளுக்கே வழங்கப்பட்டுள்ளன.
தனது நாட்டுப் பிரஜை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் தனது குடும்பத்தாரை நினைத்து வேதனைப்பட்டதாகவும் அவ்வாறான ஒருவரை சுட்டுக்கொலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரேசில் தெரிவித்துள்ளது.
பாலி ஒன்பது விவகாரத்தில் 10 வருடங்களாக புனர்வாழ்வு பெற்றவர்களை மனித நேயமற்ற முறையில் கொலை செய்து மரண தண்டனை வழங்குவதையே பல்வேறு தரப்பினர் எதிர்க்கின்றனர்.
சங்கிலி வலைப்பின்னல் போல் இவர்கள் இயங்கியதாகவும் இதனால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டதாகவும் இந்தோனேசியா இதனை நியாயப்படுத்துகிறது.
திட்டமிட்ட குற்றச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் ஒருமுறை திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்பதே மனிதத்தை நேசிப்போரின் வேண்டுகோளாகும்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த உலகம் இனி அவர்களுக்குச் சொந்தமில்லை. அவர்களுடைய வாழ்க்கையும் மரணமும் எமக்கு பாடங்களை கற்றுத்தரும் சரித்திரம்தான்!
–இராமானுஜம் நிர்ஷன்–

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக