1948 ஓகஸ்ட் 04
இலங்கையில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய இந்திய வம்சாவளியினரின் வாழ்வில் பேரிடி விழுந்த தினம். பிரசாவுரிமையும் வாக்குரிமையும் இல்லாதவர்களாக அவர்களை ஆக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தினம்.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகருமான டீ. எஸ். சேனநாயக்க 1948 ஓகஸ்ட் 4ந் திகதி பிரசாவுரிமைச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இச் சட்டமூலம் 1948 ஓகஸ்ட் 22ந் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 1948 ஆம் ஆண்டின் 18வது இலக்க பிரசாவுரிமைச் சட்டம் என்ற பெயருடன் 1948 நவம்பர் 15ந் திகதி நடைமுறைக்கு வந்தது.
இச் சட்டத்தின் கீழ் இலங்கைப் பிரசைகள் இரண்டு பிரிவினராக அடையாளப்படுத்தப்பட்டனர். வம்சாவளிப் பிரசைகள் ஒரு பிரிவினர். பதிவு செய்யப்பட்ட பிரசைகள் மற்றைய பிரிவினர்.
சட்டம் நடைமுறைக்கு வந்த திகதியாகிய (நியமிக்கப்பட்ட திகதி) 1948 நவம்பர் 15ந் திகதிக்கு முன்னர் பிறந்த ஒருவர் அவரது தகப்பன் அல்லது தகப்பன் வழி இரண்டு சந்ததி ஆண் மூதாதையர்கள் இலங்கையில் பிறந்திருந்தால் வம்சாவளிப் பிரசையாவார். 1948 நவம்பர் 15ந் திகதிக்குப் பின்னர் பிறக்கும் ஒருவர் அப்போது அவரது தகப்பன் இலங்கைப் பிரசையாக இருந்தால் வம்சாவளிப் பிரசையாவார்.
பிரசாவுரிமை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பின்வரும் மூன்று வகையினருக்குப் பதிவு செய்யப்பட்ட பிரசாவுரிமை வழங்கலாம்.
1, தாயார் இலங்கைப் பிரசையாக உள்ளவர்கள்.
2. இலங்கைப் பிரசையின் களஸ்திரர் (கணவன்/ மனைவி)
3. பல்வேறு துறைகளில் பிரபல்யம் பெற்றோர்
முதலிரு பிரிவினருக்கும் பிரசாவுரிமை வழங்குவது மூல சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் களஸ்திரரின் பிரசாவுரிமை விண்ணப்பத்தை ஏற்பதும் நிராகரிப்பதும் அமைச்சரின் தற்றுணிபுக்கு உட்பட்டதெனச் சட்டத் திருத்தமொன்று 1955 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
பிரசாவுரிமையைப் பெறுவதற்காகச் சட்டம் விதித்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவர்களாகப் பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் இருக்கவில்லை. அதனால் அவர்கள் பிரிசாவுரிமை இல்லாதோராகினர். பிரசாவுரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட இந்திய மற்றும் பாகிஸ்தானிய வதிவாளர் (பிரசாவுரிமை) சட்டம் 1948 நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிப்பிக்கப்பட்டு 1949 பெப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.
பிரசாவுரிமைச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் ஜீ ஜீ பொன்னம்பலத்தையும் வேறிரு தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களையும் தவிர மற்றைய எல்லோரும் இச்சட்டத்துக்கும் எதிராக வாக்களித்தனர். இச்சட்டம் வாக்கெடுப்புக்கு வந்த நேரத்தில் தமிழ்க் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு அதன் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.
ஜீ. ஜீ. பொன்னம்பலம் கபினற் அமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழ்க் காங்கிரஸ் கட்சி உத்தியோகபூர்வமாக அரசாங்க பாராளுமன்றக் குழுவில் ஒரு அங்கமாகியது. எனவே, மேற்படி சட்டத்துக்கு எதிராக வாக்களித்த தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான எஸ். ஜே. வீ. செல்வநாயகம், சீ. வன்னியசிங்கம், எஸ். சிவபாலன் ஆகிய மூவரும் அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கும் எழுத்துமூல உத்தரவை அரசாங்கப் பிரதம கொறடா ஏ. ஈ. குணசிங்ஹ பிறப்பித்தார்.
இச் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது (1948 டிசம்பர் 10) வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் சீ.சுந்தரலிங்கம் சபையிலிருந்து வெளியேறினார். பிரதமர் அதற்கு விளக்கம் கோரியதும் அவர் அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்தார்.
இந்திய மற்றும் பாகிஸ்தானிய வதிவாளர் (பிரசாவுரிமை) சட்டத்தின் நோக்கம் இலங்கையில் வசிக்கும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர்களுக்குப் பிரசாவுரிமை வழங்குவதே எனச் சொல்லப்பட்ட போதிலும் அச் சட்டத்தினதும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் இருந்தனர்.
1946 ஜனவரி முதலாந் திகதிக்கு உடனடி முந்தியதான ஏழு வருடங்கள் தொடர்ச்சியாகவும் அத் திகதியிலிருந்து விண்ணப்பத் திகதி வரை தொடர்ச்சியாகவும் இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்பது பிரிசாவுரிமைக்கான பிரதான நிபந்தனை. இக்காலப்பகுதியில் பன்னிரண்டு மாதங்களுக்குக் குறையாத காலம் நாட்டுக்கு வெளியே தங்கியிருந்தால் வதிவுத் தொடர்ச்சி முறிந்ததாகக் கருதப்படும்.
பிரசாவுரிமைச் சட்டத்தையும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வதிவாளர் (பிரசாவுரிமை) சட்டத்தையும் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டம் நடைமுறைக்கு வந்தது. தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பிரசைகளுக்கு மாத்திரம் இச் சட்டம் மட்டுப்படுத் தியதால் இந்திய வம்சாவளியினர் வாக்குரிமையையும் இழந்தனர்.
நீண்டகாலத் திட்டம்
முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனிக்கட்சியாகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நியமன உறுப்பினர்கள் உட்பட 101 பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தில் 42 ஆசனங்களே ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்தன. ஆறு நியமன உறுப்பினர்களையும் சேர்த்தாலும் ஆட்சி +(திt@>|ழிt போதாது. கூட்டரசாங்கம் அமைப்பதற்கான உடன்பாடு எதிரணிக் கட்சிகளிடையே ஏற்படாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி அமைத்தது. மலையகத் தொகுதிகளிலிருந்து பின்வரும் தமிழர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகினர்.
கே. குமாரவேல் - கொட்டகலை
ஜீ. ஆர். மோத்தா - மஸ்கெலியா
கே. இராஜலிங்கம் - நாவலப்பிட்டி
எஸ். தொண்டமான் - நுவரெலியா
சீ. வீ. வேலுப்பிள்ளை - தலவாக்கலை
எஸ். எம். சுப்பையா - பதுளை
கே. வீ. நடராசா - பண்டாரவளை
டி. இராமானுஜம் - அலுத்நுவர
ஹப்புத்தளைத் தொகுதியின் வாக்காளர்களில் 57 வீதத்தினர் தமிழர்கள். இலங்கை இந்திய காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ஏ. நடேசனும் சுயேச்சை வேட்பாளர் ஏ. ஆர். செங்கமாலியும் தமிழ் வாக்குகளைப் பெருமளவில் பிளவு படுத்தியதால் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஜே. ஏ. ரம்புக்பொத தெரிவாகினார்.
இந்திய வம்சாவளியினரை நாடற்றவர்களாக்கும் சட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நிறைவேற்றியதற்கு மலையகத்திலிருந்து கூடுதலான தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டதும் பல தொகுதிகளில் இந்திய வம்சாவளியினரின் ஆதரவுடன் இடதுசாரிகள் தெரிவு செய்யப்பட்டதுமே காரணம் என்ற அபிப்பிராயம் இன்று வரை நிலவுகின்றது. இது தவறு. தேர்தல் முடிவு ஐக்கிய தேசியக் கட்சியைத் துரிதமாகச் செயற்பட வைத்ததேயொழிய அது தான் காரணமல்ல. இந்திய வம்சாவளியினரை ஓரங்கட்டுவதற்காக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் வெளிப்பாடு தான் பிரசாவுரிமைச் சட்டமும் அதனோடு தொடர்புடைய மற்றைய சட்டங்களும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் அக்கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை விபரமாகப் பார்ப்போம்.
இந்தியாவிலிருந்து கூட்டிவரப்படும் தொழிலாளர்களைத் தொற்றுநோய்த் தடுப்பு முகாமில் சிறிது காயம் தடுத்து வைத்திருப்பது வழமையாக இருந்தது. இதற்கான முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்று வந்தது. இச் செலவை அரசாங்கம் தொடர்ந்து பொறுப்பேற்க வேண்டுமா என்பது பற்றி ஆராய்ந்து சிபார்சு செய்வதற்காகக் குழுவொன்றை 1925 ஒக்ரோபர் 3ந் திகதி அன்றைய ஆளுநர் நியமித்தார்.
தொற்றுநோய்த் தடுப்பு முகாமை அமைப்பதற்கும் பேணுவதற்குமான செலவை அரசங்கமும் தொழிலாளர்களின் உணவுக்கான செலவை அவர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளவர்களும் ஏற்க வேண்டும் என்று அக்குழு சிபார்சு செய்தது. மேல் மாகாணத்திலிருந்து சட்ட நிருபண சபைக்கு (lலீgislativலீ ணீounணீil) 1923ம்ஆண்டு தெரிவு செய்யப்பட்டவரான டீ. எஸ். சேனநாயக்கவும் அக் குழுவில் ஒரு உறுப்பினர். அவர் இந்தச் சிபார்சை ஏற்கவில்லை. முழுச் செலவையும் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தப் போகின்றவர்களே ஏற்க வேண்டும் என்று தனியாகச் சிபார்சு செய்தார். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு வழங்கப்படும் இது போன்ற சலுகைகள் காரணமாகவே அவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் வருகின்றார்கள் எனத் தனது தனியான சிபார்சு அளிக்கையில் டீ. எஸ். சேனநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இந்திய வம்சாவளியினர் மீது டீ. எஸ். சேனநாயக கொண்டிருந்த வெறுப்பே அவர்களின் வருகையைத் தடுக்க வேண்டும் என்ற கருத்தாக வெளிப்பட்டது.
இலங்கையும் இந்தியாவும் சமஷ்டி அடிப்படையில் அல்லது வேறேதேனுமொரு வகையில் ஒன்றிணைவதை ஆதரித்து ஜே. ஆர். ஜயவர்த்தன ஜவஹர்லால் நேருவுக்கு 1940 ஜுலை 20ந் திகதி கடிதமொன்றை எழுதினார். அவ்வாறு ஒன்றிணைவதற்காக அவர் முன்வைத்த நிபந்தனைகளுள் பின்வரும் இரண்டு நிபந்தனைகளும் முக்கியமானவை.
1. இலங்கையின் அரசகரும மொழி சிங்களமாக இருத்தல் வேண்டும்.
2. இலங்கையின் குடிசன அமைவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இலங்கையின் பாராளுமன்றத்துக்கு இருத்தல் வேண்டும்.
இலங்கை சிங்களவர்களை மாத்திரம் கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பதே இந்த நிபந்தனைகளின் சாராம்சம்.
இந்திய- இலங்கை உறவுகள் பற்றி ஜே. ஆர். ஜயவர்தன 1940 ஒப்ரோபர் 19ந் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் வாக்குரிமை தொடர்பாகப் பின்வருமாறு கூறினார்.
“வாக்குரிமையே பிரதான பிரச்சினை. நாட்டின் மீது நிலையான அக்கறை உள்ளவர்களுக்கு அல்லது நிரந்தர வதிவாளர்களாகக் கருதப்படுபவர்களுக்கே வாக்குரிமை இருத்தல் வேண்டும்”
ஜே. ஆர். ஜயவர்தன ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதமும் பின்னர் வாக்குரிமை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தும் டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இந்திய வம்சாவளியினரும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதற்குப் பிந்திய நிகழ்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
டொனமூர் ஆணைக்குழு
டொனமூர் ஆணைக்குழுவின் வருகைக்கு முன் கல்வியறிவு உள்ளவர்களுக்கும் சொத்துப் பாடைத்தவர்களுக்கும் மாத்திரமே வாக்குரிமை இருந்தது. டொனமூர் ஆணைக்குழு சர்வசனவாக்குரிமையை சிபார்சு செய்தது. இக்குழு செய்த சிபார்சின்படி வாக்குரிமைக்கான வயதெல்லை ஆண்களுக்கு 21 ஆகவும் பெண்களுக்கு 30 ஆகவும் இருந்தது. இலங்கையில் ஐந்து வருடங்களுக்குக் குறையாத காலம் வசிக்கும் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆரம்பமாகும் திகதிக்கு உடனடியாக முந்திய பதினெட்டு மாத காலத்தில் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக ஒரு தொகுதியில் வசித்தவர் அத்தொகுதியின் வாக்காளராகலாம்.
டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கை அரசியலமைப்பாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, பிரித்தானிய +வி:!சீ8rதின் ஆலோசனைக்கமைய, பிரசாவுரிமை தொடர்பான சிபார்சு சிறு மாற்றத்துக்கு உள்ளாகியது. பெண்களின் வாக்குரிமைக்கான வயது 21 ஆகக் குறைக்கப்பட்டதோடு ஐந்து வருட வதிவு நிபந்தனையும் நீக்கப்பட்டது. வாக்குரிமைக்கான வயதைத் தீர்மானிக்கும் திகதியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வருடத்தின் ஓகஸ்ட் முதலாந்திகதி நிர்ணயிக்கப்பட்டது.
டொனமூர் ஆணைக்குழு சர்வசன வாக்குரிமையை வழங்கிய போதிலும் டீ. எஸ். சேனநாயக்கவின் தலைமையிலான அமைச்சரவை இந்திய வம்சாவளி வாக்காளர்களின் எண்ணிக்கையை நிர்வாக நடவடிக்கை மூலம் குறைப்பதில் ஈடுபட்டது. 1939ம் ஆண்டு 225,000 ஆக இருந்த இந்திய வம்சாவளி வாக்காளரின் எண்ணிக்கை பக்கசார்பான மீளாய்வின் விளைவாக 1940ம் ஆண்டு 168,000 ஆகக் குறைந்தது. 1931ம் ஆண்டு 1,500,000 ஆக இருந்த இலங்கை வாக்காளரின் மொத்த எண்ணிக்கை 1940ம் ஆண்டு 2,635,000 ஆக அதிகரித்த நிலையில் இந்திய வம்சாவளி வாக்காளரின் எண்ணிக்கை குறைந்ததற்கு நியாயமான காரணம் எதுவும் கூற முடியாது.
இந்திய வம்சாவளி வாக்காளரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்த தொகுதிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
வாக்காளர்
தொகுதி எண்ணிக்கையில்
குறைந்த தொகை
மத்திய கொழும்பு 14088
தும்பறை 1286
கம்பளை 1812
ஹற்றன் 5158
தலவாக்கலை 3338
நுவரெலியா 2299
பண்டாரவளை 2928
பதுளை 3309
சிவா சுப்பிரமணியம்
Thinakaran
திங்கள், 25 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக