கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் வேழமாலிதன்
தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்திலிருந்து வெடிமருந்து, ஆபாசப்படங்கள், ஆணுறைகள் மீட்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவித கருத்தும் தெரிவிக்காமல் நழுவிவருவதாக ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12ம் திகதி மாலை சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தைச் சோதனையிட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அங்கிருந்து 350கிராம் வெடிமருந்தையும், ஆபாச வீடியோ இறுவட்டுக்கள், ஒரு தொகை ஆணுறைகள் மற்றும் சில தமிழ்ப் பெண்களின் ஒளிப்படங்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாகவே சிறிதரனின் செயலாளரும், கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைப்பாளருமான வேழமாலிதன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் சோதனை நடவடிக்கையின்போது சிறிதரனின் அலுவலகத்தில் இருந்த அவரது பிரத்தியேகச் செயலாளரான பொன் காந்தன் என்றழைக்கப்படும் பொன்னம்பலம் லக்சுமிகாந்தன் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட வேளையில் கட்டுநாயகா விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது இந்த விவகாரத்தை மேலும் மோசமாக்கியிருப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளனர்.
அலுவலகத்தில் வெடிமருந்துகளோ அல்லது கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் ஏனைய பொருள்களோ இருந்திருக்கவில்லை என்றும், அதனை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரே கொண்டு வந்து வைத்துவிட்டு எடுத்திருப்பதாகச் சொல்லியிருப்பதாகவும் சிறிதரன் தெரிவித்ததாக தமிழ் இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகைகள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடாததுடன், சக கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் வேழமாலிதனின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமோ எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளாதது குறிதது வேழமாலிதனின் நண்பர்களும், உறவினர்களும் வேதனை வெளியிட்டுள்ளனர்.
யார் கைதுசெய்யப்பட்டாலும் உடனடியாகக் கூடி ஆர்ப்பாட்டங்கள் நடாத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமது மாவட்ட அமைப்பாளர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன் என்று அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் திட்டமிட்ட ஒரு நாடகம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருக்கும் நிலையிலும், இந்தச் சம்பவம் தொடர்பாக எதுவும் மௌனம் காத்துவரும் கூட்டமைப்பு, சிறிதரனின் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான வேழமாலிதனை விடுதலை செய்வது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருவது குறித்து சிறிதரனின் ஆதரவாளர்களும், வேழமாலிதனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி, சிறிதரனின் சகோதர் ஒருவர் நடத்துவதாகக் கூறப்படும் ஒரு இணையத்தளம் தவிர, வேறெந்த ஊடகங்களும் இந்த விடயம் குறித்து போதிய அக்கறை காட்டவில்லை என்றும், வழமையாக மேற்படி ஊடகத்தில் வெளியாகும் செய்திகளை அப்படியே பிரதிபண்ணி வெளியிடும் பல யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளும் இம்முறை அந்த இணைய ஊடகத்தில் சிறிதரனின் அலுவலக சோதனை தொடர்பாக வெளியிடப்பட்டுவரும் செய்திகள், கட்டுரைகள் எதையுமே அந்தப் பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனையும், மாவட்ட அமைப்பாளர் வேழமாலிதனையும் கைவிட்டுவிட்டதாகவும், கூட்டமைப்பு சார்பு ஊடகங்களும் அவர்களைக் கைவிட்டுவிட்டதாகவும் அவர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.
sikaram

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக