திங்கள், 19 மார்ச், 2012

கவிதை என்றால் என்ன..? ஒரு பார்வை

கவிதை ‘இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால் இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது’ என்று கருதுமளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை.

படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும்.



இலக்கண நூல்களைப் பயின்றும், இலக்கியங்களை இடைவிடாது படித்தும், யாப்பு விதிகளையும், ஓசை நலன்களையும் உள்வாங்கிக் கொண்டு, சீரும் தளையும் சிதையாமல் வரையறுத்த அமைப்பில் பாப்புனைவது மரபுக்கவிதை எனப்படும். இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் உணர்ச்சி வெளிப்படப் பாடுவது புதுக்கவிதையாகும். இவையன்றி இசைப் பாடல்களும் (சந்தப் பாடல்கள்) கவிதை என்பதற்குள் அடங்குவனவாகும்.

1.மரபுக் கவிதை

ஆசிரியப்பா, வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்னும் பாவினங்களும் மட்டுமே இன்றைய நிலையில் மரபுக் கவிதை வகையில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பா வகைகள் சீர், தளை பிறழாதன; பாவின வகைகள் குறிப்பிட்ட வாய்பாடுகளில் அமையும் நான்கு அடிகளை உடையன.

கருத்து
--------

"ஆசில்பர தாரமவை அஞ்சிறைஅ டைப்போம்;
மாசில்புகழ் காதலுறு வேம்;வளமை கூரப்
பேசுவது மானம்;இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்றுநம கொற்றம்" (கம்பராமாயணம்)

இப்பாடல் அளவடி நான்கு கொண்டு அமைவதாகிய கலிவிருத்தமாகும். கும்பகருணன், தன் அண்ணன் இராவணனிடம், ''அடுத்தவனின் கற்புப் பிறழாத மனைவியைக் கொண்டுவந்து சிறையில் அடைப்போம்; ஆனால் புகழை எதிர்பார்ப்போம்; மானத்தைப் பேசுவோம்; காமத்திற்கு அடிமையாவோம்; மானுடர் இழிந்தவர் என்போம்; மானிடப் பெண்டிரை நயப்போம்; நன்றாக
இருக்கிறது. அண்ணா, நம்முடைய வெற்றி பொருந்திய அரசாட்சி!'' என்று அரசவையில் துணிந்து நையாண்டி செய்கிறான். இது இராவணனுக்கு மட்டும் கூறப்பட்டதன்று; எக்காலத்திற்கும் சராசரி மனிதனின் அடிமனத்தில் நிலவும் தகாத காம உணர்வைத் திருத்தி நெறிப்படுத்தத் தக்கதாகவும் உள்ளது. ஒலிநயமும் இனியதாக உள்ளது.

உணர்ச்சி
-----------

நகை (சிரிப்பு), அழுகை, இளிவரல் (இழிவு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை (மகிழ்ச்சி) என்பன எண்வகை மெய்ப்பாடுகள் எனப்படும். இவற்றுடன், எதற்கும் கலங்காதிருக்கும் நிலையாகிய சாந்தம் என்பதனையும் சேர்த்து நவரசம் (ஒன்பான் சுவை) என்பர்.

கற்போர்க்கும் கேட்போர்க்கும் இவ்வுணர்ச்சிகள் பொங்குமாறு மாற்றத்தை ஏற்படுத்துவது கவிதையின்கண் அமையும் உணர்ச்சியாகும்.

தேவி திரௌபதி சொல்வாள் - ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர் - அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து - குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான் - இது
செய்யுமுன் னேமுடி யேனென் றுரைத்தாள்

(பாஞ்சாலி சபதம்)

பாஞ்சாலியின் இந்தச் சபதத்தில் தென்படும் வீரவுணர்ச்சி பயில்வாரையும் வந்து பற்றுவதை உணரலாம். இது, வெண்டளை பயின்றுவந்த நொண்டிச் சிந்து வகையாகும்.

கற்பனை
-----------
ஒருத்தியின் பல், முத்தின் அழகையும் தோற்கடிப்பதாக இருந்தது. அதனை நாணிய முத்து, தற்கொலைக்கு முயன்று, அப்பல் தங்கி வாழும் வாய் ஆகிய வாயிலில் தூக்கில் தொங்கலானது.

அதுதான் அவள் மூக்கில் தொங்கும் புல்லாக்கு என்னும் மூக்கணியாகும். இது சிவப்பிரகாசர் என்னும் புலவரின் கற்பனையாகும். கற்பனைக் களஞ்சியம் என்னும் சிறப்புப் பெயருடையவர் இவர்.

அப்பாடல் வருமாறு:

தன்னை நிந்தைசெய் வெண்நகை மேல்பழி சார
மன்னி ஆங்கது நிகர்அற வாழ்மனை வாய்தன்
முன்இ றந்திடு வேன்என ஞான்றுகொள் முறைமை
என்ன வெண்மணி மூக்கணி ஒருத்திநின் றிட்டாள்
(பிரபுலிங்க லீலை)

(வெண்நகை = பல்; மன்னி = நிலைத்து; ஞான்று = தொங்குதல்; வெண்மணி = முத்து)

இப்பாடல் ஐந்து சீர்கள் உடையதாகிய நெடிலடி நான்கு கொண்ட கலித்துறை என்னும் யாப்பில் அமைந்ததாகும்.

வடிவம்
---------
‘கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமா’ என்னும் வாய்பாட்டிலான கலிவிருத்தம்

பின்வருமாறு :
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம னுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

(கம்பராமாயணம்)
(பல்லவம் = தளிர்; அனுங்க = தோற்க; கஞ்சம் = தாமரை)

இதில் ‘தந்ததன தந்ததன தந்ததன தான’ என்னும் சந்தம் அமைந்திருத்தலின் ஒலிநயத்திற்கும் தக்க சான்றாகும். இதில் சொல்நயமும் குறிப்பிடத்தக்கது.
பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், புலவர், குழந்தை, சுத்தானந்த பாரதியார், பெருஞ்சித்திரனார், முடியரசன், சுரதா, வாணிதாசன், பெரியசாமித் தூரன், கவியரசு கண்ணதாசன் போன்றோரது கவிதைகளும் மரபுக்கவிதை படைப்போர்க்குத் தக்க முன்னோடிப் படைப்புகளாகும்.

2.புதுக்கவிதை

எதுகை, மோனை வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்துச் சுவை மிளிர நடைமுறைச் சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதையாகும். மேனாட்டாரின் இலக்கியத் தாக்கத்தால் இருபதாம் நூற்றாண்டளவில் தமிழ்மொழியில் சிறந்தெழுந்த வகைப்பாடாகும் இது.

கருத்து
---------
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி...
ஓ.. இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று

(சிற்பி பாலசுப்பிரமணியம்)

இக்கவிதை, குறைகளை நிறைகளாக்கி மகிழ்வதை, சாபங்களை வரங்களாகக் கருதும் மனப்பான்மையை மானுடர் யாவர்க்கும் உணர்த்தி நிற்கின்றது.

உணர்ச்சி
----------

உனக்கென்ன
ஒரு பார்வையை வீசிவிட்டுப் போகிறாய்
என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது ! (மீரா)
என்னும் கவிதை காதல் உணர்வை இனிதே வெளிப்படுத்துகின்றது.

கற்பனை
----------

ஏழைகள் வீட்டிலிருந்து
புகை
வருவதால் அவர்கள்
சமைக்கிறார்கள் என்று
அர்த்தம் இல்லை
அந்தப் புகை அவர்கள்
எரியும் மனத்திலிருந்தும்
எழுந்து வரலாம் (ஈரோடு தமிழன்பன்)

என்பதில், மக்களின் வறுமை நிலை புகையாகிய காரியத்திற்குக் காரணம் தீயாக இருக்க இயலும், பசித் தீயாகவே இருக்க இயலும் என்னும் கருத்துப் புலப்படுகிறது.

வடிவம்
---------

புதுக்கவிதையில் வரையறுத்த வடிவம் இல்லை.

தொப்பையாய்
நனைந்துவிட்ட மகள்
அப்பா
தலையை நல்லாத் துவட்டுங்க
என்றாள்
கிழியாத அன்பும் கிழிந்த துண்டுமாய்

(ஈரோடு தமிழன்பன்)

என்பதில் முரண்தொடை அமைந்திருப்பது கருதத்தக்கது.
ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், புவியரசு, ஈரோடு தமிழன்பன்,

தமிழ்நாடன், காமராசன், மேத்தா, மீரா, சிற்பி பாலசுப்பிரமணியம், அக்கினி புத்திரன், அப்துல் ரகுமான் போன்றோர் தம் புதுக்கவிதைகள் புதியன படைப்பவர்களுக்குச் சிறந்த முன்னோடிகளாகும்.

3.இசைப் பாடல்கள்

கீர்த்தனை, கும்மி, சிந்து என்பன இசைப் பாடல் வகைகளாகும்.பூட்டைத் திறப்பது கையாலே - மனப் பூட்டைத் திறப்பதும் மெய்யாலே;வீட்டைத் திறக்க முடியாமல் - விட்ட விதிய தென்கிறார் ஞானப் பெண்ணே (சித்தர் பாடல்)வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு; - நெஞ்சைஅள்ளும் சிலப்பதி காரம்என்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு

(பாரதியார்)

கி.சிவகுமார், கூகிள், விக்கிபீடியா

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல