செவ்வாய், 21 ஏப்ரல், 2015

பிரவுசர் தரும் பிழைச் செய்திகள்

பிரவுசர் வழியாக இணையத்தை நாடுகையில், இணைய தளங்களைத் திறக்க முற்படுகையில் நமக்குப் பலவகையான பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. இந்த பிழைச் செய்திகளைப் பார்த்தவுடன், ''அவ்வளவுதான், இந்த இணைய தளம் சரியில்லை. நம்மால் அணுக முடியாது” என்று முடிவு செய்து விலகிவிடுகிறோம். ஆனால், அந்தப் பிழைச் செய்திகளை விரிவாகப் படித்துத் தெரிந்து கொண்டால், நாம் இலக்கு வைத்திடும் இணைய தளங்களில் பெரும்பாலான தளங்களைப் பிற வழிகளில் அணுகிப் பார்த்து விடலாம் என்பதே உண்மை.



நாம் சந்திக்கும் பிழைச் செய்திகளில் முக்கியமான சில குறித்து இங்கு காணலாம்.நம் இணைய அணுகலில், தவறாகச் செல்கையில், நம் பிரவுசர் என்ன நிகழ்கிறது என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுவதே இந்த பிழைச் செய்திகளாகும். இவற்றில் எப்போதும் ஓர் எண் காட்டப்படும். எடுத்துக்காட்டாக '404' மற்றும் '500' என இருக்கலாம். இந்த எண்களுடன் சுருக்கமாக சிறு விளக்கமும் அளிக்கப்படும். ஆனால், அது நமக்குப் புரியாததாக இருக்கலாம். இந்த பிழைகளில் பெரும்பாலானவற்றை நாம் சரி செய்து நம் தேடல் முயற்சியைத் தொடரலாம். எனவே, இவை என்ன சொல்ல வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியை இங்கு மேற்கொள்ளலாம்.

எண் 400 வரிசையில் பல பிழைச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் நான்கு பிழைச் செய்திகள் நாம் அடிக்கடி சந்திப்பவையாக உள்ளன. அவை:

1. 400 - பிழையுள்ள வேண்டுகோள் (Bad Request): நீங்கள் அனுப்பிய, இணைய தளத்திற்கான விண்ணப்பம் அல்லது வேண்டுகோள் சரியான முறையில் அனுப்பப்படவில்லை. நீங்கள், அந்த இணைய தளத்தின் முகவரியைச் (URL) சரியாக அமைத்து உள்ளீடு செய்தீர்களா எனச் சரிபார்க்கவும். அல்லது குறிப்பிட்ட இணையப் பக்கத்தினை புதுப்பித்தும் (Refresh) பார்க்கலாம். நீங்கள் உங்கள் வேண்டுகோளை அனுப்பியபோது, உங்களின் இணைய இணைப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தால், இந்த பிழைச் செய்தி பெற வாய்ப்புண்டு.

2. 401 - உரிமையற்றது (Unauthorized): இந்த செய்தியே உங்களுக்கு அதன் தன்மையை விளக்குகிறது. இந்த செய்தியை நீங்கள் பெற்றால், குறிப்பிட்ட இணைய தளத்தினைப் பெற, உங்களுடைய இணைய முகவரிக்கு உரிமை இல்லை. அல்லது நீங்கள் தந்த தகவல்கள் இதற்கானவை இல்லை. அல்லது இதில் லாக் இன் செய்து, தளத்தினுள் செல்ல உங்களுக்கு உரிமை இல்லை. இது போன்ற பிழைச் செய்தி கிடைக்கும் பட்சத்தில், முயற்சியைக் கைவிடுவதே நல்லது. ஏனென்றால், அந்த இணையப் பக்கம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

3. 404 - காணப்படவில்லை (Not Found): நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பொதுவான பிழைச் செய்தி இது. நீங்கள் காண விரும்பும் பக்கம் அல்லது இணைய தளம், இணையத்தில் காணப்படவில்லை. நீங்கள் அமைத்துள்ள முகவரியினைச் சரி பார்க்கவும். ஒருமுறைக்கு இருமுறையாக அதனை நுணுக்கமாகச் சரி பார்க்கவும். அதன் பின்னரும், குறிப்பிட்ட இணைய தளம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தளத்திற்கான முகவரி இது இல்லை என்றாகிறது. அந்த இணையப் பக்கத்தின் முதன்மைத் தளப் பக்கத்தினை (home page) அணுகிப் பின்னர் நீங்கள் விரும்பும் பக்கத்தினைப் பெறுவதற்கான வழிகளை ஆய்வு செய்து, பக்கத்தைக் காண முயற்சிக்கவும்.

4. 408 - விண்ணப்ப நேரம் கடந்துவிட்டது (Request Timeout): நீங்கள் ஓர் இணைய தளத்திற்கான முகவரியை அமைத்து, அதனைப் பெற்றுத் தர உங்கள் பிரவுசரை இயக்குகையில், உங்கள் பிரவுசர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, சில குறியீடுகளை அனுப்புகிறது. இந்த அழைப்புக் குறியீடுகள், பல சர்வர்களைக் கடந்து சென்று, உங்களுக்கான இணைய தளம் உள்ள சர்வரைச் சென்றடைந்து, பின் அந்த சர்வர் தரும் தகவல்களை உங்களுக்கு அளிக்கிறது. இதற்கு, உங்கள் பிரவுசர் குறிப்பிட்ட கால வரையறையை அமைத்துக் கொள்கிறது. குறிப்பிட்ட அந்தக் கால வரையறை கடந்தும், உங்களுக்கான இணைய தளம் குறித்த தகவல் பிரவுசருக்கு அனுப்பப்படவில்லை எனில், “காலம் கடந்துவிட்டது” என்ற பிழைச் செய்தியை பிரவுசர் உங்களுக்குத் தெரிவிக்கிறது.

இந்த பிழைக்குக் காரணம், உங்கள் பக்கமும் இருக்கலாம்; இணைய தளத்தினைக் கொண்டுள்ள சர்வர் பக்கமும் இருக்கலாம். சிறிது காலம் காத்திருந்து, பிரவுசரை புதுப்பிக்கும் வகையில் ரெப்ரெஷ் செய்தால், ஒரு வேளை, குறிப்பிட்ட தளம் கிடைக்கலாம். இல்லை எனில், முயற்சியைச் சிறிது காலம் சென்று மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 500 என்ற எண்களைத் தாங்கி வரும் பிழைச் செய்திகளைப் பார்க்கலாம். 500 என்ற எண் சார்ந்து வரும் பிழைச் செய்திகள் கிடைத்தால், அது நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தளங்களைக் கொண்டுள்ள சர்வரிடம் உள்ள பிழை சார்ந்ததாகவே இருக்கும். எனவே, இதனை நாம் சரி செய்திட முடியாது. இந்த வகையான பிழைச் செய்திகள், குறிப்பிட்ட நேரத்திலோ, அல்லது குறிப்பிட்ட பக்கங்களைக் காண முயற்சி செய்கையிலோ கிடைக்கப் பெற்றால், அந்த தளத்தின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, உங்களுக்குக் கிடைக்கும் பிழைச் செய்தி குறித்து தெரிவிக்கவும். இந்த வகையில் நாம் பெறக் கூடிய சில பொதுவான பிழைச் செய்திகளை இங்கு காணலாம்.

1. 500 - சர்வர் அமைப்பு பிழை (Internal Server Error) : இது சர்வரின் கட்டமைப்பு சார்ந்த பிழையைச் சுட்டிக் காட்டுகிறது. பிழை என்னவென்று, துல்லிதமாக இதில் அறிய முடியாது.

2. 502 - மோசமான வழித்தடம் (Bad Gateway): இந்த பிழைச் செய்தி கிடைத்தால், உங்கள் பிரவுசருக்கும், இணைய தளம் உள்ள சர்வருக்கும் இடையேயான வழியில் உள்ள இரண்டு சர்வர்கள் சரியாகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. இந்த பிழை, இணைய தளத்தில் ஒரு புதிய பக்கம் ஒன்றை பிரவுசருக்கு அனுப்பும் போது ஏற்படலாம். அல்லது அந்த சர்வரில் லாக் இன் செய்திடும்போது ஏற்படலாம். அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க ஓர் இணைய தளத்தை அணுகும்போது கிடைக்கலாம்.

3. 503 - சேவை கிடைக்கவில்லை (Service Unavailable): இந்த பிழைச் செய்தி தற்காலிகமானதாகவோ, அல்லது வெகு காலத்திற்குக் காட்டப்படும் வகையிலோ இருக்கலாம். “இப்போதைக்கு இந்த இணைய தளம் உங்களுக்குக் கிடைக்காது” என்பதே இதன் பொருள். எனவே, மிகவும் அவசரமாக இதனைக் காண வேண்டும் என்றால், சில மணி நேரம் கழித்து இதனைக் காண முயற்சிக்கலாம். இல்லை எனில், சில நாட்கள் கழித்து முயற்சிக்கலாம்.

4. 504 - வழித்தட நேரம் கடந்துவிட்டது (Gateway Timeout): இது பிழைச் செய்தி 408 போன்றது. “நேரம் கடந்துவிட்டது” என்பது இங்கு இரண்டு சர்வர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னை. உங்கள் கம்ப்யூட்டருக்கு இதில் பங்கில்லை. ஏதேனும் ஒரு சர்வர் தன் இயக்க நிலையினை இழந்திருக்கலாம். சில மணித்துளிகளிலோ அல்லது சில மணி நேரங்கழித்தோ, இந்த தளம் இயக்கப்படலாம்.

பிறவகை பிழைச் செய்திகள்

பிழைச் செய்திகள் எப்போதும் ஓர் எண்ணுடன் வருவதில்லை. சில வேளைகளில், தகவல்களுடன் ஒரு பிழைச் செய்தி தரப்படலாம். இவற்றை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இப்படிக் கிடைக்கும் பிழைச் செய்திகளில் பொதுவான சிலவற்றை இங்கு காணலாம்.

சான்றிதழ் பிழைகள் - (Certificate errors): நீங்கள் அணுக விரும்பும் இணைய தளம் தான் பாதுகாப்பானது என்பதற்கான அடையாளங்களைக் காட்டி, அதற்கெனச் சான்றிதழ் வழங்கும் அமைப்பிடம் பாதுகாப்பு சான்றிதழ் பெறவில்லை. அல்லது ஏற்கனவே பெற்றிருந்த சான்றிதழின் காலக்கெடு முடிந்திருக்கும். இந்த தளத்தினை ஏதேனும் ஹேக்கர்கள் கைப்பற்றி இருந்தாலும், இத்தகைய பிழைச் செய்தி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இது போன்ற இணைய தளங்களை அணுகாமல் இருப்பதே நல்லது. இந்த பிழை சரி செய்யப்பட்டு, சரியான சான்றிதழை இந்த தளம் பெற்ற பின், இதனைப் பார்ப்பது நல்லது. முடியுமானால், இந்த தளத்தின் உரிமையைப் பெற்றவருடன் தொடர்பு கொண்டு இதனைத் தெரிவிக்கலாம். அல்லது பிழை என்னவென்று அறியலாம். அது உண்மையிலேயே சான்றிதழ் குறித்ததா அல்லது தவறான பிழைச் செய்தி தரப்படுகிறதா என அறிந்து அதற்கேற்ப செயல்படலாம்.

பாதுகாப்பு எச்சரிக்கைகள் - (Security warnings): அனைத்து பிரவுசர்களும் பாதுகாப்பு தருவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரவுசர் பயனாளர்களை, தங்கள் வாடிக்கையாளர்கள் நலன் காக்கவே இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. இதன் மூலம், வழக்கமாக மால்வேர் அல்லது ஸ்கேம் செய்திகளைப் பரப்பும் தளங்களிடமிருந்து பாதுகாக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படும். உங்கள் பிரவுசரின் பாதுகாப்பு அமைப்பை மிக உயர் நிலையில் (High) அமைத்திருந்தால், இந்த பிழைச் செய்தி அடிக்கடி கிடைக்கும். நீங்கள் செட் செய்துள்ள அளவிற்கு பாதுகாப்பான வழிகளை, நீங்கள் பார்க்க விரும்பும் தளம் கொண்டிருக்காது என்பதே இதன் பொருள். இது போன்ற பிழைச் செய்தி அடிக்கடி பெறுவதைக் குறைக்க விரும்பினால், உங்கள் பிரவுசரின் பாதுகாப்பு அமைப்பினை, மத்திய அல்லது கீழ் நிலையில் (Low or Medium) அமைக்கலாம். எப்போது உங்கள் பிரவுசர் இது போன்ற ஒரு பிழைச் செய்தியினைத் தருகிறதோ, அந்த இணைய தளத்தினை அணுகாமல் இருப்பதே நல்லது. அப்படி அணுகினால், உங்களிடம் மிகச் சக்தி வாய்ந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இருந்தாலும், மால்வேர் தடுப்பு செயலி இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டருக்கு மால்வேர் அல்லது வைரஸ் வரும் வாய்ப்புகள் உண்டு.

இது போன்ற பிழைச் செய்திகள், நீங்கள் அமைத்துள்ள ப்ளக் இன் அல்லது ஆட் ஆன் புரோகிராம்களாலும் கிடைப்பதுண்டு. இவ்வாறு பிரச்னைகளைத் தரும் ப்ளக் இன் புரோகிராம்களை அடையாளம் கண்டு நீக்கிவிடுவதும் நல்லது. பின்னர், தேவைப்படும்போது மட்டும் அதனை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

சில வேளைகளில், ஒரு குறிப்பிட்ட தளத்தினை இணைப்பு பிரச்னைகளால் பெற முடியவில்லை எனச் செய்தி கிடைத்தால், அதே அமைப்பில், வேறு ஒரு தளத்தை அணுக முயற்சிக்கவும். அப்போதும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் நெட்வொர்க் அமைப்பில் தான் தவறு இருப்பது உண்மையாகிறது. உங்களுடைய இணைய இணைப்பினைச் சரி பார்க்கவும். சரி செய்திட முடியவில்லை என்றால், உங்களுக்கு இணைய இணைப்பினைத் தரும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தினை அணுகவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல