சந்திரனில் குடியேறுவதில் ஏன் தாமதம்?
அமெரிக்கா, ரஷ்யா போன்ற மேலைத்தேய நாடுகள் சந்திரனில் கால் ஊன்ற ஆசைப்படுகின்றன. ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல.
சந்திரனில் வசிக்க வேண்டுமென் றால் சுவாசிக்க காற்று வேண்டும். குடிக்க நீர் வேண்டும் உண்ண உணவுவேண்டும். சரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும். எரிபொருள் வேண்டும்.
இவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியிலிருந்து சந்திரனுக்குக் கொண்டு செல்லும் ஒவ்வொரு பவுண் எடைக்கும் 50,000 டொலர்கள் செலவாகும். ஒரு கலன் தண்ணீரின் எடை எட்டு பவுண்கள். ஒரு கலன் தண்ணீரை பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு 4 இலட்சம் டொலர்கள்.
சந்திரனில் உள்ள பாறைகளில் ஆக்சிஜன் உள்ளது. வெப்பத்தையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி ஆக்சிஜனை எளிதாக பெற்றுவிட லாமாம். சந்திரனில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. சந்திரனில் தென் துருவத்தில் பனிக் கட்டி வடிவத்தில் நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தண்ணீர் சுரங்கங்களை வெட்டி நீரை எடுத்துக் கொள்ளலாம். நீரை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்து ராக்கெட்டுக்களுக்கு தேவையான எரிபொருளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது.
சந்திரனில் தண்ணீர் கிடைக்காமல் போனால் பூமியிலிருந்துதான் நீரைக் கொண்டு செல்ல வேண்டும். திரவ ஹைட்ரஜனை பூமியிலிருந்து கொண்டு போக வேண்டும். அதனுடன் சந்திரனின் பாறைகளில் இருக்கும் ஆக்சிஜனைக் கலந்து நீரை தயாரித்துக் கொள்ளலாம்.
விவசாயம் செய்வதற்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தனிமங்கள் தேவை. இந்த தனிமங்களை ஒரு முறை சந்திரனுக்குக் கொண்டு சென்று விவசாயம் செய்துவிட்டால் போதுமாம். சந்திரனில் குடியிருக்கும் மனிதர்களின் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் அடுத்தடுத்த சாகுபடிகளுக்கு இந்த தனிமங்களை பெற்றுக்கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காற்றடைத்த குடியிருப்புக்கள் தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்படுமாம். பீங்கான் மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சந்திரனில் மின்சக்தி தட்டுப்பாடு இருக்காதாம். சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரமும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்க்கையால் பெறப்படும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரனில் கிடைக்கக்கூடிய யுரேனியத்திலிருந்து அணு மின்சக்தி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.
இப்படியாக ஒரு மனிதனுக்குள்ள எல்லா செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பல நூறு பில்லியன் டொலர் செலவாகும். அதனால்தான் சந்திரனில் குடியேறுவதில் தாமதம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக