விடியலே இல்லாத உன்
ஆட்சியில் நீ
"பிடில்' வாசிக்க
மக்கள் மடிகளோ
தீப்பற்றி எரிகிறது.
காசுகளெல்லாம்
செல்லாக் காசுகளாக
செயலிழக்க
மூவேளை உணவும்
ஓரு வேளையாக
முனங்கிக் கொண்டிருக்கிறது.
கந்தையானாலும்
கசக்கிக் கட்ட
நீ கை குலுக்க வேண்டுமே!
பொருளாதாரம்
சவக்களையுடன்
சண்டைபிடிக்க
உத்தரவிடும் கைகளில்
அட்சயப் பாத்திரம்.
ஓளியிழந்த
வாழ்க்கைத் த(ஈ)ரம்
ஒப்பாரியுடன்
உடன்கட்டை ஏறுகிறது.
வர்ணிக்கக் கூடிய
அழகான
வாழ்க்கை இப்படி
வரம்பு மீறி
தடம்புரளுகிறதே.
விலைவாசியே .. உன்னால்எங்கள்
சுவாசம் உலர்ந்த பின்
சுதந்திரம்
கிடைத்து என்ன பயன்?
ஓட்டைப் பானையில் கூழ்
காய்ச்சிய
கதையாகி விடக்கூடாது
உன்
வேதாந்தம் போதும் எமக்கு
வேதனம் வேண்டும்.
புரட்சி கிளம்பலாம்
ஆனால்..
வறட்சி வரக்கூடாது.
என்ன செய்ய..?
பாவம் மக்கள்..
என்றாலும்..
இவர்களுக்கும்
அரசுக்கும் ஒரு
நல்லிணக்கம்..
விலைவாசி என்ற
செருப்பால் அடித்தாலும்
செருப்புக்கு மகுடம்
சூட்டுவதென்று!
பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக