செவ்வாய், 1 டிசம்பர், 2015

மதம் பிடித்த மதவாதம்

சகிப்பின்மை, பயங்கரவாதம் இந்த இரண்டு வார்த்தைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. சகிப்புத்தன்மையை இரண்டு விதமாக அர்த்தம் கொள்ளலாம். சமுதாயத்தில் உள்ள வேற்றுமைகளை அரவணைப்போடு ஏற்றுக்கொள்வது ஒன்று.



மற்றொன்று, சில வேற்றுமைகளில், பழக்க வழக்கங்களில் உடன்பாடில்லை, ஆயினும் வேண்டா வெறுப்பாக சகித்துக்கொள்வது. இதில் இரண்டாம் வகையான சகிப்புத்தன்மை ஜாதி, சமய வேறுபாடுகளில் உணரப்படுகிறது. அதனால்தான் பிரச்னை முடிவில்லாமல் தொடர்கிறது.

மும்பை 2011 தொடர் குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் தாக்குதலின்போது, பாதுகாப்பு அமைப்புகள், காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மேலை நாடுகளில் இம்மாதிரியான தாக்குதல் நடக்க விடமாட்டார்கள் என்ற கருத்தும் சொல்லப்பட்டது. பாரீஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இதைப் பொய்த்துவிட்டது. தாக்குதலில் மொத்தம் 130-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

13.11.2015 பாரீஸ் தாக்குதலுக்கு முன்பு, இந்த வருடம் ஜனவரி 7-ஆம் தேதி சார்லி ஹெப்டோ என்ற இடதுசாரி பத்திரிகை அலுவலகத்தில் இரு பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்து வரவேற்பு அறையில் அலுவலில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, மேல்தளத்தில் ஆசிரியர் குழுக் கூட்டத்தில் இருந்தவர்களை சரமாரியாகச் சுட்டனர்.

நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் ஒன்றை பிரசுரித்ததற்காக இந்தப் பயங்கரத் தாக்குதல். இத்தாக்குதலில், சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் கொல்லப்பட்டார். யார் பயங்கரவாதத்தில் சாதனைப் படைப்பது என்பதில் ஐ.எஸ். அமைப்புக்கும், அல் – காய்தாவுக்கும் போட்டி. சார்லி ஹெப்டோ விவகாரத்தில் அல் – காய்தா முந்திக் கொண்டது.
தாக்குதலுக்குப் பிறகு பிரெஞ்ச் காவல் துறை உடனே முழு வீச்சில் இறங்கி இரண்டே நாள்களில் இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தியது. ஜனவரி 11-ஆம் நாள் நாடு கண்டிராத அளவு 20 லட்சம் மக்கள் ஒன்று திரண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரே அணியாக ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், பயங்கரவாதிகளைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய வெற்றி. அவரவர் அமைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்தாகவே செய்திகளைப் பரப்புகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆயுதம் தாங்கிய துணை ராணுவ வீரர்கள் உள்பட நாலு லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளனர்.

மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேல் – அரபு நாடுகளுக்கிடையே உள்ள தொடர் போர் காரணமாக குடிபெயர்ந்து வந்த மக்கள் மூலமாக வந்த பிரச்னைகளை சமாளிக்கவும், கார்லோஸ், அபு நிடால் போன்ற கூலிப்படைத் தலைவர்களை ஒடுக்கவும், விசேஷ பாதுகாப்பு பிரிவுகளும், தகவல் சேகரிக்கும் நுண்ணறிவுப் பிரிவுகளையும் பிரான்ஸ் நாடு ஏற்படுத்தி உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டது.

ஆனால், 2012-ஆம் வருடம் மார்ச் மாதம் டூலூஸ், மோண்டோபன் இடங்களில் மூன்று ஜிஹாதி தொடர் தாக்குதல்களில் மூன்று விமானப் படை வீரர்கள், நான்கு யூதர்கள் பலியானது பிரான்ஸ் உள்நாட்டுப் பாதுகாப்பை குலைத்தது.

ஜனவரி 2015 சார்லி ஹெப்டோ தாக்குதல் கடந்த ஐம்பது வருடங்களில் மோசமான தாக்குதல் என்று கூறப்பட்டது. ஆனால், 13.11.2015 தாக்குதல் ஐரோப்பாவில் நடந்த எல்லா பயங்கரவாத தாக்குதல்களையும் பின்னுக்குத் தள்ளி உள்ளது. நவம்பர் 13-ஆம் தேதி ஆறு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாயினர்.

2008-இல் மும்பை தாக்குதல் நடந்ததுபோல, மாலை காவல் துறை அசந்திருக்கும் நேரம், மக்களும் களைப்போடு விடு திரும்பும்வேளை, பலர் கேளிக்கைகளில் ஈடுபடும் நேரம் அதை பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
இதில் இன்னொரு ஒற்றுமை தானியங்கி வெடி குண்டுகள் அதிகம் இல்லாமல் இயந்திர துப்பாக்கியால் தாக்கியுள்ளனர். தற்கொலைப் படையாகத்தான் பயங்கரவாதிகள் வருகிறார்கள். எங்கு தாக்க வேண்டும் என்பதை முடிவு செய்து சரமாரியாக சுட்டால் அதிக பீதியையும், உயிர்ச் சேதமும் ஏற்படுத்த முடியும். அதுதான் பயங்கரவாதிகளின் குறிக்கோளும். மும்பை தாக்குதலை முன்மாதிரியாக வைத்து பாரீஸ் தாக்குதல் நடந்தேறியது.
முன் கூட்டியே தகவலறியும் உளவுப் பிரிவுகள் ஜனவரி சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பிறகு மேம்படுத்தப்பட்டும், நவம்பர் தாக்குதலை ஏன் அறியமுடியவில்லை? எவ்வாறு பயங்கரவாதிகள் இயந்திர துப்பாக்கியுடன் நகரில் உலாவ முடிந்தது?

தற்கொலைப் படை தாக்கியபோது விளையாட்டு அரங்கில் பிரான்ஸ், ஜெர்மனி நட்பான கால்பந்து விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. அங்கு சரியான தணிக்கை செய்யப்படவில்லை. அதேபோல், பாடாக்லான் இசை அரங்கிலும் பார்வையாளர்களை சோதனை செய்யாதது பெரிய தவறு. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு சறுக்கலின் விளைவு பயங்கரமானது.

பிரிட்டிஷ் உளவுப் பிரிவு எம்.ஐ.5-இன் (MI5) தலைவர் ஆண்ட்ரூ பார்க்கர், ஐ.எஸ். ஐரோப்பிய நகரங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், அக்டோபர் மாதம் மிகப் பெரிய தாக்குதல்களை அரங்கேற்றும் என்றும் விடுத்த எச்சரிக்கை மெய்ப்பிக்கப்பட்டதுபோல், முதலில் நவம்பர் 1-இல், 224 பயணிகள் தாங்கிய ரஷிய விமானம் வீழ்த்தப்பட்டது.

நவம்பர் 12-இல் பெய்ரூத்தில் இரண்டு ஐ.எஸ். தற்கொலைப் படை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் தாங்கிய கனரக வண்டி ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதியில் வெடித்து 43 பேர் பலி, நவம்பர் 13-இல் பாரீஸ் தாக்குதலில் 130 உயிர் பலி, தொடர்ந்து 20-ஆம் தேதி மாலி நாட்டின் தலைநகர் பமாக்கோவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு போன்ற கொடிய நிகழ்வுகள் நடந்துள்ளன.

தனி மனிதன் சுய உந்துதலால் பயங்கரவாதச் சிந்தனையில் ஈர்க்கப்பட்டு வெறிச் செயலில் இறங்குவது உலகில் பல நாடுகளில் பெருகி வருகிறது. இதை வளர்ப்பது சமூக வலைதளம். பயங்கரவாதிகள் தங்களது பிரசாரங்களை வெகு எளிதாக இணையதளம் மூலமாக பரப்பிவிடுகின்றனர்.

பயங்கரவாத சிந்தனைகளால் கவரப்பட்டவர்கள் போர்க்களம் நடக்கும் சிரியா, இராக் ஏனைய நாடுகளுக்கு வந்து இணைந்து களம் இறங்க வேண்டியதில்லை, அவரவர் இருக்கும் இடத்திலேயே போர்க்களத்தை உருவாக்கலாம். நாடுகள், எல்லைகள் கடந்த உலகளாவிய அமைப்பை உருவாக்குவதே ஐ.எஸ்.இன் குறிக்கோள். இதனால், உளவுப் பிரிவுகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய தகவல் கிடைப்பது அரிதாகி விடுகிறது. ÷

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க, விமானம் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களில் பிரான்ஸ், அமெரிக்கா நடத்தும் தாக்குதலில் பொதுமக்கள் வாழும் இடங்களும் சேதமடைவது பயங்கரவாதிகளுக்குச் சாதகமாகிறது. பொதுமக்களின் பாதிப்பை ஊடகங்கள் மூலமாக, அவர்களது இயக்கத்தை மேலும் பலப்படுத்த பக்க விளைவாக அமைகிறது, அதில் தனி நபர் பயங்கரவாதமும் வளர்கிறது.

இந்தியா, பாரீஸ் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து பயங்கரவாதத்தை ஒழிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. ஐ.எஸ். தாக்கம், தனி மனித பயங்கரவாத முயற்சி மறைமுகமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

இதுவரை 23 இந்தியர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளதாக தகவல். 2004-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், சில இளைஞர்கள் ஐ.எஸ்.ஸுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பனியன்களை அணிந்து புகைப்படம் வெளியிட்டது தொடர்பாக, அந்த பனியன்களை தயார் செய்த திருப்பூரைச் சேர்ந்தவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தது.

2013-ஆம் வருடம் சிங்கப்பூரிலிருந்து குல் முகமது மரிக்கார் என்பவருக்கு ஐ.எஸ்.ஸுடன் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். ஹைதராபாதைச் சேர்ந்த அப்சா ஜமீன் என்ற பெண்மணி ஐ.எஸ்.ஸுக்கு ஆள் சேர்ப்பதாக தகவல் கிடைத்து. இந்த வருடம் காவல் துறை அவரை கைது செய்தனர்.
கடந்த வருடம் மகாராஷ்ட்டிர மாநிலம் கல்யாண் நகரிலிருந்து நன்கு படித்த இளைஞர்கள் ஐ.எஸ்-இல் சேர்ந்தது, இவை தனி மனித பயங்கரவாதத்தின் வெளிப்பாடுகள்.

ஏழ்மை, சமுதாயப் புறக்கணிப்பு, காவல் துறை கெடுபிடி போன்ற காரணங்களால் இளைஞர்கள் பயங்கரவாத பிரசாரங்களால் கவரப்படுகிறார்கள் என்பதுடன், வசதியான இளைஞர்களையும் இணையதளம் மூலம் ஐ.எஸ். தன் பக்கம் இழுக்கிறது என்பது நிதர்சன உண்மை. வாட்ஸ்அப் போன்ற சேவைகள் மூலம் உடனே அழியக் கூடிய ரகசியக் குறியீடுகள் அடங்கிய தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றைக் கண்காணிப்பது அமெரிக்க புலனாய்வுப் பிரிவிற்கே பெரிய சவாலாக உள்ளது.

நம் நாட்டில் ரகசியக் குறியீடு செய்திகளை உடனே அழிக்கக் கூடாது என்ற விதியை சமூக ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள் ஏதோ கருத்துச் சுதந்திரம் பாதித்து விட்டதாக. இதைத்தான் பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்ற சர்ச்சையை எதற்கெடுத்தாலும் இழுத்துக் கொண்டு போனால் சுமுகமாக இருக்கும் சமுதாயத்தில் கலக்கம் ஏற்படும். அதுதான் பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழல். பாரீஸ் தாக்குதலைக் கண்டிக்காதவர்கள், பயங்கரவாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் அறிவு ஜீவிகள் நம் நாட்டில் உள்ளனர் என்பது வேதனை.

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்போல தகவல்கள் இணைய தளத்திலும், செல்லிடப்பேசிகளிலும் பரிமாறப்படுகின்றன. விக்கிலீக் ஸ்னொடென் விவகாரத்திற்குப் பிறகு ஈ-மெயிலில் தொடர்பு கொள்வது பயங்கரவாத அமைப்புகளால் தவிர்க்கப்படுகிறது. தேவையான தகவலை தோண்டியெடுப்பது வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவதற்கு ஒப்பானது.

பயங்கரவாதிகள் பலமுறை தோற்கலாம், ஆனால், பாதுகாப்புப் படை பயங்கரவாதத்தை முறியடிக்க பல முறை வெற்றி பெற்றாலும், ஒரு தோல்வி எல்லா வெற்றியையும் அழித்துவிடும். கணினி பொத்தானைத் தட்டினால் பயங்கரவாதம் அழைப்பு விடுக்கிறது. எல்லைக் கடந்து இணைய தளம் மூலம் புனையப்படும் பயங்கரவாதக் கணைகள் முறியடிக்கப்பட வேண்டும்.

ஆர். நடராஜ்

ஈழ நாடு
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல