சனி, 20 ஏப்ரல், 2013

தேவை..கருணை அல்லது கருணைக் கொலை..!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி முகர்ஜிக்கு 26 வயது. அண்மையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கிருஷ்ணா டிரத்தைச் சந்தித்த அவர், ”எனக்கு அரசு உதவ வேண்டும்… அல்லது என்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஏன்?

2006 ஏப்ரல் 22, நள்ளிரவு 2 மணி. மொட்டைமாடியில் தன் குடும்பத்தாருடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் சோனாலி முகர்ஜி. தூக்கத்தில் இருந்த சோனாலி, முகத்தில் ஏற்பட்ட திடீர் எரிச்சல் காரணமாகச் சட்டென்று விழித்துக்கொள்கிறார். அவர் முன் நின்றுகொண்டு இருந்த மூன்று இளைஞர்கள் ஓடி மறைகிறார்கள். அவர்கள் சோனாலியின் பொலிவான முகத்தில் அமிலத்தை ஊற்றிஇருக்கிறார்கள். வலியிலும் எரிச்சலிலும் துடிக்கிறார் சோனாலி. என்ன நடந்தது என்றே அவருக்குத் தெரியவில்லை.

ஆயிற்று எட்டு ஆண்டுகள்… இன்றைக்கு சோனாலியின் முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்துபோகிறார்கள். முகம் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இரு விழிகளிலும் பார்வை இல்லை. நரம்புகள் சிதைந்ததால், வலது காதின் செவித் திறனையும் இழந்துவிட்டார் சோனாலி. இவை அல்லாமல் மூச்சுத் திணறலும் குறைந்த ரத்த அழுத்தமும் அடிக்கடி வருவது உண்டு. இத்தனை கொடுமைகளையும் அவர் அனுபவிப்பது எதனால்? தன் பின்னால் சுற்றிய, தன்னை நோக்கித் தகாத வார்த்தைகளால் பேசிய, தன்னைப் பாலியல் சீண்டல் செய்த மூன்று இளைஞர்களைத் துணிவாக எதிர்த்ததுதான் காரணம்.

அப்போது கல்லூரி மாணவியான சோனாலி, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். துணிச்சல்மிக்கவர். சோனாலி கல்லூரிக்குச் செல்லும்போதும் வரும்போதும் அந்த மூவரும் அவரைப் பின்தொடர்ந்து சீண்டியபடி இருந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுடைய தொல்லை பொறுக்க முடியாத சோனாலி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக அவர்களிடம் கடுமையான தொனியில் சொல்லியிருக்கிறார். இதனால் கோபமுற்ற அவர்கள், ”அழகான முகம் இருக்கிறது என்பதால்தானே இப்படிப் பேசுகிறாய்… உனக்குத் தக்க பாடம் புகட்டுகிறோம்” என்று கூறி, சொன்னதை அந்த இரவில் செய்தும் காட்டியிருக்கிறார்கள். அந்த ஓர் இரவு சோனாலியின் அத்தனை பகல்களையும் இருளாக்கிவிட்டது!

சோனாலிக்கு இதுவரை 22 அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. அவருடைய தொடைப் பகுதியில் இருந்து சதையையும் தோலையும் எடுத்து முகத்தில் வைத்து ஓரளவு முகத்தை வடிவத் துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும், பார்வை கிடைக்கவில்லை. அவருடைய சிகிச்சைக்காகவே ஆலைத் தொழிலா ளியான அவருடைய தந்தை தன் நிலத்தை விற்று, சொத்துகளை இழந்து கடனாளி ஆகி இருக்கிறார். சோனாலியின் நிலையைக் கண்ட அவருடைய தாய் மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் உறவினர்களும் நண்பர் களும் கைவிட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்தின் மூன்று முதல்வர்களைச் சந்தித்து விட்டார் சோனாலி. ஆனால், ஒரு பயனும் இல்லை. ஒரு சாதாரண சாலை விபத்தில்கூட காயம்பட் டால் அரசாங்கம் நஷ்டஈடு அளிக்கிறது. ஆனால், சோனாலிக்கு அரசாங்கமோ, குற்றவாளிகள் தரப்போ நஷ்டஈடு என்று ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை.

சோனாலியின் மீது அமிலத்தை ஊற்றிய மூவரில் பிரம்மதர் ஹர்ஜாவை இளங்குற்றவாளி என்று கூறி விடுதலை செய்துவிட்டது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். தபஸ் மித்ரா, சஞ்சய் பஸ்வான் ஆகிய மற்ற இருவரும் பெயிலில் வெளிவந்துவிட்டனர். குற்றம் இழைத்துவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர் ஆனால், எந்தத் தவறும் செய்யாத சோனாலி, தன் வாழ்க்கையை இழந்து இன்று அரசின் கருணையை அல்லது கருணைக் கொலையை நாடி நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

அமிலம் வீசுவதால் பெண்ணின் வாழ்க்கையே பாழாகிறது என்பதை மனதில்கொண்டு, பாலியல் குற்றத்துக்கு இணையாக இந்தக் குற்றத்தையும் பார்க்கவேண்டும்; அல்லது இதற்கென்று தனி சட்டப்பிரிவு உண்டாக்க வேண்டும். சோனாலியை நோக்கி வீசப்பட்டது அமிலம் அல்ல; ஆணாதிக்கச் சமூகத்தின் வன்ம ஊற்றில் இருந்து பீறிட்டுப் புறப்பட்ட விஷம்.
சோனாலி முகர்ஜியுடன் அலைபேசியில் பேசினேன். குரலில் விரக்தி தொனித்தாலும், தனக்கு நேர்ந்த அநீதி குறித்த நினைவுகளின்போது ஆவேசப் படுகிறார். எப்படியாவது உதவி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையும் அவரது பேச்சில் தெறித்தது.

”தைரியமான பெண்ணான நீங்கள் ஏன் கருணைக் கொலை கோரிக்கையை வைத்தீர்கள்?”

”வாழ வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், வெறும் வாக்குறுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு யாராலும் வாழ்ந்துவிட முடியாது. ஒன்பது ஆண்டுகளாக உறுதி மொழிகளால் மட்டுமே வாழ்ந்துவருகி றேன். எல்லா வாசல்களும் மூடப்பட்டு விட்ட நிலையில்தான் இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. இப்போதும் யாருடைய உதவியாவது கிடைத்தால் வாழவே விரும்புகிறேன்.”

”அரசுத் தரப்பில் யாருமே உதவவில்லையா?”

”இல்லை. நாங்கள் அலைந்ததுதான் மிச்சம். இதை ஒரு சீரியஸான விஷயமாகக்கூட யாரும் பார்க்கவில்லை. இது எனக்கு மட்டுமான பிரச்னை இல்லை. அனைத்துப் பெண்களுக்குமான பிரச்னை. ஆனாலும், இதை யாருமே பொதுவான விஷயமாகப் பார்க்காதது வருத்தமாக இருக்கிறது.”

”குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட பெயிலை எதிர்த்து மேல்முறையீடு செய்வீர்களா?”

”குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட நானோ, அவர்களுடைய மிரட்டலாலேயே அங்குஇருந்து வேறு ஊருக்குக் குடிபெயர வேண்டி இருந்தது. இதைத்தான் இந்தச் சமூகமும் அரசும் விரும்புகிறதா? சட்டம் அவர்களுடைய பாக்கெட்டில் இருப்பது எப்படி என்பதும் எனக்குப் புரியவில்லை. ஆனால், அவர்கள் தண்டிக்கப்படும் வரை நீதிக்காக நான் போராடுவேன்.”

”பெண்கள் அமைப்புகள் உங்களுக்குத் துணையாக வந்தனவா?”

”சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளில் யாரும் எனக்குத் துணையாக இல்லை. இப்போது ஊடகங்களில் என் பேட்டிகளையும் என்னைப் பற்றிய செய்திகளையும் பார்த்த பிறகு, ஓரளவுக்குப் பெண்கள் அமைப்புகள் என்னைத் தொடர்புகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. ஆனாலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை.”

”சிகிச்சைக்காக சென்னை வந்தீர்களே… என்னஆயிற்று?”

”ஆமாம் வந்தேன். கண் சிகிச்சைக்காக ‘சங்கர நேத்ராலயா’ மருத்துவமனைக்கு வந்தேன். கண்ணின் உட்பகுதியான கார்னியாவை மாற்ற வேண்டும் என்றனர். அதற்காகப் பெருந்தொகை செலவாகுமாம். அதனால், வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டேன். கண் சிகிச்சை மட்டுமல்லாது மற்ற சிகிச்சைகளுக்கும் சேர்த்து ஏறத்தாழ 17 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அத்தனை பணத்துக்கு எங்கே போவது?”

”முன்பு உங்களுடைய லட்சியம் என்னவாக இருந்தது?”

”நிறையக் கனவுகள் இருந்தன. நிறையப் படிக்க வேண்டும். பி.ஹெச்டி. முடிக்க வேண்டும். படிக்க முடியாத நிலையில் உள்ளவர்களையும் படிக்கவைக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாக இருந்தது. ஆனால், இப்போது உயிரோடு வாழ வேண்டும் என்பதே ஒரு குறிக்கோளாக இருக்கையில், வேறு லட்சியங்கள்குறித்து யோசிக்க முடியவில்லை.
அமில வீச்சுக்கு முன், பின் என்று என் வாழ்வை இரண்டாகப் பிரிக்கலாம். அந்தக் கொடூர சம்பவத்துக்குப் பின் எனக்கு எதிலுமே ஆர்வம் இல்லை. இப்போதைக்கு வாழ வேண்டும். அதற்கான வழியைத் தேட வேண்டும். அவ்வளவுதான்.”

‘‘தன்னை நிராகரிக்கும் பெண்களின் மீது ஆண்கள் தாக்குதல் தொடுப்பது என்ன மனநிலை?”

”ஆண்களின் ஈகோதான் காரணம். தங்கள் மீது அவர்களுக்குத் தன்னம்பிக்கை இல்லாதபோது இப்படி நடந்துகொள் கிறார்கள். ஒரு பெண் தன்னை ஒதுக்கிவிட்டாலோ, விருப்பத்துக்கு அடிபணிய மறுத்தாலோ, ஆண்கள் இந்த அளவுக்குச் செல்வதை ஆளுமைச் சிதைவு (பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்) என்றே சொல்வேன். அது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையே சிதைக்கும் கோரத்தை அவர்கள் உணர வேண்டும்.”

கவின்மலர்@www.penniyam.com/
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல