விவசாயக்கூலி
பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் வசிப்பவர் ஆசியா பீவி. 45 வயதான இவர் ஒரு விவசாயப்பண்ணையில் கூலியாக வேலை செய்து வந்தார். இவர் முஸ்லிம் மதத்துக்கு எதிராக பேசி மதத்தை அவமானப்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மீதான வழக்கை விசாரித்த பஞ்சாப் கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதற்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் ஆசியா பீவியை விடுதலை செய்யவேண்டும் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை பாகிஸ்தானில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டத்தை திருத்த திட்டம்
பல நேரங்களில் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டது. இதை அறிந்ததும், இஸ்லாமிய கட்சிகள் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என்று கூறி போராட்டங்களை நடத்தின.
இந்த நிலையில் பாகிஸ்தானில் முதல் முறையாக அந்த நாட்டின் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள் ஆசியா பீவியை விடுதலை செய்யக்கோரி கிறிஸ்துமஸ் தினமான நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணி
பாகிஸ்தான் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் 10-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்புகள் சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்தின. கிறிஸ்துமஸ் தினத்தன்று லாகூரில் பேரணியும் நடத்தப்பட்டது. இதில் பெரும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.
முஸ்லிம்களுக்காகவும்
இந்த பேரணி பிரதான வீதிகள் வழியாக பஞ்சாப் மாநில சட்டசபை கட்டிடத்துக்கு எதிரில் முடிந்தது. அங்கு நடந்த கூட்டத்தில் பேசியவர்கள் மதத்துவேஷ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரினார்கள்.
எங்கள் போராட்டம் ஆசியா பீவியை விடுதலை செய்வதற்காக மட்டும் அல்ல, இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவருக்குமாக தான் நடத்தப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் பல நேரங்களில் முஸ்லிம்கள் கூட தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அவர்கள் பேசினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக