AIDS என்ற சொல் Acquired Immune Deficiency Syndrome என விளக்கப்படுகிறது.
AIDS என்பது ஒரு மருத்துவ நிலை என்று கூடக் கூறலாம். AIDS இனங்காணப்பட்ட நோயாளி ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் நலிவடைந்ததாக இருக்கும். இதனால், பாரதூரமற்ற நோய்த்தொற்றுக்கள் கூட அவரை இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கும்.1980 களின் முற்பகுதியிலே, எய்ட்ஸ் தொற்று முதன்முதலாக இனங்காணப்பட்டபோது வெகு சிலரே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது உலகளாவிய ரீதியிலே 33.3 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம்.
தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988ம் ஆண்டு டிசம்பர் முதலாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.
எய்ட்ஸ் என்ற நிலைக்கான அறிகுறிகள் யாவை?
நோய் எதிர்ப்புக்கலங்களான CD4 கலங்களின் எண்ணிக்கை குருதியிலே குறித்த மட்டத்தை விடக் குறைவடையும் போது எய்ட்ஸ் என்ற நிலை உருவாகியிருப்பதாகக் கணிக்கப்படும்.
ஆரம்பத்திலே ஃபுளூ வை ஒத்த அறிகுறிகளான காய்ச்சல், தலையிடி, களைப்பு போன்றன தோன்றும். இதனை அறிகுறிகள் வெளிப்படாத காலப்பகுதி என்பர். ஆயினும் இந்தக் காலகட்டத்தில் உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதி வெகுவாக நலிவடையத் தொடங்கும்.
ஏனெனில் H I V வைரஸ் ஆனது நோயெதிர்ப்புக் கலங்களான CD4 கலங்களைச் சேதமடையச் செய்யும். அடிப்படையில் இக்கலங்கள் பிறபொருள் எதிரிகளுக்கெதிராகத் தொழிற்படுவன ஆகும்.
களைப்பு, நிறை குறைவடைதல், அடிக்கடி காய்ச்சல் ஏற்படுதல், வியர்த்தல், சரும வியாதிகள் மற்றும் ஏனைய தொற்றுக்கள், தற்காலிக ஞாபக மறதி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.
காலப்போக்கிலே, உடலின் ஒவ்வொரு தொகுதியாகப் பாதிப்படையத் தொடங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக