ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஒரு ரோஜாவின் கதை

இலங்கையோடு ஒப்பிடும் போது தமிழக அரவாணிகள் எவ்வளவோ சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அரவாணிகள் என அழைக்கப்படும் திருநங்கையருக்கு இன்றைய தமிழக அரசு ஆதரவாக இருந்து வருகிறது. கலைஞர் டி.வி. அமெரிக்காவில் கல்வி கற்று திரும்பி வந்த திருநங்கையான ரோசுக்கு ‘இது ரோஸ் நேரம்’ என்ற ‘டோக் ஷோ’வை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த ரோஜாவைப் பற்றிய கதை இது.

ரோஜா தற்கொலைக்கு நாள் குறித்த பின்பு அந்த நேரத்தை நிமிடத்தை... விநாடியை நோக்கி இவர் விரைந்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு மனமாற்றம். ‘நீ சாதிக்கப் பிறந்தவள். நீ எதற்காக சாக வேண்டும்?’ என்ற தன்னம்பிக்கை மேலோங்க, தற்கொலை உணர்வுக்கு முடிவு கட்டிவிட்டு கம்பீரத்தோடு வாழ்க்கையைத் தொடங்கிய ரோஸ் (ரோஜா) இன்று தலை நிமிர்ந்து நின்கிறார். ரோஸ் ஆணுமில்லை, பெண்ணுமில்லை. அரவாணி! இந்தியாவிலே டோக் ஷோ நடத்தும் முதல் அரவாணி. அமெரிக்க சினிமா இயக்குநரால் படமாகப் போகிறவர். அமெரிக்காவில் உயர் கல்வி கற்றவர்.

உடலால் ஆணாகவும், மனதால் பெண்ணாகவும் தான் பட்ட அவஸ்தைகள்.. அவமானங்கள்... காதல் தோல்விகள்... போன்ற அனைத்தையும் மனந்திறந்து சொல்கிறார், ரோஸ் என்ற ரோஜா.

நான்கு குழந்தைகளில் ஒன்றாகப் பிறந்தேன். உடலால் ஆணாக இருந்ததால் ரமேஷ்பாபு என்று பெயர் வைத்தார்கள். நாலைந்து வயதிலே தங்கையின் உடைகளை அணிந்து கொள்வேன். பசங்க பம்பரம் விடவும், காற்றாடி விடவும் என்னை அழைப்பார்கள். நான் அவர்களோடு சேர்ந்துக்கவே மாட்டேன். சமையல் பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன்.

14 வயதில்:

நான் வளர்ந்து கொணடிருந்தது கூட்டுக் குடும்பத்தில். அதனால் எனக்குள்ளே இருந்த பெண்மையை உணரவும், நான் அணிந்து கொண்டிருந்த பெண் உடைகள் பற்றி அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவும் என் பெற்றோருக்கு நேரம் இருக்கவில்லை. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனக்குள்ளே இருந்த பெண் தன்மை அதிகரித்தது. மேக்- அப் போட்டுக் கொள்வேன். என்னை சக மாணவர்கள் கேலி செய்தார்கள். நான் இயல்பாகத்தான் இருந்தேன். மற்றவர்கள் என்னைக் கேலி செய்ததால் நானே என்னைப் பெண்ணாக உணர்ந்து மகிழ்ந்தேன்.

14 வயதில் எனக்கு சக மாணவன் ஒருவன் மீது காதல் உணர்வு பிறந்தது. அவன் திடகாத்திரமாக, கம்பீரமாக இருப்பான். ரவுடி போல் செயல்படுவான். 30 மாணவர்களோடு படித்த எனக்கு அவன் மீது மட்டும் ஏன் காதல் உணர்வு வந்தது என்று தெரியாது.

அவனுக்கும் - எனக்கும் நட்பு ஏற்பட்ட முதல் நாளை நினைத்துப் பார்க்கிறேன். வகுப்பில் படிப்பில் நான்தான் முதல் மாணவி. எப்போதும் மாணவிகளுடனே இருப்பேன். அவன் என்னிடம் வந்தான். நான் உன் அருகில் இருக்கலாமா? என்று கேட்டான். நானும் சரி என்றேன். என்னிடம் பாடத்தில் சந்தேகங்கள் கேட்பான். அவனுக்காக நாலைந்து மணி நேரம் கைவலிக்க நோட்ஸ் எழுதிக் கொடுப்பேன். அவனும் என் மீது அதிக அன்பு செலுத்துவான். நாங்கள் இருவரும் சில்ரன்ஸ் பார்க் போன்ற பல இடங்களுக்கு சென்றிருக்கிறோம். என்னை ரொம்ப அழகு என்பான். என்னோடு பழகிய பின்பு அவன் நன்றாகப் படித்தான். முரட்டுத்தனங்களை விட்டுவிட்டு மென்மையானான்.

ஆனால், அவன் இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது என்னுடன் படித்த மாணவர்கள் சக மாணவிகளுக்கு லவ்லெட்டர் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது உணர்வுகளை அப்படியும்... இப்படியுமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் தனிமையில் யாருடனும் சேர முடியாதவளாக இருப்பேன்.

என்னைக் கவர்ந்த அந்த மாணவனை கடைசியாக சந்தித்த நாள் என்னால் மறக்க முடியாதது. அவன் மாணவி ஒருத்தியை காதலித்துக் கொண்டிருப்பதை சொல்லி, கண்ணீர் விட்டேன். கடைசி வரை நான் ஒரு பெண் உணர்வு கொண்டவள் என்பதையும், அவன் மீது காதல் உணர்வு கொண்டிருப்பதையும் சொல்ல முடியவில்லை. அதன் பிறகு தான் பதினொன்றாம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டேன்.

பதினைந்து வயது வாக்கில் ஆண் - பெண் அனைவருக்குமே எதிர்பால் ஈர்ப்பு வரும். எனக்கும் அத்தகைய ஈர்ப்புகள் இருந்தன. ஆனால் என் ஈர்ப்பை சக மாணவர்களே கேவலமாகப் பேசினார்கள். அதனால் என் பெண் தன்மையை அப்படியே எனக்குள் அடக்கி ஒடுக்கிவிட்டு என் கவனம் முழுவதையும் படிப்பில் காட்டினேன். பள்ளியிலே எட்டாவது ‘ரேங்க்’ கை எட்டிப் பிடித்தேன். எனக்கும் ஆண்களைப் போல் பெண்களைப் போல் செக்ஸ் உணர்வுகள் தோன்றும்.

அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான ஒரு வாழ்க்கை தோல்வியால்தான் தற்கொலைக்கு நாள் குறித்தேன். ஆனால் தற்கொலைக்குக் கூட கண நேர தைரியம் தேவை. அந்த தைரியம் என்னிடம் இல்லாததால் கடைசி நேரத்தில் என் மனது மாறியது. இத்தனை பெரிய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பிளஸ் - டூ தேர்வில் 1068 மதிப்பெண் பெற்றேன்.

18 வயதில்:

அதிக மதிப்பெண் பெற்றிருந்ததால் தகுதி அடிப்படையில் எனக்கு சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஆண் உடை அணிந்து என்னை நானே ஆணாக காட்டிக் கொண்டிருந்தேன்.

அங்கு கல்லூரி விழாக்களில் நாடகம் நடக்கும் போது ஆணும் - பெண்ணும் சேர்ந்து நடிக்க அனுமதி கிடையாது. ஆண்களே பெண் வேடம் போட வேண்டும். நான் பெண் வேடத்திற்காக தேர்வு செய்யப்பட்டேன். என் தங்கையின் சுடிதாரை அணிந்து கொண்டு, ஆசை ஆசையாய் மேக்-அப் போட்டுக் கொண்டு அசத்தலாக நடித்தேன். என் பெண்மை தோற்றத்தையும் நடிப்பையும் பார்த்து விட்டு என்னை ஒவ்வொரு நாடகத்திலும் பெண் வேடம் போடச் சொன்னார்கள். அப்படி நான் பெண் வேடம் போட்ட நாட்கள் எல்லாம் எனக்கு ஆத்ம திருப்தி தந்த மிக மகிழ்ச்சியான நாட்கள். அப்போது ஒரு சில மாணவர்கள் என்னைப் பார்த்து ‘சூப்பர்பிகர் மச்சான்...’ என்று கூறி சைட் அடித்தார்கள். அவர்கள் அப்படி மீண்டும் மீண்டும் சொல்லட்டும் என்று ஏங்கினேன்.

கல்லூரியிலும் எனக்கு ஒரு காதல் உணர்வு ஏற்பட்டது. என்னிடம் பாடத்தில் சந்தேகம் கேட்டு, படிப்படியாய் என்னிடம் நெருங்கிய மாணவனின் நெருக்கத்தை நான் ரசித்தேன். ஆனால் என் உணர்வை அவனிடம் சொல்லவே முடியவில்லை. ஆண் உருவில் இருந்து கொண்டு நான் ஒரு பெண் என்பதைக் கூறி எப்படி காதலை வெளிப்படுத்துவது. கல்லூரி படிப்பு முடியும் முன்பே வெளிநாட்டில் படிப்பதற்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று தேடத் தொடங்கினேன். அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் டெக்சாஸ் ஏ அன்ட் எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

21 வயதில்:

அமெரிக்காவில் படித்த மூன்றரை ஆண்டுகளும் நான் மன அமைதி இல்லாமல்தான் தவித்தேன். என்னோடு படித்த அமெரிக்க மாணவர்கள் முரட்டுத் தனமானவர்கள். ஆணின் உடலோடு, பெண்ணின் உணர்வோடு இருந்த என்னைப் போன்றவர்கள் மீது அங்கு பயங்கர தாக்குதல்கள் நடந்திருக்கிறது. கொலை கூட செய்திருக்கிறார்கள். நான் இயல்பாகவே மிக அமைதியானவள். அதிர்ந்து கூட பேச மாட்டேன். அங்கு நடப்பவைகளை எல்லாம் கேள்விப்பட்டு என் பெண்மையை நான் மேலும் அடக்கிக் கொண்டேன்.

இந்திய மாணவர்கள் தங்கியிருந்த அறையில் தங்கினேன். என் மீது பாசம் கொண்டிருந்த ஒரு மாணவனிடம் இரவு நேரத்தில் என் ‘உணர்வை’ வெளிப்படுத்தியதும் அவன் எழுந்து ஓடி கத்தியை தூக்கினான். ‘இந்த மாதிரி என்னிடம் பேசினால் உன்னை குத்திக் கொன்றுவிடுவேன்’ என்றான். அதோடு அவன் விடவில்லை. கூச்சல் போட்டு எல்லா மாணவர்களிடம் என் உணர்வுகளைச் சொல்லி என்னைக் கொச்சைப்படுத்தினான். இந்தியாவில் உள்ளவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று அப்போது நினைத்தேன். அதன் பிறகு அங்கு என்னைப் போன்ற நிலையில் இருக்கும் 45 வயது மனிதர் ஒருவரின் பாதுகாப்பில் இருந்து படிப்பை முடித்தேன்.

23 வயதில்:

படிப்பை முடித்துவிட்டு, 2004 மார்ச்சில் சென்னை திரும்பினேன். எனக்கு பெற்றோர் பெண் தேடினார்கள். நான் பையன் அல்ல பெண் என்பதைக் கூறி, திருமணத்திற்கு மறுத்ததும் சில டாக்டர்களிடம் போய் என்னை முழு ஆணாக மாற்ற ஏதாவது வழி இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்கள். ஒரு சில டாக்டர்களுக்கு அரவாணி என்றாலே என்னவென்று தெரியவில்லை. அவர்கள் திருமணம் செய்துவைத்தால் என் இயல்பு மாறி ஆணாகி விடுவேன் என்று கூறி இருக்கிறார்கள். டாக்டர்கள் சொன்னதை வைத்து என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்கள். ‘நானே ஒரு பெண். இன்னொரு பெண்ணை எப்படி என்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியும்’ என்று பெண் வீட்டார் மத்தியில் வைத்தே ஒருமுறை கத்திவிட்டேன்.

25 வயதில்:

நான் என்னை பெண்ணாக அடையாளம் காட்டிக் கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு வாலிபன் என் வாழ்க்கையில் புகுந்தான். என்னை அவன் விரட்டி விரட்டி காதலித்தான். நான் இல்லாமல் அவனால் வாழவே முடியாது என்றான். அவனை நான் முழுமையாக நம்பினேன். அவனிடம் என் வாழ்க்கையை ஒப்படைத்த பின்பு, அவன் என்னை பயன்படுத்தி பல மாதங்கள் ஆனபின்பு, வேறொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருப்பதாகவும், அவளையே திருமணம் செய்யப் போவதாகவும், என்னைத் தனியாக வைத்துக் கொள்கிறேன் என்றும் சொன்னான். என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே அவனை அடித்து துரத்தினேன்.

28 வயதில்:

இன்று, எனக்கு வாழ்க்கையில் எவ்வளவோ அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. இதுவரை இந்தியாவில் எந்த அரவாணியும் டெலிவிஷனில் விவாத நிகழ்ச்சிகள் எதையும் நடத்தவில்லை. நான் அதற்கான முயற்சியில் ஈடுட்டேன். லதா சுரேஷ் என்பவர் வழி காட்டுதலோடு விஜய் டி.வி.யில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விரைவில் அந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

மூன்று சினிமாக்களுக்கு கதை எழுதி வைத்திருக்கிறேன். அரவாணியான என்னுடைய பாலுணர்வுகளை மையப்படுத்தி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை சல்மான் ருஷ்டி போன்ற பிரபலங்களின் படைப்புகளை வெளியிட்ட சர்வதேச புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று வெளியிட இருக்கிறது. என் வாழ்க்கையையே படமாக தயாரிக்கவும் அமெரிக்க டைரக்டர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

நான் இப்போது வெளிப்படையான நடை, உடை, மேக் - அப் போன்றவைகளில் பெண்ணாக மாறிவிட்டேன். நிறைய புடவை வாங்கி வைத்திருக்கிறேன். என்னை குடும்பத்தினர் நன்றாகப் புரிந்து கொண்டதால் குடும்பத்தினரோடு வசிக்கிறேன். ஒஒன்றரை வருடமாக ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் என் உடலும் பெண்யாக மாறிக் கொண்டிருக்கிறது. மார்கபங்கள் வளர்ந்துள்ளன. சருமம் மிக மேன்மையாகி விட்டது. முகத்தில் லேசர் சிகிச்சை செய்துள்ளதால் தாடி மீசை எதுவும் வளராது. ஆண்கள் என்னைப் பெண்ணாக நினைத்து பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஏங்கினேன். அந்த ஏக்கம் தீர்ந்திருக்கிறது.

இன்று நான் ஒரு ஸ்டார். என்னோடு வாழ பலர் முன்வரலாம். ஆனால் இப்போது எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லை. அரவாணிகள் சமூகத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

ரோஸ் பிரபல மாடலிங் ஷோ அமைப்பாளர் சுனில் மேனன் நடத்தும் ‘சகோதரன்’ என்ற அமைப்பில் இணைந்து அதன் அங்கத்தினர்களுக்கு வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்து வருகிறார். இவரிடம், தொடர்ந்து ஹார்மோன் ஊசிகள் போடுவதால் பின்விளைவுகள் ஏற்படும் அல்லவா? என்றதும், ‘நூறு வருடங்கள் ஆணாக வாழ்வதைவிட சில வருடங்கள் நான் விரும்புவது போல் மனதாலும் உடலாலும் பெண்ணாக வாழ்ந்தாலே போதுமானது என்றார்.


மணவை அசோகன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல