
சிரியாவின் 4 ஆண்டுகள் சிவில் யுத்தம் அந்நாட்டை சீரழித்துள்ளது. மனிதார்த்த துயரமாக அந்த நாடு முடிந்து போயுள்ளது. ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும், லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாடு நாடாக குழந்தைகள், பெண்களுடன் அலைந்து திரிகின்றனர்.
சிவில் யுத்தம் காரணமாக இஸ்லாமிக் ஸ்டேட் என்ற சர்வாதிகார தீவிரவாதம் எழுச்சியுற்றது. இந்நிலையில் சிரியா அதிபர் பஷார் அல் அசாத் சார்பாக இந்தியா வந்துள்ள தூதர் ரியாத் கமெல் அப்பாஸ், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கேள்வி: 2 ஆண்டுகளுக்கு முன்பாக, இந்திய ஜிஹாதிகள் சிரியாவில் போர் புரிந்து வருகின்றனர் என்று நீங்கள் கூறியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் தற்போது ஐ.எஸ். அமைப்பில் சிரியாவிலும் இராக்கிலும் இந்தியர்கள் சேர்ந்துள்ளதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே உங்கள் கணிப்பின் படி எத்தனை இந்தியர்கள் சிரியாவில் போரில் இணைந்திருப்பார்கள்?
நான் என்னுடைய சொந்த ஆதாரங்கள் மூலம் பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்கான தகவல்களை திரட்டினேன். இதற்கும் அதிகாரபூர்வ சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் ஏன் இதனைக் கூறினேன் என்றால் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே. ஆனால் சிரியா போரில் இந்தியர்கள் பலரும் ஈடுபட்டிருக்கும் செய்தி என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது.
எவ்வளவு இந்தியர்கள் என்பது துல்லியமாகக் கூறிவிட முடியக்கூடியதல்ல, ஏனெனில் இந்தியாவிலிருந்து சிலர் சிரியா செல்கின்றனர், மேலும் சிலர் வளைகுடா நாடுகளிலிருந்து செல்கின்றனர், இவர்கள் சில குழுக்களால் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். துல்லியமான எண்ணிக்கை வேண்டுமெனில் துருக்கி அரசிடம் உள்ளது. எங்களை விட துருக்கி அரசுக்கு இது பற்றி கூடுதலாகத் தெரியும்.
ஏனெனில் தீவிரவாதிகள் தங்கள் எல்லையைக் கடந்து சிரியாவுக்குள் செல்ல துருக்கி தனது எல்லையை திறந்தே வைத்துள்ளது. பயங்கரவாதிகளுக்கென்றே உள்கட்டமைப்புகளையும் வைத்துள்ளது துருக்கி. அவர்கள் அவர்களுக்கு புகலிடம் அளித்து ஆயுத உதவியும் செய்கின்றனர். சிரியாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் இந்திய அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலங்களைப் பாருங்கள். அதாவது அவர்கள் துருக்கி வழியாகவே சிரியாவுக்குள் ஊடுருவியுள்ளனர்.
கேள்வி: சிரியா குறித்த இந்தியக் கொள்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
நாங்கள் இந்திய நிலைப்பாட்டை பெரிதும் பாராட்டுகிறோம். இந்தியா என்ன செய்ததோ அதனை மற்ற நாடுகளும் செய்திருந்தால், சிரியாவில் எங்களுக்கு பிரச்சினையே எழுந்திருக்காது. இந்தியா ஐநா ஒப்பந்தத்தை கடைபிடிக்கிறது. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் புறச்சக்திகளின் தலையீடு கூடாது என்பதில் இந்தியா சாம்பியனாகத் திகழ்கிறது. பிரதமர் மோடியும், நல்ல பயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம் என்ற இரண்டு கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறார். பயங்கரவாதம் மட்டுமே உள்ளது. நாம் அனைவரும் இணைந்து பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும்.
கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிரான போரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
அது இந்தியாவின் முடிவைப் பொறுத்தது. ஆனால் பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
கேள்வி: உங்கள் பார்வையில், ஐ.எஸ். அமைப்பு சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக சில ஆண்டுகளில் உருவெடுத்தது எப்படி?
ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்? ஏன்? என்பதை கூறுங்கள். அமெரிக்காதான் அல்கய்தாவை உருவாக்கியது என்பது தெளிவு. அரபு நாடுகளின் உதவியுடன், ஆப்கனில் சோவியத் யூனியனை முறியடிக்க அல் கய்தாவை உருவாக்கினர். அமெரிக்கர்கள் ஆப்கானில் படையெடுத்த போது நிறைய சவப்பெட்டிகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் போருக்குப் பிறகு ராணுவ வீரரை தரையில் பயன்படுத்துவதன் வியர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். எனவே பிற நாடுகளில் அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதே சிறந்தது என்று அமெரிக்கா நினைத்தது. இப்படியாகத்தான் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது. சவுதி, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.
தற்போது ஐ.எஸ். மிகவும் பலமாக உள்ளது. ஏன் அவர்கள் வலுவாக உள்ளனர், புறச்சக்திகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்கா சீரியசாக சண்டையிடவில்லை என்பதே. ஐ.எஸ். அமைப்பை அமெரிக்கா தோற்கடிக்க விரும்பவில்லை. அவர்களை கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இராக்கி குர்திஸ்தானில் உள்ள எர்பிலை ஐ.எஸ். தாக்கியவுடன் அமெரிக்கா உடனே சிகப்பு கோடு இட்டது. அதனை கடக்காதீர்கள் என்று ஐ.எஸ் அமைப்பை எச்சரித்தது. இதனையடுத்து சிரியாவின் மேற்குப் பகுதியிலும் ஐ.எஸ். விரிவு படுத்தியது.
கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிராக போர் என்ற துருக்கியின் சமீபத்திய அறிவிப்பு பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்: இது சும்மா ஒரு கேம் பிளான். பொதுமக்களிடத்தில் கருத்தை உருவாக்க செய்யப்படும் தந்திரம். ஐ.எஸ். விரிவாக்கத்தில் துருக்கியின் பங்கு இருப்பதற்கான சாட்சியங்கள் எங்களிடம் உள்ளன. மொசூலில் துருக்கிய தூதரகத்திலிருந்து ஐ.எஸ். அமைப்பு சிலரை பிடித்தது, ஆனால் உடனடியாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால்தான் கூறுகிறேன், துருக்கிக்கும் ஐ.எஸ்.க்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது என்று. ஐ.எஸ். க்கு எதிராக போர் என்ற பெயரில் அவர்கள் உண்மையில் குர்திஷ் மக்களை எதிர்த்தே போரிடுகிறது துருக்கி.
கேள்வி: சரி இதற்கு தீர்வுதான் என்ன?
பதில்: சிரியா மக்களுக்கு ஒரு புறம் அரசு உள்ளது, மறுபுறம் ஐ.எஸ். மற்றும் அல் நுசுரா பயங்கரவாத அமைப்பு. இந்த இரண்டுதான் மக்களின் தெரிவாக உள்ளது.
ஆனால் தீர்வு எளிதானதே. பயங்கரவாதிகளுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். எல்லைகளை மூடுங்கள், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றுங்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
-Tamil Hindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக