செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

ஐந்து முறை முதல்வராக பதவிவகித்த கருணாநிதி, தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1957 - 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய முத்துவேல் கருணாநிதி தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பிறந்தார்.

சிறு வயதிலிருந்தே கலைகளிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்த கருணாநிதி, நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் உரைகளால் கவரப்பட்டு, 14 வயதிலேயே அரசியலில் கவனத்தைத் திருப்பினார். தவிர, பள்ளிக்கூடத்தில் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்த பானகல் அரசர் குறித்த 50 பக்க நூலும் அவரை வெகுவாக கவர்ந்தது.

கட்டாய இந்தி கல்வியை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், 'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்' என்று முழக்கமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி.

17 வயதிலேயே தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் அமைப்பு, கையெழுத்துப் பத்திரிகை என தீவிரமாக பணியாற்றிய கருணாநிதி, பிற்காலத்தில் தன் தலைவனாகவும் தமிழகத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர்களில் ஒருவராகவும் உருவெடுத்த சி.என். அண்ணாதுரையை 1940களின் துவக்கத்தில் சந்தித்தார்.

1949ல் பெரியாருடன் முரண்பட்டு அவரது பிறந்த நாளன்றே புதிதாக ஒரு கட்சியை சி.என். அண்ணாதுரை துவங்கியபோது, அவருக்கு மிக நெருக்கமான துணையாகியிருந்தார் மு. கருணாநிதி. 25 வயதே நிரம்பியிருந்த கருணாநிதி கட்சியின் பிரசாரக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அதே காலகட்டத்தில், ராஜகுமாரி படத்தில் துவங்கி சினிமா வசனகர்த்தாவாகவும் கோலோச்சிய கருணாநிதி, வசனம் எழுதிய திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை தமிழகத்தில் வெற்றிகரமாக விதைக்க ஆரம்பித்தன. 1952ல் அவரது வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது.

1953ல் அவரது முக்கிய முதல் போராட்டமாக, கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் கண்டித்து, மீண்டும் கல்லக்குடி என்ற பெயரை மீட்டெடுக்க போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி 6 மாதம் சிறைசென்றபோது, கட்சிக்குள் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தார்.

மலைக்கள்ளன், மனோகரா படங்களின் மூலம் திரையுலகிலும் கருணாநிதி உச்சத்திற்கு சென்றார்.

தோல்வியை சந்திக்காதவர்

1957ல் நடந்த தேர்தலில் தி.மு.க. முதல் முறையாகப் போட்டியிட்டபோது அதில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாநிதி, 2016ல் திருவாரூர் தொகுதியில் வென்றதுவரை, தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோற்றதில்லை.

1963ல் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற கருணாநிதி, 1967ல் கட்சி ஆட்சியைப் பிடித்தபோது, முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, நெடுஞ்செழியன் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில், பொதுப் பணித்துறை - போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் பேருந்துகளை தேசியமயமாக்கி, மூலைமுடுக்கெல்லாம் பேருந்து வசதியை ஏற்படுத்தியது மிக முக்கியமான சாதனையாக அவருக்கு அமைந்தது.

ஆட்சியைப் பிடித்த இரண்டே ஆண்டுகளில் 1969ல் முதல்வர் அண்ணாதுரை மறைந்தவுடன் புதிய முதல்வராகப் பதவியேற்ற கருணாநிதி, தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கினார்.

நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்தது, நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப்பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, கை ரிக்சாவைத் தடைசெய்தது என தன்னுடைய 19 வருட ஆட்சியில், தமிழகத்தை சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றியமைத்தார் கருணாநிதி.

இட ஒதுக்கீட்டில் முக்கியப் பங்கு

அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தியதில் கருணாநிதியின் பங்கு மிக முக்கியமானது.

கருணாநிதி தலைமையின் கீழ் கட்சி இரண்டு முறை மிகப் பெரிய பிளவைச் சந்தித்திருக்கிறது. 1972ல் தி.மு.கவின் பொருளாளராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் கட்சியை உடைத்து, தனிக்கட்சி துவங்கி, அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தார். இதற்குப் பிறகு 1993ல் வைகோ தலைமையில் கட்சி மீண்டும் ஒரு பிளவைச் சந்தித்தது. அப்போது பெரும் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள் தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றனர். இருந்தபோதும், இந்த பிளவுகளில் இருந்து கட்சியை மீட்டெடுத்து, அடுத்த தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி.

தேசிய அரசியலில்

1989ல் தேசிய முன்னணி அரசில் பங்கேற்றதன் மூலம் தேசிய அரசியலில் தனது கணக்கைத் துவங்கிய கருணாநிதி, 1998லிருந்து 2014ஆம் ஆண்டுவரை மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கட்சியாக தி.மு.கவை வைத்திருந்தார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 12 அமைச்சர்கள் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றனர். தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைகளில் தி.மு.க அமைச்சர்கள் இடம்பெற்றனர்.

ஆனால், இந்த காலகட்டத்தில் கருணாநிதி கடும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. பங்கேற்றது, அக்கட்சியின் வரலாற்றில் ஒரு சிக்கலான, விமர்சனத்திற்குரிய தருணமாகவே பார்க்கப்படுகிறது. தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி,தமிழ் மக்களைக் காப்பாற்ற போதுமான அளவு எதிர்வினை ஆற்றவில்லையென்ற குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மாநில உரிமைக்கான குரல்

கருணாநிதி முதலமைச்சராக பங்கேற்ற காலத்திலிருந்தே மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சி ஆகியவை குறித்து தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். முதல்வராக பதவியேற்றதும் 1969ல் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் அமைத்த குழு, இந்தியாவின் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் இருக்கவேண்டிய உறவைச் சுட்டிக்காட்டியது. கருணாநிதி செய்த முயற்சிகளின் காரணமாகத்தான் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமை வழங்கப்பட்டது.

1996-2001ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதியின் ஆட்சிக்காலம், தி.மு.க. ஆட்சியின் சிறப்பான தருணங்களில் ஒன்றாக எப்படிப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல 2006-2011 ஆட்சிக் காலம் கருணாநிதி கடும் விமர்சனங்களுக்குள்ளான காலமாகவும் அமைந்தது. 2016ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போனதற்கு, இந்த காலகட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே முக்கிய காரணமாக அமைந்தன.

கலைத்துறையில் பங்கு

அரசியலில் மட்டுமல்லாமல், கலைத் துறையிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 1947ல் வெளியான ராஜகுமாரியில் துவங்கி 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை 64 வருடங்கள் சினிமாத் துறையில் செயல்பட்டிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத சாதனை இது. சினிமா தவிர, தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்ந்து இயங்கிவந்த கருணாநிதி, தன் உடல்நலம் குன்றும்வரை கலைஞர் டிவியில் வெளியான ராமானுஜம் தொடருக்கு வசனங்களை எழுதிவந்தார்.

எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் அவருடைய சாதனைகள், யார் ஒருவரையும் பொறாமையடையச் செய்யும். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கும் கருணாநிதி, தனது தொண்டர்களுக்கு எழுதிவந்த 'உடன்பிறப்பே' கடிதத் தொடர், உலகின் மிக நீளமான தொடர்களில் ஒன்று.

இந்திய விடுதலைக்கு முன்பாக அரசியல் வாழ்வைத் துவங்கிய தலைவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் கருணாநிதியின் மரணம், ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது.

BBC Tamil 

 கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

 கருப்புக் கண்ணாடியும், மஞ்சள் சால்வையும் கருணாநிதியின் அடையாளமானது எப்படி?


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல