டாக்டர். சுஜாகரன் நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை, பம்பலப்பிட்டி
நடுத்தர வயதுடைய பெண்களிலும் சற்று வயது கூடிய பெண்களிலும் சிறுநீர் வெளியேற்றமானது சிலவேளைகளில் கட்டுப்பாடில்லாது ஏற்படுகின்றது. அதாவது 40 வயதிலிருந்து இவ்வாறான பிரச்சினைகள் தொடங்க வாய்ப்புள்ளன. சிறுநீர்ப்பையானது தாங்கப்பட்டிருக்கும் இழையங்களும் தசைகளும் பலவீனமடைந்தே இவ்வாறான கட்டுப்பாடற்ற சிறுநீர் வெளியேற்றம் பெண்களில் ஏற்படுகின்றது. இதனால் இவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் சிரிக்கும் போதும் சிறுநீர் கசிவது பெரும் சிரமமாக இருக்கின்றது. இதனால் பெண்கள் தமது வாழ்க்கையில் பலவிதமான நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அதாவது அவர்கள் சமூக வாழ்க்கையில் பலருடன் கதைத்து சிரிப்பதற்கே பயப்படுவார்கள். ஏனெனில் சிரித்தவுடன் சிறுநீர் வெளியேறுவது அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. பலர் இது ஒருவித நோய் என்றும் இதற்கு சரியான தீர்வு உள்ளது எனவும் தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே இது தொடர்பான அறிவூட்டலை மக்களுக்கு வழங்கி இதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக விளக்க வேண்டும்.





