இரண்டு விசேட மசோதாக்கள் 1941 மார்ச் மாதம் சட்ட சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. ஒன்று குடிவரவைக் கட்டுப்படுத்தும் மசோதா. மற்றது நாட்டில் வாழும் இலங்கையரல்லா தோரைத் தனியான பதிவேட்டில் பதிவு செய்வதற்கான மசோதா. இவ்விரு மசோதாக்களினதும் சூத்திரதாரி டீ.எஸ். சேனநாயக. இந்திய வம்சாவளியினரின் வருகையைத் தடுப்பதும் ஏற்கனவே வந்தவர்களைத் தனிமைப்படுத்துவதும் இவ்விரு மசோதாக்களினதும் நோக்கம்.
இம் மசோதாக்களுக்கு 29 பேர் ஆதரவாகவும் 12 பேர் எதிராகவும் வாக்களித்தனர். கே.நடேச ஐயர் (ஹற்றன்), எஸ். வைத்திலிங்கம் (தலவாக்கலை), ஜீ.ஜீ. பொன்னம்பலம் (பருத்தித்துறை), ஆர்.சிaபத்மநாதன் (மன்னார்), எஸ்.நடேசன் (காங்கேசன்துறை), எச்.ஆர். பிaமன் (அநுராதபுரம்) ஆகிய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் ஆறு நியமன உறுப்பினர்களுமே எதிர்த்து வாக்களித்தவர்கள்.
இரு மசோதாக்களும் இரண்டாவது வாசிப்புக்குப் பின் நிலையியற் குழுவுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து சபைக்குத் திரும்பவில்லை.
இந்திய வம்சாவளியினரை ஓரங்கட்டுவதற்கு டீ.எஸ்.சேனநாயக, ஜே.ஆர்.ஜயவர்தன போன்ற தலைவர்கள் நீண்ட காலமாக முயற்சித்த போதிலும் சுதந்திரத்துக்குப் பின்னரே அவர்களால் அதைச் செயற்படுத்த முடிந்தது.
இரண்டு வழக்குகள்
பிரசாவுரிமைச் சட்டமும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வதிவாளர் (பிரசாவுரிமை) சட்டமும் நடைமுறைக்கு வந்த பின் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் இச்சட்டங்களின் பாரபட்சத் தன்மையையும் அன்றைய ஆட்சியாளரின் மனோபாவத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இலங்கைப் பிரசாவுரிமை பெற்ற இரண்டு இந்திய வம்சாவளியினர் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வதிவாளர் (பிரசாவுரிமை) சட்டத்தின் 6 (2) (11) ஆவது சரத்தின் கீழ் தங்கள் மனைவியரின் பிரசாவுரிமைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். இலங்கைப் பிரசையொருவரின் குடும்பத்தினருக்குப் பிரசாவுரிமை வழங்குவது தொடர்பானது இச்சரத்து.
விண்ணப்பதாரிகள் இருவரும் இந்தியாவில் திருமணம் செய்தவர்கள். ஒருவர் 1932 இலும் மற்றவர் 1938 இலும் திருமணம் செய்தவர்கள். இருவரினதும் மனைவிமார் 1948 இலேயே இலங்கைக்கு வந்தனர்.
இரண்டு விண்ணப்பங்களையும் ஆணையாளர் நிராகரித்துவிட்டார். இருவரினதும் மனைவிமார் போதியளவு காலம் இலங்கையில் வசிக்கவில்லை என்பது நிராகரிப்புக்கு அவர் கூறிய காரணம். இவ்விடயத்தில் ஆணையாளர் சட்டத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டு செயற்பட்டிருக்கின்றார்.
பிரசையொருவரின் குடும்பத்தினர் பிரசாவுரிமைக்கான தகைமையைப் பெறுவதற்கான ‘வதிவுகால வரையறை’ எதுவும் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லை. குடும்பத்தினர் இலங்கையில் ‘சாதாரண வதிவாளராக (rdinarily resident) இருத்தல் வேண்டும் என்றே சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
1948ம் ஆண்டின் 18வது இலக்க பிரசாவுரிமைச் சட்டத்தில் விதிக்கப்பட்ட வதிவுகால வரையறையையே (1939 ஜனவரி 12ம் திகதி முதல் விண்ணப்பத் திகதி வரை) ‘சாதாரண வதிவாளர்’ என்பது குறிக்கின்றதென ஆணையாளர் பிழையாக அர்த்த நிரூபணம் செய்தார்.
இரண்டு விண்ணப்பதாரிகள் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் ஹேமபஸ்நாயக (இவர் பிற்காலத்தில் பிரதம நீதியரசராகப் பதவி வகித்தவர்) ஆணையாளரின் அர்த்த நிரூபணம் தவறானது எனத் தீர்ப்பளித்தார். பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யுமாறு அரசாங்கம் ஆணையாளருக்கு அறிவுரை வழங்கியது. பிரிவி கவுன்சில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
பிரிவி கவுன்சில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் டீ.எஸ்.சேனநாயக மரணமடைந்து அவரது மகன் டட்லி சேனநாயக பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார். பிரிவி கவுன்சிலின் தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்த டட்லி சேனநாயக விரும்பவில்லை. திருமணம் முடிந்தவுடனேயே மனைவி இலங்கையில் வசிப்பதற்கு வந்திருந்தால் மாத்திரமே இலங்கைப் பிரசாவுரிமைக்கு உரித்துடையவராவார் எனச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்வந்தார்.
சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று இலங்கை இந்தியர் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளைப் பிரதமர் டட்லி சேனநாயக நிராகரித்துவிட்டார். டீ.எஸ்.சேனநாயகவுக்கும் ஜவஹர்லால் நேருவுக்குமிடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுவதாக டட்லி சேனநாயக காங்கிரஸ் தலைவர்களிடம் கூறினார். இதுபற்றி நேருவிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக இலங்கை இந்தியர் காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவொன்று புதுடில்லிக்குச் சென்றது.
இவர்களைச் சந்தித்த பின் இவ்விடயம் பற்றி மக்களவையில் (லோக் சபா) கருத்துத் தெரிவித்த ஜவஹர்லால் நேரு பிரிவி கவுன்சில் வழங்கிய தீர்ப்பு தனது நிலைப்பாட்டுக்கு அமைவானதாக உள்ளதெனக் கூறினார். டட்லி சேனநாயக எதையும் பொருட்படுத்தாமல் 1952 மே மாதம் சட்டத் திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றினார்.
இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமை விடயத்தில் டட்லி சேனநாயக கடுங்கோட்பாட்டு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். இராமசாமிக்கும் மீனாட்சிக்கும் வாக்குரிமை இல்லாமற் செய்ததன் மூலம் இலங்கையில் இந்திய அச்சுறுத்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு கட்டிவிட்டது என்று டட்லி சேனநாயக கூறியதாக 1952 மே 12 ம் திகதிய congres news செய்தி வெளியிட்டது.
மற்றையது கோடக்கன்பிள்ளை வழக்கு.
ரூவான்வெலைத் தொகுதி வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயர் நீக்கப்பட்டிருந்ததை அவதானித்த ஜீ.என்.எஸ். கோடக்கன்பிள்ளை தனது பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று 1951 ஜனவரி மாதத்தில் விண்ணப்பம் செய்தார். அவர் இலங்கைப் பிரசையல்ல என்ற காரணத்தினால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்துக் கோடக்கன்பிள்ளை 1951 மார்ச் 8ம் திகதி கேகாலை மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்தார். மாவட்ட நீதிபதியே பிரசாவுரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முடிவுகள் தொடர்பான மீளாய்வு அதிகாரி. கோடக்கன்பிள்ளையின் விண்ணப்பத்தை நிராகரித்த முடிவு பிழையானது என்று மாவட்ட நீதிபதி என். சிவஞானசுந்தரம் ஜுலை 2ம் திகதி தீர்ப்பளித்தார். பிரசாவுரிமைச் சட்டமும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வதிவாளர் (பிரசாவுரிமை) சட்டமும் அரசியலமைப்பின் 29 (2) ஆவது சரத்துக்கு முரணானவை என்றும் >யிஜி தீர்ப்பில் அவர் கூறினார்.
மாவட்ட நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் உச்ச நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்தது. எஸ்.ஜே.வீ. செல்வநாயகமும் எஸ். நடேசனும் கோடக்கன் பிள்ளைக்காக ஆஜராகினார்கள். உச்ச நீதிமன்றம் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை நிராகரித்து அளித்த தீர்ப்பில் இரண்டு சட்டங்களினதும் சரத்துகள் எல்லா இனத்தவர்களுக்கும் பொருத்தப்பாடு உடையன என்பதால் அந்தச் சட்டங்கள் எந்த இனத்துக்கும் பாரபட்சமானவை எனக் கொள்ளலாகாது எனக் கூறியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இலங்கை இந்தியர் காங்கிரஸ் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தது. இலங்கை இந்தியர் காங்கிரஸ் கோடக்கன்பிள்ளை மூலமாக இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சட்டங்களும் மற்றைய இனத்தவர்கள் உட்படாத நிபந்தனைகளுக்கு இந்திய வம்சாவளியினரை உட்படுத்துகின்றன எனக் கூற முடியாது என்றும் ஒரு நாட்டின் பாராளுமன்றம் அந்நாட்டுப் பிரசைகளின் ஒருங்கமைவு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது. என்றும் கூறிய பிரிவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
இரண்டு சட்டங்களினதும் சட்டபூர்வத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குவதற்கான இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
அரசியலமைப்பில் உள்ளடக்கவில்லை
ஒரு அரசியலமைப்பில் பிரசாவுரிமை பற்றிய சரத்து மிகவும் முக்கியமானது. டொனமூர் அரசியலமைப்பிலும் சோல்பரி அரசியலமைப்பிலும் பிரசாவுரிமை பற்றிய சரத்து இல்லை. விசேடமாக, சுதந்திர இலங்கைக்கெனத் தயாரித்த சோல்பரி அரசியலமைப்பில் பிரசாவுரிமைக்கென ஒரு அத்தியாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். சோல்பரி அரசியலமைப்பில் பிரசாவுரிமைச் சரத்து உள்ளடக்கப்பட்டிருக்குமேயானால் இந்திய வம்சாவளியினர் பிரசாவுரிமையை இழக்க நேர்ந்திருக்காது. அரசியலமைப்பில் மாற்றம் செய்வதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அன்றைய அரசாங்கம் எவ்விதத்திலும் பெற முடிந்திருக்காது.
இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் ஏனைய குடியேற்ற நாடுகளுக்காகப் பிரித்தானியா வரைந்த அரசியலமைப்புகளில் பிரசாவுரிமைச் சரத்து உள்ளடக்கப்பட்டிருந்தும் இலங்கைக்கான அரசியலமைப்பில் அது இடம்பெறவில்லை. டீ.எஸ். சேனநாயகவின் தலைமையில் சிங்களத் தலைவர்கள் வெகு காலத்துக்கு முன்னிருந்தே இந்திய வம்சாவளியினருக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த பின்னணியில் பார்க்கையில், இது தற்செயலான தவிர்ப்பாக இருக்குமெனக் கருத முடியாது. சிங்களத் தலைமைக்கும் பிரித்தானிய அரசாங்கத்துக்கு மிடையே இது பற்றிய இரகசிய உடன்பாடொன்று இருந்திருக்கலாம். பேராசிரியர் லக்ஷ்மன் மாரசிங்ஹவின் பின்வரும் கூற்று இச்சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றது.
“கன்சர்வேடிவ் கட்சி 1945ம் ஆண்டு தோல்வியைத் தழுவிய வேளையில் சட்ட சபைத் தலைவர் கெளரவ டீ.எஸ். சேனநாயக லண்டனில் இருந்தார். வரவிருக்கும் அறிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கன்சர்வேடிவ் அரசாங்கத்தினால் அவர் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கையின் சட்டசபைத் தலைவர் டீ.எஸ். சேனநாயகவுக்கும் புதிய தொழிற் கட்சி நிர்வாகத்தின் குடியேற்ற நாடுகள் செயலாளர் கெளரவ கிரீச் ஜோன்ஸ¤க்குமிடையே சில வாக்குறுதிகள் பரிமாறப் பட்டிருக்கலாம் எனப் பிந்திய நிகழ்வுகளிலிருந்து தோன்றுகின்றது.
(The evolution of constitutional governance in Sri lanka – p 127)
பிரசாவுரிமை விடயத்தை இலங்கையின் புதிய அரசாங்கம் கையாள்வதற்கு விட்டுவிடுவதாகப் பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகள் செயலாளரும் பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கையில் தளங்களை வைத்திருப்பதற்கு அனுமதிப்பதாக டீ.எஸ்.சேனநாயகவும் வாக்குறுதிகளை அளித்திருக்கலாம். சோல்பரி அரசியலமைப்பில் பிரசாவுரிமைச் சரத்து இடம்பெறவில்லை. சுதந்திரத்தையடுத்து இலங்கையும் பிரித்தானியாவும் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அமைய பிரித்தானியாவின் கடற்படைத் தளம் திருகோணமலையிலும் விமானப்படைத் தளம் கட்டுநாயகவிலும் தொடர்ந்து இருந்தன.
பிரித்தானியா யுத்தோபாயக் காரணங்களுக்காக இலங்கையில் தளங்களை வைத்திருக்க விரும்பியதெனக் கூற முடியாது. யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் நிலவிய காலத்திலேயே இலங்கை சுதந்திரம் அடைந்தது. அப்போது யுத்த அச்சுறுத்தல் எதுவும் இருக்கவில்லை.
தவிர்க்கமுடியாத நிலையிலேயே பிரித்தானியா இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கியது. இந்தியா பிராந்திய வல்லரசாக வளர்வதையோ சர்வதேச அரங்கில் பிரித்தானியாவுக்கு எதிரான அணியுடன் சேர்வதையோ தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் பிரித்தானியாவுக்கு இருந்தது. ஒருபுறத்தில் பாகிஸ்தான் பகைமை நாடாக இருப்பது போல மறுபுறத்தில் இலங்கையும் இந்தியாவுக்கு பகைமை நாடாக இருப்பது தங்கள் நோக்கத்துக்குச் சாதகமாக அமையுமெனப் பிரித்தானிய ஆட்சியாளர்கள் கருதியிருக்கலாம்.
இலங்கையில் பிரித்தானியத் தளங்கள் இருப்பது தனக்கு அச்சுறுத்தலென இந்தியா கருதுமென்பதால் அது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பகைமையுணர்வு வளர்வதற்கு வழிவகுக்கும் என்ற பிரித்தானியாவின் கணிப்பு வீண்போகவில்லை. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயகவின் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை இலங்கைக்குப் இந்தியாவுக்குமிடையே நல்லுறவு நிலவவில்லை.
சிவா சுப்பிரமணியம்
Thinakaran
திங்கள், 25 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக