அவர் வழங்கிய செவ்வி முழுமையாகக் கீழே தரப்படுகின்றது.
கேள்வி: தமிழினி எழுதிய "ஒரு கூர்வாளின் நிழலில்" என்ற புத்தகத்தின் விற்பனை தற்பொழுது எவ்வாறு இருக்கின்றது?
பதில்: தமிழினியின் புத்தகத்தை அரசியல் வாதிகள் தொட்டு சாதாரண வாசகர்கள் வரையில் பெரும்பாலானவர்கள் இலவசமாகவே வாங்க முனைகின்றார்கள்.
ஆனால், கிளிநொச்சியில் நடந்த அறிமுக விழாவில் நாங்கள் நிர்ணய விலையிலும் பார்க்க அரைவாசி விலைக்குத்தான் இப்புத்தகத்தை விற்றோம். அங்கு மாத்திரம் 30,000 ரூபா பெறுமதியான புத்தகங்கள் விற்கப்பட்டன. அப்பிரதேசம் முன்னாள் போராளிகள் வாழ்ந்த பிரதேசமாகையால் அதிக ஆர்வத்துடன் இப்புத்தகங்களை வாங்குவதற்கு விரும்பியிருப்பார்கள் என நினைக்கின்றேன்.
மேலும் மூன்று மாதங்களுக்கொரு முறை என்ற கால இடைவெளியில் 30 புத்தகங்கள் என்ற வீதத்தில் அங்குள்ள புத்தகசாலைக்கு வழங்கி வந்தேன். ஆனால் விற்பனைகள் மெதுவாகவே இடம்பெற்றுவருகின்றன.
கேள்வி: இப்புத்தகம் இந்தியாவிலும் வெளியிடப்பட்டதா?
பதில்: ஆம். இந்தியாவிலுள்ள காலச்சுவடு என்ற பதிப்பகத்தினால் இதே பெயரில் இரண்டாவது பதிப்பாக இப்புத்தகம் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் தான் வெளியிடப்பட்டது. ஆனால் நாங்கள் வெளியிடுவதற்கு முன்னரே அவர்கள் வெளியிட்டனர்.
கேள்வி: இப்புத்தகத்திற்கு இந்தியாவில் எவ்வாறான கேள்வி உள்ளது?
பதில்: இந்தியாவில் சென்னையில் இடம்பெற்ற புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தகங்களின் அதிகூடிய விற்பனையான முதல் ஐந்து புனைவுகள் அற்ற புத்தகங்களில் இப்புத்தகம் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்தியாவில் இப்புத்தகத்திற்கு நல்ல கேள்வி உண்டு.
கேள்வி: இப்புத்தகத்தின் தமிழ் மொழிப் பிரதியின் விற்பனையிலும் பார்க்க சிங்களப் பிரதியின் விற்பனை எவ்வாறுள்ளது?
பதில்: இப்புத்தகம் சிங்கள சமூகங்கள், அமைப்புக்கள் தரப்பில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கருகிலுள்ள விகாரையொன்றில் வண.தேரர். ராகுல வல்பொல தலைமையில் இப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனக் கூட்டமொன்று இடம்பெற்றது.
அக்கூட்டத்தில் பலர் பங்குபற்றியிருந்தார்கள். உண்மையில் புத்தகத்தின் விமர்சனங்களுக்கப்பால் சென்று சிங்கள சமூகங்களின் குறைபாடுகள் மற்றும் இனவாதச்சிந்தனைகள் தொடர்பில் அதிகம் கலந்துரையாடப்பட்டிருந்தது. இப்புத்தக வெளியீடு இவ்வாறானதொரு கலந்துரையாடலை சிங்களச் சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தியதையிட்டு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
மறைந்த முன்னாள் தமிழ்ப்போராளி தமிழினியின் புத்தகமானது சிங்கள சமூகங்களிடையே தங்களே தங்களை சுயபரிசோதனை செய்வதற்கான ஒரு எழுச்சியை மக்கள் மனங்களில் உருவாக்கியமையே இப்புத்தகத்திற்கு கிடைத்த வெற்றி என நான் நினைக்கின்றேன். சிங்களத்தில் கிட்டத்தட்ட 6,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ளது.
இப்புத்தகத்தின் சிங்கள வெளியீட்டாளர் உண்மையிலேயே இப்புத்தகத்தினால் கிடைக்கும் நிதியை மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலையில் சிறுவர் பிரிவிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார். தமிழினியின் இறுதி விருப்பமும் இதுவாகவே இருந்தது.
கேள்வி: இப்புத்தகத்தின் சிங்கள மொழிப்பெயர்ப்பு பற்றிக் கூறமுடியுமா?
பதில்: இந்தப் புத்தகத்தை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான விமல் சுவாமிநாதனே மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பதற்காக தமிழ்ப் புத்தகத்தை நானே அவரிடம் ஒப்படைத்தேன். அவரும் இப்பணியை முழுமனதுடன் பொறுப்பெடுத்து அவரே முடித்தார். பின்னர் இதனை தர்ம ஸ்ரீ பண்டார நாயக்கா வெளியிட வேண்டும் என்று விரும்பினார். ஆகவே இதனை நான் அவரிடமே ஒப்படைத்தேன். அத்துடன் இச்சிங்களப்பதிப்பிலிருந்து கிடைக்கப் பெறும் நிதி மஹரகமையிலுள்ள புற்றுநோய் வைத்தியசாலையின் சிறுவர் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்ற தமிழினியின் இறுதி விருப்பத்தையும் நான் தெரிவித்தேன்.
கேள்வி: தமிழினியை உங்களுக்கு யுத்தத்திற்குப் பின்னர் தெரியுமா? அல்லது யுத்தத்திற்கு முன்னரே தெரியுமா?
பதில்: இல்லை. தமிழினி என்ற போராளி யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் அரசியல் துறைப்பொறுப்பாளராக செயற்பட்டார் என்ற சில விடயங்கள் எனக்குத் தெரியும். ஆனால் நான் போராட்டத்தில் இணைந்துகொள்ளவில்லை என்றபடியினால் அவரைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. அத்துடன் நான் விடுதலைப் புலிகளின் போராட்டத்தைப் பற்றி அவ்வளவாக அக்கறைகொண்டிருக்கவில்லை. ஆகவே இவற்றைப்பற்றி ஆரம்பத்தில் அதிகமாக ஆராயவும் விரும்பியிருக்கவில்லை.
கேள்வி: புலி ஆதரவாளர்கள் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை பொய் என்று விமர்சனங்களை முன்வைக்கின்றார்களே அது குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: இவர்களுடைய விமர்சனங்கள் சிலவற்றை பார்த்தால் தமிழினியின் புனர்வாழ்வு பற்றி சிலர் விமர்சித்துள்ளார்கள். தற்பொழுது இன்னுமோர் முன்னாள் போராளி மன்னாரில் தடுப்பு முகாம் பற்றிய தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
ஆனால் தமிழினியோ வெலிக்கடைச்சிறைச்சாலை பற்றிய அனுபவங்களையும் வவுனியா புனர்வாழ்வு முகாம் பற்றிய தனது அனுபவங்களையுமே வெளியிட்டிருந்தார். ஆனால் இவை எல்லாம் அவர் சந்தித்த உண்மையான அனுபவங்களின் அடிப்படையில் அவரால் எழுதப்பட்டிருந்தது.
கேள்வி: மேலும் புத்தகத்தில் கடைசி யுத்தத்தில் நந்திக்கடலில் பிரபாகரனால் எடுக்கப்பட்ட சில முடிவுகளைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றதே?
பதில்: அதாவது உண்மையில் அங்கு குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால் யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் தமிழினி தனக்கு கட்டளையிடும் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள பல தடவைகள் முயற்சித்தபோதும் முடியாமற் போய்விட்டது. ஆகவே போராளிகள் கைவிடப்பட்டுள்ளனரா? என்ற சந்தேகம் அவருக்குள் எழத்தொடங்கி விட்டது.
ஆனால் தலைவர் பிரபாகரன் தான் தப்பித்துக் கொள்வதற்காக போராளிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று எங்குமே குறிப்பிட்டிருக்கவில்லை.
ஆனால் எத்தனையோ முறை தமிழினி தனக்கு மேலதிகாரியாக இருந்த தளபதி நடேசனிடம் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அம்முயற்சி தோல்வியிலேயே முடிவடைந்து விட்டதென்று அவர் கூறினார்.
தளபதி சூசையுடன் மட்டுமே அவருக்குத் தொடர்புகொள்ள முடிந்தது.
ஆகவே தனது மேலதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும் தோல்வியடைந்ததாலேயே தமிழினி, இறுதிக்கட்டயுத்தத்தில் போராளிகள் கைவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
கேள்வி: இப்புத்தகம் சம்பந்தமாக பரவலாக எழுகின்ற விமர்சனங்கள் தொடர்பில் நீங்கள் கூற விரும்புவது?
பதில்: விமர்சனம் என்று சொல்லும்போது தமிழினி கைதாகியவுடனே தமிழினியைப் பற்றி ஏராளமான விமர்சனங்கள் எழத்தொடங்கிவிட்டன. அவர் செட்டிக்குளம் முகாமில் ஒளிந்திருக்கும்போது கைதுசெய்யப்பட்டார், அவர் இராணுவத்தினரிடம் ஏனைய போராளிகளைக் காட்டிக்கொடுத்தார் போன்ற ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.
சிலர் தங்களுடைய தேவைகளை நிறைவுசெய்து கொள்வதற்காக இதை திட்டமிட்டு பரப்பினார்கள். சிலர் தமிழினி பணத்துடன் ஓடிப்போய் சரணடைந்தார் என்றும் வதந்திகளைப் பரப்பினார்கள்.
ஆனால் தமிழினியின் தாயாரோ இன்னும் இடுப்பளவிற்கு வெள்ளம் வருகின்ற வீட்டில்தான் வசித்துவருகின்றார். அவர் விதவை என்ற காரணத்தினால் அவருக்கு வீட்டுத்திட்டம் கூட வழங்கப்படவில்லை.
தமிழினி வெறுங்கையோடுதான் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
வெகுசொற்பளவிலானவர்கள் தான் தமிழினிக்கும் தமிழினியின் தாய்க்கும் உதவிசெய்தார்கள்.
தமிழினி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கமாட்டார் ஏனென்றால் இப்புத்தகத்தில் புனர்வாழ்வு முகாமைப்பற்றி உண்மைக்குப்புறம்பான தகவல்கள் காணப்படுவதாக கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் இவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு தடுப்பு முகாம் என்றால் என்ன? புனர்வாழ்வு முகாம் என்றால் என்ன வென்று ஒழுங்காகத் தெரியாது. இவர்கள் இவை இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தைப் போட்டு குழப்பிக்கொள்கின்றார்கள்.
புனர்வாழ்வு முகாம் என்பது வெளியிலிருப்பவர்கள் வந்து பார்ப்பதற்கு ஏற்றவகையில் காணப்படும் நிலையம். வெளிநாட்டு ராஜதந்திரிகள் தன்னார்வத்தொண்டு நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பலர் வந்து பார்த்து செல்லக் கூடிய அமைப்பாகக் காணப்பட்டது. அத்துடன் இந்த புனர்வாழ்வு முகாம் இராணுவத்தினரின் தேவையாகவும் கூட காணப்பட்டது.
தொடரும்
நேர்காணல்: ஜெ.ராஜன் , எஸ்.கே. படப்பிடிப்பு: எம்.எஸ். சலீம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக