படம்: இணையத்திலிருந்து
(23.10.2012)நாம் தமிழர் கட்சித் தலைவரும் சினிமா இயக்குனர் மற்றும் நடிகருமான செபஸ்ரியன் சீமோன் எனப்படுகிற சீமான் கடைசியில் ஈழ மக்களுக்கு ஒரு நற்செய்தியை அறிவித்திருக்கிறார். 2016-ல் ஈழத்தில் ஒரு புதிய வரலாறு படைக்கப்படும் என்று உறுதிபட அவர் தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தபோது, அங்கு உரையாற்றிய சீமான், இலங்கை அரசுக்கு இந்தக் காலக்கெடுவை விதித்தார்.
தனது உயிர் போவதற்குள் நமக்குத் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடுவதாக சில மாதங்களுக்கு முன்னர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி சூளுரைத்தபோது, நமக்குக் குழப்பமாகவே இருந்தது. என்ன இருந்தாலும் இந்த முதியவர் தான் சாகும் நாளை எண்ணி நம்மைக் காத்திருக்க வைத்து விட்டாரே என்று கவலையாகவும் இருந்தது. அவரது முயற்சியால் தனிநாடு கிடைக்க எத்தனை வருடங்களாகும் என்ற கணக்குச் சரியாகத் தேரியாமலும் இருந்தது.
ஆனால், சீறும் தமிழன் சீமான் அப்படி நமக்குக் குழப்பம் தரக்கூடிய காலக்கெடுவைச் சொல்லவில்லை. தி.மு.க. தலைவரைப் போலவோ அல்லது சிங்கள அரசுக்கு சிம்மசொப்பனமாய் உலாவரும் நமது வீரவசனத் தமிழரசுத் தலைவர்களைப் போலவோ அவர் நம்மைச் சந்தேகத்தில் விடவில்லை.
நமது மக்களின் எல்லாத் துன்பங்களும் தீர்ந்து இயல்பு வாழ்க்கைக்கு மீள எத்தனை ஆண்டு காலம் காத்திருப்பது என்ற கேள்விக்கே இடமில்லாமல் 2016 ஆம் ஆண்டில் “எல்லாம் சரிவரும்” என்று திறுதட்டமான ஒரு ஆண்டைச் சொல்லி அவர் ஒரு நெருப்புத் தமிழன்தான் என்பதை நிரூபித்திருக்கிறார். சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் ஏமாற்றுவதற்கு இது ஒன்றும் நடிகை விஜயலட்சுமி விவகாரமல்ல வீரத்தமிழ் வாழ்க்கை என்பதை அவர் அறியாதவரல்ல.
ஈழத்தமிழ்ப் பெண்ணுக்கு வாழ்வளிப்பதற்காக விஜயலட் சுமியையே உதறியெறிந்த வீரத்தமிழனை நம்பி நாலே நாலு ஆண்டுகள் நாம் காத்திருக்க முடியாதா? 2016 கூட்டுத்தொகை 9 ஆக வருவதால், சீமான் எழுச்சிப்படையுடன் ஈழம் வந்திறங்குவதற்கு நன்கு திட்டமிட்டே வெற்றி எண்ணாக வரும் ஒரு ஆண்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
பட்டதுதான் கஷ்டங்கள் பட்டுவிட்டோம். இன்னும் நாலே ஆண்டுகள் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தால்தான் என்னவாம்? வரப்போகும் நாலு மழைக்காலங்களையும் தறப் பாள்களின் கீழும் மரங்களின் கீழும் கால்வயிறோ அரை வயிறோ நிரப்பிக்கொண்டு படுத்தெழும்பி விட்டால் பிறகென்ன, செபஸ்ரியன் சீமோன் ஆட்சியில் பாலாறும் தேனாறுமாக நாங்கள் திளைத்துத் திக்குமுக்காட வேண்டியதுதான்!
தவிரவும், அப்படி ஒரு வீரத்தமிழனை நம்பி இன்னும் கொஞ் சக்காலம் கஷ்டப்படுவதை விட்டுவிட்டு அற்ப சலுகைகளுக்காக அரசாங்க எதிர்ப்பைக் கைவிட்டால், உலகெங்கும் உள்ள உண்மை மறத்தமிழர்கள் ஒருபோதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள். களத்தில் உள்ளவர்களெல்லாம் தனிநாட்டுக் கெதிரான துரோகிகள் என்று அறிவித்துவிட்டு, நாட்டுக்கு வெளியே இருப்பவர்கள்தான் அசல் தமிழர்கள்; அவர்கள் அமைக்கப்போவதுதான் தமிழ் மாமனிதர்களின் அரசாங்கம் என்று சொல்லிவிடக் கூடும்.
நமக்கேன் வம்பு? சீமான் வருகைக்கு காத்திருப்போம்! காத்திருப்பு நமக்குப் புதிதல்லவே!
தினமுரசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக