வியாழன், 31 அக்டோபர், 2013

ஊமையாக மாறிய அறிவிப்பாளர் ! (படங்கள் இணைப்பு)

கமலினி செல்வராசன் .... என்கிற பெயரை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் நேயர்கள் மறந்து இருக்க முடியாது. நாடு அறிந்த அறிவிப்பாளராக மாத்திரம் அன்றி இலக்கியவாதியாக, நடிகையாக பரிணமித்தவர். கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியார். ஆனால் பொதுவாக இவரை எவரும் தற்போது காண முடிவதில்லை.

கமலினிக்கு என்ன நடந்தது? என்பது இவரின் நேயர்கள், இரசிகர்க்ள், அபிமானிகள் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

இவர் ஒரேயடியாக ஊமையாகி விட்டார் என்றால் யாரும் இலேசில் நம்பி விட மாட்டார்கள்.

ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

30 வருடங்கள் ரூபவாஹினி தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக பணியாற்றிய இவர் 2009 ஆம் ஆண்டு திடீர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இவர் மன உளைச்சலுக்கு உள்ளானார். தொடர்ந்து நாளாக நாளாக இவரை ஞாபக மறதி ஆக்கிரமித்தது. இவரால் இப்போது பேச முடியாது. ஒரு காலத்தில் பேரழகியாக இருந்தவர். இப்போது அழகும் கெட்டு விட்டது. இவரால் சுயமாக செயற்பட முடியாது. இவருக்கு ஒரே ஒரு மகனை தவிர ஆதரவு என்று யாரும் இல்லை.

நாரஹன்பிட்டியவில் அன்டெர்சன் வீதியில் உள்ள தொடர் மாடி ஒன்றில் தாயும், மகன் அதிசயனும் வசித்து வருகின்றனர். மகனுக்கு வயது 30. 20 வருடங்களுக்கு முன் தந்தையை இழந்தவர். தாயை கூடவே இருந்து பராமரித்து வருகின்றார். தாயுடன் எப்போதும் கூடவே இருந்து ஆக வேண்டும் என்பதால் வெளியில் இவர் செல்ல முடியாத நிலை. பக்கத்து வீட்டுக்கு செல்வதானாலும் வீட்டை பூட்டி விட்டுத்தான் செல்ல வேண்டும். இதனால் வேலைக்கு செல்ல முடியாதவராக உள்ளார். வீட்டில் இருந்தபடி மொழிபெயர்ப்பு வேலைகள் சிலவற்றை செய்கின்றார். அவ்வப்போதுதான் இவ்வேலைகளும் கிடைக்கின்றன.

கமலினியின் சகோதர்கள் பொருளாதார உதவி செய்வது உண்டு. சில வேளைகளில் கமலினியை கோவிலுக்கு அழைத்து செல்வார்கள். வேறு யாருடைய உதவியும் கிடையாது.

இவரை குறித்து தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரையையும் படித்துப் பாருங்கள்.

வித்துவப் பரம்பரையில் பிறந்து கலைகளையே வாழ்வாக்கிக் கொண்ட கமலினி செல்வராஜன்

பசுமை நினைவுகளில் பெருமிதம்


தமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்து வளர்ந்த கமலினி இயல், இசை, நாடகமென முத்தமிழில் ஈர்க்கப்பட்டு கலைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். பல்துறைத் திறமைகள் கொண்ட சில்லையூரார் மீது கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய் நேசமாய்க், காதலாய் மலர்ந்ததுவும், அதன் காரணமாய் இரத்த உறவுகளை உலகத்தை தாமெதிர்த்து அவரோடு கலந்த வாழ்க்கை சில்லையூரான் என்ற நாமத்தோடு கமலினி என்ற நாமும் ஒன்றாக சங்கமித்து விட்டது. கலையுலகும் தமிழுலகும் தந்த கமலினி செல்வராஜனைச் சந்தித்தேன்.

எல்லா நிகழ்வுகளும் நேற்றுத்தான் போல் என் நினைவில் என்று அடிக்கடி கூறும் நீங்கள் பிறந்தகத்தைப் பற்றி நினைவு கூறுங்களேன்....

பருத்தித்துறை புலோலியூரில் தமிழ் வித்துவப் பரம்பரையில் உதித்த தமிழ் பண்டிதர் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும், வயலின் வித்தகியாகத் திகழ்ந்த தனபாக்கியத்திற்கும் மூத்த மகளாக 1954 ஆம் ஆண்டு பிறந்தேன்.





தந்தையார் தமிழார்வம் கொண்டவர். இலக்கணச் சுவையோடு இலக்கியம் படைத்தவர்.

இலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். இலக்கிய ஆர்வம் கொண்ட அவர் இலங்கை வானொலியிலிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய நூலுரு வாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். அதே ஆர்வத்தில் என்னையும் வழி நடத்தி தமிழ் இலக்கிய கலை உலகில் காலூன்ற வைத்தவர். தந்தையின் எதிர்பார்ப்பு ‘கமலினி செல்வராஜன்’ என்ற நாமத்தால் கலையுலகில் பதியப்பட்டிருக்கின்றது.

கலையுலகில் காலடி வைக்குமுன் உங்கள் ஆரம்பக் கல்வியை எங்கே ஆரம்பித்தீர்கள்?

தந்தையார் தொழில் நிமித்தம் தலைநகரில் தங்கியிருந்தமையால் என் ஆரம்பக் கல்வியும் கொழும்பிலேயே ஆரம்பமானது. கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பிறகு பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கற்றேன். கலைப் பிரிவில் ஆர்வம் கொண்டு பட்டதாரி படிப்புக்காக களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கலை ஆய்வுகளை மேற்கொண்டேன்.

பள்ளிக் காலத்தில் கலையார்வம் உங்களை கவர பின்புலமாக அமைந்தது எது?

என் தந்தையார் மு. கணபதிப்பிள்ளை தமிழார்வம் கொண்ட பண்டிதர். தமிழ் இலக்கிய இலக்கண ஆய்வுகளை மேற்கொள்வதும் அதன் ஆக்கங்களைப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் நூல்களை தொகுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

தாயார் தனபாக்கியம் வயலின் வாசிப்பதில் நல்ல பிரியமுள்ளவர். தந்தையின் தமிழார்வமும் தாயின் இசைப் பிரியமும் ஊட்டி வளர்த்த குழந்தையாக நான் வளர்ந்தேன்.

தந்தையார் தான் பெற்ற தமிழ் புலமையைப் போல் என்னையும் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுக்க விரும்பினார். அதுவே என் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.




வாழ்க்கையில் ஏற்பட்ட அந்தத் திருப்பத்தை நாமும் பகிர்ந்து கொள்வோமா?

சிறு வயது முதலே இசை, நாடகம் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. பள்ளிக்கூட நிகழ்வுகளிலும் மற்றும் தந்தையார் பங்குபற்றும் இலக்கிய மேடைகளிலும் வாய்ப்பாட்டு இசைக்கும் சந்தர்ப்பங்கள் பல கிட்டின. பால பருவம் முதல் பல்கலைக்கழகம் வரை கலை நிகழ்ச்சிகளில் முதன்மையாளாக இருந்து வந்துள்ளேன். நாட்டிய நாடகங்கள் எண்ணற்றவை.

என்னுள் இருந்த நாடக ஆர்வத்தை மேலும் வலுவூட்ட விரும்பினார் என் தந்தை. அப்போது இலங்கை வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் தன் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருந்த என் தந்தையாருக்கு தன்னிகரில்லா பல்சுவை வேந்தன் செல்வராஜன் நல்ல நண்பர். வார்த்தைகளால் வடிக்க முடியாத பல் திறமை வாய்ந்த கவிராயர். அவரிடம் பல்கலை மாணவியாக இருந்த என்னை அறிமுகப்படுத்தினார்.

நாட்டுக் கூத்து கலைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த எனக்கு அவரின் புலமையின் பின்புலம் என் வாழ்க்கையின் பக்கபலமாக அமைந்து விட்டது. தமிழார்வம் கனன்ற என்நெஞ்சில் அவரின் பல்துறைத் திறமைகள் கல்லின் மேல் எழுத்தாய் படிந்துவிட்டது. வசீகரத் தோற்றம் அவர்மேல் கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய், நேசமாய், காதலாய் மலர்ந்தது. அதன் காரணமாய் இரத்த உறவுகளையும் எதிர்க்க வேண்டிய சூழலிலும் அவரோடு இணைந்தேன். இன்று கமலினி என்றால் செல்வராஜன் என்ற நாமத்தோடு தமிழுலகில் அழியா சின்னமாக பதிந்து இருப்பது பெருமையாக இருக்கின்றது.

கலையுலக பிரவேசம் பற்றிக் கூறுங்கள்:

1970 காலப் பகுதியில் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுச்சிக் காலமாக இருந்தது. சில்லையூர் செல்வராஜன் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பிரதானமானவர்களில் ஒருவராக இருந்தவர். அக்காலப் பகுதியில் தமிழக சஞ்சிகை, சினிமா போன்றவற்றின் வரவை குறைத்து உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஈழத்து சினிமா வளர்ச்சியில் ஊக்கம் காட்டினார்கள். அன்று வானொலியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்த ‘கோமாளிகள்’ என்ற தொடர் நகைச்சுவை நாடகத்தை சினிமாவாக எடுத்தார்கள். அத் திரைப்படத்தில் பிரதான பாகத்தில் எனது கணவருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அன்று அது அமைந்திருந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான சிங்களத் திரைப்படமான ‘ஆதர கதாவ’யில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தேன்.

வானொலியில் குரல் வழங்கிய சந்தர்ப்பம் பற்றி...

வானொலி நிகழ்ச்சிகளில் நிறைய குரல் பதிவு வழங்கியுள்ளேன். மக்கள் வங்கியின் பிரசார நிகழ்ச்சிகள், மங்கையர் உலகம், உரைச் சித்திரங்கள் என்று நீண்ட பட்டியல்.

தொலைக்காட்சி சேவையில் ரூபவாஹினி காலையில் வழங்கி வந்த, ‘ஆயுபோவன்’ நிகழ்ச்சியில் தமிழில் ‘காலை வணக்கம்’ தொகுத்து வழங்கி வந்தேன். அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து வந்துள்ளேன். அவ்வப்போது செய்தி வாசிப்பதிலும் என் பங்களிப்பு இருந்திருக்கின்றது. பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் நிகழ்வுக ளை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராகவும் இருந்துள்ளேன்.




கலை சம்பந்தமான வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஏதும் உண்டா?

2010 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் தமிழ் ஒபரே கலை மன்றத்தின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். அங்கே தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கலை பண்பாட்டை அழிந்துவிடாமல் பேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மரபு கலைகளில் ஒன்றான ‘நாட்டுக் கூத்தை’ தங்கள் சந்ததிகளுக்கு போதிக்கும்படி கேட்டுக் கொண்டார் கள். சுமார் ஒராண்டுக் காலம் நாட்டுக் கூத்தை படிப்பித்து, அரங்கேற்றி பெரும் பாராட்டையும் பெற்றேன்.

சுமார் நான்கு தசாப்தத்தை கலையுலகில் அர்ப்பணித்த உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள்....

1995 இல் நாட்டுக் கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்கான விருது கலாசார அமைச்சால் கிடைத்தது. 2008 இல் கொழும்பு றோயல் கல்லூரி - நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்பை கெளரவித்து விருது வழங்கியது.

2010 நோர்வே நாட்டில் நோர்வே கலை மன்றம் நாட்டுக் கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது வழங்கியது.

அண்மையில் இளைஞர் நற்பணி மன்றம் என்னுடைய 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் விருது வழங்கி கெளரவித்தது.

தன்னிகரில்லா ஒரு கலைஞனை கணவராக அடைந்த பாக்கியம் உங்களுக்கு அவரைப்பற்றி இந்தத் தலைமுறைக்கு...

பல்கலை வேந்தர் என்றும் இலக்கியச் செம்மல் என்றும் பளிங்குச் சொல் பாவலர் என்றும் அழைக்கப்பட்ட பாவேந்தர் சில்லாலையில் பிறந்தவர். ஊரோடு உறவாடிய பெயர்தான் சில்லையூர் செல்வராஜன். கவி அவர் நாவில் நர்த்தனமிடும். சிறந்த ஒலிபரப்பாளர், வானொலி, திரைப்பட, தொலைக்காட்சி எழுத்தாளர், நடிகர், பாடகர், விளம்பரத் துறையாளர் என்று பல்துறையிலும் பிரகாசித்தவர்.

கவி வடிப்பதிலும் கவி பாடுவதிலும் அவருக்கு நிகர் யாரையும் நான் சந்தித்ததில்லை. தான்தோன்றி கவிராயர் பட்டத்தை பெற்றுக் கொண்டவர். இவ்வளவு வல்லமையும் பொருந்திய ஒருவரை நான் சின்னவளாய் இருக்கையிலேயே கேட்ட மேடைகளிலே ஒலித்துக் கொண்டிருந்த காற்றையும் வசங்கொண்ட அவர் கவிக்குரலையும் என்றென்றும் என்னோடு வைத்திருக்க ஏங்கிய காலம் கனிந்தது - இனித்தது. அந்திம காலம் வரை அன்போடு வாழ்ந்தார். 1995 ஆம் ஆண்டு அவர் பிரிவு ஆற்றொனாத் துயரைத் தந்தாலும் நாட்டுத் தலைவர்கள் முதல் சகல துறைகளிலும் சம்பந்தப்பட்ட சகலரும் வேற்று மொழியினரும் இன, மத, பேதமின்றி அஞ்சலி செலுத்தியமை சில்லையூரானின் கவிதை, கலை வாழ்கிறது - வாழும் என்ற நம்பிக்கை தெம்பை ஊட்டியது.

இந்த கலைச் சிற்பியின் ஞாபக சின்னமாக எதையும் நிலையுறுத்தியுள்ளீர்களா?

சில்லையூரார் இருக்கும்போதே அவர் கவிதைகளை நூல் வடிவில் காண ஆசை கொண்டு செயல்பட்டேன். காலம் பிந்திவிட்டது. இருந்தபோதும் ‘சில்லையூர் செல்வராசன் கவிதைகள் - தொகுதி - 1’ என்ற தொகுப்பை நூலுருவாக்கினேன்.

இந்தத் தொகுப்பு வெளியீட்டிற்கு சில்லையூராரின் நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமான சக இலக்கியவாதிகளின் பேருதவியும் பெரும் பங்களிப்பாக அமைந்ததை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். இதை தவிர இன்னும் அச்சில் வெளிவராத பல தனிக் கவிதைகள், வில்லுப்பாட்டுகள், கவியரங்க கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைகள், மொழி பெயர்ப்புக் கதைகள், துப்பறியும் கதைகள், வானொலிச் சித்திரங்கள், நாட்டிய நாடகங்கள் போன்றன உள்ளன. எனக்கேற்பட்ட சுகயீனம் காரணமாக அவைகளை ஆவணப்படுத்த முடியாமல் கிடக்கின்றன.

நூலொன்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளதோடு அன்னார் அமரத்துவம் எய்திய பிறகு அவரின் நினைவாக கல்லறையொன்றை அமைத்து அதில் கலைஞரின் வாசகத்தை மூன்று மொழிகளிலும் பொறிக்க வேண்டுமென்பதுவே என் பேராவவாகவிருந்தது. கங்கை வேணியன் ஐயா என் பேரவாவிற்கு உறுதுணையாக இருந்தார்.

மூலமாதிரி பிரதியொன்றை உருவாக்கித் தந்தார். புல்லுமலை நல்லரத்தினம் சிற்பச் சிலையை உருவாக்கினார். சில்லையூரானின் முதலாண்டு நிறைவு நாளில் (14.10.96) அந்தக் கல்லறைச் சிற்பத்தை அன்று மாநகர முதல்வராகவிருந்த கே. கணேசலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பாரிய செலவின் பளுவை என் மேல் சுமத்தாமல் தானே முன்னின்று உழைத்த பெரியார் கங்கை வேணியனையும், கல்லறை கட்ட காணிக்கு மாநகர சபை அனுமதி பெற்றுத் தந்த அமரர் முன்னாள் முதல்வர் கணேசலிங்கம் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கனடாவிலிருந்து இடையிடையே என் மனம் தளராதிருக்க தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நான் பெறாத என் பிள்ளைகள் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினிக்கும் எனக்கு பேருதவியாக இருந்ததையும் நான் மறவேன்.

தற்போது உங்களுடைய கலை ஈடுபாடு எப்படி இருக்கின்றது?

மகன் அதிசயன் கடமையாற்றும் விளம்பர நிறுவனத்திற்காக ஒலிப்பதிவுகளுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றேன்.

முன் இருந்த ஈடுபாடுகள் தற்போது இல்லை. இன்றைய தலைமுறைகள் மூத்த கலைஞர்களுக்கான மதிப்பைத் தருவது குறைவாகவே இருக்கின்றது.

மறக்க முடியாத நினைவுகள்... என்று கேட்டால்?

அவரின் கவி வரிகளில் சொன்னால் .....

பேசிய செல்லப் பேச்சிற்

பித்து நான் கொண்டிருப்பேன்

மாசிலா உந்தன் அன்பின்

மயங்கி நான் களித்திருப்பேன்!

அவர் சூடிய பூவும் பொட்டும் என்னோடு வாழ்கிறது.











Share    
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல