டாக்டர். சுஜாகரன் நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை, பம்பலப்பிட்டி
நடுத்தர வயதுடைய பெண்களிலும் சற்று வயது கூடிய பெண்களிலும் சிறுநீர் வெளியேற்றமானது சிலவேளைகளில் கட்டுப்பாடில்லாது ஏற்படுகின்றது. அதாவது 40 வயதிலிருந்து இவ்வாறான பிரச்சினைகள் தொடங்க வாய்ப்புள்ளன. சிறுநீர்ப்பையானது தாங்கப்பட்டிருக்கும் இழையங்களும் தசைகளும் பலவீனமடைந்தே இவ்வாறான கட்டுப்பாடற்ற சிறுநீர் வெளியேற்றம் பெண்களில் ஏற்படுகின்றது. இதனால் இவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் சிரிக்கும் போதும் சிறுநீர் கசிவது பெரும் சிரமமாக இருக்கின்றது. இதனால் பெண்கள் தமது வாழ்க்கையில் பலவிதமான நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அதாவது அவர்கள் சமூக வாழ்க்கையில் பலருடன் கதைத்து சிரிப்பதற்கே பயப்படுவார்கள். ஏனெனில் சிரித்தவுடன் சிறுநீர் வெளியேறுவது அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. பலர் இது ஒருவித நோய் என்றும் இதற்கு சரியான தீர்வு உள்ளது எனவும் தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே இது தொடர்பான அறிவூட்டலை மக்களுக்கு வழங்கி இதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக விளக்க வேண்டும்.
எனது அனுபவத்தை வைத்து கூறும் போது என்னிடம் ஆலோசனை பெற வருபவர்களில் இவ்வித பிரச்சினை குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. சிலர் தாங்களாக முன்வந்து இவ்வாறான கட்டுப்பாடற்ற சிறுநீர் வெளியேற்றத்தை பற்றி கூறுகிறார்கள். சிலர் நான் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளனவா என்று கேட்கும் போதுதான் வெளிப்படுத்துகின்றனர். இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் அண்மையில் சிகிச்சை வழங்கிய இது போன்ற விடயத்தை இங்கு தருகின்றோம்.
52 வயதுடைய 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் அண்மையில் எமது கிளினிக்கில் ஆலோசனை பெற வந்தார். இவரது முக்கிய பிரச்சினை இருமும் போதும் தும்மும் போதும் சிரிக்கும் போதும் கட்டுப்பாடில்லாத சிறுநீர் வெளியேற்றமாகும். அத்துடன் அவர் மிகப்பெரிய பாரங்கள் தூக்கும் போதும் சிறுநீர் கசிவதை உணரக் கூடியதாக உள்ளதாக கூறினார். இது தொடர்பாக நாம் மேலும் பரிசோதிக்கும் போது அவருக்கு சீனி வியாதியோ சிறுநீர் கிருமி தொற்றோ இருக்கவில்லை. அத்துடன் அவரது கர்ப்பப்பை இறக்கமும் குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருக்கவில்லை. எனவே இந்த சிறுநீர் வெளியேற்றம் கட்டுப்பாடில்லாமல் இருப்பதற்கு காரணம் சிறுநீர்ப்பை இறக்கமேயாகும் என உறுதிப்படுத்தினோம். அதாவது சிறுநீர்ப்பையை தாங்கும் இழையங்கள் பலவீனமடைந்து சிறுநீர்ப்பை இறக்கம் ஏற்படுகின்றது. இதனால் இருமும்போதும் தும்மும் போதும் ஏற்படும் அதிர்வினால் சிறுநீர்ப்பை கீழே இறங்க அதனுடன் சேர்ந்து சிறுநீரும் வெளியேறுகின்றது.
இதற்கான சிகிச்சை என்ன என்பது தான் அவர்களின் அடுத்து கேள்வியாக விருந்தது. இவ்வாறான பிரச்சினைக்கு மருந்துகள் மூலம் குணமாக்கலாமா? என்று கேட்டனர். இவ்வகை சிறுநீர்ப்பை இறக்கத்தை மருந்துகள் பலமாக்கி விடாது. அத்துடன் சிறுநீர்ப்பை கழுத்துப் பகுதியை தாங்கும் சக்தியும் மருந்துகள் மூலம் வழங்க முடியாது. எனவே இப்பிரச்சினைக்கு இரு வழிகளில் தீர்வு வழங்கலாம்.
அதாவது அடி வயிற்று மற்றும் சிறுநீர்ப்பை தாங்கும் தசைகளை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சி அல்லது சத்திர சிகிச்சையே இதற்கான தீர்வுகள்.
உடற்பயிற்சிகள் மூலம் அடி வயிற்றுப் பகுதி தசைகளை இறுக்குவதற்கு பல மாதங்கள் எடுக்கும். அத்துடன் இப் பிரச்சினை மிகவும் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்குதான் இதனை ஒரு சிகிச்சையாக கூற முடியும். இவ்வகை சிறுநீர் வெளியேற்றம் கட்டுப்பாடில்லாது இருந்தால் சிறந்த வெற்றிகரமான சிகிச்சை முறை சத்திர சிகிச்சை முறையேயாகும். சத்திர சிகிச்சை தான் உடனடித் தீர்வு வழங்குகின்றது.
இதற்கான சத்திர சிகிச்சை முறைகள் பல இருந்தாலும் அதி நவீன பிரபல்யமான சிகிச்சை முறை TVT எனப்படும் சத்திர சிகிச்சையாகும். எமது வைத்திய சாலையிலேயே நாம் இப் பெண்ணுக்கான TVT எனப்படும் சத்திர சிகிச்சையை செய்ய திட்டமிட்டோம். ஆரம்பத்தில் அந்த பெண் சத்திர சிகிச்சை என்றவுடன் சற்று தயங்கினார். இம்முறை பற்றிய விரிவான விளக்கத்தை கேட்டார். நானும் இம்முறை பற்றி கீழ் கண்டவாறு விபரித்தேன்.
TVT எனப்படும் சத்திர சிகிச்சை சிறுநீர்ப்பையை உயர்த்தி அதன் கழுத்துப் பகுதிக்கு உறுதியான தாங்கும் சக்தியைக் கொடுக்க செய்யப்படும் சத்திர சிகிச்சை. இம்முறைக்கு பெண்ணை முழுதாக மயக்க வேண்டியதில்லை. முதுகில் ஊசியை குற்றி பகுதியாக மயக்கினாலே போதுமானது. அத்துடன் வயிற்றை பெரிதாக வெட்ட வேண்டியதில்லை. ஆனால் கீழ்வயிற்றில் சிறியதொரு துளை மட்டும் போதுமானது. அதற்கூடாக மெல்லிய ஒரு நாடாவை செலுத்தி அதனை கர்ப்பப்பை கழுத்தை சுற்றி தாங்க வைத்து விட முடியும். இதன் போது கர்ப்பப்பை கழுத்துக்கு ஒரு வித பலமும் உறுதியும் கிடைக்கின்றது. இதனால் நீங்கள் தும்மும் போதும் இருமும் போதும் சிறுநீர்ப்பை கழுத்து கீழே இறங்காது இவ்வாறு உங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு செய்தால் நீங்கள் மறுநாளே வீடு செல்ல முடியும். உங்களது அன்றாட வேலைகளையும் மறுநாளில் இருந்து ஆரம்பிக்கலாம்.
இவ்வாறு இச்சிகிச்சை முறைக்கான தெளிவான விளக்கத்தை கேட்ட அப்பெண் இந்த TVT சத்திரசிகிச்சைக்கு சம்மதித்தார். திட்டமிட்டபடி ஒரு நாள் மட்டும் வைத்தியசாலையில் அவர்களை அனுமதித்து TVT எனப்படும் இலகுவானதும் அதிநவீன முறையுமான சத்திர சிகிச்சையை செய்தோம். ஒரே நாளில் வீடு சென்றார். சத்திர சிகிச்சையின் பின்னர் மறுநாளே அவர்கள் இவ்வளவு காலமும் அனுபவித்த கட்டுப்பாடற்ற சிறுநீர் வெளியேற்றம் கட்டுப்பாட்டில் வந்தது. இப்பொழுது எவ்வளவு சிரித்தாலும் இருமினாலும் சிறுநீர் வெளியேற்றம் ஏற்படுவதில்லை. இதனால் இப்பொழுது இப்பெண் எங்கும் எப்போதும் பயமின்றி கூச்சமின்றி சென்று வரக் கூடிய நிலைமை ஏற்பட்டது.
எனவே கட்டுப்பாடில்லாது வெளி யேறும் சிறுநீரை குணப்படுத்த நவீன சிகிச்சை முறையான TVT சிறந்த பலனை தருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக