உள்நாட்டுப் போரால் அலைக்கழிக்கப்படும் சிரியாவின் அலிப்போ நகரைச் சேர்ந்த அகமது அப்துல் ஹமீத் (21) என்ற பாலஸ்தீனர் எப்படியாவது கடல் கடந்து ஐரோப்பாவுக்குத் தப்பிவிட வேண்டும் என்று மாதக்கணக்காக முயற்சி செய்தார். எல்லாம் தோல்வியில் முடிந்தது. ஆள்கடத்தும் தரகர்கள் அவரை ஏமாற்றிவிட்டனர். அவர் சென்ற படகு மேற்கொண்டு நகர முடியாமல் கடலில் தத்தளித்தது. எனவே, கரைக்கு நீந்தி வந்தார். பிறகு, போலீஸிடம் சிக்கினார். கையில் உள்ள எல்லாவற்றையும் இழந்து தவித்தார்.
இந்த ஆண்டு கோடைப் பருவத்தில் நிலைமை மாறியது. துருக்கியைச் சேர்ந்த ஆள் கடத்தும் தரகர், ஹமீதை வேலைக்கு அமர்த்திக்கொண்டு, தப்பிக்க நினைக்கும் அகதிகளையும் வெளிநாட்டவர்களையும் பிடித்துவரும் முகவராக அவரை நியமித்தார். இப்போது ஹமீது அந்த வட்டாரத்தில் பிரபலமாகிவிட்டார். அவருடைய போனில் ஓயாமல் மணி அடிக்கிறது. எங்கே வர வேண்டும், கடலில் போவதற்கு எவ்வளவு கட்டணம் என்ற விவரத்தையெல்லாம் ஒவ்வொருவருக்கும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இப்போது ஒரு நாளைக்குத் தரகாக மட்டும் 4,000 டாலர்கள் சம்பாதிக்கிறார். ‘சில வாரங்கள் யாரும் வர மாட்டார்கள், பிறகு ஓய்வே இருக்காது’ என்கிறார்.
பணம் புரளும் தொழில்
துருக்கி வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் போகத் துடிக்கும் லட்சக்கணக்கான அகதிகளால் கோடிக்கணக்கான பணம் புரளும் தொழிலாகிவிட்டது ஆள் கடத்தல். துருக்கியின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்மிர், இப்போது மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. வீதிகளில் அகதிகளிடம் இடைத்தரகர்கள் ஓயாது பேரம் பேசுகின்றனர். கடைவீதிகளில், துணிக்கடை வாசல்களில் கடல் பயணத்தின்போது நீரில் மூழ்காமலிருக்க அணிந்துகொள்ளும் உயிர் காக்கும் பெல்ட்டுகள் நூற்றுக்கணக்கில் தொங்கவிடப்பட்டுள்ளன. தரகர்கள் மட்டுமல்ல; நகரவாசிகளுக்கும் பணம் பல வழிகளிலும் கொட்டுகிறது. சிவில் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் என்று பலரும் சம்பாதிக்கின்றனர். உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாக கடற்படை, ராணுவத்தினரும்கூட இதையெல்லாம் கண்டும் காணாததுபோலச் செல்கின்றனர்.
தற்காலிகப் பயணக் காப்பீடு
மக்கள் தங்களை நம்பி வர வேண்டும் என்பதற்காகக் கடத்தல்காரர்கள், தற்காலிகப் ‘பயணக் காப்பீடு’ அலுவலகத்தைக்கூட நடத்துகின்றனர். படகில் செல்ல விரும்புவோர் பணத்தை இந்தக் காப்பீட்டு அலுவலகங்களில் அளித்து, ரகசிய எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும். போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, தங்களை ஏற்றிவந்த முகவரிடம் அந்த ரகசிய எண்ணைத் தருவார்கள். அதை அவர் அங்குள்ள கிளை அலுவலகத்தில் கொடுத்துப் பணம் பெற்றுக்கொள்வார். பயணம் பாதியில் நின்றால், மீண்டும் பணம் வாங்காமல் ஏற்றிச் செல்வார்கள். விபத்தில் இறந்துவிட்டால் நஷ்டஈடு கிடையாது. அவர்கள் சொல்லும் காப்பீடு என்பது ‘வாங்கிய பணத்துக்கு நிச்சயம் உங்களை வேற்று நாட்டில் கொண்டுபோய்ச் சேர்ப்போம்’ என்பதுதான். ஒரு ஆளுக்கு 1,200 டாலர்கள் வாங்குகிறார்கள். ஒவ்வொரு படகுக்கும் ஒரு பயணி ‘பைலட்’ ஆகத் தேர்வு செய்யப்படுகிறார். அவர் அகதிகளில் ஒருவர். அவருக்கு மட்டும் கட்டணம் கிடையாது. (அவர்தான் மற்றவர்களை அழைத்துவர உதவுவார்). குழந்தைகளுக்குப் பாதிக் கட்டணம், சிறு குழந்தைகளுக்கு இல்லை. ஒரு பயணி இந்தப் படகிலேயே 3 நாட்களுக்கு மேல் பயணித்தும் கரை சேர முடியாவிட்டாலும் கூட அவர் கொடுத்த தொகை திருப்பித் தரப்படப் மாட்டாது. அதே சமயம், பயணம் பாதியில் தடைப்பட்டுவிட்டது என்றால், 50 டாலரைக் கழித்துக்கொண்டு மிச்சத் தொகையைத் தந்துவிடுகிறார்கள். ஆனால், போலிகள் தலைமறைவாகிவிடுகிறார்கள்.
உயிர் காக்கும் பெல்ட்டுகள் என்று கடைகளில் விற்கப்படும் சாதனங்கள் தரம்குறைவானவை. நுரை ரப்பரால் உள்ளூரிலேயே தயாரிக்கப்படுபவை. நீரில் மிதப்பதற்காக வாங்கும் இவையோ நீரை உறிஞ்சி உப்புகின்றன. இவற்றை அணிந்தும் பலனில்லை. விலை 13 டாலர்கள். ஆனால், துரும்பையாவது பற்றிக்கொண்டு கடலைக் கடந்துவிடத் துடிக்கும் மக்களுக்கு இதையெல்லாம் கவனித்துப் பார்க்க நேரமும் மனமும் இல்லை.
படகுகள் ரப்பரால் செய்யப்பட்டவை. காற்றடித்துப் பெரிதாக்குகின்றனர். பெரிய கப்பல்களில் நெருக்கடி நேரத்தில் பயணிகளைச் சிறிது தொலைவு வரை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படுபவை. கடல் கொந்தளிப்புகளை இவற்றால் சமாளிக்க முடியாது. சில வேளைகளில் தலைகீழாகக்கூடக் கவிழ்ந்துவிடும் அல்லது நிலைகுத்தி நின்றுவிடும். சுமார் 30 அடி நீளமுள்ள இந்தப் படகுகளில் சராசரியாக 45 பேரை ஏற்றுகின்றனர். மொத்தமாக 60,000 டாலர்கள் வசூலாகிறது. இதில் அதிகாரிகள் மாமூல், கடற்படை மாமூல், போலீஸ் மாமூல், டீசல் செலவு, படகோட்டிகளின் சம்பளம் என்று எல்லா செலவுகளும் போக 30,000 டாலர்கள் நிகரமாக நிற்கிறது.
போலீஸும் ராணுவமும் துணை
பயணமெல்லாம் இரவு நேரங்களில்தான். துருக்கியிலிருந்து கிரேக்க நாட்டுக்குக் கடலில் செல்ல ஒரு மணி நேரப் பயணம்தான். வானிலை சரியாக இருக்க வேண்டும். முகவர்கள் தங்களிடம் பணம் கொடுத்தவர்களை பஸ் அல்லது டாக்ஸிகளில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியே கடலோரத்தில் படகு வரக்கூடிய இடத்துக்கு இருட்டில் அழைத்துச் செல்கிறார்கள். அங்கேயுள்ள படகுத் துறையில் ஆட்கள் ஏற்றப்படுகிறார்கள். போலீஸாரும் ராணுவத்தினரும் அந்தப் பக்கம் நடமாடுவதில்லை.
இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்களில் சுமார் 5 லட்சம் பேர் துருக்கி வழியாகத்தான் சென்றனர். இந்தத் தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதால் துருக்கியர்கள் இதை நிறுத்துவதாக இல்லை. அகதிகளும் தங்களுடைய நாட்டில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று அஞ்சி வெளியேறுவதால், இத்தொழில் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை. இஸ்மிர் நகர் வழியாக வெளியேற அன்றாடம் நூற்றுக்கணக்கான அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களால் கிடைக்கும் வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இழக்க விரும்பாமல் அரசே ஆதரிப்பதைப் போலத் தெரிகிறது. மிகப்பெரிய அளவில் ஆட்களை வைத்துக் கடத்தல் தொழில்செய்யும் கும்பல் இதை வைத்துக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறது. சொந்த நாட்டில் இருக்கும் வீடு, கடைகள், நிலம், நகைகள், வாகனங்கள், கால்நடைகள் போன்றவற்றை விற்றுவிட்டுப் பணத்துடன் குடும்பம் குடும்பமாக இங்கே வருகின்றனர். ஐரோப்பிய நாடு எதிலாவது அகதியாகிவிட்டால், இந்தப் பணத்தை அங்கே சம்பாதித்துவிடலாம் என்கின்றனர்.
விலைபோகாத சிறுநீரகம்
அகதிகளை ஏற்றிவர துருக்கிக்கு ஜெர்மனி கப்பல்களை அனுப்புகிறது என்று யாரோ வதந்தியைப் பரப்ப, சிரியாவில் நல்ல வேலையிலிருந்த இப்ராஹிம் அலி பாஷா அதை நம்பி வேலையை விட்டுவிட்டுத் தன் நண்பருடன் அவருடைய குடும்பத்தாரையும் தன் குடும்பத்தாரையும் அழைத்துக்கொண்டு இஸ்மிர் கடற்கரைக்கே வந்துவிட்டார். இங்கிருந்து ஐரோப்பா போக 11,000 டாலர்கள் தேவை. ஆனால், அவ்வளவு பணம் இல்லை என்று கவலையோடு கடற்கரையில் முகாமிட்டிருக்கிறார். தன்னுடைய சிறுநீரகத்தை விற்கக்கூடத் தயார் என்று அறிவித்திருக்கிறார். ஆனால், யாரும் வாங்க முன்வரவில்லை.
குடியேறுவோர்களுக்கான சர்வதேச சங்கத்தைச் சேர்ந்த லடோ விலவா, துருக்கியில் நடைபெறும் இந்தக் கொடுமைகளைக் கண்டு மனம் கொதிக்கிறார். “அவர்கள் மக்களுடைய உயிர்களுடன் விளையாடுகின்றனர். இரவில் கூட்டிச் செல்லும் அவர்கள், நிலம் வந்துவிட்டது என்று கூறி கடலிலேயே இறக்கிவிட்டுவிடுகின்றனர். இந்தப் படகுகள் பயணத்துக்கோ, மீன்பிடிக்கவோ, உல்லாசமாகச் சென்றுவருவதற்கோ தகுதியற்றவை. கடத்தல் தொழிலுக்குத்தான் பயன்படுத்த முடியும்” என்று வருத்தப்படுகிறார்.
காலையில் கிழக்கு வெளுத்து சூரியன் உதிக்கும் நேரத்தில், இந்தப் படகுகளில் ஒன்று, கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் என்ற தீவை நெருங்குகிறது. இஸ்மிர் நகரிலிருந்து முதல் நாள் இரவு புறப்பட்ட மாலிக் அல் சாலே (21) என்ற இளைஞர் படகிலிருந்து குதித்து தரையை முத்தமிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறார். தன்னுடைய முயற்சி வெற்றி பெற்ற நிறைவு அவருக்கு. கிழக்கு சிரியாவைச் சேர்ந்த அவர் தங்கள் ஊரை ஐஎஸ் படைகள் நெருங்கிவிட்டன என்று கேள்விப்பட்டதும் சகோதரர், 2 சகோதரிகள் அவர்களுடைய 2 குழந்தைகளுடன் வெளியேறி துருக்கி வந்தார். இப்போது கிரேக்கம் வந்து சேர்ந்துவிட்டார்.
“அய்லான் குர்தி என்ற குழந்தை கடற்கரை மணலில் முகம் புதைந்து இறந்துகிடந்ததைப் பார்த்த பிறகும் இப்படி வருகிறீர்களே” என்று கேட்டபோது, “என்ன செய்வது, உள்நாட்டில் இருந்தால் இதைவிட மோசமான வகையில் மரணம் ஏற்பட்டிருக்கும். அந்தப் புகைப்படங்களைப் பார்த்தோம். ஒருவிதமான மரணத்திலிருந்து தப்பிக்க இன்னொரு வகை மரணத்தை நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்று பதில் அளித்தார். அகதிகளாக வருவோரின் இந்த மனநிலையால்தான் இந்த அலை ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கிறது.
சுருக்கமாகத் தமிழில்: சாரி, © ‘தி நியூயார்க் டைம்ஸ்’
tamil.thehindu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக