செவ்வாய், 6 ஏப்ரல், 2010

நளினி விவகாரம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பான நளினியின் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நளினி, நன்னடத்தை அடிப்படையில் தம்மை தண்டனை காலம் முடிவடைவதற்குள் முன்பே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாராவ் மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜன் ஆஜராகி சிறைத்துறை ஆலோசனைக்குழு எட்டுக் காரணங்களைச் சுட்டிக்காட்டி நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று அறிவித்தனர்.

இதுதொடர்பாக அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதிகள், நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறும் உத்தரவிட்டனர்.


ராஜீவ் கொலை – நளினி விடுதலை – தடை என்ன?

By - சுந்தரராஜன்

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.
நளினியை விடுவிப்பதில் அரசியல் ரீதியான தடையைவிட, சட்டரீதியான தடையைவிட உளவியல் ரீதியான தடையே மிகுந்த முக்கியத்துவம் வகிக்கிறது. நளினியை விடுதலை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு தேசவிரோதி, தீவிரவாதி என்பது போன்ற முத்திரைகள் குத்தப்படலாம் என்பதாலேயே இந்த பிரச்சினையில் கருத்து கூறுவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தியும், நளினியை தண்டித்தது தவறு என்றும் நாம் வாதிடுவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கவே கூடாது என்று கருதுவதிலும், அக்கருத்தை பரப்புவதிலும் உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன.

இந்த உளவியல் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் நளினி ஆகியோர் மட்டுமே தொடர்புடையது அல்ல. இந்த உளவியல் சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் பிரதிபலிக்கும்போது அது அனைத்து இந்தியர்களின் மனித உரிமைகளுக்கும் எதிராக செயல்படுகிறது. அதாவது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரான உளவியல் பொதுமக்களிடமே இருக்கிறது என்பது சுவாரசியமான ஆனால் கவலைக்குரிய உண்மை.

விரிவாகப் பார்ப்போம்.

நளினி விடுதலை குறித்து கருத்து சொல்ல விரும்பும் அரசியல் சாராத பொதுமக்கள், இந்த பிரச்சினை குறித்து ஆழ்ந்து யோசித்து முடிவுகளையும், கருத்துகளையும் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக சமூகத்தில் பிரபல மனிதர்கள் மீது மீடியாக்கள் கட்டமைக்கும் பிம்பங்களை உண்மையென்று நம்பி, அதன் அடிப்படையில்தான் பொதுமக்களின் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன. தங்களுக்கு சாதகமான இந்த நிலை நீடித்திருப்பதையே ஆதிக்க சக்திகளும், மீடியாக்களும் விரும்புகின்றன.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ராஜீவ் காந்தி விவகாரம்தான். ராஜீவ் காந்தி குறிந்து இந்திய மீடியாக்கள் கட்டமைக்க விரும்பும் பிம்பம் இதுதான்! அவர் மலிவான அரசியலுக்கும், ஊழல் கலாசாரத்திற்கும் அப்பாற்பட்டவர்… இளமைத் துடிப்பு மிக்கவர்… அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தியா மிக எளிதில் வல்லரசாகி இருக்கும்… என்பது போன்ற கருத்துகளையே மீடியாக்கள் மக்கள் மனத்தில் உளவியல் ரீதியாக நிறுவ விரும்புகின்றன. தற்போது ராஜீவ் காந்தி இல்லாததால்தான் இந்தியா இத்தகைய முன்னேற்றங்களை அடையமுடியவில்லை என்று மக்கள் எண்ணுவதற்கு மீடியாவின் இத்தகைய திட்டமிட்ட செயல்பாடுகளே காரணம்.

ஆனால் உண்மைகளோ வேறு விதமாக இருந்ததை வரலாறு உணர்த்துகிறது. மிக இளம் வயதில் பிரதமர் பதவியை ராஜீவ் காந்தி ஏற்றதற்கு, அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழலே காரணம். உண்மையில் ராஜீவ் காந்தியே அதை அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இந்திரா காந்தி கொலை சம்பவத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்தை அலங்கரிக்க அனைத்து மாநில மக்களின் ஆதரவு பெற்ற கவர்ச்சியான தலைவர்கள் யாரும் இல்லை. எனவே நேரு குடும்பம் மற்றும் காந்தி என்ற பெயர் ஆகியவற்றுக்கு மக்களிடையே இருந்த நல்லெண்ணத்தை கொள்முதல் செய்யும் வகையிலும், காங்கிரஸின் வாரிசு அரசியல் பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதோடு பிரதமர் பதவியையும் ஏற்றார்.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை ஏற்று, பல்வேறு பணிகளை செய்த தலைவர்களும், இளைஞர்களும் ஏராளமானோர் இருந்தபோதிலும், “நேரு குடும்பத்து வாரிசு” என்ற ஒற்றைத் தகுதியின் அடிப்படையிலேயே அவரிடம் அதிகாரமும், பதவியும் போய்ச் சேர்ந்தது. சீமான் வீட்டு வாரிசாக, சாதாரண மக்களின் எந்த பிரச்சினை குறித்தும் உரிய அறிவோ, தெளிவோ இல்லாத நிலையில் மிகப்பெரும் செல்வந்தர்களின் பொழுதுபோக்கான விமானம் ஓட்டுதலில் ஆர்வம் செலுத்திவந்த ராஜீவ் காந்தியிடம் பதவி வந்து சேர்ந்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி அவரது இயல்புக்கு ஏற்ற ஆட்சியையே நடத்தினார்.

உதாரணமாக, இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து சீக்கியர்களை அழித்தொழிப்பதை ஒரு பிரிவு காங்கிரஸ் கட்சியினர் ஒரு வேலைத்திட்டமாகவே நிறைவேற்றினர். இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்த்து. இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீதான விசாரணை இதுவரை முழுமையாக முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த திருவாளர் ராஜீவ் காந்தி, “ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது, அருகிலிருக்கும் நிலம் அதிரத்தான் செய்யும், அந்த அதிர்வில் புல், பூண்டுகள் பாதிப்படைவதை தவிர்க்க முடியாது!” என்று கூறினார். அதாவது இந்திரா காந்தி ஆலமரமாம். அவரது மரணத்தைத் தொடர்ந்து கொல்லப்பட்ட சீக்கியர்கள் அனைவரும் புல், பூண்டுகள்! ராஜீவ் காந்தியின் இந்தக் கருத்து அகில உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ராஜீவ் காந்தி தமது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரி அக்கருத்தை திரும்பப் பெற்றார்.

ஆனாலும், சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இதுவரை ஒருவர்கூட இந்த வழக்கில் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து எந்த சான்றுகளும், ஆதாரங்களும் இல்லாதவகையில் திட்டமிட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கயமைக்கு அப்போதைய இந்திய அரசின் தலைவரான ராஜீவ் காந்தியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விட முடியாது.

இத்தகைய சிந்தனையோட்டம் கொண்ட ராஜீவ் காந்தி இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தாது மற்றும் இயற்கை வளத்திற்காக அப்பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களை கொன்றும், பாலியல் உள்ளிட்ட பலவகை வன்முறைகளை செய்தும் அகற்றி, அப்பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கும் ஆபரேஷன் கிரீன்ஹன்ட் என்ற அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு சிதம்பரத்திற்கு பதிலாக ராஜீவ்காந்தியே தலைமை ஏற்று செயல்பட்டிருப்பார்.

ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தி நெருக்கடி நிலை காலத்தில் அறிவிக்கப்படாத அதிகார மையமாக செயல்பட்டதும், ஏராளமான ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்து, வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல்படுத்தியதும் இளைய தலைமுறைக்குத் தெரியாது. மூத்த தலைமுறையோ இதுபோன்ற அராஜகங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் ராஜீவ் காந்தியின் போக்கு அவரது இயல்புக்கு ஏற்றதாகவே இருந்தது. பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில், பிரச்சினை தொடர்பானவர்களை ஆலோசிக்காமலே ஒப்பந்தங்களை தீட்டி அந்த ஒப்பந்தத்தை ஈழத்தமிழர் மீது திணித்ததில், தமது அரசியல் திறனின்மையை ராஜீவ் காந்தி வெளிக்காட்டினார்.

இதையடுத்து ஏற்பட்ட அரசியல் சூழல்களில் இந்திய ராணுவம் இலங்கையின் அரசியலில் நேரடியாக தலையிடும் சூழல் ஏற்பட்டது. அமைதி காப்பதற்காக போன ராணுவம், அங்கே செய்த காரியங்கள் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியையும் பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலங்கைக்கு சென்ற ராணுவம் திரும்பிவந்தபோது அந்த ராணுவத்தை வரவேற்க முதலமைச்சர் கருணாநிதி செல்லவில்லை என்பது வரலாறு!

இதற்கிடையில் இந்திய அரசியலில் சமூக நீதி என்ற புதிய ஆயுதத்தோடு களம் இறங்கிய வி.பி. சிங்-கின் வீச்சால் காங்கிரஸ் ஆட்சியையும் இழந்திருந்தது. கூட்டணி ஆட்சியின் பிரதமராக வி.பி. சிங் பதவியேற்று, பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி கிடப்பில் போட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல் செய்து பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார். வி.பி. சிங்கின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுத்து வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது.

மீண்டும் தேர்தல்! நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு பெற்ற வி.பி.சிங், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உகந்த சூழ்நிலை நிலவியது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராஜீவ் காந்தி சென்னை அருகே திருபெரும்புதூர் அருகே பொதுக்கூட்டம் ஒன்றிற்கு வந்தபோது மனிதவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் வேறெந்த காங்கிரஸ் கட்சித்தலைவரோ, காவல்துறை உயர் அதிகாரிகளோ பாதிக்கப்படவில்லை என்ற உண்மை உலகத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.

இதையடுத்து நடந்த விசாரணையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதன்படி கடந்த 19 ஆண்டுகளாக நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை என்பதன் பொருள் இந்திய சட்டங்களில் சரியான வரையறை செய்யப்படாத நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்த ஒரு சிறைவாசி, அவர் மீது வேறு எந்தப் புகார்களும் இல்லாத நிலையில் (ஆயுள் தண்டனை என்பதற்கான கால அளவு சரியாக நிர்ணயிக்கபடாததால்) முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்படுகிறார். இவ்வாறான முன் விடுதலைக்கு தம்மை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு சிறைவாசிக்கும் உண்டு. இந்த உரிமையை நளினியும் பயன்படுத்துகிறார். ஆனால் மற்றக் கைதிகளை விடுதலை செய்வதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, நளினி விவகாரத்தில் மட்டும் ஏனோ தயங்குகிறது. இந்த தயக்கத்திற்கு நளினி விடுதலை குறித்து சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்தும் ஒரு காரணமாக அமைகிறது.

நளினியை தூக்கில் போட வேண்டும்: நளினியின் கை மற்றும் கால்களை செயல் இழக்கச் செய்துவிட்டு அவரை விடுதலை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் செய்திநிறுவனங்களின் இணையதளங்களில் பொதுமக்கள் கருத்தாக சேர்கிறது. ஏன் இந்த நிலை?

தங்கள் உரிமைகள் மிதிக்கப்படும் போதெல்லாம் விலங்குகள் கூட எதிர்ப்பை தெரிவிக்கும். ஆனால் எந்த உரிமை பறிக்கப்படும்போதும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தியாக உள்ளம் கொண்டவர் சராசரி இந்தியர். சராசரி இந்தியனின் உளவியல் என்பது ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைந்தது. அடையாளமே தெரியாத கடவுளை, அனைத்தும் அறிந்தவன் – அனைத்தையும் இயக்குபவன் என்று நம்பும் இந்த உளவியலின் மறுபக்கமோ, தன்னை மிகவும் வலிமை இல்லாதவனாக, எதற்கும் பயனற்றவனாக, மிகவும் எளிமையானவனாக உருவகப்படுத்துகிறது.

கடவுளை, எல்லாம் வல்லவனாக பார்த்துப் பழகிய இந்த உளவியலின் நீட்சியே, ஆட்சித் தலைமைகளை – அது மன்னனாக இருந்தாலும் சரி: மக்களாட்சி முறையில் மந்திரியாக இருந்தாலும் சரி – மிகவும் உயர்ந்தவனாக பார்க்கிறது. அதன் மறுபக்கமாக தம்மை எளியேனுக்கும், எளியேனுமாக உருவகிக்கிறது. இதனால்தான் தனக்கு நடக்கும் எந்த அநீதிகளையும் உணரவே மறுக்கும் இந்தியனின் மனசாட்சி, அரசியல் தலைவர்களுக்கு ஒரு சாதாரண பிரச்சினை என்றால்கூட தீக்குளிக்குமளவுக்கு துணிகிறது. சாமானிய மனிதர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டால்கூட எந்த அதிர்ச்சியையும் அடையாத இந்தியனின் மனசாட்சி, ஒரு அரசியல் கட்சியின் தலைவன் இறந்த 20 ஆண்டுகள் கழிந்த பின்னரும் துக்கம் அனுஷ்டிக்கிறது.

இதன் காரணமாக பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்தியனின் மனசாட்சிக்கு எட்டாமல் போகிறது. இந்திய கடல் எல்லைக்கருகில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கையின் கடற்படைதான் காரணம் என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும் இந்தியனின் மனசாட்சி அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தாலும், ஏதோ ஒரு சாமியாரின் படுக்கை அறையுள்ளேயை இந்தியனின் மனசாட்சி சிக்கிக் கொள்கிறது.

இந்திய கடல் எல்லையை தாண்டிய மீனவர்களுக்கு இந்திய அரசு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது: சாதாரண மீனவர்களை கொன்றதற்காக இலங்கை மீது போர் தொடுக்கமுடியுமா? என்று மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது இந்தியனின் மனசாட்சி இலவசத் தொலைகாட்சியிலிருந்து திரும்ப மறுக்கிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட இனத்தின்மீது போர் தொடுத்த ஒரு நபர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதத்தில் அந்த இனத்தை சார்ந்த பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டபோதும்கூட இந்தியனின் மனசாட்சி “மானாட, மயிலாட” நிகழ்ச்சியிலேயே மூழ்கி இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படும்போதுமட்டும் இந்தியனின் மனசாட்சி துயிலெழுந்து துள்ளி குதிக்கிறது, நளினியை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறது!

ஆனால் சட்டத்தின் நிலையோ வேறாகத்தான் இருக்கிறது. சட்டம் என்ற கருத்தியலின் முன் அனைவரும் சமமே. ராஜீவ் காந்தியை கொன்றவருக்கு கடும் தண்டனை: நடைபாதையில் படுத்துறங்கும் அன்றாடங்காய்ச்சியை கொன்றவருக்கு வேறு சாதாரண தண்டனை என்ற பேதமெல்லாம் சட்டத்திற்கு கிடையாது. சட்டத்தைப் பொறுத்தவரை அது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் ஒரு குற்றம். அந்த குற்றத்தில் பலியானவரின் சமூக முக்கியத்துவம் குறித்து ஒரு நீதிமன்றம் கவலை கொள்ளக்கூடாது.

ஆனால் நடைமுறையில் இது வேறாக இருக்கிறது. சாமானிய இந்தியனுக்கு நடக்கும் எந்த தீவிரமான மனித உரிமை மீறலையும் மிக எளிதாகவும், இயல்பானதாகவும் பார்க்கும் அமைப்புகள், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பிரபலமடைந்தவர்களின் சிறு பிரச்சினைகளைக்கூட மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறது. எத்தனையோ தொழில் சார்ந்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு போராடினாலும் திரும்பி பார்க்காத தமிழ்நாடு அரசு, திரைப்படத்துறையினரின் மிகவும் சாதாரண பிரச்சினைகளைக்கூட அதிகபட்ச கரிசனத்தோடு பரிசீலிப்பதை ஒரு உதாரணமாக கூறலாம். இதை எதிர்த்துப் போராட வேண்டிய இந்தியனின் மனசாட்சி அதற்குப் பதிலாக இது போன்ற அநீதிகளையும், முறைகேடுகளையும் இயல்பாக ஏற்க பழகிவிடுகிறது.

இதன் விளைவாகவே தமது உண்மையான பிரச்சினைகளை உணரவும், அதை எதிர்த்துப் போராடவும் தயங்கும் இந்தியனின் மனசாட்சி – அரசியல் தலைவர்களின் இழப்புகளை மட்டும் பிரமாண்டமாக்கி பார்க்கிறது. தன்னிச்சையாக செயல்பட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டிய மீடியா, நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசு சார்பு அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.

எனவேதான் அரசின் பார்வையிலேயே, அதாவது மக்களுக்கு எதிரான பார்வையிலேயே மீடியாக்கள் இயங்குகின்றன. அதாவது மக்களின் நலன்களுக்கு எதிரானவற்றை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களை மீடியாக்கள் மூளைச்சலவை செய்கின்றன. இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு உருவாக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிரான முடிவை மேற்கொள்ள நீதிமன்றங்கள் தயங்குகின்றன.

இவ்வாறு ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிராக ஒரு நீதிபதி தீர்ப்பளித்துவிட்டால், அந்த நீதிபதிக்கு எதிரான பிரச்சாரத்தில் மீடியாக்கள் இறங்கிவிடும். இதனால் அந்த நீதிபதியின் எதிர்கால பதவி உயர்வுகளோ, வேறு வாய்ப்புகளோ பாதிக்கப்படலாம் என்ற நிலை காரணமாகவே இதுபோன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு மிக அதிக தண்டனை வழங்கப்படுகிறது.

உண்மையிலேயே சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றால் இந்த நிலை மாற வேண்டும். எந்த விவகாரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதைவிட, அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்படுவதற்கு மக்கள் பழக வேண்டும். ஆனால் இதை ஆளும் வர்க்கமோ, ஆதிக்க சக்திகளின் மீடியாக்களோ உதவி செய்யாது என்பதுடன், இடையூறும் செய்யும். இதையெல்லாம் மீறினால்தான் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் அரசை அமைக்கமுடியும். இதற்கான பணிகளில் மக்கள் இயக்கங்களும், மாற்று ஊடகங்களும் தொடர்ந்து செயல்பட்டால்தான் மனித உரிமைகளை மதிக்கும் சமூகத்தை அமைக்க முடியும்.


கீற்று


நளினியின் மகள் அரித்திரா
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல