இன்றுதான் வெயில் வந்து
ஊரில்
தன் விதையை நாட்டித் திரிகிறது
நிலத்தில்
கொட்டை போடுகிறது வெயில்
அது போடும் கொட்டையை
கோழிகள் கொத்தி
உண்ணும்போதுதான் அவற்றின் இறகும்
விரிகிறது
எத்தனை வண்டியில்
ஏற்றி வந்ததோ
வெயில் தன் விதையை
கணக்குத் தெரியாமல்
அதிகமாகவே நாட்டியது
நிலமென்று நினைத்ததோ
அல்லது பகடிக்கோ
எனது மேசையிலும் அது ஒரு
கொட்டையைப் போட
மேசை உலர்ந்த இடம்
ஓர் இதயம்போல
தெரிந்தது
யாருடைய இதயமாக இருக்கும் இது
ஒரு குழந்தையின் இதயமாக இருந்தால்
அது எந்தக் குழந்தை
யோசிக்கிறேன்
இந்தக் குழந்தை
பெரியவனாகி
மனிதனாய் தோன்றினால்
இந்த உலகத்தின் வெடிப்புப் பருக்கும்
உலகின்
வெடிப்பை ஒட்டும்
இதயமுள்ள மனிதர்கள்
தேவைப்படுகிறதே
காடுகளை அழகாக்க
அங்கு மான்குட்டி பிறந்ததைப் போல்
இதயமில்லாத மனிதர்களை
மழைதான் உருவாக்கி
குழந்தைகளின் இதயங்களைப் பிடுங்கி
மேசைகளில் ஒளித்து வைக்கிறதா
யாருக்கு வேண்டும்
ஒரு குழந்தையின் இதயம்
என் மேசையில் இருக்கிறது
சோலைக்கிளி




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக