சனி, 13 மே, 2017

மோடிஎம்கே

1995 டிசம்பர் 12-ம் தேதி.

44-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக நேயர்களின் கேள்விகளுக்கு ரஜினி அளித்த பதில்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. அதில் வந்த ஒரு கேள்வி பதில் இது.

‘‘வெடிகுண்டு கலாசாரம் தொடங்கி வன்முறைகள் வரை பேசுகிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியின் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்?’’



‘‘அ.தி.மு.க கட்சி மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. இப்ப இருக்கிறது ஏ.டி.எம்.கே இல்லீங்க... ஜெ.டி.எம்.கே’’ என்றார் ரஜினி.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989 முதல் 2016 வரை 27 வருடங்களாக ஜெ.டி.எம்.கே-யாக இருந்த ஏ.டி.எம்.கே., ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ‘மோடி.எம்.கே’ ஆகிக்கொண்டிருக்கிறது. அப்போலோவுக்குள் ஜெயலலிதா நுழைந்த அந்தத் தருணத்தில் தொடங்கியது இந்த மாற்றம்.

திரைமறைவில் கவர்னர் ஆட்சி?!

செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார் மகாராஷ்ட்ரா கவர்னர் வித்யாசாகர் ராவ். முழுமையாக எட்டு மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு இன்று வரை நிரந்தர கவர்னர் நியமிக்கப்படவில்லை. கவர்னர் ஏன் நியமிக்கப்படவில்லை என்று காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு, இங்கே பலவிஷயங்கள் வெளிப்படையாகவே நடக்கின்றன.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில்தான் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை அழைத்து ஆலோசனை நடத்தினார் வித்யாசாகர் ராவ். (அந்த ராம மோகன ராவின் வீட்டிலேயே, பிறகு வருமானவரிச் சோதனை நடத்தினார்கள். ) சீனியர் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அழைத்துப் பேசினார் கவர்னர். பொறுப்பு முதல்வர், தற்காலிக முதல்வர் எனப் பேச்சுகள் கிளம்பிய நிலையில் காவிரிக்காக ஆலோசனை நடந்ததாகச் சொன்னார்கள். அரசின் கொள்கை முடிவுகளில் கவர்னர் தலையிட முடியாது. முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தால், அமைச்சரவை கூடி ஒரு முடிவை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அதைத் தாண்டி ‘காவிரிப் பிரச்னைக்காகப் பேசினோம்’ என கவர்னர் சொன்னதன் அர்த்தம் மத்திய அரசின் கரம் ராஜ்பவன் வழியாக நீள்கிறது என்பதுதான்.

மோடியின் கைபொம்மைகள்!

ஜெயலலிதா இனி உடல்நிலை சரியாகி ஆட்சி செய்ய முடியாது என்று தெளிவாகத் தெரிந்துகொண்ட நிலையில்தான் கவர்னர் மூலம் பொறுப்பு முதல்வரை நியமிக்க வலியுறுத்தியது மத்திய அரசு. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருவர்கள். பன்னீர்செல்வத்தையே டிக் அடித்தது டெல்லி. பன்னீரை நம்பிக்கைக்குரியவராகப் பார்த்தார் மோடி. பன்னீர்செல்வத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற சாம, தான, பேத, தண்ட என அத்தனை வழிகளையும் கையாண்டது டெல்லி. அதற்குக் கைமேல் பலன்.

சோதனை மேல் சோதனை!

‘பணமதிப்பு நீக்க’ அறிவிப்பின் எதிரொலியாகக் கர்நாடகாவில், நெடுஞ்சாலைத் துறை அரசு அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமானவரித் துறையினர் சோதனை, தமிழகத்தின் ஈரோடு, சேலம் வரையில் நீண்டது. ஈரோட்டில் ‘ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கம்பெனி’ என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்திவந்த ராமலிங்கமும் அவரின் மகன்கள் சந்திரகாந்த், சூர்யகாந்த் குடும்பத்தினரும் குறிவைக்கப்பட்டார்கள். இவர்களின் நிறுவனம் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகள் எல்லாம் சோதனையில் தப்பவில்லை. 5.7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சந்திரகாந்த் கைது ஆனார். பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியம் தன்னுடைய ஒரு மகளை ராமலிங்கம் வீட்டிலும் இன்னொரு மகளை எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதனால், எடப்பாடி பழனிசாமியும், ராமலிங்கமும் சுப்பிரமணியமும் உறவினர்கள் ஆனார்கள்.

கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் நெருக்கமானவர் என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த தகவல். ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமிக்கும் படுநெருக்கம். சேகர் ரெட்டி பங்குதாரராக இருக்கும் ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுப்பிரமணியம் பங்குதாரராக உள்ளார். இந்தச் சுப்பிரமணியத்தின் மகள் திவ்யாதான் எடப்பாடி பழனிசாமியின் மருமகள். இப்படியான சிக்கலில் எடப்பாடியின் பிடியும், மத்திய அரசின் கையில் இருப்பதால் அவரும் தஞ்சாவூர் பொம்மையாக்கப்பட்டார்.

சேகர் ரெட்டி அலுவலகங்களில் ரெய்டு நடக்க... அது கைதுகள் வரை போனது. அந்த லிங்க்கில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடும் தப்பவில்லை. துணை ராணுவத்தை வைத்து தலைமைச் செயலகத்திலேயே சோதனை போட்டார்கள். அந்தச் சோதனை நடந்தபோது சேகர் ரெட்டியின் நெருங்கிய நண்பர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக அப்போது கோட்டையில்தான் இருந்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை விமர்சனத்துக்கு உள்ளானபோது, பன்னீர் மௌனியாக இருந்தது ஏன்? தனக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது எனப் பயந்தாரா அல்லது பணியவைக்கப்பட்டாரா? ஓ.பி.எஸ் ஓகே சொல்லாமல் வருமானவரித் துறை கோட்டைக்குள் நுழைந்திருக்க முடியுமா? ‘‘எனது அலுவலகத்துக்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நுழைந்தது. இதைத் தடுக்காமல் எங்கே போனது தமிழக அரசு. இதை எதிர்க்க அரசுக்குத் துணிச்சல் இல்லை’’ என ராம மோகன ராவ் மீடியாவிடம் சீறினார். இந்தக் குரலுக்கு விளக்கவுரை தேவையில்லை. சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் மணல் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோரை எல்லாம் அரஸ்ட் செய்தவர்கள் பன்னீரை மட்டும் பன்னீர் தெளித்துவிட்டது ஏன்?

சேகர் ரெட்டியோடு நெருக்கமாக இருந்த விஜயபாஸ்கரை அன்றைக்கு நெருக்கவில்லை. காரணம், பன்னீர் அமைச்சரவையில் அவர் இருந்தார். எடப்பாடி அமைச்சரவைக்கு ஷிஃப்ட் ஆனபிறகு, விஜயபாஸ்கரைவிட்டு வைக்கவில்லை. பன்னீர்செல்வம், சசிகலா அணியினரோடு மோதியபோது... அவர் குறிப்பிட்டுப் பேசியது விஜயபாஸ்கரை மட்டும்தான். ‘‘ஜெயலலிதாவின் மரணம் பற்றி எல்லா விஷயமும் ‘ஆல் ரவுண்டர்’ விஜயபாஸ்கருக்குத் தெரியும். வெளிநாட்டுச் சிகிச்சையைத் தடுத்தவர் விஜயபாஸ்கர்தான்’’ என ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். இன்று, விஜயபாஸ்கரும் அவரின் குடும்பத்தினரும் வருமானவரி விசாரணைகளில் பிழிந்து எடுக்கப் படுகின்றனர்.

ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள்!

ஜெயலலிதா எதிர்த்துவந்த உதய் மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை இப்போதைய அ.தி.மு.க அரசு ஆதரிப்பதற்குக் காரணம் என்ன? நீட் தேர்வை எதிர்ப்பதில் பெரிய அக்கறையையும் எடுத்துக்கொள்ளவில்லை. மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டப் பணிகள் தொடங்கி, அவை நடந்துகொண்டிருக்கும்போது அதைக் கிடப்பில் போட்டவர் ஜெயலலிதா. அதை, அன்றைக்கு நியாயப்படுத்திப் பேசினார்கள் ஜெயலலிதாவின் அமைச்சர்கள். நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டதும் அங்கேயும் இந்த வாதத்தை வைத்தார்கள். அன்றைக்கு கூவத்தில் தண்ணீர் போக்குவரத்துத் தடைபடும் என்றவர்கள், இன்றைக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதா துணிச்சலோடு எதிர்த்தார். இவர்கள் பயத்தோடு ஆதரிக்கிறார்கள். தலைவிக்குத் துரோகம் செய்தாலும் பரவாயில்லை. டெல்லி தலைமைக்குக் கட்டுப்பட்டால் போதும் என்கிற நிலைக்கு அ.தி.மு.க-வை நிறுத்தியிருக்கிறார்கள்.

பன்னீர்செல்வம் மீது தெளிக்கப்பட்ட பன்னீர்!

‘மிஸ்டர் பணிவு' என்கிற இமேஜை பிப்ரவரி 7-ம் தேதி தகர்த்தெறிந்தார் பன்னீர்செல்வம். அன்றுதான் ஜெயலலிதா சமாதியில் பன்னீர் சீறி எழுந்த நாள். அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட தினத்தில் இருந்து சசிகலாவை முதல்வர் ஆக்குவது வரையில் உடனிருந்த பன்னீர்செல்வம், முகாம் மாறியதற்குப் பின்னணி என்ன? சசிகலா பொதுச் செயலாளர் ஆக்கப்பட்ட நேரத்தில் ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற ஆசை நிச்சயம் நிறைவேறாது’ என்று சசிகலாவுக்கு ஆதரவாக சொன்ன பன்னீரை, குழப்பியது யாராக இருக்கும் எனப் பட்டிமன்றம் நடத்த வேண்டியதில்லை.

முதல்வர் ஆவதற்காக கவர்னர் வித்யாசாகர் ராவின் சிக்னல் கிடைப்பதற்காக சசிகலா காத்திருந்தார். அந்தக் கால அவகாசம் பன்னீரை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பதற்காகத் தரப்பட்டதுதானே! அது கடைசியில் பயன் தராமல்போனது. ஆனாலும், மோடியின் பன்னீர் பாசம் குறையவில்லை. பன்னீர் தனிக் கச்சேரி நடத்த சகல உதவிகள் நடந்துகொண்டுதான் இருந்தன. சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது, இரட்டை இலைக்கு உரிமை எனத் தேர்தல் கமிஷனில் முறையிடுவதுத் தொடங்கி பன்னீர் அணியின் வேகம் குறையவில்லை. மத்திய அரசு பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்தது, ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வேட்பாளர் ஆனது, இரட்டை இலைச் சின்னம் முடக்கம், விஜயபாஸ்கர் உள்பட முக்கிய இடங்களில் வருமானவரிச் சோதனை, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, இரட்டை இலைக்குப் பேரம் பேசியதாக தினகரன் மீது வழக்கு, கைது என அடுத்தடுத்து நடந்த இந்த அதிரடிகளுக்குப் பின்னால் யார் இருந்தது, யார் இயக்கினார்கள் என எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பின. பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த தினகரனின் ஃபெரா வழக்குகள் தூசி தட்டப்பட்டுத் தினமும் நடக்க ஆரம்பித்தது எல்லாமே தினகரனின் என்ட்ரிக்குப் பிறகுதான்.

சசிகலா பொதுச் செயலாளர் ஆனது; முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டது; அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்காமல் இழுத்தடித்தது; தினகரன் வழக்குகளைத் துரிதப்படுத்தியது; பண விநியோகப் புகாரில் தினகரனுக்கு வேண்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது; கடைசியில் திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்டது வரையில் ஒரு விஷயம் தெளிவாகிறது.

சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவதை பன்னீர்செல்வம் அணி விரும்பாததைவிட பா.ஜ.க-வுக்கு இது பிடிக்க வில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்ல... அவர்களின் ஆதரவு ஆட்சிகூட வேண்டாம் என்பதில் காட்டிய பிடிவாதம்தானே, ‘‘தினகரன் குடும்பத்தைக் கட்சியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் ஒதுக்கிவைக்கிறோம்’’ என்கிற அறிவிப்பு வரக் காரணம்.

பா.ஜ.க பிளான்!

கேரளாவில் தற்போது முக்கிய பொறுப்பில் இருப்பவர்தான் பன்னீர் அணி, எடப்பாடி அணிகள் இணைய முழு முயற்சி எடுத்தவர். ஆனால், இந்த இணைப்பு நடவடிக்கையின்போது அ.தி.மு.க கட்சிக்குள்ளேயே இன்னும் பல அணிகள் உருவாகும் நிலை உருவானதால் முயற்சி கைவிடப்பட்டது. பன்னீர்செல்வத்தை அடுத்து எடப்பாடியை கன்ட்ரோலுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடந்தன. ஆனால் இப்போது மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வுகள் துறை அமைச்சர் தங்கமணி மூலம் காய் நகர்த்தல்கள் நடக்கின்றன. கடந்த மே 4-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார் அமைச்சர் தங்கமணி. ரகசியமாக நடந்த இந்தச் சந்திப்பு நான்கு நாள்கள் கழித்துதான் மரியாதை நிமித்தமான சந்திப்பு என அதிகாரபூர்வமாக அறிவித்தது தமிழக அரசு. மீண்டும் தங்கமணியை டெல்லிக்கு அழைத்திருக்கிறார் மோடி. எடப்பாடி, தம்பிதுரைக்கு டெல்லி சந்திப்பு மறுக்கப் பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பற்றிய கோப்புகள் டெல்லி போயிருக்கிறது. அரசு கேபிள் டிவி டிஜிட்டலைசேஷன் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக அடுத்த புயல் டெல்லியில் இருந்து பரவியிருக்கிறது. மோடி அலையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

மோடிஎம்கே ஆகிகொண்டிருக்கிறது ஏடிஎம்கே!

-vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல