டான்சு மாஸ்டர்
சினிமா டான்சு மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. டான்சு மாஸ்டராக இருந்து நடிகர் ஆனவர். பிரபுதேவா டான்சு மாஸ்டராக பணிபுரிந்தபோது அவருக்கும், குரூப் டான்சராக இருந்த ரமலத்துக்கும் காதல் ஏற்பட்டது. அவர்களின் காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாததால் 1995-ம் ஆண்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர ராவ், ஆதித் தேவா என்ற 3 மகன்கள். இவர்களில் விஷால், புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு இறந்துபோனான்.
இந்த நிலையில், 2008-ம் ஆண்டு நடிகர் பிரபுதேவா `வில்லு' படத்தை இயக்கியபோது அதில் நடித்த நடிகை நயன்தாராவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தனர். நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்த பிரபுதேவா, ரமலத் வீட்டுக்கு செல்வதையும் நிறுத்தினார்.
குடும்பத்தில் குழப்பம்
தென்றலாக சென்றுகொண்டிருந்த தன் வாழ்க்கையில் நயன்தாரா புயல்போல வந்ததால் அதிர்ச்சி அடைந்தார் ரமலத். நயன்தாராவின் பிடியில் இருக்கும் தன் கணவனை மீட்டுக்கொடுக்குமாறு சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையே, பிரபுதேவா-நயன்தாரா ஜோடி திருமணம் செய்யப் போவதாக தகவல் பரவியது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த ரமலத், பிரபுதேவா-நயன்தாரா திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மறுநாள் குடும்பநல கோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கை தொடர்ந்தார்.
இந்த நிலையில், பிரபுதேவாவை தன்னுடன் சேர்ந்துவாழ வைக்க வேண்டும் என்று தாம்பத்ய உரிமை கோரி ரமலத் சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி மனு தாக்கல் செய்தார். பிரபுதேவாவின் சொத்துகளில் தனக்கு உரிமை உண்டு என்பதால் வழக்கு விசாரணை முடிவடையும்வரை சொத்துக்களை விற்பதற்கும், குத்தகை விடுவதற்கும் தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரியிருந்தார்.
விவாகரத்து கோரி வழக்கு
இந்த வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 21-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த சூழ்நிலையில், நடிகர் பிரபுதேவாவும், அவரது மனைவி லதா என்ற ரமலத்தும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் நேற்று திடீரென மனு தாக்கல் செய்தனர். முன்னதாக, பிரபுதேவாவை தன்னோடு சேர்த்துவைக்கக்கோரி குடும்பநல கோர்ட்டில் போட்ட வழக்கையும் ரமலத் நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டார்.
நேற்று பகல் 2 மணி அளவில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை குடும்பநல கோர்ட்டுக்கு இருவரும் திடீரென சென்றனர். நீதிபதி மீனாட்சி சுந்தரம் மருத்துவ விடுப்பில் இருப்பதால் பொறுப்பு நீதிபதியான முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி ஐ.பாண்டுரங்கனிடம் இருவரும் இணைந்து மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பரஸ்பரம் முடிவு
எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடும், புரிதல் இன்மையும் ஏற்பட்டிருப்பதால் சேர்ந்து வாழ்வது கடினம் என்று இருவரும் உணர்ந்துகொண்டோம். எங்களால் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இருவருமே தனித்தனியாகத்தான் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் சேர்ந்து வாழ எங்கள் நண்பர்களும், நலம்விரும்பிகளும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போய்விட்டன. எனவே, விவாகரத்து கேட்பதென்று இருவரும் பரஸ்பரம் ஒத்துக்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
சொத்துகள்
ஒருசில அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ரமலத்திடம் ஒப்படைத்து விடுவதாகவும் கோர்ட்டில் பிரபுதேவா உறுதி அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நிரந்தர நிவாரணமாக ரூ.10 லட்சம் அளிப்பதாகவும், இரு மகன்களின் மருத்துவம் மற்றும் மேற்படிப்புக்கான செலவுகளையும் தனியாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக