இந்த மந்திரச் சொல் இறுகத் தாழிடப்பட்டிருந்த பாதுகாப்பு நிறைந்த பல கதவுகளை ஒரே நொடியில் திறந்துவிட்டி ருக்கிறது. அந்தக் கதவுகளினூடே இது நாள்வரையும் பொத்திப் பாதுகாக்கப்பட்டு வந்த பல ரகசியங்கள் அம்பலமாகியிருக்கின்றன.
யூலியன் அசாஞ்சே என்ற மந்திரவாதியின் கை வண்ணத்தில் உருவாகியிருக்கும் விக்கிலீக்ஸ் உலகை எப்போதுமே பரபரப்பின் முனையில் நிற்க வைத்துள்ளது. பொதுவாகவே மந்திர தந்திரங்கள் மாயையின் பிடிக்குள் எல்லோரையும் ஆழ்த்துவதே வழமை. ஆனால் விக்கிலீக்ஸ் அதற்கு நேரெதிராக இதுநாள் வரையும் போர்த்தப்பட்டிருந்த மாயைத் திரைகள் எல்லாவற்றையும் சட்டெனத் திறந்துவிட்டிருக்கிறது. அந்த மாயத் திரைகளுக்குள் ஒளிந்திருந்த பலரது நிஜமுகங்கள் வெளிப்பட்டதால் அவர்களின் "குய்யோ! முறையோ!" என்ற கூச்சலும் பெரிதாகக் கிளம்பத்தொடங்கியுள்ளது.
சுவீடனைத் தளமாகக் கொண்ட விக்கிலீக்ஸ் என்னும் புலனாய்வு இணையம், 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தம் முகத்தைப் பகிரங்கப்படுத்த விரும் பாத நிதியாளர்களின் அனுசரணையோடு யூலியன் அசாஞ்சே இவ்விணையத்தளத்தினை நிறுவி உலகில் நடந்த பல "பொட்டுக் கேடுகளை" தன்னுடைய தொழில் நுட்ப அறிவால் ஆதாரத்தோடு முன்வைத்தார்.
அண் மையில் விக்கிலீக்ஸிடம் மாட்டுப்பட்டவைதான் அமெரிக்க வெளியுறவுத் துறையின் இரகசிய "கேபிள்" தொடர்புத் தகவல்கள் அடங்கிய இரண்டரை லட்சம் ஆவணங்கள். நாளொரு ஆவணமும், பொழுதொரு இரகசியமுமாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுக் கொண்டே யிருக்கப் பலருக்கு அடி வயிறு கலங்கியது. இன்னும் சிலர் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் சம்பந் தப்பட்டவர்களின் வேட்டி அவிழ்வதைப் பார்த்து சிரித்து முடித்த மறுநொடியே அவர்களின் கோவணத்தையும் விக்கிலீக்ஸ் அவிழ்த்தெறிந்தது.
அப்படி கடைசியாக விக்கிலீக்ஸால் அம்பலப்படுத்தப்பட்டவர்கள் தான் இலங்கையில் ஒரு காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டு இப்போது "ஜனநாயக நீரோட்டத்தில்" இணைந்து கொண்டதாகக் கூறிக் கொண்ட இருவர். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும்,ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் நாயகமுமாகிய டக்ளஸ் தேவானந்தாவும், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும், புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியுமான விநாயக மூர்த்தி முரளிதரனும் (கருணா) தான் அந்த இருவரும்.
இவர்களில் டக்ளஸ் தேவனாந்தா தனது அமைப்பை நிறுவியது முதலே "இணக்கப்பாட்டு அரசியலை" முதன்மைப்படுத்தி அரசுடன் இணைந்து இயங்கி வருபவர். ஈ.பி.டி.பி அமைப்பு ஒரு ஆயுதக்குழுவாக இருந்து பின்னர் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள தாகக் கூறப்படுகின்ற போதும், அது தொடர்ந்தும் ஒரு துணை இராணுவக்குழுவாகவே இயங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
குறிப்பாக யாழ்.குடாநாட் டில் இடம்பெற்ற கடத்தல்கள், காணாமல் போதல்கள், கப்பம் அறவிடல், படுகொலைகள் என்பவற்றுக்கும் ஈ.பி.டி.பி அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக மக்களிடையே எண்ண அலைகள் உருப்பெற்றிருந்தன. ஆனாலும் "எங்கள் கரங்கள் சுத்தமானவை" என்பது போலவே அந்த அமைப்பு தொடர்ந்து சொல்லி வந்தது. ஆனாலும் ஈ.பி.டி.பிக்கு எதிரான கருத்தியலை கொண்டவர்களும், தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர் களும், இனம் தெரியாதநல்ல தமிழில் பேசக்கூடிய நபர்களால் தொடர்ந்தும் கடத்தப்பட்டனர் அல்லது காணாமல் போனோர் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.
இவ்வாறு காணாமல் போனோரில் ஒரு சிலர், மீண்டுவந்த சம்பவங்களும் அத்தி பூத்தாற் போல மிக அரிதாகநிகழ்ந்தன. மீண்டு வந்த குறித்த நபர்கள் காணாமல் போன சம்பவத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று முன்னர் சாதித்திருந் தது. எனினும் ஈ.பி.டி.பி அமைப்பின் முகாம்களிலேயே தாம் இத்தனை நாளும் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவே மீண்டவர்களின் வாக்கு மூலங்கள் அமைந்திருந்தன.
இது தவிர தீவகத்தில் குறித்த அமைப்பை தவிர்ந்த வேறு எந்த அரசியல் கட்சியும் உள்நுழைந்து அரசியல் பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு அங்கு ஜனநாயகம் கொடிகாட்டிப் பறந்தது; பறந்தும் வரு கிறது. ஈ.பி.டி.பி அமைப்பின் சகல செயற்பாடுகளை யும் மக்களும், ஏனையோரும் நன்கு அறிந்து வைத் திருந்தாலும் கூட, அவற்றைப் பற்றி வெளிப்படை யாக வாய்திறக்க பயந்தனர். அந்தளவுக்கு மக்களுடன் " பாச உறவை" குறித்த அமைப்பினர் பேணி வந்தனர்.
இந்நிலையில் தான் ஈ.பி.டி.பி அமைப்பின் சமூக விரோத செயல்கள் பற்றிய அமெரிக்கத் தூதரகத்தின் கேபிள் ஆணவங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. ஆனா லும் அதில் உள்ளடங்கியிருந்த ரகசியங்கள் உலகத்தவர் களுக்குப் புதிய தகவல்களாக இருந்த போதும் கூட, தமிழ் மக்களுக்கு அவையெல்லாம் எப்போதோ தெரிந்திருந்த ஆறிய பழங்கஞ்சி போன்ற விடயங் கள் தான்.இவ்வளவு நாளும் அவர்கள் மனங்களிடையே ரகசியமாகப், பேணப்பட்டு வந்த விடயங்களே இப்போதே எழுத்து வடிவில் பகிரங்கப்படுத்தப்பட்டி ருக்கின்றன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் அமர்வுகள் நடைபெற்ற போதும் தமது உறவுகளை ஈ.பி.டி.பியினரே கடத்திச் சென்றதாகச் சில பொது மக்கள் துணிச்சலுடன் சாட்சியமளித்தும் இருந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விடவும் அதிகளவான குற்றச்சாட்டுக்களை கருணா மீது அமெரிக் கத் தூதரகம் முன்வைத்திருப்பதையும் விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்தியது. கருணா குழுவினர் ஆள்கடத் தல், கொலை, கொள்ளை, கப்பம் என்பவற்றுக்கு அப் பால் மிகக் கேவலமான "மாமா வேலையும்" பார்த்ததாக ஆதாரங்கள் வெளியிடப்பட்டன.
அதிலும் தனது அணியில் இருந்த பெண் போராளிகள் மற்றும் சாதா ரண பெண்கள் ஆகியோரை மிரட்டி அவர்களை இராணுவத்தினரின் பாலியல் இச்சைகளைத் தீர்ப் பதற்கு "சப்ளை" செய்த பெருமையும் இதன் மூலம் பிரதி அமைச்சர் முரளிதரனுக்குக் கிட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் தொடர்பாக அந்தந்த நாடுகளிலுள்ள அமெரிக் கத் தூதரகம் அனுப்பிய கேபிள் தகவல்கள் விக்கி லீக்ஸில் வெளியான போது அதனையெல்லாம் பார்த்து விக்கிலீக்ஸைப் பாராட்டிக் கொண்டிருந்தவர்கள், தம் மீது அது பாய்ந்தவுடன் கொடுக்கைக்கட்டிக் கொண்டு "கோதாவில்" இறங்கிவிட்டார்கள்.
போர்க்குற்ற ஆதாரங்களை காணொலியாக "சனல்4" தொலைக்காட்சி வெளியிட்ட போது அதனையே போலியானவை எனக் கூச்சலிட்டவர் களால் இதனை மட்டும் பொய் என்று சொல்ல முடி யாதா என்ன? தாம் செய்த அட்டூழியங்களின் பட்டியல் வெளியானதும் கருணா தரப்பு அமைதி காத்தது. ஆனாலும் ஈ.பி.டி.பி விக்கிலீக்ஸின் உண்மைத் தன்மை பற்றி கேள்வி எழுப்பியதுடன், தம்மைப் பற்றி அமெரிக்கத் தூதரகம் கொண்டுள்ள அபிப்பிராயத் தையும் கண்டித்தது. (இதே அமைப்பின் உத்தி யோகபூர்வ வாராந்தப் பத்திரிகையில் விக்கிலீக்ஸைப் புகழ்ந்து தள்ளியும், அது வெளியிட்டுள்ள ஆதாரங்கள் அத்தனையும் சத்திய வார்த்தைகள் என்றும் கட்டுரை வெளி வந்தது வேறு கதை) தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம். அது போலவே மற்றவர்களைப் பற்றிய அவதூறுகள் எல்லாவற்றையும் உண்மையென்று ஏற்றுக் கொண்ட அமைப்பு, தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொன்னவுடன் மட்டும் ஒட்டுமொத்த விக்கிலீக்ஸ் தகவல்களையே பொய் என்று நிறுவ முனைகிறது.
ஆயினும் உண்மைகள் வேறு விதமாகவே இருக்கின்றன. கேபிள் தகவல்கள் எனப்படுபவை ஒவ்வொரு தூதரகமும் தமது தாய் நாட்டிலுள்ள வெளியுறவு அமைச்சுடனோ அல்லது உரிய தரப்பு களுடனோ தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பொறிமுறை. இதற்கென ஒவ்வொரு தூதரகமும் தனித்தனியான மென்பொருள்களை விசேடமாக வடிவமைத்துள்ளன. இதனால் தூதரகத் தால் அனுப்பப்படும் கேபிள் தகவல்களை இடை நடுவில் எவரும் அறிந்துகொள்ள முடியாது. வேண்டு மானால் இப்போது விக்கிலீக்ஸ் செய்ததைப் போல அத்தகவல்கள் உரிய இடத்தைச் சென்றடைந்து ஆவணப் படுத்தப்பட்ட பின்னரே அது பற்றி அறிய முடியும்.
அதுவும் யூலியன் அசாஞ்சே போன்ற அசாத்தியமான தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களால் மட்டுமே சாத்தியமான ஒன்று. இவ்வாறு மிகப் பத்திரமாக அனுப்பப்படும் கேபிள் தகவல்கள் ஒன்றுக்குப் பலமுறை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்படுகின்றன.
"கேபிள் தகவல்கள் வெறும் தரவுகள் மாத்திரமே. அவை ஒருபோதுமே அமெரிக்காவில் வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் செலுத்துவதில்லை" என்று அமெரிக்கா அடிக்கொரு தடவை அலட்டிக் கொண்டா லும் உண்மையில் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் கேபிள் தகவல்களே முக்கிய பங்காற்றுகின்றன.
எனவே கேபிள் தகவல்களை பொய் என்று மல்லுக்கு நிற்பது மடத்தனம் என்று தெரிந்துதான் பல நாடுகள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலுக்குப் பின்னும் ஊமை களாக மௌனம் காக்கின்றன. ஆனாலும் ஈ.பி. டி.பி அமைப்பு மட்டும் தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத் தும் அப்பட்டமான பொய் என்று ஒற்றைக் காலில் நிற்கிறது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை எப்போதோ முடிந்த காரியம் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெ னில் பல வருடங்களுக்கு முன்னர் இறந்தவரின் உட லைப் பரிசோதனை செய்து நீண்டகாலத்தின் பின்னர் கொலையாளிகள் பிடிபட்ட கதைகள் நிறையவே உண்டு. பல நாள் கள்வன் ஒருநாள் பிடிபடுவதற்கு இத் தகைய ஆதாரங்கள் நிறையவே உதவியாக இருக்கும்.
அதிலும் இன்றும் அதிகாரத்தோடும், தூய்மையான வர்கள் என்ற முகமூடியோடும் வாழ்ந்து கொண்டிருக் கின்ற அமைச்சர்கள் மீது இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சட்டத்தில் இடமும் இருக்கிறது. ஒரு குற்றம் தொடர்பான ஆதாரங்கள் எவ்வளவு காலத்தின் பின் வெளிப்பட்டாலும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசின் தலையாய கடமையாகும்.
சனல்4, ஐ.நா நிபுணர்குழு, போர்க்குற்ற விசாரணை, புலம்பெயர் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் என அடுத்தடுத்த தலையிடிகளால் விக்கித்துப் போய் நிற்கும் இலங்கை அரசுக்கு விக்கிலீக்ஸ் மற்றொரு அதிர்ச்சி வைத்தியத்தை இத் தகைய ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் கொடுத்திருக்கிறது.
அத்தோடு தன்னுடைய செல்லப் பிள்ளைகளாக இருக்கின்ற அமைச்சரையும், பிரதி அமைச்சரையும் இலக்கு வைத்து இந்த ஆவணங்கள் தாக்கியிருப்பதால் இந்தக் களங்கத் தைத் துடைத்தெறிய வேண்டிய பொறுப்பு அரசின் தலையில் விழுந்திருக்கிறது. ஏனெனில் அரசில் அங் கம் வகிக்கின்ற இவர்கள் இருவரும் சட்டத்துக்கு முர ணான, மனித உரிமைகளை நசுக்குகின்ற குற்றங் களை புரிந்திருப்பது ஆதாரத்தோடு வெளிப்பட்டுள் ளது. இதனை சனல்4 போல "கிரபிக்ஸ்" வேலை என்று தட்டிக் கழித்துவிடவும் முடியாது.
அப்படி அரசு செய்யுமானால் இன்னும் பல ஆதாரங்களையும் பதிலடி யாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு விடக்கூடும். அது அரசை இன்னும் சிக்கலுக்குள் தள்ளிவிடும். எனவே தனது அமைச்சர்களைக் காப்பாற்றுவதா? அல்லது இது குறித்த விசாரணைகளை நடத்துவதா என்பதைத் தீர் மானிக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக அரசு தவித்து வருகிறது. அமைச்சர்கள் மீது அரசு விசா ரணையோ அல்லது நடவடிக்கைகளையோ மேற்கொள் ளாத பட்சத்தில் அதற்கு ஏற்படும் சர்வதேச நெருக்கடி கள் இன்னும் அதிகரிக்கும். அது இலங்கையை மீள முடியாத படுகுழிக்குள் வீழ்வதை விரைவுபடுத்தவே செய்யும். என்ன செய்யப்போகிறது அரசு?
உதயன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக