ஒற்றை விளையாட்டிற்காக ஒட்டுமொத்தமாக 64 செல்போன்களை தாய்வானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வாங்கியிருக்கின்றார்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் விளையாட்டு (கேம்) அடிமையாளர்கள் ஏராளம். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், செல்போன்மீதான மோகம் அதிகரிப்பதற்கே ஒரு சில செயலிகளே காரணமாக உள்ளது.

போக்கிமான் (Pokemon) விளையாட்டில் இருக்கும் அதிக ஆர்வத்தின் காரணமாக முதியவர் ஒருவர் 60க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன்களை வாங்கி குவித்துள்ளார். இந்த விளையாட்டை பப்ஜி மற்றும் லூடோ போன்று இருந்த இடத்திலேயே விளையாட முடியாது என்ற காரணத்தினால் அவையனைத்தையும் சைக்கிளில் பொருத்தியிருக்கின்றார்.
அதாவது, தன் வசம் இருக்கும் 64 செல்போன்களையும் சைக்கிள் ஒன்றில் உலோக ஸ்டாண்ட் அமைத்து அவற்றைப் பொருத்தியிருக்கின்றார். இதைத்தொடர்ந்து, அதில் பயணித்தவாறு தனக்கான டாஸ்க்குகளை நிறைவேற்றி வருகின்றார் அந்த முதியவர்.

முதியவரின் இந்த செயலால் அப்பகுதி வாசிகள் அவரை போக்கிமான் தாத்தா எனவே அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர். 71 வயதான இவரின் பெயர் சென் சேன்-யுவான் (Chen San-yuan) என கூறப்படுகின்றது. இவர் தற்போது புதிய தாய்பேய் நகரத்தில் வசித்து வருகின்றார்.
போக்கிமான் விளையாட்டை இவர் கடந்த 2018ம் ஆண்டிலிருந்தே விளையாடி வருவதாக கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் சுமார் 6 செல்போன்களில் விளையாட்டைத் தொடங்கிய அவர், இன்று 64 செல்போன்களுடன் விளையாட்டைத் தொடர்ந்து வருகின்றார்.
இந்த விளையாட்டை முதலில் சென் சேன்-யுவானின் (Chen San-yuan) பேரனே விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் கவரப்பட்ட போக்கிமான் தாத்தா, தன்னையும் அந்த விளையாட்டில் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளார். நாளடைவில் அதில் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றார்.

அவ்வாறு, போக்கிமான் கோ விளையாட்டைத் தொடங்கியவரே தற்போது உலகறியும் ஓர் நபராக மாறியிருக்கின்றார். இதற்காக அவர் மிகவும் சாதரணமான ஓர் மிதிவண்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றார். இதன் மூலமே ஒவ்வொரு நாளும் தனது விளையாட்டிற்கான இலக்குகளை அவர் நிறைவு செய்து வருகின்றார்.
இதற்காக தினந்தோறும் பல கிலோமீட்டர்கள் மிதிவண்டியில் பயணிப்பதாக அவர் கூறுகின்றார். இதன்மூலம் தனது டாஸ்க் மற்றும் உடல் ஆரோக்யத்தையும் சீராக வைத்திருக்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாகவே தினந்தோறும் போக்கிமான் விளையாட்டு மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வருவதாகவும் காரணம் கூறியுள்ளார்.
போக்கிமான் கோ ஓர் அமெரிக்கர் மற்றும் ஜப்பானிய நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். இதனை உருவாக்கியவர் ஜான்ஹாங்க். இந்த விளையாட்டு முழுக்க முழுக்க கூகுள் மேப்பை மையப்படுத்தி இயங்குவதால் தங்கள் நாட்டின் ரகசிய இடங்களை பிற நாடுகள் அறிந்துக் கொள்ளக் கூடும் என கூறி சீனா போன்ற ஒரு சில நாடுகள் மட்டும் போக்கிமான் கோ விளையாட்டிற்கு தடை விதித்திருக்கின்றன.

இருப்பினும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் விளையாட்டு பிரியர்களை போக்கிமான் கோ கவர்ந்திழுத்து வருகின்றது. தற்போது இந்த கேமை பல கோடி நபர்கள் விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டை விளையாடிவர்கள் ஒரே நேரத்தில் சாலையில் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிகழ்வுகள் கூட அரங்கேறியிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக